பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, June 4, 2015

விநாயக் தாமோதர் சாவர்கர்

                                                                                                                                                                             (காலம் 28 மே 1883 - 26 பிப். 1966).


வீர சாவர்கர் என்று அழைக்கப்படும் இந்த சுதந்திரப் போராட்ட வீரருடைய முழுப் பெயர் விநாயக் தாமோதர் சாவர்கர் என்பதாகும். இவரை சாதாரண சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொன்னால் போதாது, 'வீரர்' எனும் சொல்லுக்கு முழுக்க முழுக்க சொந்தக்காரர். இவருடைய பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, செய்த சாகசங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதற்கு முன்பாக அவரைப் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தைக் கொடுக்க வேண்டியது அவசியம். இன்றைய அரசியல் வாதிகள் 'மதவாதம்' என்று அரசியல் ஆதாயத்துக்காகப் பேசிவரும் அந்த சொல்லின் உண்மையான நேர்மையான பொருளில் இந்துத்துவத்தின் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தவர் சாவர்கர். 

இந்துத்துவம், மதவாதம் போன்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி இவர் போன்ற தலைவர்களை பூச்சாண்டி போல சித்தரித்து வரும் நமது நாட்டு அரசியல் வாதிகள் இவரைப் பற்றிய சரியான தகவல்களைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள அவர்கள் முயற்சி செய்யவில்லை, பெயரைக் கேட்டவுடனேயே இவரை மதவாதி, காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர் என்றெல்லாம் ஒரு தரப்பு வாதத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். அதனால் அவருடைய சாகசம், வீரம் வெளிவராமல் போய்விட்டது.

முதலாவதாக அவர் இந்திய சமூக அமைப்பில் இந்துக்களுக்குள் சாதிய அமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. வெள்ளையர்கள் காலத்தில் பாதிரிமார்களின் பிரச்சாரம், சலுகைகள் பெற போல பல காரணங்களால் மதம் மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டுவரப்படவேண்டும் என்பதும் இவருடைய விருப்பம். இன்று பொழுது விடிந்தது முதல் அஸ்தமனம் வரை அரசியல்வாதிகள் ஓலமிடும் "ஹிந்துத்வா" எனும் சொல்லை உருவாக்கியவரே இவர்தான். அவர் இந்த சொல்லின் மூலம் சொல்ல வந்த கருத்தை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது. இனி இவரது வாழ்க்கை சாதனைகளுக்குள் நுழையுமுன்பாக அவரது பிறப்பு வளர்ப்பு பற்றி சிறிது பார்ப்போம்.

மராத்திய மொழி பேசும் மேலைக் கடற்கரைப் பிரதேசத்தில் நாசிக் எனும் புண்ணியத் தலத்துக்கருகில் உள்ள பாகூர் எனும் சிறிய கிராமத்தில் சித்பாவன் கொங்கண பிராமண குடும்பத்தில் தாமோதர் சாவர்கர் ராதாபாய் தம்பதியருக்கு 28-05-1883 அன்று இந்த பூமியில் அவதரித்தார். இவருக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி. கணேஷ் சாவர்கர், நாராயண் சாவர்கர் என்போர் சகோதரர்கள், மைனா என்பவர் சகோதரி. 

இவருடைய பெற்றோர் காலமான பின் குடும்பத்தை இவருடைய மூத்த அண்ணன் பாபாராவ் என அழைக்கப்பட்ட கணேஷ் சாவர்கர்தான் கவனித்துக் கொண்டார். விநாயக் தாமோதர் சாவர்கருக்கு இவர் ஒரு ஆதர்ச சகோதரர். மாணவப் பருவத்திலேயே சவார்கர் (இவரை இனி சாவர்கர் என்றே குறிப்பிடுவோம்) இளஞர்களை ஒன்று திரட்டி "மித்ர மேளா" எனும் அமைப்பை உருவாக்கி நாட்டுப் பற்றை ஏற்படுத்தி வந்தார். பிரிட்டிஷ் அரசுக்கு மனுப்போட்டு சலுகை கேட்கும் மாதிரியில் அல்லாமல் சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து இந்திய சுதந்திரத்தைப் பெற புரட்சிப் பாதையை ஏற்றுக் கொண்ட அமைப்பு இது. 

அவர் நடவடிக்கைகள் எப்படி இருந்தபோதும், நமது கலாசாரம், பண்பாட்டுச் சூழல் காரணமாக 1901இல் அதாவது அவருடைய 18ஆம் வயதில் யமுனாபாய் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண்ணின் தந்தை ராமச்சந்திர திரயம்பக சிப்ளுங்கர் என்பார்தான் சாவர்கருடைய கல்லூரி படிப்புக்கு உதவி செய்தவர். 1902இல் இவர் புனேயில் இருந்த பிரசித்தமான ஃபர்கூசன் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் துவங்கினார். அப்போது மராத்திய மாநிலத்தில் பிரபலமான தலைவராக இருந்த பால கங்காதர திலகர், பிபின் சந்த்ர பால், லாலா லஜபதி ராய் (இவர்களை அந்தக் காலத்தில் லால், பால், பால் என்பர் (Lall, Paal, Baal) அந்த காலகட்டத்தில் லார்டு கர்சான் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான். மத அடிப்படையில் பின்னாளில் பிரச்சனைகள் வருவதற்கு இந்தப் பிரிவினையும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. சுதேசி இயக்கமும், வங்கப் பிரிவினையும் மக்கள் மத்தியில் ஒரு பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்த சமயம் அது.

சுதேசிய இயக்கத்தில் அன்னிய துணி பகிஷ்கரிப்பு தலையாயதாக இருந்தது. 1905இல் இவர் அன்னிய துணிகளை தீயிலிட்டு எரித்து மிகப் பெரிய போராட்டமொன்றை நடத்தினார். இவரும் இவருடைய தோழர்களும் இணைந்து நடத்தும் போராட்டத்துக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அப்படிப்பட்ட அமைப்பு ஒன்றை தோற்றுவித்து அதற்கு "அபினவ பாரதம்" எனப் பெயரிட்டார். இப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தால் அன்றைய அரசாங்கம் சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா? இவரை கல்லூரியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லையே தவிர பட்டப் படிப்பு தேர்வு எழுத அனுமதித்தார்கள். பட்டம் பெற்ற இவரை லண்டன் மாநகருக்கு அனுப்பி சட்டம் பயில (பார் அட் லா) அனுப்பியவர் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா எனும் சுதேசித் தலைவராவார். 

ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவின் தாக்கம் காரணமாக சாவர்கரும் அவர் போன்ற பல இளைஞர்களும் ஒன்று சேர்ந்து "கரம் தள்" எனும் பெயரில், அதாவது "Army of Angry Youth" அமைப்பை ஏற்படுத்தினர். இந்தப் படைக்கு பால காங்காதர திலகரின் தலைமையேற்றார். இந்த காலகட்டத்தில்தான் இந்திய தேசிய காங்கிரசில் மிதவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தேசபக்தர்கள் இரு பிரிவினராக ஆனார்கள். இதில் திலகர் தீவிரவாதிகள் என அழைக்கப்பட்டவர்களின் தலைவராக விளங்கினார். இவர்களில் மிதவாதிகள் என அழைக்கப்பட்டவர்கள் காங்கிரசில் பெரும்பான்மையாக இருந்தார்கள். இவர்கள் பிரிட்டிஷாரிடம் இணக்கமாக நடந்து கொண்டு அவர்களிடம் கேட்டு சில சலுகைகளை பெறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்பினார்கள். ஆனால் தீவிரவாதிகள் எனப்படுவோர் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை ஒழித்து இந்திய பரிபூரண சுதந்திரத்தை அடைய வேண்டும் என போராடினர்.

இந்த நிலையில் 'கிரேஸ் இன்' எனப்படும் சட்டக்கல்லூரியில் சட்டம் பயில லண்டன் சென்ற சாவர்கர் அங்கிருந்த 'இந்தியா ஹவுஸ்' எனும் இல்லத்தில் தங்கினார். இந்த இந்தியா ஹவுஸ் தேசபக்தர் பண்டிட் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்குச் சொந்தமானது. இங்கிலாந்துக்குக் கல்வி பயில வருகின்ற இந்திய இளைஞர்களுக்கு தலைமையகமாகத் திகழ்ந்தது இந்த இந்தியா ஹவுஸ். அப்படி இங்கு வந்து தங்கி தீவிர தேசபக்தர்களாக விளங்கியவர்கள் ஏராளம். அவர்களில் வ.வெ.சு.ஐயர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் போன்றோரையும் குறிப்பிடலாம். இங்கு வந்து தங்கியிருந்த காலத்தில் சாவர்கர் தேசபக்த இந்திய இளைஞர்களை ஒன்று திரட்டி Free India Society என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு தேசபக்தியை ஊட்டி இந்தியா விரைவில் ஒரு மாபெரும் புரட்சியின் மூலம் சுதந்திரம் பெற பாடுபடத் தொடங்கினார்.

இந்த அமைப்பின் நோக்கம் குறித்து சாவர்க்கர் செய்த அறிவிப்பின் சாராம்சம் இதுதான். "சுதந்திரத்துக்காக பாடுபடும் இந்தியர்களாகிய நாம் குறிப்பிட்ட பிரிட்டிஷ் அதிகாரிகளையோ, அல்லது அவர்களது சட்டங்களையோ குறைகூறுவதில் பயன் இல்லை. அப்படி செய்து கொண்டிருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. எந்த அதிகாரியையோ அல்லது எந்தவொரு சட்டத்தையோ எதிர்ப்பது நம் நோக்கமல்ல. ஆனால் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு நம்மை நாமே ஆளக்கூடிய சுயாதிகாரம் பெற்று, நமக்குத் தேவையான சட்டங்களை நாமே உருவாக்கிக் கொள்ளும் இயக்கமே நமது இயக்கம். சுருங்கச் சொன்னால் நமது குறிக்கோள் "பரிபூரண சுயராஜ்யம்".

1857இல் வட இந்தியாவில் தொடங்கிய சிப்பாய் கலகம் என அழைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போரைப் போன்ற ஒரு சுதந்திரப் போர் மறுபடி உருவாக வேண்டுமென்பது அவர் விருப்பம். அதற்காக சாவர்கர் இந்தியா பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்ட வரலாறு குறித்த பல நூல்களைப் படித்தார். உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு விடுதலைப் போர்களைப் பற்றியெல்லாம் படித்தார். அவற்றிலிருந்து அவர் பல கருத்துக்களை ஒருங்கிணைத்து "இந்திய முதல் சுதந்திரப் போர்" The History of the War of Indian Independence எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1857இல் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் படைகளில் இருந்த இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு எதிராகக் கலகம் செய்ய அடிப்படை காரணங்கள் என்ன என்பதை இவர் விரிவாக ஆராய்ந்தார். இவர்தான் முதன் முதலாக 1857 சிப்பாய்கள் கலகம் என்றிருந்ததை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று பிரகடனப் படுத்தியவர். இவருடைய இந்த நூலை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு தடை செய்தது. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டு ஐரோப்பாவில் குடிபெயர்ந்த இந்தியர் மேடம் காமா அம்மையார் என்பார் இந்த நூலை ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றார். அப்படி உலகெங்கிலும் மக்கள் குறிப்பாக இந்திய இளைஞர்கள் வாங்கிப் படிக்கும் நூலாக இது திகழ்ந்த காரணத்தால் இந்திய விடுதலை உணர்வு உலகெங்கும் பரவியது. உலகத்தில் பல்வேறு நாடுகளிலும் வெடித்தெழுந்த புரட்சித் தீ எப்படி பரவியது, எந்தெந்த விதங்களில் புரட்சியாளர்கள் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போரிட்டார்கள் என்பதையெல்லாம் சாவர்கர் படித்துத் தெரிந்து கொண்டார். அப்போது ரஷ்யா நாட்டில் நடைபெற்று வந்த புரட்சி இயக்கத்துத் தலைவர்களுடன் இவர் தொடர்பு கொண்டார். இரத்தப் புரட்சிக்கு இந்த முயற்சி துணை புரியும் விதத்தில் இவருக்கு வெடிகுண்டுகள் செய்யும் முறை கற்பிக்கப்பட்டது. இவர் கற்றுக் கொண்டு கொரில்லா போர்முறை எனப்படும் மறைந்திருக்கு தாக்கும் போர் தவிர வெடிகுண்டு தயாரிக்கும் முறைகளும் இந்திய இளைஞர்களுக்கு கையேடுகள் மூலம் விளக்கப்பட்டன.

1909ஆம் ஆண்டு மதன்லால் திங்க்ரா எனும் சாவர்கரின் நெருங்கிய நண்பரும் புரட்சிக்காரருமான தேசபக்தர் அப்போது பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சர் கர்ஸான் வாலி என்பவரை பொதுக்கூட்டமொன்றில் சுட்டுக் கொன்றார். இந்த அரசியல் கொலை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசபக்தர் திங்க்ராவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் ஒரு புறம் வந்து குவிந்தாலும் எதிர்ப்புக் குரல்களும் ஏராளமாக எழுந்தன. இவற்றையெல்லாம் தைரியத்தோடு எதிர்கொண்ட சாவர்கர் திங்க்ராவின் இந்த செயலை மறைமுகமாக ஆதரித்தும், அவருக்கு எதிரான வழக்குக்காக நிதி சேர்த்தும் வரத் தொடங்கினார். இங்கிலாந்தில் வாழ்ந்த இந்தியர்களில் சிலர் திங்க்ராவின் இந்த செயலைக் கண்டிக்கும் விதமாக ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அந்தக் கூட்டத்தில் அவர்களின் நோக்கத்தை எதிர்த்துக் குரல் எழுப்பியதோடு அவரது ஆதரவாளர்களுக்கும், திங்க்ராவின் செயலை எதிர்ப்பவர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை முற்றியது.

இந்த கொலை வழக்கு ரகசியமான ஓரிடத்தில் நடந்தது. அதன் முடிவில் திங்க்ராவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக இளைஞர்கள் உரக்க எதிர்க்குரல் எழுப்பி கண்டித்தனர். திங்க்ராவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சாவர்க்கரும் எதிர்த்துப் பேசத் தொடங்கினார். மரண தண்டனை நிறைவேற்றிய பின்னர் திங்க்ராவின் உடலைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று சாவர்க்கர் போராடினார். திங்க்ராவின் தியாகத்தையும், தேசபக்தியையும், தீரத்தையும் பாராட்டி சாவர்க்கர் பேசத் தொடங்கினார். மாபெரும் தியாகி திங்க்ரா என்பதை உரத்த குரலில் உலகுக்கு எடுத்துரைத்தார் அவர். இந்தியா விடுதலை பெற வேண்டுமென்றால் இவரைப் போன்ற தியாகிகள் உருவாக வேண்டுமென்பதை எடுத்துரைத்தார் சாவர்கர்.


அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இவருடைய சகோதரர் கணேஷ் சாவர்கர் மிண்டோ மார்லி சீர்திருத்தத்துக்கு எதிராக ஒர் ஆயுதப் புரட்சியை 1909இல் தூண்டினார். இந்தப் போராட்டத்தில் சாவர்க்கருக்கும் தொடர்பு உண்டு என்று சொல்லி அவரையும் இதில் குற்றவாளியாக ஆக்க முயற்சி செய்தது பிரிட்டிஷ் அரசு. தான் பிரிட்டனில் இருந்தால் கைது செய்யப்பட்டு விடுவோம் என்பதை அறிந்த அவர் அப்போது பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் இருந்த மேடம் காமா இல்லத்துக்குக் குடிபெயர்ந்தார். பிரான்ஸ் நாட்டிற்குள் புகுந்து பிரிட்டிஷ் போலீசார் கைது செய்ய முடியாது என்று நம்பியிருந்த சாவர்கரை இந்திலாந்து போலீசார் பிரெஞ்சு போலீஸ் உதவியுடன் 1910ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாவர்கரை இந்தியா கொண்டு செல்ல பிரிட்டிஷ் போலீசார் ஏற்பாடு செய்து கப்பலில் ஏற்றி பயணம் செய்யத் தொடங்கினர். இந்தியாவுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு முன்பு எப்படியாவது அவர்களிடமிருந்து தப்பிவிட வேண்டுமென்று சாவர்கர் தன்னுடைய நண்பர்களின் உதவியோடு ஏற்பாடுகளைச் செய்தார். அதன்படி 1910 ஜூலை 8ஆம் தேதி கப்பல் மார்சேயில்ஸ் துறைமுகத்தை அடைந்த போது கப்பலின் கழிப்பறையிலிருந்த துவாரத்தின் மூலம் கடலுக்குள் குதித்து நீந்தி கரை சேர முயற்சி செய்தார். ஆனால் கரையில் காத்திருந்து இவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்கள் சற்று தாமதமாக வந்ததால் இவரை பிரெஞ்சு போலீசார் பிடித்து பிரிட்டிஷ் போலீசார் வசம் ஒப்படைத்து விட்டனர்.

பிரெஞ்சு நாட்டிற்குள் புகுந்து ஒருவரை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்தது சர்வதேச குற்றம் என்று பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்தது. பிரெஞ்சுக்காரர்கள் பிடித்து வைத்திருந்தால் அவர்களிடமிருந்து சாவர்கரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அரசியல் ரீதியாகக் கேட்டுத்தான் அவரை கைது செய்ய முடியுமே தவிர தங்கள் நாட்டின் சுயாதீனத்தில் குறுக்கீடு செய்தது தவறு என்று பிரெஞ்சு அரசு வாதிட்டது. இந்த பிரச்சனை சர்வ தேச உறவுகள் குறித்தது என்பதால் வழக்கு The Permanent Court of International Arbitration எனும் நீதிமன்றத்துக்கு 1910ஆம் ஆண்டு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கில் 1911இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. உலக நாடுகள் மத்தியில் இதுபோன்றதொரு நிகழ்ச்சி நடைபெறாததாலும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வழக்கின் முடிவு பிரிதொரு நாட்டில் தஞ்சமடைவோரின் உரிமை பற்றியது என்பதாலும் நீதிமன்றத்தின் முடிவை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. 

நீதிமன்றம் தன் தீர்ப்பை அறிவித்தது. அதன் சாராம்சம் என்னவென்றால், பிரான்ஸ் இங்கிலாந்து ஆகிய இவ்விரு நாடுகளுக்கும் இந்தியாவுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்படும் சாவர்கர் மார்சேயில்ஸ் துறைமுகத்தில் தப்பிச் செல்லும் முயற்சி நடக்கும் என்பது தெரிந்திருந்ததாலும், அப்படி அவர் தப்பிச் செல்லும்போது பிடித்த பிரெஞ்சு போலீசாரிடமிருந்து பிரிட்டிஷ் போலீசார் பெற்றுக் கொண்டதில் எந்தவித மோசடியோ அல்லது கட்டாயமே இல்லாமல் நடந்தேறியதால் சாவர்கரை பிரிட்டிஷார் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்பது தீர்ப்பு. இப்படியொரு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் இன்னொன்றையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. அது, சாவர்கரை பிரெஞ்சு எல்லைக்குள் பிடித்து இந்திய ராணுவ போலீசார் வசம் ஒப்படைத்தது தவறான அணுகுமுறை என்றும் சொல்லியது.

இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட சாவர்கர் புனேயிலுள்ள எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அங்கு விசாரணை என்ற பெயரால் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய நீதிமன்ற விவகாரங்களுக்குப் பின் சவார்கருக்கு 50 ஆண்டுகள் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டு 1911 ஜூலை 4ஆம் தேதி அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

அந்தமான் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட சாவர்கர் அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் பலர் அரசியல் கைதிகள் என்பதைத் தெரிந்து கொண்டார். அவர்கள் பல ஆண்டுகளாகக் கடின உடலுழைப்புக்கு ஆட்படுத்தப் பட்டிருப்பதையும் கண்டார். இவருக்கு முன்பாகவே அந்தமான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தனது சகோதரர் கணேஷ் சாவர்கரை பல ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு கண்டார். அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மிருகங்களிலும் மோசமாக சித்திரவதைப் படுத்தப்பட்டு சிரமப் பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். கைதிகள் அங்கு காலை ஐந்து மணிக்கெல்லாம் தூங்கி எழுந்துவிட வேண்டும். மரங்கள் வெட்டுதல், செக்கில் எண்ணெய் ஆட்டுதல் ஆகிய பணிகளில் காவலர்களின் கண்காணிப்போடு கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் பணி செய்யும்போதும், உணவு உண்ணும்போதும் மற்ற கைதிகளோடு பேச அனுமதிக்க மாட்டார்கள். சிறு தவறுகளுக்குக்கூட கடுமையான தண்டனை விதிக்கப்படுவார்கள். சித்திரவதை என்பது அங்கு சர்வ சாதாரணம். வெளி உலக தொடர்பு என்பது அறவே கிடையாது. மனைவி மக்களுக்கோ அல்லது உறவு நட்புக்கோ கடிதம் எழுத ஆண்டுக்கு ஒரேயொரு முறை மட்டும் அனுமதி தரப்படும். சாவர்கர் இப்படி அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது, நிலைமை இதுதான் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டமையால், இவைகள் பற்றியெல்லாம் அதிகம் கவலையோ வருத்தமோ பட்டுக் கொண்டு இராமல், இயந்திரத் தனமாக அவருக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை செய்து கொண்டு காலத்தை ஓட்டிவந்தார். 

சிறைக்குள் இருக்கும் அரசியல் கைதிகளில் பலரும் நன்கு கற்றுணர்ந்தவர்கள் என்பதால் அங்கு கைதிகளுக்கென்று ஒரு ஆரம்ப நிலை நூலகம் ஒன்றை சாவர்கர் முயற்சி எடுத்து அனுமதி பெற்று நடத்தத் தொடங்கினார். அந்த சிறையில் எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் இருந்த பல கைதிகளுக்குப் படிக்கவும் எழுதவும் பயிற்சிகளைக் கொடுக்கத் தொடங்கினார் சாவர்கர்.

இந்திய அரசியல் வானில் 1920 காலகட்டத்தில் தலைசிறந்த தலைவர்களாக விளங்கிய மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், பால கங்காதர திலகர் ஆகியோர் அந்தமான் சிறையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சாவர்கரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர். போராட்டம் குறித்த தன் நிலையிலிருந்து எந்த மாற்றத்தையும் விரும்பாத சாவர்கர் பிரிட்டிஷ் அரசு அவர்கள் சட்ட விதிமுறைகளின்படி தன் மீது குற்றம் சாட்டி விசாரித்துத் தண்டனை விதித்திருப்பதைக் குறிப்பிட்டு, அவர்கள் சட்டம் தன் நடவடிக்கைகளையெல்லாம் குற்றம் என்று கருதி தண்டனை கொடுத்திருக்கிறார்கள். தனக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இதுபோன்றதொரு அறிக்கையின் மூலம் தான் வன்முறையாளன் இல்லை என்பதை தெரிவித்தால் ஒருக்கால் தான் விடுதலை ஆகலாம் பின்னர் அரசியலில் ஈடுபடலாம் என்று ராஜதந்திரத்தோடு எண்ணினாரோ என்னவோ அவர் அப்படியொரு அறிக்கை வெளியிட்டார்.

சாவர்கருடைய நடவடிக்கை ராஜதந்திரமே என்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஒளரங்கசீப்புக்கு அதுபோன்றதொரு கடிதம் எழுதி தப்பித்துக் கொண்டதையும் ஜெயவந்த் ஜோக்ளேகர் எனும் வரலாற்றாசிரியர் எழுதியிருப்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

1921 மே மாதம் 2ஆம் தேதி சாவர்கரும் அவர் அண்ணன் கணேஷ் சாவர்கரும் அந்தமானிலிருந்து கொண்டு வந்து ரத்னகிரியில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கிருந்து சில காலம் கழிந்தபின் மீண்டும் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி பல காலம் சிறைப் பறவையாக இருந்த பின்னர் 1924ஆம் வருஷம் ஜனவரி மாதம் 6ஆம் தேதி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து விடுதலை செய்யப்பட்டார். அந்தக் கட்டுப்பாடுகளாவன: ரத்னகிரி மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது; அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் பங்கு பெறக் கூடாது போன்றவையாகும். எனினும் ஆங்கில இந்திய அரசின் கொள்கை மாற்றம் காரணமாக 1937இல் மாகாண சுயாட்சி கொண்டு வந்தபோது இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன.

இந்துத்வா: புரட்சித் தீயில் புடம்போட்டெடுக்கப்பட்டு புரட்சியாளர் என்று ஊர், உலகமறிய பெயர் வாங்கிய சாவர்கர் தனது நீண்ட நெடிய கடுமையான சிறைவாச காலத்தில் அரசியல் மார்க்கத்திலிருந்து சற்றே ஒதுங்கி இந்து கலாசாரம், பண்பாடு, இந்துத்வம், இந்து தேசியம் போன்றவற்றில் கவனத்தைத் திருப்பினார். சிறையிலிருந்து விடுதலையாகி அவர் மீதிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காலத்தில் இவரது கவனம் முழுவதும் இந்துத்துவத்திலும் அதன் மகோன்னதத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் திரும்பத் தொடங்கியது. அந்தமான் சிறையிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டு, ரத்னகிரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் இந்துத்துவத்தின் பால் கவனம் செலுத்தியபோது இவர் தன்னுடைய கோட்பாடுகளை எழுத்து வடிவில் கொண்டு வந்தார். அது "ஹிந்துத்வம் - ஹிந்து என்பவன் யார்?" என்பது. சிறையில் அவர் எழுதியதை ரகசியமாக வெளியே கொண்டு வந்து சாவர்கரின் ஆதரவாளர்கள் அவருடைய புனைபெயரான "மராட்டியன்" (Maharatta) எனும் பெயரால் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டனர். அவருடைய இந்த ஆழ்ந்தறிந்த தெளிந்த கருத்தோட்டத்தில் ஹிந்துக்களின் அரசியல் சமூக விழிப்புணர்வு குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. 

அவருடைய இந்த புதிய கண்ணோட்டத்தின்படி "ஹிந்து" என்பவன் பாரதவர்ஷத்தில் வாழ்கின்ற தேசபக்தி மிக்க குடிமகன். அப்படிப்பட்டவன் மதம் சார்ந்த அடையாளத்துக்கும் அப்பால் தேசம், தேசியம், தேசபக்தி இவற்றால் அடையாளம் காணப்படுபவன். பாரதவர்ஷம் எனப்படும் நமது பாரத தேசத்தில் வாழும் அனைவரும் சமமானவர்கள் என்றும் இந்த சமூகத்தில் வாழும் இந்து சமூகத்தினர் அனைவருக்குள்ளும் ஒற்றுமை நிலைத்திடல் அவசியம் என்றும் வரையறுக்கப்பட்டது. இந்திய தேசத்தில் உள்ள இந்துமதம், ஜைனமதம், சீக்கிய மதம், புத்தமதம் அனைத்தும் ஒன்றே, சமமானதே என்பதை உறுதி செய்தது. சாவர்கருடைய நிலையான கருத்தாக "ஹிந்து ராஷ்ட்ரா" (Hindu Nation) அகண்ட பாரதம் (United India) என்கிற குறிக்கோள் விளக்கப்பட்டது. இந்த அகண்ட பாரதம் எனும் சொல்லை வைத்து இப்போதெல்லாம் சில அரசியல் வாதிகள் சாவர்கரின் கருத்தை இன்னதென்று அறியாமலும் புரிந்து கொள்ளாமலும், அவர்களுக்குப் புரிந்த வகையில் 'அகண்ட" எனும் சொல்லுக்கு அக்கம்பக்கத்து நாடுகளை உள்ளடக்கிய என்பது போல பேசிவரும் வேடிக்கையை பார்க்க முடிகிறது. அவர் சொல்லும் அகண்ட பாரதம் என்பது பிரிவினை இல்லாத ஒற்றுமையான மாபெரும் பாரத தேசம் என்பதாகும். இதை யாராவது சற்று இன்றைய அரசியல் வாதிகளுக்குக் குறிப்பாக தமிழக அரசியல் வாதிகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும். அது மட்டுமல்ல சாவர்கர் சொல்லும் "ஹிந்து இனம்" என்பதில் திராவிடன் என்றோ ஆரியன் என்றோ இனப் பிரிவினைகள் கிடையாது அனைவருமே பாரதியர்கள், இந்தியர்கள் என்பதுதான் என்பது மிக உயர்ந்த கொள்கை. இதனை கொச்சைப் படுத்தி பேசுவோர்களை என்னவென்று சொல்வது? இந்தக் கருத்தை வலியுறுத்தும் அவரது பேச்சின் வரிகள் இதோ அப்படியே ஆங்கிலத்தில்: "that people who live as children of a common motherland, adoring a common holyland" இதன்படி பாரத புண்ணிய பூமியில் வாழும் எவரும் எந்தப் பிரிவினரும் பாரதமாதாவின் புத்திரர்கள் என்பதை இல்லை என மறுத்தல் முடியுமா?

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் இலை, செடி, கொடிகளைப் போலவும், ஆட்டு மந்தையில் ஓட்டிச் செல்லப்படும் ஆட்டுக் கூட்டத்தைப் போலவும் 'சாய்ந்தா சாயுற பக்கம் சாயுற செம்மறி ஆடுகளாக" அல்லாமல் சுயமாக சிந்தித்து, ஆழ்ந்து கிடக்கும் ஒளி பொருந்திய உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டினால் சமுதாயம் அதனை அத்தனை எளிதில் புரிந்து கொள்ளுமா என்ன? அதிலும் வக்கிர எண்ணங்களும், கோணல் புத்தியும் கொண்டு எதிலும் பிரிவினை, எல்லாவற்றிலும் பிரிவினை, ஏற்றத் தாழ்வு என்று நினைப்பவர்கள் அத்தனை எளிதில் உண்மையைப் புரிந்து கொள்வார்களா என்ன? மாட்டார்கள்! அதனால்தான் மெத்தப் படித்த மேதாவிகளும், வெள்ளைக்காரன் அடிவருடிகளாக விளங்கிய சில சரித்திராசிரியர்களும், வக்கிர எண்ணங்களுடைய இந்திய அரசியல் வாதிகளும் பலரும் பலவிதமாக இவருடைய நோக்கங்களை விமர்சித்தார்கள். முதலில் நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு அரசியல் வாதிகளால் 'மதவாதி' என்று முத்திரையிடப்பட்ட சாவர்கர் உண்மையில் ஒரு நாத்திகன். இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அவர் கண்ணோட்டத்தில் "ஹிந்து" என்பவன் மத அடிப்படையில் அப்படி அழைக்கப்படுவது இல்லை. கலாசார, பண்பாட்டு, அரசியல் அடையாளத்தின் முத்திரையே ஹிந்து எனும் சொல். அவர் கருத்துப்படி ஒருவன் ஹிந்துவோ, சீக்கியனோ, ஜெயினனோ, புத்தமதத்தவனோ அவன் பிறந்த இந்த பாரத புண்ணிய பூமியின் உண்மையான புதல்வனாக இருத்தல் வேண்டும். இந்த பாரத புண்ணிய பூமியே புனிதத் தலம். இந்த கொள்கையை வேற்று மதத்தவர் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை. பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அந்தந்த மதங்கள் தோன்றிய இடங்களே அவர்களது புனிதத் தலங்களாக அவர்கள் கருதினார்கள். ஆனால் அவர்களிலும் பெரும்பான்மையானவர்கள் அவரவர் பிறந்த மண்ணே புனித மண் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

1924 ஜனவரி 6இல் சிறையிலிருந்து வெளிவந்த சாவார்கர் தனது நோக்கங்களை நிறைவேற்ற ரத்னகிரி இந்து சபா எனும் அமைப்பைத் தோற்றுவிக்க உதவி செய்தார். சமூக, கலாசார மறுமலர்ச்சிக்கு பாடுபடும் இயக்கமாக இது விளங்கியது. சாவார்கர் இந்தியாவில் இந்தி மொழியை பொதுமொழியாக பயன்படுத்த பிரசாரம் செய்தார். ஜாதி வேற்றுமைகளை அறவே அகற்றிட வேண்டுமென்றார், தீண்டாமை என்ற கொடுமையை இல்லாமல் செய்ய உறுதியேற்றார். இவர் தன்னுடைய அந்தமான் சிறைவாசம் உட்பட பல விஷயங்களைப் பற்றி எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இந்துமகா சபா. இந்திய சுதந்திரம் நெருங்கி வந்து கொண்டிருந்த சமயத்தில் இந்திய பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை வலுப்பெற்றது. முகமதலி ஜின்னா தலைமையில் இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக பாகிஸ்தான் உருவாக கோரிக்கை வலுப்பெற்றெழுந்தது. இந்த காலகட்டத்தில் சவார்கர் மும்பைக்குக் குடி பெயர்ந்தார். 1937இல் இவர் அங்கு இந்து மகாசபாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943ஆம் ஆண்டு வரையிலும் அவர் அந்தப் பதவியில் தொடர்ந்து இருந்து வந்தார். 1937இல் மாகாண சுயாட்சி அறிவிக்கப்பட்ட போது மாகாண ஆட்சி மன்றத்துக்குத் தேர்தல்கள் நடந்தன. அது முதல் இந்திய பிரிவினை வாதம் தீவிரமடையத் தொடங்கியது. ஒன்றுபட்ட இந்தியாவில் அரசியல் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் பதவிக்கு வந்தால் அது "இந்து ராஜ்யம்" என வர்ணிக்கப்பட்டது. 1939 டிசம்பர் 22ஆம் தேதியை முகமதலி ஜின்னா 'பிரிவினை நாள்" (Day of Deliverance) என அனுசரித்தார்.

1939இல் இரண்டாம் உலகப் போர் பிரகடனம் செய்யப்பட்டபோது யுத்தத்தில் இந்தியாவும் இணைவதாக கவர்னர் ஜெனரல் அறிவிப்பு செய்ததை எதிர்த்து 1937இல் பதவிக்கு வந்த மாகாண காங்கிரஸ் அரசுகள் உட்பட அனைவரும் ராஜிநாமா செய்தனர். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது சவார்கர் யுத்த முயற்சிகளுக்கு பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு கொடுத்ததோடு, இந்துக்கள் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற வலியுறுத்தினார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, படேல் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆகஸ்ட் 1942இல் "வெள்ளையனே வெளியேறு" எனும் போராட்டத்தை அறிவித்த மறுகணம் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. சவார்கர் இந்தப் போராட்டத்தை எதிர்த்தார். இந்துக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டுமென்றும், ராணுவத்தில் சேர்ந்து அனைவரும் ராணுவப் பயிற்சி பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். யுத்தக் கலையில் நமக்கு அனுபவம் வேண்டுமென்றார் அவர். 1944இல் மகாத்மா காந்தியும் முகமதலி ஜின்னாவும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதை சவார்கர் எதிர்த்தார். இப்படியொரு சமாதானப் பேச்சை இவர் விரும்பவில்லை. அதை "Appeasement" என்றார். நாட்டுப் பிரிவினைக் கொள்கையை எதிர்த்துத் தன் கருத்தை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார். இந்து மகாசபாவின் துணைத் தலவராக விளங்கிய டாக்டர் ஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி 'அகண்ட பாரதக்' கொள்கைக்கெதிராக தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்.

1940இல் முஸ்லீம் லீக் இரு நாடுகள் கோட்பாட்டின்படி இந்திய பாகிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தி லாகூர் தீர்மானத்தை நிறைவேற்றியது. இது குறித்து பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் சவார்கருடைய நிலைப்பாட்டை தன்னுடைய நூலான "பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை" யில் விரிவாக எழுதியிருக்கிறார். அந்தப் பகுதி இதோ அப்படியே.

"Mr. Savarkar... insists that, although there are two nations in India, India shall not be divided into two parts, one for Muslims and the other for the Hindus; that the two nations shall dwell in one country and shall live under the mantle of one single constitution;.... In the struggle for political power between the two nations the rule of the game which Mr. Savarkar prescribes is to be one man one vote, be the man Hindu or Muslim. In his scheme a Muslim is to have no advantage which a Hindu does not have. Minority is to be no justification for privilege and majority is to be no ground for penalty. The State will guarantee the Muslims any defined measure of political power in the form of Muslim religion and Muslim culture. But the State will not guarantee secured seats in the Legislature or in the Administration and, if such guarantee is insisted upon by the Muslims, such guaranteed quota is not to exceed their proportion to the general population.


இஸ்ரேல் உருவாக ஆதரவு: 1947 டிசம்பர் 19ஆம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் அவர் பாலஸ்தீனப் பகுதியில் யூதர்களுக்கென்று தனிநாடு ஒன்று அமைவதில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டார். எகிப்தியர்களின் மேலாண்மையிலிருந்து யூதர்களை மோசஸ் விடுவித்துக் கொணர்ந்த செயலுடன் இதனை ஒப்பிட்டார். நியாயப்படி யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியர்த்தப்பட வேண்டியதின் அவசியம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். அந்த பூமிதான் யூதர்களின் புனித பூமி, தாயகம் என்றார் அவர். இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் யூதர்களுக்கென்று இஸ்ரேல் எனும் தனிநாடு உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்ததை அவர் குறை கூறினார். அதையும் கூட இஸ்லாமியர்களைத் திருப்தி படுத்தும் நோக்கத்தோடுதான் இப்படிப்பட்ட முடிவை இந்தியா எடுத்தது என்றும் சொன்னார்.

வீர சவார்கர் பல்லாயிரம் பக்கங்கள் எழுதிக் குவித்திருக்கிறார். மராத்திய மொழியில் பல நூல்களை எழுதினாலும், 1857 இந்திய முதல் சுதந்திரப் போர் எனும் நூல் மிகவும் பிரபலமானது. இவர் ஒரு கவிஞரும் கூட. இவருடைய நூல்களை பட்டியலிட்டால் அது வளரும் ஆகவே அவர் நூல்களைத் தேடிப்பிடித்து படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். 

மகாத்மா காந்தி கொலை வழக்கு: 1948 ஜனவரி 30, இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் துக்ககரமான நாள். இந்திய மக்களுக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும், மனித இன ஒற்றுமைக்காகவும் அயராது பாடுபட்ட மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்காக ரகசியமாக திட்டமிட்டு செயல்படுத்திய நாதுராம் கோட்சேயும் அவரது தோழர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். நாதுராம் கோட்சே இந்து மகாசபையின் உறுப்பினர். ஒரு மராத்திய தினசரி இதழுக்கும் ஆசிரியர். இந்த பத்திரிகையை நடத்திய கம்பெனியில் முன்னாள் இந்துமகா சபாவின் தலைவர் எனும் முறையில் சவார்கர் 15000 ரூபாயை முதலீடு செய்திருந்தார். 1948 பிப்ரவரி 5ஆம் தேதி, அதாவது காந்தி கொலையுண்ட ஆறு நாட்களில் இவர் கைது செய்யப்பட்டார். சிவாஜி பார்க் பகுதியிலிருந்த இவர் வீட்டில் கைது செய்யப்பட்டு ஆர்தர் சாலை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

இவர் மீது கொலைக் குற்றம், கொலை செய்ய சதி செய்தல், குற்றத்துக்குத் துணை போவது போன்ற பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மகாத்மாவின் கொலை நடைபெற்ற ஓரிரு நாட்களுக்குள் (7-2-1948) நடந்த ஒரு கூட்டத்தில் இவர் பேசுகையில் மகாத்மாவின் கொலை சொந்த சகோதரனையே கொலை செய்வது போன்ற குற்றம், இந்த நிகழ்வால் இந்திய நாட்டுக்கே ஆபத்தாக முடியலாம் என்று பேசியிருந்தார்.

கோட்சே வாக்குமூலம்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நாதுராம் கோட்சே மகாத்மாவின் கொலைக்குத் தான் மட்டுமே முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். திட்டமிடுதல் முதல் நடத்தி முடித்த வரைக்கும் அனைத்தும் தனது ஏற்பாடு என்றார். ஆனால் அப்ரூவராக மாறிய பட்கே என்பவர் சொன்ன செய்தியில் கோட்சே 1948 ஜனவரி 17ஆம் தேதி வீர சவார்கரைச் சென்று கண்டு வந்தார் என்று சொன்னார். அவர் கூற்றுப்படி பட்கேயும் சங்கர் என்பவரும் சவார்கர் வீட்டு வாசலில் காத்திருந்ததாகவும், நாதுராம் கோட்சேயும் ஆப்தேயும் உள்ளே சென்றனர் எனக் கூறப்பட்டது. எனினும் அவருடைய வாக்குமூலம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவருடைய சாட்சிக்கு வேறு எவருடைய சாட்சியோ வாக்குமூலமோ கிடையாது என்பதால் இவருடைய கூற்று நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதோடு சவார்கரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இறுதி நாட்களும் இறப்பும்: மகாத்மா காந்தி கொலையுண்டதை அடுத்து மும்பை தாதரில் இருந்த சவார்கரின் வீடு கல்வீசித் தாக்குதலுக்கு உள்ளானது. மகாத்மா காந்தி கொலைவழக்கிலிருந்து சவார்கர் விடுதலை செய்யப்பட்டு விட்ட பிறகும் காங்கிரஸ் அரசு இவரை இந்துத்வா பேச்சுக்காக கைது செய்து சிறையிலிட்டனர். இனி அரசியலில் ஈடுபடுவதில்லை என்று இவரிடம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகு இவரை விடுதலை செய்தனர். அரசியலில் ஈடுபடவில்லை என்று எழுதி கொடுத்திருந்த போதும் சமூக, கலாசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். ஹிந்துத்வா அவரது பேச்சுக்களில் முன்னிலை பெற்றது. அரசியல் பேசுவதில்லை என்ற தடை நீக்கப்பட்ட பின்னர் அவர் மீண்டும் அரசியலில் பங்கு பெறத் தொடங்கினார். எனினும் அவரது உடல் நலம் ஒத்துழைக்காததால் அவரால் அதிகம் பங்கு பெற இயலவில்லை.

சண்டமாருத அரசியல் வாழ்விற்குப் பிறகு ஓய்ந்து, உடல்நலம் கெட்டு படுத்திருந்த காலத்தில் இவரது ஆதரவாளர்கள் இவருக்குப் பலவிதங்களிலும் உதவிகளைச் செய்து வந்தனர். 1966 பிப்ரவரி 2இல் தனது 83ஆம் வயதில் இவர் காலமானபோது இவருடைய இறுதிச் சடங்கில் சுமார் இரண்டாயிரம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். சவார்கர் இறந்த பிற்பாடு அவரை பாராட்டும் எந்த விழா அல்லது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொண்டதில்லை, கலந்து கொள்ளக்கூடாது என்று அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப் பட்டிருந்தது. முதல் சுதந்திரப் போரான 1857 சிப்பாய் போராட்ட நூற்றாண்டு விழா டெல்லியில் நடந்த போது ஜவஹர்லால் நேரு சவார்க்கருடன் ஒரே மேடையை பகிர்ந்து கொள்ள மறுத்து விட்டார். ஆனால் நேருவின் மறைவுக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இவருக்கு மாதாந்திர தியாகிகள் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

1963 நவம்பர் 8இல் இவர் மனைவி யமுனா காலமானார். 1966 பிப்ரவரி 1இல் சவார்கர் மருந்து உண்பதை மறுத்தார், உணவையும் நீரையும்கூட மறுத்து ஆத்மார்ப்பணம் செய்து கொண்டார். கடைசியாக அவர் எழுதிய கட்டுரையில் சொன்ன கருத்து; ஒருவருடைய வாழ்க்கைக் குறிக்கோள் முடிந்துவிட்ட பின்னர் அவரால் சமுதாயத்துக்கு உழைக்க முடியாத நிலையில் இறப்பு வருமட்டும் காத்திருத்தலின் தன்னுடைய பிராணனை தியாகம் செய்துவிடுவதுதான் பொருத்தமானது என்றார்.

இவருக்கு விஷ்வாஸ் எனும் மகனும் ப்ரபா சிப்ளங்கர் எனும் மகளும் உண்டு. மூத்த மகன் ஒருவர் பிரபாகர் இளம் வயதிலேயே இறந்து விட்டார். இவர் வாழ்ந்த இல்லம், இவர் விட்டுச் சென்ற பொருட்கள் அனைத்தும் இப்போது மக்களுக்குக் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றன. வாழ்வின் போதும், வாழ்வுக்குப் பின்னரும் பிரச்சினைக்குரியவராகவே இருந்து மாண்டு போன தியாகசீலர் வீர சவார்கர். அவரை அவரவரும் எடைபோட்டுக் கொள்வதே சரியாக இருக்கும்.




















No comments: