பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 24, 2015

55. கலைகள் - நூலாசிரியர் பாடு்


            பத்திராதிபரின் கஷ்டங்கள் அதிகமென்று சொன்னேன். இக்காலத்தில் தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங்களை ஈசனே தீர்த்துவைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழிபெயர்த்துப் போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள். அல்லது, இங்கிலீஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புது நாவல்கள் எழுதுகிறார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் லாப மேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் ஒரு சிலர் தோன்றியிருக் கிறார்கள்; இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள்புதிய வழியில் ஒரு நூலைக் காணும் போது அதில் ரஸ மனுபவிக்க  வழியில்லை. இங்கிலீஷ் படித்த "ஜனத்தலைவர்" காட்டும் வழியையே மற்றவர்கள் பிரமாணமென்று நினைக்கும்படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் 'பிரமாணஸ்தர்கள்' தமிழ் நூல்களிலே புதுமையும் வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிறார்கள். ஆகவே, நூலாசிரியர், தமக்குத் தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல், வேறு தொழில் செய்யப்போய் விடுகிறார்கள்.

               காலம் சென்ற ராஜமையர் புதிதாகத் தமிழ்க் கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு போக இடமில்லாமல், ஆரம்பத்திலேயே கைவிட்டு, இங்கிலீஷ் மாதப்பத்திரிகை நடத்தப் போய்விட்டார். ஜமீன்தார்கள் மீதும், பிரபுக்கள் மீதும், 'காமா சோமா' என்று புகழ்ச்சிப் பாட்டுகள் பாடினால், கொஞ்சம் ஸன்மானம் கிடைக்கிறது. உண்மையான் தொழிலுக்குத் தகுந்த பயன் கிடைக்கவில்லை. மேற்படி 'பிரமாணஸ்தர்' தமிழ் மணத்தை விரும்பாமல் இருந்ததால், இந்த நிலைமை உண்டாய் விட்டது. ஆகையால், இங்கிலீஷ் படித்த தமிழ் மக்கள்-முக்கியமாக, வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் - தமது வாக்கிலும் மனத்திலும் தமிழரசியைக் கொலுவிருக்கும்படி செய்து வணங்கவேண்டு மென்றும், அதுவே இப்போதுள்ள ஸ்திதியில்தமிழ் வளர்ப்புக்கு மூலஸ்தான மாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்ளுகிறேன்.


No comments: