பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 13, 2015

ஆந்திரப் பிரிவினையும், சென்னை நகரம் யாருக்கு என்கிற போராட்டமும்.




1952 முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் முழு வெற்றி பெற்று பெருவாரியான உறுப்பினர்களைப் பெற முடியாத சூழ்நிலையில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு கு.காமராஜ். எதிரணியில் பெரும் பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். திரு காமராஜ் அவர்களின் சம்மதத்தோடு திரு சி.சுப்பிரமணியம் அவர்களும் பொள்ளாச்சி திரு என்.மகாலிங்கம் அவர்களும் டெல்லி சென்று பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்து ஒரு யோசனையைத் தெரிவித்தனர். குழப்பமான சூழ்நிலையில், மெஜாரிடி இல்லாத சென்னை மாகாண சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதவிக்கு ராஜாஜியை ஏற்கலாம் என்பதுதான் அந்த யோசனை. நேரு கேட்டார், இந்த யோசனைக்கு காமராஜ் என்ன சொன்னார் என்பது. அவருடைய சம்மதத்தோடுதான் தங்களைக் கண்டு யோசனை கேட்க வந்தோம் என்றார் சி.சு. காமராஜ் அவர்களுக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதமே, நீங்கள் ராஜாஜியைக் கண்டு பேசுங்கள் என்றார் நேரு. பின்னர் சம்பவங்கள் மளமளவென்று நடந்தன ராஜாஜி மைனாரிடி பலத்தோடு முதலமைச்சர் ஆனார். ஆனால் காங்கிரசின் மைனாரிடி நிலைமையை சரிசெய்ய காமன்வீல் கட்சியிலிருந்து மாணிக்கவேல் நாயக்கர், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, சுயேச்சை பி.பக்தவத்சலு நாயுடு ஆகியோரை காங்கிரசில் சேர்த்துக் கொண்டு ஒரு மெஜாரிடி ஆட்சியை ராஜாஜி கொடுத்தார். 

முன்பே சொன்னது போல எதிரணியில் பெரும் பெரும் கம்யூனிஸ்டுகள் உட்கார்ந்திருந்தனர். ஜீவா, பி.ராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், மணலி கந்தசாமி போன்ற பலர். ஒரு முறை பி.ராமமூர்த்தி சட்டமன்றத்தில் எழுந்து ராஜாஜி கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு அமர்ந்திருக்கிறார், அவர் யாரைப் பார்க்கிறார் என்பது தெரியவில்லை, ஆகையால் அவர் தன் கண்ணாடியை அகற்ற வேண்டுமென்றார். இத்தனைக்கும் பி.ராமமூர்த்தி மாணவப் பருவத்தில் வார்தா சென்று மகாத்மா காந்தியடிகளின் ஆசிரமத்தில் சேரவிரும்பியபோது, அப்போது அங்கிருந்த ராஜாஜியிடம் காந்திஜி என்ன இந்த மாணவன் இப்படிச் சொல்கிறானே, என்ன செய்யலாம் என்றார். அதற்கு ராஜாஜி பி.ராமமூர்த்தியிடம், நீ இன்னமும் மாணவன், படிக்க வேண்டியது இருக்கிறது. போய் படித்துவிட்டு பின்னர் வா, ஆசிரமத்திலும் சேரலாம், அரசியலிலும் பங்கு கொள்ளலாம் என்று திருப்பி அனுப்பிவிட்டார். அப்படித் திரும்பிப் போன பி.ஆர். பின்னர் காசிக்குச் சென்று அங்கு பட்டப்படிப்பு படித்தார் என்கிறது அவரது வாழ்க்கை வரலாறு. ஆகையால் ராஜாஜிக்கும் பி.ஆருக்கும் குரு சிஷ்ய உறவும் இருந்திருக்கிறது.

சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி ஆனார் என்பதைப் பார்த்தோம். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் வலிமையுள்ளதாக, பெருமைமிக்க பல தலைவர்களைக் கொண்டதாக விளங்கியது. அப்படிப்பட்ட தலைவர்களுள் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியாரும் ஒருவர். அவர் தனியாக தமிழரசுக் கழகம் என்ற பெயரில் ஒரு கலாச்சாரக் கழகத்தை வைத்திருந்தாலும் அவர் ஒரு காங்கிரஸ்காரர். காங்கிரசிலும் இருந்து கொண்டு இதுபோன்றதொரு இயக்கத்தை அவர் நடத்தியதே, பின்னர் அவர் காங்கிரசைவிட்டு வெளியேற நேர்ந்தது என்பதையும் பார்க்கப் போகிறோம்.

அப்போது ம.பொ.சி. ராஜாஜியின் அமைச்சரவைக்கு ஆதரவாகவும், சென்னை மாகாணம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட வேண்டுமென்றும் போராடி வந்தார். அதற்காக அவர் தொடங்கிய தமிழரசுக் கழகம் பல போராட்டங்களை நடத்தியது. அவர் கழகத்தில் தான் எத்தனை பிரபலங்கள்! சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம், வேலூர் கோடையிடி வி.கே.குப்புசாமி முதலியார், கவிஞர் கா.மு.ஷெரீப், கவிஞர் வானம்பாடி இப்படி நட்சத்திரக் கூட்டம் அவரோடு இருந்தது. 

இப்படி தமிழ்மாநிலம் தனித்து வேண்டுமென்று ம.பொ.சி. போராடிக் கொண்டிருக்கும் போது, ஆந்திராவில் ஆந்திர கேசரி என்று புகழ்பெற்ற டி.பிரகாசம்காரு அவர்கள் தலைமையில் தனித் தெலுங்கு மாநிலம் வேண்டுமென்ற போராட்டமும் தொடங்கியது. தெலுங்கு சன்னியாசி ஒருவர் சுவாமி சீத்தாராம் என்று பெயர், அவர் சென்னை கோட்டை முன்பாக தனி தெலுங்கு நாட்டுக்காக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.




இப்படி தெற்கே மொழிவழி மாநிலப் பிரிவினை கேட்கும் செய்தி வட இந்தியப் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியது. மும்பையிலிருந்து வெளிவரும் "டைம்ஸ் ஆஃப் இந்தியா" விமர்சனம் செய்திருந்தது. இப்படி ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு ஆட்சியை ஆதரித்துக் கொண்டும், தனித் தமிழ் மாநிலம் கோரி போராடிக் கொண்டும் இருந்த ம.பொ.சியின் நிலைப்பாடு காங்கிரசுக்கும், ராஜாஜிக்கும் தர்ம சங்கடமாக இருந்திருக்க வேண்டும். ஒரு வகையில் தெலுங்கர்களுக்கென்று தனி ஆந்திர மாநிலம் பிரிந்து போவதுகூட ராஜாஜிக்கு செளகரியமாகத்தான் இருந்திருக்க வேண்டும். காரணம் ஆந்திர பகுதிகளிலிருந்துதான் பெருமளவிலான கம்யூனிஸ்டுகள் சட்டமன்றத்தில் இருந்தார்கள். தமிழ் நாட்டுப் பகுதியிலிருந்து மிகக் குறைவானவர்களே. ஆகையால் ஆந்திரம் பிரிந்தால், அதிக அளவு கம்யூனிஸ்டுகள் அங்கே போய்விடுவார்கள் அல்லவா?

பிரதமர் நேருவுக்கு ஆந்திரம் பிரிவதில் சம்மதமில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கோ இதில் இறுதியான விருப்பம் எதுவும் இல்லை. அந்த சமயம் பார்த்து சில ஆந்திரத் தலைவர்கள் சென்னை சட்டமன்றத்தில் தனி ஆந்திரம் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். முதலமைச்சர் ராஜாஜி கொள்கை ரீதியாகத் தாம் பிரிவினையை விரும்பவில்லையென்றாலும், ஆந்திர உறுப்பினர்களின் விருப்பத்துக்குத் தடையாக இருக்கவும் விரும்பவில்லை என்றார். அந்த பிரிவினை தீர்மானம் அவையில் நிறைவேறியது.

இந்த காலகட்டத்தில் ஆந்திரப் பிரிவினையை வேகப்படுத்தும் விதத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஆந்திர காங்கிரஸ்காரர் ஒருவர், பொட்டி ஸ்ரீராமுலு என்று பெயர், அவர் சென்னையில் ஆந்திரப் பிரிவினையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். இந்த ஸ்ரீராமுலு ஒரு அப்பாவித் தொண்டர். நெளிவு சுளிவுகள் தெரியாத இவரை யார் தூண்டிவிட்டார்களோ தெரியாது, ஆனால் இவர் எடுத்த முடிவோ மிகக் கடுமையானது. டி.பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்ற ஆந்திர தலைவர்களே இந்த அப்பாவி தொண்டரை தூண்டி விட்டிருக்கலாம் என்ற பேச்சும் அப்போது அடிபட்டது. பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரத்தின் பிரபலமான தலைவர் இல்லையென்றாலும், ஓரளவு அறிமுகமான உண்மையான தொண்டர். வேலூர் சிறையிலும் இருந்திருக்கிறார், அப்போது தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரையும், ம.பொ.சி. உட்பட பலரையும் தெரிந்து வைத்திருந்தார். அப்படிப்பட்ட உண்மையான தொண்டர் தனி ஆந்திரம் வேண்டுமென்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியபோது அதை யாரும் அத்தனை முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கவில்லை. ஆனால் உண்ணாவிரதம் தொடரத் தொடர பலரது கவனமும் இவர் பக்கம் திரும்பியது. ஆந்திரத்தின் பெரும் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் இவரைச் சூழ்ந்துகொண்டு உண்ணாவிரதத்தை ஆதரித்துக் கொண்டிருந்தனர்.




பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் பிறந்தவர். இந்திய ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த இவர் காந்தியடிகள் தலைமையில் சுதந்திரப் போரில் கலந்து கொள்வதற்காக 1930இல் தன் வேலையை ராஜிநாமா செய்தவர். சபர்மதி ஆசிரமத்தில் முதலில் இவர் இருந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு இவர் சமுதாயப் பணிகளில் ஈடுபடலானார். இவர்தான் 1952 அக்டோபர் 19ஆம் தேதி தனி ஆந்திரா வேண்டுமென்று உண்ணாவிரதம் தொடங்கினார். 51 நாட்கள் ஆன பிறகு இவர் நிலைமை மோசமடைந்து உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்த செய்தி கேட்டு அனைவரும் வருந்தினர். அவருடைய ஆந்திர இன உணர்ச்சியைத் தமிழர் தலைவர்கள் உட்பட பலரும் பாராட்டினாலும், அவர் உயிரிழந்ததன் விளைவாக ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து அச்சமடைந்தனர். பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணச் செய்தி அறிந்ததும் தெலுங்கு பேசும் பகுதிகள் கொந்தளித்தன. அங்கு வன்முறை பரவியது, அராஜகச் செயல்கள் எங்கும் நடந்தேறின. அரசாங்க அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன, அல்லது அடித்து நொறுக்கப்பட்டன. ஆந்திரா பகுதி வழியாகச் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்களில் பயணம் செய்த தமிழர்கள் தாக்கப்பட்டனர். ஆந்திரப் பகுதிகளில் வசித்த தமிழர்கள் போலீசாரின் பாதுகாப்பை நாடவேண்டியிருந்தது. சில நாட்கள் வரை ஆந்திரப் பகுதி அராஜகத்தின் தாண்டவத்தைத்தான் காணமுடிந்தது. சென்னை முதலமைச்சர் ராஜாஜி ஆந்திர அரசு அதிகாரிகளுக்கு ஒரு அவசர ஆணை பிறப்பித்தார். பொருட்சேதம் பற்றி கவலை வேண்டாம், ஆனால் உயிர்ச்சேதமின்றி பார்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அந்த ஆணை.




இப்படி ஆந்திரப் பகுதிகள் கொந்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்ப் பகுதிகளில் எந்தவித சலனமும் காணப்படவில்லை. சென்னை நகரத்தில் மட்டும் ஆங்காங்கே சிற்சில சலசலப்புகள். ஆந்திரப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற செய்தியை வானொலி மூலம் கேள்விப்பட்டு சென்னையிலும் பல இடங்களில் கலவரங்கள் ஏற்படும் நிலை தோன்றியது. அதனால் நகரத்தில் தெலுங்கு பேசும் மக்கள் வாழுமிடங்களில் போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டது. பொட்டி ஸ்ரீராமுலு ஆரிய வைசிய இனத்தைச் சேர்ந்தவர். சென்னை நகரத்தில் இந்த இனத்தார் நகைக் கடைகள் முதலான பல வர்த்தக தாபனங்களை வைத்திருந்ததால், அவர்களுக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தெலுங்கு பிராந்தியங்களில் நடந்த வன்முறை மூன்று நாட்கள் வரை தொடர்ந்தன. ராஜாஜி அமைச்சரவையில் இருந்த தெலுங்கு பகுதி அமைச்சர்கள் நிதானமிழக்காமல் செயல்பட்டனர். அதனால் வன்முறை இழப்புகள் பெருமளவில் நேராமல் பாதுகாக்கப்பட்டது. அந்த அமைச்சர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இந்த சூழ்நிலையில் பிரதமர் ஜவஹர்லால் நேரு 19-12-1952 அன்று பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் தெலுங்கு பேசும் மக்களின் விருப்பத்தையொட்டி, தனி ஆந்திர மாநிலம் சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு 2-10-1953இல் தனி மாநிலமாக இயங்கும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆந்திராவில் அமைதி நிலவத் தொடங்கியது.

நேரு அவர்களின் அறிக்கைப் படி, சென்னை நகரம் அல்லாத, தகராறுக்கு இடமில்லாத தெலுங்கு பேசும் மாவட்டங்களைக் கொண்டு, சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து, ஆந்திர மாநிலம் அமைக்கப்படும். இந்த புதிய மாநிலத்தின் தலைநகரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நேரு கூறியிருந்தார். நேருவின் அறிவிப்பின்படி சென்னை நீங்கலாக என்பதால் சென்னை ஆந்திராவுக்குப் போகாது, ஆனால் இரு மாநிலத்துக்கும் பொதுத் தலைநகராக ஆக்க முன்வந்தால் என்ன செய்வது என்று தமிழர் தலைவர்கள் அச்சப்பட்டார்கள். அது தவிர, பிரச்சனைக்கு இடமில்லாத தெலுங்கு பேசும் மாவட்டங்கள் வரிசையில் சித்தூர் மாவட்டத்தையும் சேர்த்ததும் வருத்தமளித்தது. காரணம் சித்தூர் மாவட்டம் தமிழ்நாட்டின் எல்லையையொட்டி அமைந்தது, மேலும் இங்கு பல ஊர்கள் தமிழர் அதிகம் வசிக்கும் இடங்கள், இதை முழுதுமாக ஆந்திராவுக்குப் போய்விட்டால் என்ன செய்வது? இதற்கு என்ன வழி? என்று தமிழர்கள் நினைத்தார்கள். தலைவர் ம.பொ.சி. போன்றவர்கள் தலைநகரத்தையும் காக்க வேண்டும், ஆந்திராவுக்குப் போகவிருந்த தமிழ்ப்பகுதிகளையும் மீட்க வேண்டுமென்கிற வேகம் கொண்டார்கள்.

இந்த சூழ்நிலையில் ஆந்திர கேசரி டி.பிரகாசம் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் சொன்ன கருத்து: "சென்னை நகரம் முழுவதையும் ஆந்திரத்துக்குக் கொடுக்காவிட்டாலும், இந்த நகரத்தின் மத்தியில் ஓடுகின்ற கூவம் நதியை எல்லையாக வைத்து, தென் சென்னையைத் தமிழர்களுக்கும், வட சென்னையை ஆந்திரத்துக்கும் பங்கு போட்டுத் தரவேண்டியிருக்கும். அதுவும் இயலாதென்றால், சென்னை நகரத்தை தமிழ்நாடு, ஆந்திரம் இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக அமைக்க வேண்டும். அதுவும் முடியாதென்றால், சென்னை நகரை மத்திய அரசின் நேரடி ஆட்சியில் கொண்டு வரவேண்டும்". இதுதான் டி.பிரகாசம் அவர்களின் கருத்தாக வெளியிடப்பட்டது. தன் இன்னுயிரைக் கொடுத்து ஆந்திரம் உருவாகக் காரணமாக இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவை உணர்ச்சிவசப்பட்டு, சிறந்த காந்தியவாதியான டி.பிரகாசம் "ஸ்ரீராமுலு காந்தியைவிட சிறந்தவர்" என்று பாராட்டினார்.

ஆந்திர மாநிலப் பிரிவினை சம்பந்தமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளைப் பற்றியும், ஆந்திரத் தலைநகர் குறித்து ஆராயவும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி திரு வாஞ்சு என்பார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. நீதிபதி வாஞ்சு சென்னைக்கு வரும்போது, சென்னை நகரம் ஆந்திர்த்துக்குத்தான் சொந்தம் என்பதை வலியுறுத்தி ஆந்திரர்கள் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது சென்னையில் பெரும் வர்த்தக நிறுவனங்களை நடத்திவந்த ஆரிய வைசியர்களும், ஆந்திர காங்கிரசாரும் பெரும் பொருள் செலவு செய்து இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இவர்களுடன் வட இந்திய வியாபாரிகளான குஜராத்தியர், மார்வாரிகள் ஆகியோரும் இவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

"சென்னை ஆந்திரா பரிஷத்" எனும் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது. சென்னை நகரில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தி ஆந்திரத்துக்கு ஆதரவாகவும், சென்னை நகரம் ஆந்திரத்தின் தலைநகராக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும் இவர்கள் கூட்டங்களில் பேசிவந்தனர். சென்னை நகரம் யாருக்கு எனும் பிரச்சனையில் தமிழரசுக் கழகத்தைத் தவிர வேறு யாரும் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. ராஜாஜி மட்டும் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காரணத்தால், சென்னை தமிழகத்தில்தான் இருக்க வேண்டுமென எண்ணினாலும், அதை வெளிப்படையாக சொல்லமுடியாத கட்டாயத்தில் இருந்தார். சென்னை மேயராக இருந்த காங்கிரஸ்காரர் டி.செங்கல்வராயன் மட்டும் ம.பொ.சியுடன் தீவிரமாக ஒத்துழைத்தார். வேறு யாரும் இது குறித்து அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. 

பெரியாரிடம் சென்னை நகரம் யாருக்கு என்பது குறித்து கேட்டதற்கு அவர் "சென்னை ஆந்திரத்தில் இருந்தால் என்ன, தமிழகத்தில் இருந்தால் என்ன? எங்கிருந்தாலும் திராவிடத்தில்தானே இருக்கப் போகிறது" என்று பதிலளித்தார். தி.மு.க.வோ, அப்போதுதான் தி.க.விலிருந்து பிரிந்து வந்த கட்சி என்பதாலும், அரசியலில் அதுவும் இதுபோன்ற சிக்கலான பிரச்சனைகளில் அவர்கள் அதிகமாக ஈடுபடாமல் இருந்து விட்டனர். ஒருக்கால் தி.க. தலைவரைப் போலவே இவர்களும் சென்னை எங்கு இருந்தால் என்ன, திராவிடத்தில்தானே இருக்கிறது என்று இருந்தார்களோ என்னவோ யார் கண்டார்கள்?

அந்த சமயம் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் கு.காமராஜ் அவர்கள். அவருக்கு ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்து செல்வதில் விருப்பமில்லை. எனினும் ஆந்திரத்துத் தலைவர்கள் விடாப்பிடியாக தனி மாநிலம் கேட்பதால் வேறு வழியின்றி அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் தலைநகர் பிரச்சனை உட்பட எதிலும் கருத்து கூறாமல் மெளனமாகவே இருந்து விட்டார் என்கிறார் ம.பொ.சி. இது குறித்து நீலம் சஞ்சீவி ரெட்டி கூறும்போது, "திரு காமராஜ் அவர்களின் மெளனம் புத்திசாலித்தனமானது, பொருள் நிறைந்தது, மற்ற தமிழ்த் தலைவர்களும் அவரைப் பின்பற்ற வேண்டும்" என்று கருத்துக் கூறியிருந்தார். இதன் பொருள் என்னவோ தெரியவில்லை. மற்றொரு ஆந்திரத் தலைவர் தென்னெட்டி விஸ்வநாதம் என்பாரும் தமிழகத் தலைவர்களில் பலர் ஆந்திரா பிரிவதை ஆதரிக்கிறார்கள் என்றார்.

அப்போது சென்னை மேயராக இருந்தவர் முதிர்ந்த காங்கிரஸ் தலைவர் டி.செங்கல்வராயன் என்பார். ம.பொ.சி. சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மேன் எனும் பதவியில் இருந்தார். ஒரு சமயம் உணர்ச்சிவசப்பட்ட மேயர் டி.செங்கல்வராயன் ஒரு கூட்டத்தில் பேசுகையில், "சென்னையில் வாழும் சிறுபான்மையினரான ஆந்திரர்கள் சென்னை பற்றிய கிளர்ச்சியில் ஆந்திர காங்கிரசுக்கு ஒத்துழைப்பு நல்கினால், அவர்களுக்குக் குடிதண்ணீர் வழங்க மாட்டேன்; பிணம் புதைக்கவும் சுடுகாட்டில் இடம் கொடுக்கமாட்டேன்" என்றெல்லாம் பேசிவிட்டார். இது தவறான பேச்சு, ஆத்திரத்தில் அப்படி பேசியமைக்காக அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில் நீதிபதி வாஞ்சு ஆந்திராவுக்குச் சென்றார். அங்கு அவர் சென்ற இடங்களிலெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தி சென்னையை ஆந்திரருக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களினால் நீதிபதி வாஞ்சுவின் எண்ணம் ஆந்திரருக்கு சாதகமாக ஆகிவிடுமோ என்றுகூட தமிழ்த் தலைவர்கள், குறிப்பாக ம.பொ.சி. கவலையடைந்தார்.

நீதிபதி வாஞ்சு சென்னை வந்தபோது தமிழர் குழுவொன்று அவரைச் சென்று கண்டது. சென்னை தமிழ் நாட்டின் தலைநகராகத்தான் இருக்க வேண்டுமென்று அப்போது வற்புறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்ப் பிரதிநிதிகள் சென்னையைத் தமிழ்நாட்டில் இருக்க வைக்க ஆன முயற்சிகளை மேற்கொண்டனர். 9-12-1952இல் சென்னை சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் ராஜாஜி சொன்ன கருத்து இது:

"சென்னை நகரம் தமிழ்நாட்டுடன் சேர்ந்த பகுதி. சென்னை நகர மக்களும் அந்நகருக்கு வடக்கே வெகுதூரம் வரை வசிப்பவர்களும் தமிழர்களே. ஆகவே, சென்னை நகரைத் தமிழ் நாட்டிலிருந்து பிரித்துத் தனி நிர்வாகத்தின் கீழ் வைக்க முடியாது. சென்னையைத் தனி ஆந்திர ராஜ்யத்தின் தலைநகராகவும் செய்ய முடியாது. சென்னை நகர நிர்வாகம் பற்றிப் பேசவும் நிபந்தனைகள் விதிக்கவும் ஆந்திரர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. சென்னை நகரத்தின் ஜனத்தொகையில் நூற்றுக்கு அறுபத்தியெட்டு பேர் தமிழர், பதினான்கு சதவிகிதம் பேர்தான் தெலுங்கர்கள். சென்னை நகரம் பற்றிய கோரிக்கையையும் அதன் எதிர்காலம் பற்றியும் எழுப்பபட்டுள்ள நிபந்தனைகளையும் கைவிடும் பக்ஷத்தில் தனி ஆந்திர அரசை நிறுவ ஆந்திர நண்பர்களுடன் சேர்ந்து நானும் பாடுபடத் தயார்."

ராஜாஜியின் இந்த அறிவிப்பு தமிழர் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியது. காங்கிரஸ் கட்சி சார்பிலும் நீதிபதி வாஞ்சுவிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. சென்னை நகரம் தமிழகத்தில் இருக்கவேண்டுமென்பது அவர்களது கோரிக்கையாகும்.

16-3-1953 அன்று சென்னை கடற்கரையில் மேயர் டி.செங்கல்வராயன் ஒரு பொதுக்கூட்டத்தை கட்சி சார்பு இல்லாமல் கூட்டினார். அதில் அவரே தலைமை வகித்தார். ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் பெரியார் ஈ.வே.ரா. அவர்களையும் கூட்டத்துக்கு அழைத்தனர். அதை உணர்ந்து அவரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதித்தார். அந்தக் கூட்டத்தில் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி பெரியார், ம.பொ.சி., சட்டநாத கரையாளர், மீனாம்பாள் சிவராஜ், எஸ்.முத்தையா முதலியார், எம்.பக்தவத்சலம் ஆகியோர் பேசினர். அந்த சமயம் மதுரையில் இருந்த காங்கிரஸ் தலைவர் கு.காமராஜ் அவர்கள் "சென்னை நகரில் ஆந்திரருக்கு எந்தவிதமான பங்கு கொடுப்பதாக இருந்தாலும், இங்கு வரலாறு கண்டிராத பெரும் கிளர்ச்சி உண்டாகும்" என்று தெரிவித்திருந்தார்.

1953 ஜனவரி 24,25 ஆகிய தேதிகளில் சென்னை திருவல்லிக்கேணியில் தமிழரசுக்கழக மாநில மகாநாடு நடந்தது. ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.போ.மீனாட்சிசுந்தரனார், ராஜா சர் முத்தையா செட்டியார், ம.பொ.சி. ஆகியோர் பேசினர். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் ஆர்.கே.சண்முகம் செட்டியார் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் பேசினார். இந்த மகாநாட்டில் தலைநகரை தமிழகத்துக்காகக் காப்பது என்று தீர்மானம் நிறைவேறியது. 

அப்போது மாணவராக இருந்த தஞ்சை ஃபார்ம் ப்ராடக்ட்ஸ் அதிபரும், முன்னாள் அ.தி.மு.க. எம்.பியுமான ஜி.சுவாமிநாதன் ஒரு மாணவர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து தமிழர் உரிமைகளைக் காக்க தீர்மானங்களை நிறைவேற்றினார். அவர் தவிர எம்.பக்தவத்சலம், கோவை சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார், ஜனாப் அப்துல் அமீத்கான், நாரண துரைக்கண்ணன் ஆகியோரும் தமிழர் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று உரையாற்றினர்.

1953 பிப்ரவரி முதல் வாரத்தில் "தெ மெயில்" ஆங்கில நாளேட்டில் வந்த செய்தியில், ஆந்திரப் பிரிவினையை யொட்டி இடைக்கால ஏற்பாடாக ஆந்திரத் தலைநகர் சென்னையில் இருக்குமென்றும், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே கவர்னர் இருக்க வேண்டுமென்றும், இவ்விரண்டு மாநிலங்களுக்கும் ஒரே நீதிமன்றம் இருக்குமென்றும் நீதிபதி வாஞ்சு தன் அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்துவிட்டதாக அந்த செய்தி கூறியது.

இந்த செய்தி வெளிவந்தவுடன் முதலமைச்சர் ராஜாஜி டெல்லி சென்றார். அங்கு நேருவைச் சந்தித்து பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் சொன்னார், "சென்னை நகரத்தில் ஆந்திராவுக்கு இடம் தருவதென்று மத்திய அரசு முடிவெடுப்பதானால், அதனை அமல்படுத்தும் சக்தி என்னிடம் இல்லை. அந்த நிலையில் வேறு முதலமைச்சரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் பிரதமரிடம் சொல்லிவிட்டேன்" என்று அவர் கூறினார்.




இந்த முடிவுக்கு எதிராக தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான தந்திகள் உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்கு அனுப்பப்பட்டது. தந்தி மலைபோல குவிந்ததும் மத்திய அரசு சென்னை விஷயத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டனர். அந்த சமயத்தில் சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டமொன்று இது விஷயமாக விவாதிக்கக் கூட்டப்பட்டது. அதில் சென்னை சம்பந்தப்பட்ட தீர்மானத்தை ம.பொ.சி. முன்மொழிய, முன்னாள் மேயர் எம்.ராதாகிருஷ்ணப் பிளை வழிமொழிந்தார். அந்த தீர்மானம் சென்னை மாநகர நிர்வாகத்தின் கொள்கை முடிவாகக் கொள்ளக்கூடியது. அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய ம.பொ.சி. உணர்ச்சிவசப்பட்டு பேசினார். மாமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் சொன்னார், "கடைசி ஒரு தமிழன் உயிருடன் இருக்கும் வரை ஆந்திரர்கள் சென்னையை அடைய விடமாட்டோம். தற்காலிகமாகக் கூட ஆந்திர அரசுக்கு இங்கு இடம் தரமாட்டோம். தமிழ் நாட்டிலிருந்து சென்னை நகரத்தைத் துண்டிக்க விடமாட்டோம். இந்தப் போரில் நாங்கள் "தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்!" என்றார். கூடியிருந்த கூட்டம் நெடு நேரம் அவர் பேச்சைக் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டியது. அந்தத் தீர்மானத்துக்கு ஆந்திரர்கள் ஒரு திருத்தம் கொண்டுவந்தனர். அதில் தமிழர் பக்கம் 51 பேரும், எதிர்த்து 3 பேரும் வாக்களிக்க தமிழர்கள் தீர்மானம் நிறைவேறியது. 

இந்த நிகழ்வுகள் எல்லாம் பிரதமர் நேருவின் கவனத்துக்குச் சென்றது. சென்னை நகரத்தின் மக்கள் அனைவரின் பிரதிநிதித்துவம் பெற்ற மாமன்றத்தின் தீர்மானத்தைப் புறக்கணிப்பதற்கில்லை என்று நேரு அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னார். 25-3-1953இல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு ஒரு அறிக்கை வெளியிட்டார். அது:

"1-10-1953இல் புதிய ஆந்திர மாநிலம் உருவாகும். ஆந்திர மாநில தலைநகர் ஆந்திராவின் உட்பகுதியில் இருக்கும். ஒருசில அலுவலகங்கள் மட்டும் தற்காலிகமாக சென்னையில் இயங்கும். ஆந்திராவின் உயர்நீதிமன்றம் எங்கு அமையும் என்பதை ஆந்திர அரசு தீர்மானிக்கும், அதுவரை சென்னையில் இயங்கும்.

இதன்பின்னர் தான் தலைநகரைக் காப்பதற்காக தமிழரசுக் கழகமும், தலைவர் ம.பொ.சியும் நிம்மதி அடைந்தனர். இந்த போராட்டத்துக்காக சென்னை நகரத்தின் எல்லா பகுதிகளிலும் தெருக்களில் கூட்டங்களைக் கூட்டி மேயர் டி.செங்கல்வராயன், ம.பொ.சி. மற்ற தமிழரசுக்கழக தொண்டர்கள் எல்லோரும் பல நாட்கள் பாடுபட்டதற்கு நல்ல பலன் கிட்டியது. சென்னை இப்போது தமிழகத்தின் தலைநகராக தலைநிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது.

இப்படி கடந்த காலத்தின் வரலாறுகளைப் புரட்டினால், ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் பெரும் தியாகங்கள் மறைந்து கிடப்பதைப் புரிந்து கொள்ள முடியும். தலைநகரைக் காத்த பெருமை சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கும் அவருக்கு ஆதரவளித்த எண்ணற்ற தமிழ்ப் பெரு நெஞ்சங்களுக்கும் நாம் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும். வாழ்க தமிழ்! வெல்க தமிழகம்!!

















No comments: