பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 15, 2015

36. மாதர் - தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை


               தென் ஆப்பிரிக்காவிலே ''பியேட்டர்மாரிட்ஸ் புர்க்'' என்ற பட்டணத்தில் 1910-வருடத்தில் "பெண்கள் விடுதலைச் சங்கம்'' என்றொரு சபை ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதிலே பல வகுப்புக்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்றுகூடி ''பார்லிமெண்டு'' சபையிலே பிரதிநிதிகள் நியமிப்பதற்காக சீட்டுப் (ஓட்)போடும் சுதந்திரம் பெண்களுக்குக் கொடுத்தால் ஒழிய வேறு விதமான சீர்திருத்தங்கள் பெண்களுடைய நிலைமையிலே உண்டாக்குவது சாத்தியமில்லை என்று முடிவு செய்துகொண்டு அந்நோக்கத்தை  நிறைவேற்றும்படி பிரயத்தனம் செய்து வருகின்றார்கள். இந்தச் சங்கம் ஆரம்பித்த காலத்தில் 'நட்டா' லிலே பெண்கள் நகர சபை(Municipality) க்குச் சீட்டுப் போடும் உரிமைகூட இல்லாதிருந்தனர்.    இச் சங்கத்தினரின் முயற்சியால் ஸ்திரீகளுக்குள்ளே ஜாதி, குலம், செல்வம், ஸ்தானம், பட்டம் முதலியவற்றால் ஏற்பட்டிருந்த அனாவசியமான தாரதம்யங்கள் குறைந்து வருகின்றன. கல்வி விஷயத்திலே (அதாவது பெண்கல்வி மாத்திரம் அன்று), பொதுவாக தேசத்து ஜனங்களின்படிப்பு விஷயத்தில் இவர்கள் மிகவும் சிரத்தை செலுத்தி வருகிறார்கள். பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இயற்கை விதிகள் நன்றாகக் கற்றுக் கொடுத்து மேற்படி விதிகளைத் "தவறினால் இயற்கையே தண்டனை செய்யம் என்பதை அவர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி செய்து, பொதுஜன அறிவை இயற்கை நெறியில் ஓங்கும்படி செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். நிலை தவறிப்போன ஸ்திரீகளைக் கொடூரமான அவமதிப்பாலும் அசிரத்தையாலும் மேன்மேலும் கெட்டழிந்து துன்பப் படாதபடி நல்வழி காட்டி நேர்மைப்படுத்தலே தகுதியென்று தீர்மானித்து அதற்குரிய முயற்சிசெய்து வருகிறார்கள். ''ஜன சபை ராசி'' (ஜன சபைபார்லிமெண்டு) ரோசி கமிட்டியென்று தன் ராசி ஒன்றுநியமித்து அந்த ராசி (கமிட்டி) யைச் சேர்ந்தவர்கள் அப்போதப்போது  ஜன சபைக்கு முன்பு வரும் மசோதாக்களைப் படித்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.ஏதேனும் ஒரு மசோதா சட்டமாவதனாலே ஜனங்களுக்குப் பிரதிகூலம் ஏற்படும் என்று தோன்றினால், உடனே ஜனசபைக் காரரைத் தனித்தனியே போய்ப் பார்த்து ஆட்சேபங்கள் செய்தல், தந்திகளின் மூலம் ஆட்சேபித்தல் முதலிய காரியங்கள் செய்கிறார்கள். ஸ்திரீகளுக்குத் தொழிற்சாலைகளிலே கொடுக்கும் சம்பளம் இன்ன அளவுக்குக் கீழே போகக்கூடாதென்று நிர்ணயஞ் செய்த ஜன சபையார் ஒரு சம்பளக் கீழெல்லை மசோதா கொண்டு வரவேண்டும் என்று சொல்லி, அதற்காகப் பல மெம்பர்களைப்  (நடுவிலே ஒரு ரசமான வார்த்தை.''மெம்பர்'' என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்குஅகப்பட வில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். ''அவயவி'' சரியான வார்த்தை யில்லை. ''அங்கத்தான்'' கட்டிவராது. ''சபிகன்'' சரியான பதந்தான். ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்லபதங்கள் கண்டு பிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன்; 'உறுப்பாளி?ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக ''மெம்பர்'' என்று எழுதி விட்டேன். இன்னும் ஆர, அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டு பிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன) போய்ச் சந்தித்து வாதாடி வருகிறார்கள்.

                ஸ்திரீகளுக்கு நகர சபையிலே சீட்டுப்போடும் சுதந்திரம் மேற்படி சங்கத்தாரின் முயற்சியாலே தான் கைக்கூடிற்று.  ஸ்திரீகளையும் குழந்தைகளையும் யாரேனும் அடித்து ஹிம்சை செய்ததாக நியாய ஸ்தலங்களிலே வழக்கு வரும்போது, மேற்படி சங்கத்தின் காரியஸ்தர்கள் போயிருந்து கவனித்து வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா முழுமைக்குமாக ஒரு பெரிய விடுதலைக் கோட்டம் (கோட்டம் என்பது பெருஞ் சபை) ஏற்பட்டிருக்கிறது. அதனுடன் இந்தச் சங்கமும் சேர்ந்திருக்கிறது. ''பிருத்தானிய ஸ்திரீ ஸாம்ராஜ்யம்'' என்ற பெரிய கோட்டத்துடன் இவையெல்லாம் ஐக்கியப்பட்டிருக்கின்றன. அந்நிய தேசங்களில் உள்ள விடுதலைக் கூட்டத்தாருடனே இவர்கள் அடிக்கடி கடிதப்போக்கு வரவு நடத்துகிறார்கள். இவ்விஷயமெல்லாம் சென்னையில் மிஸஸ் அன்னி பெஸண்ட் என்ற பண்டிதை நடத்தும் ''காமன்வீல்'' (பொது நலம்) பத்திரிகையிலே சொல்லப்படுகிறது. மிஸஸ் அன்னி பெஸண்ட் பெண்கள் விடுதலை விஷயத்திலே தீவிரமான பக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். இப்படியே எல்லா தேசங்களிலும் பெண்கள் மேன்மேலும் சுதந்திரம் பெற்றுமனித ஜாதியை மேன்மைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.தமிழ் நாட்டு ஸ்திரீகள் மாத்திரம் தமது மனுஷ்ய பதவியை ருசுப்படுத்துவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! ஏன்?  என்ன காரணம்?


No comments: