பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 27, 2015

ஆசார திருத்த வியாசங்கள். Part IV


                                       கல்விச் சாலைகளில் மதப்பயிற்சி. 
                                             by ஜி.சுப்பிரமணிய அய்யர்

1910ஆம் வருஷம் மார்ச்சு மாதம், சைதாப்பேட்டையில் லார்ட் பிஷப்பென்ற கிருஸ்தவ மதாசாரியர் செய்த ஒரு பிரசங்கத்தில், நமது கல்விச் சாலைகளில் மதம் போதிக்கப் படுவதில்லை யென்றும், கல்விச் சாலைகளை நடத்துவோர் கவர்ன்மெண்டானதால் அப்படிப் போதித்தல் சாத்திய மில்லாம லிருக்கின்ற தென்றும், மதபக்தியும் நல்லொழுக்கமும் கற்பிக்காத கல்வி பிரயோஜனமற்ற தென்றும், ஆகையால் கவர்ன்மெண்டார் கல்விச் சாலைகளை நடத்துவதை விட்டுவிட வேண்டுமென்றும், அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து அவரவர் மதத்தைக் கற்பிக்க வேண்டுமென்றும், பேசினார்.

இப்படிப் பேசினதில் கவர்ன்மெண்டு கல்விச் சாலைகளை நடத்துவதினின்றும் விலகிவிட வேண்டுமென்று சொன்னதுதான் புதிது. கல்விச் சாலைகளில் மதப் பயிற்சியும் அவசியமென்று ஆங்கிலேயர், வெகுகாலமாகச் சொல்லி வருகிறார்கள். இந்தியாவும் இங்கிலாந்தைப் போன்ற தேசமென்று நினைத்து இப்படிச் சொல்லுகிறார்கள். நம் தேசத்தில் ஈஸ்வர பக்தியும், சதாசாரமும், பெருங்குணமும், ஸ்கூல்களில்தான் உண்டாக வேண்டுமென்ற அவசியமில்லை. நமது பூர்வீக வழக்கங்களும், பெரியவர்களுடைய ஆசாரங்களும் முன்னிருந்தன போல் இருந்துவரும் பட்சத்தில், ஸ்கூல்களிற் பயிற்சி யில்லாமலே லார்ட் பிஷப் கோருவது நிறைவேறும். நமது மதாசாரியர்களும், சாஸ்திர விற்பன்னர்களும், பொதுவாய் நமது பெரியோர்களும், நம் சிறுவர்களை நல்ல வழிகளிற் செலுத்த வேண்டியது தங்கள் கடமையென்று உணர்வார்களானால், நமது பழக்க வழக்கங்களிலும், ஸ்தாபனங்களிலும் மதப்பயிற்சிக்கு அவசியமான வசதிகள் இருப்பதைக் காண்பார்கள்.

கல்விச் சாலைகளை நடத்துவதினின்றும் கவர்ன்மெண்டு விலகுவது நிறைவேறக் கூடியதல்ல. கல்வியை நடத்துவதில் கவர்ன்மெண்டுக்குள்ள சம்பந்தம் வரவர நெருங்கி பெறுக வேண்டுமென்று கவர்ன்மெண்டுக்கு விருப்பம் உண்டாகி வருகிறதேயன்றி, தளர்ந்து விலக வேண்டுமென்ற விருப்பம் உண்டாகவில்லை. இப்படித்தான் இனியும் இருக்குமென்று நம்புகிறோம். அந்தந்த சமூகத்துத் தலைவர்கள் தங்கள் சிறுவர்களைத் தங்கள் விருப்பப்படி படிப்பிக்க வேண்டுமென்ற முயற்சி கவர்ன்மெண்டின் ஆதரவில்லாமலே செய்யப்பட்டு வரவேண்டுமென்று நினைக்கிறோம்.

நம் சிறுவர்களின் நடத்தையைப் பற்றி, ராஜாங்கத்தார் மனதில் வரவர சமுசயமும் அச்சமும் உண்டாகி வருகின்றன. இந்த நடத்தைக்குக் காரணம் அச்சிறுவர்கள் ஸ்கூல்களிற் பெறும் பயிற்சியென்று நினைக்கப் படுகிறது. ஆகையால் ஸ்கூல்களையும், காலேஜ்களையும் தங்கள் பார்வையிலேயே வைத்து நடத்த வேண்டுமென்பது ராஜாங்கத்தாரின் முறையாய் ஏற்பட்டு வருகின்றது. இந்த முறை சரியானதென்று நாம் நினைக்கவில்லை. சிறுவர்களின் கல்வியில் கவர்ன்மெண்டுக்கு எவ்வளவு அக்கறையோ, அவ்வளவு பெற்றோர்களுக்கும், பொதுவாய்ச் சமூகத்தினருக்கும் உண்டு. ஆகையால், கல்விச் சாலைகளை நடத்துவதை ராஜாங்கத்தார் சமூகத்தினருக்கு முழுவதும் கொடுத்து விடாவிட்டாலும், அவர்களின் ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும் இப்போதைவிட அதிகமாய்த் தழுவி, அவைகளை நடத்துவதே உசிதமாகும்.

மன்னார்குடி நேஷனல் ஹைஸ்கூலில் தியாஸபிகல் கான்பரன்ஸ் நடந்த போது ஸர் எஸ்.சுப்பிரமணியய்யரும், மிஸ்டர் டி.சதாசிவ அய்யரும் இந்தியச் சிறுவர்களின் மதக் கல்வியைப் பற்றிப் பேசினார்கள். இதைப் பற்றிப் பேச இவ்விரு பெரியவர்களைக் காட்டிலும் தகைமை யுடையோர்களை நம்மவருள் காண்பரிது. நம் தேசத்தில் இந்தியர்களின் நற்பெயரைக் கெடுத்து, அவர்களின் நன்மைக்கு விரோதமாகவும், நம் நற்காலத்துக்கு இடையூறாகவும், சில வருஷங்களாகத் தோன்றி வரும் அநாயக வெறியானது, பெரும்பாலும் நம் சிறுவர்களையே பற்றியதாய், அவர்களுக்கும் அவர்கள் கொடுமைக் கிலக்காகும் பிறருக்கும் உயிர் நஷ்டத்தை யுண்டாக்குவதை நோக்கி வருந்தாதவர்கள் இரார்கள். இது நம் தேச க்ஷேமத்தைக் கோரியவர்களுக்கும் கவர்ன்மெண்டுக்கும் பெருங்கவலையை யுண்டாக்கியிருக்கிறது. இக்கொடிய வெறியை யொழிப்பது எவ்வாறென்று இந்தியப் பிரமுகர்கள் பலவிடங்களில் சிந்தை கொண்டு, பல உபாயங்கள் செய்து, தாமாகவும் கவர்ன்மெண்டோடு கலந்தும், பாடுபட்டு வருகிறார்கள். சிறுவர்களை ராஜீயக் கலகங்களிற் சேரவிடக் கூடாதென்று அபிப்பிராயம் பரவி வருகிறது. இதோடு, மதக் கல்வியைச் சிறுவர்களுக்கு ஊட்டுவதையும் ஒரு பரிகாரமாகப் பலர் கருதுகிறார்கள்.

இந்தியாவில் பொதுக் கல்வி முறையில் மதப் பயிற்சிக்கே இடம் அமைக்காதிருப்பது ஒரு பெருங்குறை யென்றும், இக்குறையால் தெய்வபக்தி, பெரியோரிடம் பணிவு, அடக்கம், ஒத்தோரிடம் அனுதாபம், ஜீவகாருண்யம் முதலிய மதப் பயிற்சியால் விளையக்கூடிய நற்குணங்கள் நஷ்டமாகி, சமூகங்கட்கு ஹானி யுண்டாகிறதென்றும் சுமார் 50- வருஷமாகக் கவர்ன்மெண்டு இந்த விஷயத்தில் காட்டி வந்த அசட்டையின் பலனை இந்த அநாயக நிகழ்ச்சி ரூபமாக நம் தேசம் அனுபவிக்கிறதென்றும், அநேகர் அபிப்பிராயப் படுகிறார்கள்.

ஸர் எஸ்.சுப்பிரமணிய அய்யரும், மிஸ்டர் டி.சதாசிவ அய்யரும் இவ்விஷயத்தில் தங்களுக்குள்ள ஆழ்ந்த உணர்ச்சியை வெளியிட்டார்கள். ஸர் எஸ்.சுப்பிரமணிய அய்யர், இந்த அநாயகச் செயல்கள் கவர்ன்மெண்டின் கண்களைத் திறந்து விட்டன என்றார். மிஸ்டர் சதாசிவ அய்யரும் அநாயக வெறியர்கள் தவறான மத உணர்ச்சியால் தூண்டப் பட்டவர்களென்று கருத வேண்டும் என்றார். இருவரும் மதக்கல்வி இதற்கு மருந்தாகு மென்றும், எவ்வித மதக் கல்வியும் பலவகைப்பட்ட ஜனங்களைக் கொண்ட நம் தேசத்தின் நன்மைக் குற்றபடி அமைவதாகு மென்றும், அப்படி யமைப்பதில் தியாஸபியும், அதைச் சேர்ந்தவர்களும் எவ்வாறு உதவி செய்யக் கூடுமென்றும் காட்டினார்கள். 

ஸர் எஸ்.சுப்பிரமணிய அய்யர் மதமாற்றலால் உண்டாகும் கொடுமையையும், தீங்கையும் பற்றி மிகுந்த ஆத்திரமும் சூழ்ச்சியும் விவகாரமும் காட்டிப் பேசினார். ஒவ்வொரு சமூகத்துக்கும் தேசத்துக்கும் தக்கபடி மதம் அமைகின்றது. ஒரு ஜனத்தை அதன் மதத்தினின்று மாற்றுவது அந்த இனத்தின் முற்போக்கைத் தடுப்பதாகு மென்றார். உலகமெல்லாம் ஆத்ம ஞானத்தைப் பரப்புவது இந்தியாவின் பொறுப்பென்றும், அந்தப் பொறுப்பை வகிக்க யோக்கியதை யுண்டாகும்படி இந்தியா முதலில் ஆத்ம ஞானம் நிரம்பியதாக வேண்டுமென்றும், இது மகாத்மாக்களின் சங்கற்பமென்றும் சொன்னார்.

ஹிந்துக் குடும்பங்களில் மதக் கல்வி புறக்கணிக்கப் படுவதையும், தேசம் இப்போதுள்ள நிலையில் மதக் கல்வி விஷயத்தில் பாடுபட தலைவர்கள் முற்பட்டு வாராமையையும் குறித்து வருந்தினார். சிறுவரைத் திருத்த முயலுவோர் தம் நடத்தையே சிறுவர்க்கு ஒரு படிப்பினையா யிருக்கும்படி நடக்க வேண்டுமென்றும், அப்படி இப்போதில்லாதிருப்பது பெரும் வசையாகு மென்றும் இருவரும் கண்டித்துப் பேசினார்கள். வீடுகளில் எப்போது சிறு பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் புருஷர்கள் கல்வியும் மதமும் சரித்திரமும் வீட்டில் கற்பிக்கிறார்களோ அப்போது தான் இந்த வசை நீங்கும். வெளியில் போனால் பிள்ளைகள் தம் மதத்துக்கும் வழக்கத்துக்கும் பாதகமான பல கண்டு அனுபவிக்கிறார்கள். அவ்வனுபவம் நல்லது பொல்லாதது என்று அவர்களுக்கு எங்கே யார் சொல்வார்கள்? தாய் தகப்பன் அண்ணன் தம்பியன்றோ வீட்டில் சொல்ல வேண்டும்.

மிஸ்டர் சதாசிவய்யர் நம் சிறுவர்கள் மதமாறுதலுக்கு நம்மில் வயதில் பெரியவர்களின் நடத்தையும் ஒரு காரணமாகுமென்றார். எடுத்துக் கொண்ட வேலையில் ஈடுபடுவதையும், விடா முயற்சியையும், மொத்தத்தில் ஒழுக்க நலத்தையும் கிருஸ்தவ மதப் பிரசாரகர்களிடமிருந்து நாம் கற்க வேண்டுமென்றார். கிருஸ்தவ மதப் பிரசாரகர்களைக் கண்டு வியந்து மோகித்து நம் சிறுவர்கள் கிருஸ்தவர்களாகிறார்கள் என்றார். இது உண்மையாக இருக்கக் கூடுமாயினும், முழு உண்மையுமல்ல. இக்காலத்துச் சிறுவர்களைக் கிருஸ்தவ மதமானது மதமாக மட்டும் கவரவில்லை. அந்த மதத்தில் இக்காலம் மேனாட்டார் உலக வாழ்வில் அடைந்துள்ள மேம்பாடும் அடங்கியதாகச் சிறுவர்கள் மதிக்கிறார்கள். 

அவ்வளவு உலக ஆதிக்கியத்தையும், செல்வத்தையும், வளத்தையும் பெறுவிக்கும் இக்கால நாகரிகமானது மேனாட்டில் பரவியுள்ள கிருஸ்தவ மதத்தால் ஆகியதென்று தங்கள் மனதில் அழுந்த உணருகிறார்கள். சுவாதீன புத்தியும், ஊக்கமும் ஒற்றுமையும், தைரியமும், உலகத்தை உருமாற்றிச் செய்துள்ள வேலைகளைக் கண்முன் பார்த்து வியந்து, அவையனைத்தும் கிருஸ்தவ மதத்தைப் பற்றியவர்களால் ஆயினவென்று அறிகிறார்கள். இக்கால நாகரிகமும் தர்மமும் வேறு, புராதன நாகரிகமும் தர்மமும் வேறு. அக்காலத்துக்கு அது ஒத்தது. இக்காலத்துக்கு இதுவே ஒக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். 'ஒரு கன்னத்திலடித்தால் மற்றொரு கன்னத்தையும் அடித்தவனுக்குக் காட்டு' என்று கிருஸ்து சொன்னபடி மேனாட்டார் நடந்திருந்தால், அவர்கள் இராஜ்யமும், மேம்பாடும் எப்படியிருக்கும்? புத்தர் கட்டளையையும் கன்பூசியசின் நீதியையும் ஜப்பான் அனுசரித்திருந்தால், இக்காலத்து முதற்தர ராஜ்யங்களுள் ஒன்றாக மதித்து எண்ணும்படி யாயிருக்குமா? பர்ஷியா, துருக்கி போன்ற புராதன தேசங்கள் எந்த வழியைப் பற்றி முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன? சாகக் கிடந்த சைனா உயிர்க்குறி காட்டுவது எதனால்? இவ்வாறு பல கேள்விகள் தங்கள் கண்முன் காண்பவற்றாலும், கேட்பவற்றாலும், படிப்பவற்றாலும் சிறுவர்கள் மனதில் உதிக்கின்றன. ஹிந்து சமூகத்தில் மிஸ்டர் சதாசிவ அய்யர் எடுத்துக் காட்டியுள்ளபடி குணக் கேடுகளையும், கொடுமைகளையும், கோளாறுகளையும் நோக்க, அவர்கள் அலட்சியம் வெறுப்பாக முதிர்கின்றது. நம் சமூகத்தைத் திருத்தவும் கூடுமோவென்று உள்ளம் அழிகிறார்கள். கடல் தாண்டக் கூடாது, சிசுவிதவை ஜன்ம மெல்லாம் விதவையே. மாயும் கிழம் மழலைப் பெண்ணை மணக்கலாம், இவைபோன்ற அக்கிரமங்களைச் சகியாது அகற்றவும் முடியாது நம் சிறுவர்கள் சமூகத்தையும், மதத்தையும் ஒதுக்கித் தள்ள முயலுகிறார்கள். ஹிந்து மதம் வேறு, சமூகம் வேறு அல்லவாகையால், இரண்டையும் தொலைத்து விட்டால், தேசாபிமான கைங்கரியத்துக்குச் சாதகமாயிருக்குமென்று கருதுகிறார்கள்.

இப்படி நாம் இழுதுவதால் மதமாற்றலைச் சற்றும் அங்கீகரித்ததாக நினைக்கலாகாது. சிறுவர்கள் மனதில் சுழலும் எண்ணங்களை வெளியிட்டோம். காலதர்மம் என்பது ஒன்றுண்டு. அது மாறக்கூடியது. உலக வாழ்க்கையில் வளமையைத் தேடுவது இக்கால தர்மமாயிருக்கிறது. இதை அனுசரித்து நடப்பது தவறென்று தோன்றவில்லை. இக மேம்பாட்டைத் தேடுவதில் தடையாகாவென்று காட்டுவதும், அவற்றைத் திருத்தும் ஒரு வழியாகும். இவ்வழியே சாத்தியமான வரையில் நடக்க வேண்டியது. அப்புறம் தேச நன்மைக்குற்றபடி பற்ற வேண்டிய வேறு வழிகளையும் கூசாது பற்ற வேண்டும். ஜப்பான், பெர்ஷியா, துருக்கி போன்ற தேசங்கள் தங்கள் மதங்களை மாற்றிக் கொண்டா முன்னுக்கு வந்தன? என்று கேட்பது சரியாகாது. அவைகளுள் சமூகக் கட்டு வேறு, மதம் வேறு. மதம்மாறாமல் சமூகக்கட்டை மாற்றலாகும். நம்முள் அவ்விதமில்லை. ஆகையால், மகாத்மாக்களின் சங்கற்பமென்றும் நம்மதமே மகோன்னதமான தென்றும் சொல்வதோடு நில்லாமல், இக்கால தர்மத்தையும் கூட்டித் திருத்தங்கள் செய்வது நலம். மிஸ்டர் டி.சதாசிவய்யர் சொன்னது போல, பிரிட்டிஷ் ஆட்சியானது தாராளத் தன்மையுடையதாயும், தாராள முயற்சிகளையெல்லாம் ஆதரிப்பதாயும் இருப்பதால், அதன் ஆதிக்கியத்தின் கீழ் அமைதியோடு நாம் முற்படும்படியான முயற்சிகள் எத்தனையோ செய்ய வாய்த்திருக்கின்றது. இதன் பொருட்டு இந்தியர்கள் எல்லோரும் நன்றியும், திருப்தியும் கொள்ளல் தகும்.

No comments: