பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, October 19, 2015

வைஜயந்திமாலா

                                         
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்த ஒரு நடிகை, கூர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது அதுதான் அந்தக் காலத்தில் பெரும்புகழ் பெற்ற வைஜயந்திமாலா என்பது. வாழ்க்கையில் பயணத்தைத் தொடங்கி, பெண், வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, பார்த்திபன் கனவு போன்ற பல படங்களில் நடித்துவிட்டுப் பின்னர் வட இந்தியாவுக்குச் சென்று அங்கு முதன்மை நடிகையாக விளங்கிய வைஜயந்திமாலாவா இது என்று திகைக்கும் வண்ணம் காணப்பட்டார் அவர். வாழ்க்கை படம் வெளியான நேரத்தில் தமிழ்த்திரையுலகில் ஒரு அதிர்வை உண்டாக்கினார் அந்த அழகின் பிரதிபிம்பமாகத் திகழ்ந்த வைஜயந்திமாலா.

இவரைப் பற்றி திரையுலக ரசிகர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும் ஆனால் இந்த தலைமுறையினருக்குத் தெரியாமலும் இருக்கலாம் என்பதால் அவர் பற்றிய சில விவரங்களை இப்போது பார்க்கலாம்.

தமிழ்த்திரையுலகில் “வாழ்க்கை” மூலம் அறிமுகமாகி திரையுலகில் ஓர் அதிர்வை உண்டாக்கியவர் வைஜயந்திமாலா. முதன் முதலாக தென் இந்தியத் திரைத்துறையிலிருந்து வட இந்தியாவுக்குச் சென்று அங்கும் முதன்மை வகித்தவர்களுள் இவரே முதல்வர்.
தமிழில் இவருக்காகப் பாடப்பட்ட பின்னணி பாடல்களில் வாழ்க்கையின் “டடடா டடடா உன் கண் உன்னை ஏமாற்றினால்”, வஞ்சிக்கோட்டை வாலிபனின் “கண்ணும் கண்ணும் கலந்து” போன்ற பாடல்களும், அதில் அவர் நடிப்பும் இன்றும் பார்த்து மகிழும்படி அமைந்தவை. அடிப்படையில் இவர் ஒரு பரத நாட்டியக் கலைஞர். வழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனம் பயின்றவர்.

1936ஆம் வருஷம் பிறந்தவர் இவர். சென்னை திருவல்லிக்கேணி இவர் பிறந்த ஊர். இவர் தாயும் ஒரு நடிகையே. அவர் பெயர் வசுந்தரா தேவி. தந்தையார் ராமன். தாய் “மங்கம்மா சபதம்” எனும் படத்தில் தோன்றி ரஞ்சனுடன் நடித்து அசத்தியவர்.

தாய் வசுந்தரா அப்போது ஒரு பிசியான நடிகை, மேலும் வயதில் மிகவும் குறைந்தவர் என்பதால் பாட்டி யதுகிரி அம்மாளிடம் வளர்ந்தார். சென்னையில் இவர் படித்த பள்ளிகளுள் பிரசண்டேஷன் கான்வென்ட், சர்ச் பார்க் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவருடையது ஒரு கலைக்குடும்பம் என்பதால் இவரும் இசையையும், நடனத்தையும் கற்கத் தொடங்கினார். நடனத்துக்கு குரு முன்பே சொன்னதுபோல் வழுவூர் ராமையா பிள்ளை. நடன அரங்கேற்றம் இவருடைய 13ஆம் வயதில் நடந்தேறியது.

நல்ல அழகு, நாட்டியத்தில் திறமை, ஏற்கனவே தாய் ஒரு நடிகை இவற்றால் கவரப்பட்டு டைரக்டர் எம்.வி.ராமன் அவர்கள் ஏ.வி.எம்.இன் வாழ்க்கை படத்தில் இவரை நடிக்க வைத்தார். அந்தக் காலத்தில் இந்தப் படம் ஒரு வெற்றிப்படம் ஆகையால் இது தெலுங்கிலும் இந்தியில் ‘பஹார்’ என்ற பெயரிலும் தயாரிக்கப் பட்டது. ‘பஹார்’ இந்திப் படம் இவரை வட இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது. இப்படி இந்தி திரையுலகில் புகுந்த இவர் இசையை மையமாகக் கொண்டு தயாரான ‘நாகின்’ எனும் படத்தில் 1954இல் நடித்தார். தொடர்ந்து ‘யாஸ்மின்’, ‘பெஹ்லி ஜலக்’, ‘சித்தாரா’, போன்ற பல படங்களில் நடித்தார். 1955இல் ‘தேவதாஸ்’, 1956இல் ‘நியு டெல்லி’, 1957இல் ‘நயா தவுர்’, ‘கட்புத்லி’, ‘ஆஷா’ 1958இல் ‘சாதனா’, ‘மதுமதி’ என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார்.

1958இல் தமிழில் ஜெமினி தயாரித்த “வஞ்சிக்கோட்டை வாலிபன்” வெளியானது. இந்தப் படத்தில் நாட்டியத்தில் சிறந்த இரு பெரும் நடிகைகள் நடித்தனர். இவர் ஒன்று, பத்மினி மற்றொருவர். கேட்க வேண்டுமா? நடிப்பும், நடனமும் தூள் பறந்தன இந்த படத்தில். இவ்விருவரும் போட்டி போட்டு நடனமாடிய அந்தப் பாட்டும், அதனி இடையே பி.எஸ்.வீரப்பாவின் “சபாஷ்! சரியான போட்டி” எனும் வசனம் இன்றளவும் பேசப்படுவது ஒரு சிறப்பு. தொடர்ந்து ‘இரும்புத் திரை, ‘ராஜபக்தி’, கல்கியின் ‘பார்த்திபன் கனவு’, ‘பாக்தாத் திருடன்’ ஆகியவை இவர் நடித்த படங்கள்.

இந்தி மொழிப் படங்களில் ‘கங்கா ஜமுனா” மிகச் சிறந்த படம் இது 1961இல் வந்த படம். இந்தப் படத்துக்காக இவருக்கு “பிலிம் பேர்” விருது கிடைத்தது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை அதாவது “சங்கம்”, “லீடர்”, “அம்ரபாலி”, “சூரஜ்”, “ஹாதிபஜாரே” “ஜுவல் தீஃப்”, “சங்குர்ஷ்”, “ப்ரின்ஸ்” இப்படி பல படங்கள் வெளி வந்தன. இவர் நடித்த ஓரிரு படங்கள் தோல்வியையும் சந்தித்தன. அதற்கு இவர் என்ன செய்வார், கதை, இயக்கம் போன்ற எத்தனையோ காரணங்கள்.

திரையுலகில் போதிய அளவு சாதனைகளை செய்து முடித்த இவர் 1968இல் சமன்லால் பாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதோடு இவரது திரையுலகப் பயணம் முடிந்தது. பழையபடி சென்னை நகரில் குடியேற்றம். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உண்டு. 1986இல் இவர் கணவர் காலமானார். இவர் மட்டும் சென்னையில் வசித்து வருகிறார், சமீபத்திய நடிகர் சங்கத் தேர்தலிலும் வந்து வாக்களித்துவிட்டுச் சென்றார். இவர் பல சமூக நலம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இவரது புகழையும், மக்கள் செல்வாக்கையும் கண்டு காங்கிரஸ் கட்சி இவரை நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற்றார். 1984இல் திரு இரா.செழியனையும், 1989இல் ஆலடி அருணாவையும் இவர் வென்று நாடாளுமன்றம் சென்றார். பின்னர் 1993இல் இவர் மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சிலகாலம் கடந்த பின் பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதுவரை இவரது வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்தோம். இனி இவர் பெற்ற விருதுகள், பெருமைகள் பற்றி ஒரு சிறிது பார்க்கலாம்.

1968இல் மத்திய அரசின் “பத்மஸ்ரீ”, 1979இல் தமிழ் நாடு அரசின் “கலைமாமணி”, 1982இல் பரத நாட்டியத்துக்காக “சங்கீத நாடக அகாதமி” விருது, 2001இல் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் விருது, 2002இல் “வாழ்நாள் சாதனையாளர் கலாகார் விருது” மேலும் பிரிட்டனிலும், புனேயிலும், பெங்களூரிலும் திரை விழாக்களில் சாதனையாளர் விருதுகள், 1956இலும், 1958லும் 1961லும் 1996லும் ஃபிலிம் ஃபேர்” விருதுகளையும் பெற்றார். 2008இல் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் விருதையும் இவர் பெற்றார்.
இத்தனை புகழையும் பெருமைகளையும், விருதுகளையும் பெற்ற இவர், பின்னர் அரசியலில் நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்துகொண்டு இன்றும் அமைதியாக வாழ்துகொண்டிருக்கும் இந்த தமிழகத்தின் கலையரசிக்கு நம் இதயம் கனிந்த வாழ்த்துக்களைச் சொல்லி நூறாண்டுகளையும் தாண்டி வாழ வாழ்த்துவோம்.



No comments: