பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, April 27, 2015

35. கத்திச் சண்டை


                  மார்கழி மாசத்து நாலாம் வாரம். அதாவது, குளிர் ஜாஸ்தி. அதிலும், வேதபுரம் கடற்கரைப் பட்டினம். குளிர் மிகவும் ஜாஸ்தி. ஒரு நாள் ராத்திரி நான் குளிருக்குப் பயந்து சுகாதார சாஸ்திரத்தைக்கூடப் பொருட்டாக்காமல், என் அறைக்குள் நாலு ஜன்னல்களையும் சாத்தி முத்திரை வைத்து விட்டுப் படுத்துக் கொண்டிருந்தேன்.

                 விடிய இரண்டு ஜாமம் இருக்கும்போது விழித்துக்கொண்டேன். அதற்கும் குளிர்தான் காரணம். வாடை குளு குளுவென்று வீசுகிறது. வடபுறத்து ஜன்னலின் கதவுகள் காற்றில் தாமாகவே திறந்து கொண்டன. எழுந்து போய் ஜன்னலை நேராக்குவோமென்று யோசித்தால் அதற்கும் சோம்பராக இருந்தது. போர்வையை நீக்கிவிட்டு இந்தக் குளிரில் எவன் எழுந்துபோய் ஜன்னலைச் சாத்துவான்? என்ன செய்வோம் என்று சங்கடப்பட்டுக் கொண்டே படுத்திருந்தேன். மழை இதற்குள்ளே பெரிதாக வந்துவிட்டது. மழை களகள வென்று கொட்டுகிறது. வாடைக் காற்று வந்து பல்லைக் கட்டுகிறது. உயிரை வெறுத்து
 தைரியத்துடன் எழுந்து போய் ஜன்னலைச் சாத்துவோம் என்று சொல்லி யெழுந்தேன்.
அப்போது ஒரு பண்டாரம் சங்கூதிச் சேகண்டி யடித்துப் பாடிக்கொண்டு வந்தான். மார்கழி மாசத்தில் வருஷந்தோறும் ஒரு வள்ளுவன் வந்து பாதி ராத்திரி நேரத்திலேயே வேதபுரத்து வீதிகளில் எல்லாம் திருவாசகம் பாடிக் கொண்டு சங்கூதிக் கொண்டு சேகண்டி யடித்துக் கொண்டு சுற்றுவது வழக்கம். அவன்தான் இந்த வருஷமும் வந்துகொண்டிருப்பானென் றெண்ணி நான் ஆரம்பத்தில் ஒரு நிமிஷம் கவனியாமல் இருந்தேன். பிறகு கணீர் என்ற பாட்டுச் சத்தம் காதில் வந்து மதுரமாக விழுந்தது. அடா இது பழைய வள்ளுவனுடைய குரலில்லை. இது ஏதோ புதிய குரலாக இருக்கிறதென் றெண்ணி நான் குளிரையும் கவனியாமல் ஜன்னல் ஓரத்திலே கொஞ்சம் நின்றேன். மழை கொட்டுகிறது. அறைக்குள்ளே எனக்குக் கைகால் விறையலெடுக்கிறது.

                 அந்தப் பண்டாரம் வஸந்த காலத்தில், மாலை நேரத்தில், பூஞ்சோலையில் ராஜகுமாரன் ஒருவன் காற்று வாங்கிக் கொண்டு ஒய்யாரமாக நடப்பதுபோல (அந்தப் பண்டாரம்) அந்த மழையில் நடந்து செல்லுகிறான். பிரமானந்தமாகத் திருவாசகம் பாடுகிறான்:

     "பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
               பேசுவதும் திருவாயால் மறை போலும் காணேடி."


இந்தப் பாட்டை அவன் பாடின ராகம் என் மனதை விட்டு இப்போதுகூட நீங்க வில்லை. மனுஷ்ய கானம் போலில்லை. தேவகானம் போலே யிருந்தது. "ஹே! யாரப்பா பண்டாரம் நில்லு!" என்று சொல்லிக் கூவினேன்.

அவன் நின்றான். "நீ போன வருஷம் திருப்பள்ளி யெழுச்சி பாடி வந்தவனாகத் தோன்றவில்லையே? நீ யார்?" என்று கேட்டேன். "நான் போன வருஷம் பாடினவனுடைய மகன்.  நான் பாடினது திருச்சாழல்" என்றான்.  இவன் அதிக பிரசங்கி என்று தெரிந்து கொண்டு, "உன் பெயரென்ன?" என்று கேட்டேன். "என் பெயர் நெட்டைமாடன்" என்று சொன்னான். "சரி போ" என்று சொன்னேன். அவன் இரண்டடி முன்னே போய் மறுபடி திரும்பி வந்து, "ஐயரே, உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டான்.

"என் பெயர் காளிதாசன்" என்று சொன்னேன்.

"ஓஹோ! பத்திரிகைக்குக் கதைகள் எழுதுகிறாரே, அந்தக் காளிதாசன் நீர்தானோ?" என்றான்.

"ஓஹோ! இவன் பத்திரிகை படிக்கிறானா" என்றெண்ணி வியப்புற்று, நான் அவனிடம் "தம்பி. நெட்டைமாடா; உனக்குச் சங்கீதம் யார் கற்றுக் கொடுத்தார்கள்? நீ இதுவரை எந்த ஊரிலே வளர்ந்தாய்?" என்று கேட்டேன். 

அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்:

          "ஏ, ஐயரே, நான் மழையில் நிற்கிறேன். நீ அறைக்குள் நின்று கொண்டு என்னிடம் நீண்ட கதை பேசுகிறாயே. மேல் தளத்திலிருந்து கீழே இறங்கிவா; வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசலாம். நானும் உன்னிடத்தில் பல கேள்விகள் கேட்க வேண்டுமென்று நெடுநாளாக யோசனை பண்ணிக்கொண்டிருந்தேன், இறங்கி வருவீரா?" என்று கேட்டான்.

"இவன் என்னடா! வெகு விசேஷத்தனாகத் தெரிகிறதே!" என்று நான் ஆச்சரியப் பட்டுக் கீழே இறங்கி வருவதாக ஒப்புக் கொண்டேன். அவன் வாசல்படி யேறித் திண்ணையில் உட்கார்ந்தான். நான் கீழே போகையில் ஒரு மழை லாந்தர் கொளுத்திக் கொண்டு போனேன். அவன் கையிலும் ஒரு மழை லாந்தர் கொண்டு வந்திருந்தான். திண்ணையில் போய் உட்கார்ந்த உடனே நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டோம். அவன் தலை சுத்த மொட்டை; உடம்பு ஒற்றைநாடி; சதைபற்றுக் கிடையாது. ஆனால் உறுதியான உடம்பு; மேலே துணி கிடையாது. இடுப்பில் மாத்திரம் ஒரு துணி கட்டிக் கொண்டிருந்தான். மேலெல்லாம் மழைத் தண்ணீர் ஓடுவதை அவன் துடைக்கவில்லை. குளிரினால் அவன் முகம் விகாரப்படவில்லை. அவனைப் பார்த்தவுடனே எதனாலேயோ ஹம்ஸ பக்ஷியின் ஞாபகம் வந்தது. ஹாம்! ஆமாம்! அவன் முன்பு நடந்து செல்லக் கண்டபோது நான் என் மனதில், "இவன் என்னடா. அன்ன நடை நடக்கிறான்!" என்று நினைத்துக் கொண்டேன். மேலும் இவன் ஆசாமியைப் பார்த்தால் கோயில் அன்ன வாகனம் எத்தனை பொறுமையும் இனிமையுமாகத் தோன்றுமோ அத்தனை பொறுமையும் இனிமையுமான முக வசீகர முடையவனாக இருந்தான்.

நான் அப்போது அவனை நோக்கி: "என்னிடம் ஏதோ கேள்விகள் கேட்க வேண்டு மென்று நெடுங்காலம் யோசனை செய்து கொண்டிருந்ததாகச் சொன்னாயே, கேள்" என்றேன்.

அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்:

"உன்னிடம் கேள்விகள் கேட்க வேண்டுமென்ற விருப்பமிருந்ததாக நான் தெரிவிக்க வில்லை. உன்னிடம் சம்பாஷணை செய்ய வேண்டுமென்ற விருப்ப மிருந்ததாகச் சொன்னேன். நீ ஏதாவது கேள்வி கேள். நான் ஜவாப் சொல்லுகிறேன். அதுதான் எனக்குகந்த சம்பாஷணை" என்றான். 

"இதென்ன சங்கடம்" என்று யோசித்து, நான் இவனிடம் முன் கேட்ட கேள்விகளைத் திரும்பவும் கேட்டேன். "நீ சங்கீதம் எங்கே படித்தாய்? இத்தனை காலம் எந்த ஊரில் இருந்தாய்?" என்று வினாவினேன்.

நெட்டை மாடன் சொல்லுகிறான்: "அறிவூர் வீணை ரகுநாத பட்டர் மகன் அஞ்ஜனேய பட்டரிடம் நான் சங்கீதம் வாசித்தேன். இதுவரை அந்த ஊரிலே தான் வாசம் செய்தேன்" என்றான்.

அப்போது நான் கேட்டேன்: "தம்பி, நெட்டைமாடா, நீ ஜாதியில் வள்ளுவனாயிற்றே! ரகுநாத பட்டர், அஞ்ஜனேய பட்டர் என்ற பெயர்களைப் பார்த்தால் அவர்கள் பிராமணராகத் தோன்றுகிறதே உங்கள் ஜாதியார் பிராமணருக்குச் சமீபத்தில் வந்தால்கூட தீண்டல் தோஷம் என்று சொல்லுவது வழக்கமாயிற்றே. அப்படி யிருக்க நீ அவர்களிடம் சங்கீதம் எப்படிப் படித்தாய்?" என்றேன்.

அதற்கு நெட்டை மாடன் சொல்லுகிறான்: "நீ கேட்ட கேள்விக்கு ஜவாப் சொல்ல வேண்டுமானால் என்னுடைய கதையை ஆரம்பத்திலிருந்தே தொடங்கிச் சொல்ல வேண்டும். அவ்வளவு தூரம் பொறுமையுடன் கேட்பாயா?" என்றான்.

"கேட்கிறேன்" என்று சொல்லி உடம்பாடு தெரிவித்தேன். அப்போது நெட்டை மாடன் சொல்லுகிறான்:

            "நான் வேதபுரத்தில் இருபத்தாறு வருஷங்களுக்கு முன் பிறந்தேன். என் தகப்பனார் சோற்றுக் கில்லாமல் நான் நாலு வயதுப் பையனாக இருக்கும்போது ஒரு சர்க்கஸ் கம்பெனியாருக்கு என்னை விற்று விட்டார். அந்தக் கம்பெனியில் சூராதி சூரத்தனமான வேலைகள் செய்து மிகுந்த கீர்த்தி சம்பாதித்தேன். பன்னிரண்டு வயதாக இருக்கும்போது அறிவூருக்குப் போனேன். அந்தக் கம்பெனித் தலைவரான மகாராஷ்டிரப் பிராமணருக்கு என்னிடம் மிகுந்த அபிமானம். அறிவூர் என்பது மலை நாட்டில் ஒரு பெரிய ஜமீந்தாருடைய ராஜதானி நகரம். அந்த ஊரில் சர்க்கஸ் இரண்டு மாசம் ஆடிற்று. அப்போது என்னுடைய எஜமானனாகிய ராயருக்கு வயதாய் விட்டபடியால் சீக்கிரத்தில் கம்பெனியைக் கலைத்து விட்டுப் பண்டரிபுரத்துக்குப் போய் அங்கு வீடு வாங்கித் தனது முதுமைப் பருவத்தை ஹரி பக்தியில் செலவிட வேண்டுமென்ற யோசனை பண்ணிக் கொண்டிருந்தார்.

அவருக்கும் ஜமீந்தாருக்கும் மிகுந்த நட்புண்டாயிற்று. ஜமீந்தார் கத்திச் சண்டையில் கெட்டிக் காரனாகவும் வயதில் குறைந்தவனாகவும் தனக்கொரு பக்கச் சேவகன் வேண்டு மென்று விரும்பினார். என்னுடைய எஜமானாகிய ராயர் என்னைச் சிபார்சு பண்ணினார். இதற்கிடையே எனது தகப்பனாருக்கும் எஜமான் ராயருக்கும் அடிக்கடி கடிதப் போக்குவரவு நடந்துகொண்டு வந்தது. எனது தகப்பனாரும் என்னை அடிக்கடி பல ஊர்களில் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அறிவூர் ஜமீந்தார் எனக்கு அரண்மனையிலே சோறு போட்டு மகன் போலே வளர்த்தார். சங்கீதம் அந்த சமஸ்தானத்து பாகவதராகிய அஞ்சனேய பட்டரிடம் படித்தேன். யோகாப்பியாசம் பண்ணி யிருக்கிறேன். கத்திச் சண்டையிலே பேர் வாங்கி யிருக்கிறேன். ஆறு பாஷை பேசுவேன், பாடுவேன், நாட்டிய மாடுவேன், மிருதங்க மடிப்பேன். ஆனை யேற்றம், குதிரை யேற்றம், கழைக் கூத்து, மல் வித்தைகள் - எனக்குப் பல தொழிலும் தெரியும்" என்று சொன்னான்.

            இதற்குள் பொழுது விடிந்து விட்டது. நல்ல சூரியோதயத்தில் அவன் முகத்தைப் பார்க்கும்போது நல்ல சுந்தர ரூபமுடையவனாக இருந்தான்.

அப்போது நான் அவனை நோக்கி: "நீ இன்று நம்முடைய வீட்டிலேயே காலை நேரம் போஜனம் செய்துகொள். உன்னுடைய கத்தி சுற்றும் திறமையை எனக்குக் கொஞ்சம் காண்பி" என்றேன். 'சரி'யென்று சம்மதப்பட்டான். பின்பு சொல்லுகிறான்: "எனக்குச் சரியாகக் கத்தி சுழற்றக் கூடியவர்கள் இந்த ஊரில் ஒரே மனுஷ்யன் தான் இருக்கிறார். நான் போய் என் வீட்டிலிருந்து கத்திகளை யெடுத்துக் கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு போய், மறுபடி ஐந்து...... மணியிருக்கும்போது வந்தான்.

இவன் பட்டாக் கத்தி, உண்மையான.........சண்டைக் கத்திகள் கொண்டு வருவானென்று நான் நினைத்திருந்தேன். இரண்டு மொண்ணைவாள் - வெண்ணெயை வெட்டும் சர்க்கஸ் கத்திகள் கொண்டு வந்தான். தனக்கு எதிர் நின்று சண்டை போடக் கூடிய வீராதி வீரனை என்னிடம் அழைத்து வருவதாக அவன் வாக்குக் கொடுத்தபடி அந்த மனிதனைத் தேடிப் பார்த்ததாகவும், அகப்படவில்லை என்றும் மற்றொரு நாள் கூட்டி வருவதாகவும் இன்று தான் மாத்திரம் தனியே கத்தி வீசிக் காண்பிப்பதாகவும் சொன்னான். 'சரி' யென்று சொல்லி நான் அவனுக்கு முதலாவது காபியும், இட்டலியும் கொண்டு வந்து வைத்துச் சாப்பிடச் சொன்னேன். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது குள்ளச்சாமியார் என்ற யோகீசுரர் அங்கே வந்தார். அவரைக் கண்டவுடன் நெட்டைமாடன் எழுந்து ஸலாம் பண்ணி, 'ஜராம், ராம். மகாராஜ்!' என்றான். அவரும் இவனைக் கண்டவுடன். 'ராம், ராம்', என்றார். பிறகு நெடுநேரம் இருவரும் மலையாள பாஷையில் பேசிக் கொண்டார்கள்.

                      எனக்கு மலையாளம் அர்த்தமாகாத படியால் நான் அவர்களுடைய சம்பாஷணையைக் கவனிக்க வில்லை. குள்ளச்சாமியாரை நான் குருவென்று நம்பியிருக்கிறபடியால் அவருக்கும் கடையிலிருந்து வாழைப்பழம், வாங்கிக் கொண்டு வந்து பாலும் பழமும் கொடுத்தேன். இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்தார்கள். கீழ்த் தளத்தில் சாப்பிட்டார்கள். பிறகு நான் வெற்றிலைத் தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு மேல்மாடியில் பூஜா மண்டபத்துக்குப் போகலாம் என்று கூறி அழைத்து வந்தேன். இருவரும் மேல் மாடிக்கு வந்தார்கள். நான் ஊஞ்சலின் மீது அவர்கள் இருவரையும் வீற்றிருக்கும்படி செய்து தாம்பூலம் கொடுத்தேன். இருவரும் தாம்பூலம் போட்டுக் கொண்டார்கள். பிறகு ஒரு க்ஷணத்துக்குள்ளே நெட்டை மாடன் வெளி முற்றத்திலிருந்து ஒரு நாற்காலி யெடுத்துக் கொண்டுவந்தான்.

அதன் மேலே ஏறிக்கொண்டு ஊஞ்சல் சங்கிலிகளைக் கழற்றினான். அடுத்த க்ஷணத்துக்குள் ஊஞ்சலையும் கழற்றினான். அடுத்த க்ஷணத்துக்குள் ஊஞ்சலையும் சங்கிலிகளையும் கொண்டு சுவரோரத்தில் போட்டு விட்டான். பிறகு நெட்டை மாடன் என்னை நோக்கி "எனக்குச் சமானமாகக் கத்தி வீசத் தெரிந்தவர் இந்த ஊரில் ஒருவர் தானுண்டு என்று சொன்னேனே. அவர் யாரெனில் இந்தச் சாமியார் தான்" என்று குள்ளச் சாமியாரைக் காட்டினான். நான் ஆச்சரியத்தால் ஸ்தம்பிதனாய் விட்டேன்.

ஒரு க்ஷணத்துக்குள் அந்த இருவரும் தலைக்கொரு கத்தியாக எடுத்துக் கொண்டு வீசத் தொடங்கி விட்டார்கள். நெடுநேரம் அவர்களுக்குள்ளே கத்திச் சண்டை நடந்தது. அதைப் பார்த்து நான் பிரமித்துப்போய் விட்டேன். அத்தனை ஆச்சரியமாக அவ்விருவரும் கத்தி சுழற்றினார்கள். ஒருவருக்கும் காயமில்லை. ஆனால் நடுவே நடுவே இவன் தலை போய் விடுமோ அவர் தலை போய் விடுமோ என்று எனது நெஞ்சு படக்குப் படக்கென்று புடைத்துக் கொண்டிருந்தது.

            பிறகு இருவரும் கத்தியைக் கீழே வைத்து விட்டுக் கொஞ்சமேனும் ஆயாசமில்லாமல் மறுபடியும் மலையாளத்தில் சம்பாஷணை செய்யத் தொடங்கி விட்டார்கள். கொஞ்சம் பொழுது கழிந்த பின்பு நெட்டை மாடன் போய் விட்டான். குள்ளச் சாமியார் என்னை நோக்கிச் சொல்லுகிறார்: "தம்பி, காளிதாஸா, இந்த நெட்டை மாடன் ராஜயோகத்தினால் சித்தத்தைக் கட்டினவன். இவனுக்கு ஈசன் யோகசித்திக்கு வாட்போரை வழியாகக் காண்பித்தான். இவனுக்கு நிகராக வாள் சுழற்றுவோர் இந்தப் பூமண்டலத்தில் யாரும் கிடையாது. ஆனால் இவன் தன்னைக் கொல்ல வந்த பாம்பையும் கொல்லக் கூடாதென்று அஹிம்ஸா விரதத்தைக் கைக்கொண்ட மகா யோகியாதலால், கொலைத் தொழிலுக்குரிய தான கூர்வாளை இவன் கையினால் தீண்டுவது கிடையாது. உடம்பு நன்றாக வசமாக்கும்படி செய்கிற ஹடயோக வித்தைகளில் ஒன்றாக அதை நினைத்து உன் போன்ற அபிமானி களுக்கு மாத்திரம் தனது திறமையை சர்க்கஸ் கத்தி வைத்துக் கொண்டு காண்பிப்பான். வள்ளுவர் குலத்தில் நம் ஊரிலேயே இப்படி ஒரு மகான் இருப்பது உனக்கு ஆச்சர்யமாகத் தோன்றலாம். இனிமேல் இதற்கெல்லாம் ஆச்சரியப்படாதே. ஹிந்துஸ்தானத்துப் பரதேசி பண்டாரங்களை யெல்லாம் மிகுந்த மதிப்புடன் போற்று. பரதேசி வேஷத்தைக் கண்டால் கும்பிடு போடு. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ? உனக்கு மேன்மேலும் மகான்கள் தரிசனம் தருவார்கள்" என்றார்.

நான் ஹிந்துஸ்தானத்தின் மகிமையை நினைத்து வந்தே மாதரம் என்று வாழ்த்திக் குள்ளச்சாமியாரைக் கையெடுத்துக் கும்பிட்டேன். அவர் "ஜீவ" என்று வாழ்த்தி விட்டு, விடை பெற்றுக்கொண்டு சென்றார்.


Saturday, April 25, 2015

34. வண்ணான் தொழில்



                வேதபுரத்தில் குள்ளச்சாமி என்றொரு பரதேசி யிருக்கிறார். அவருக்கு வயது ஐம்பதோ, அறுபதோ, எழுபதோ, எண்பதோ யாருக்கும் தெரியாது. அவருடைய உயரம் நாலரை அடியிருக்கும். கரு நிறம். குண்டு சட்டியைப் போல் முகம். உடம்பெல்லாம் வயிரக்கட்டை போலே நல்ல உறுதியான பெயர் வழி.

               அவருக்கு வியாதி யென்பதே கிடையாது. சென்ற பத்து வருஷங்களில் ஒரே தடவை அவர் மேலே கொஞ்சம் சொறிசிரங்கு வந்தது. பத்து நாளிருந்து நீங்கி விட்டது. அந்த மனுஷ்யன் ஜடபரதருடைய நிலைமையிலே யிருப்பதாகச் சொல்லலாம்.

              பேசினால் பயித்தியக்காரன் பேசுவது போலிருக்கும். இழுத்திழுத்து, திக்கித் திக்கி, முன் பின் சம்பந்தமில்லாமல் விழுங்கி விழுங்கிப் பேசுவார். தெருவிலே படுத்துக் கிடப்பார். பசித்தபோது எங்கேனும் போய்ப்பிச்சை வாங்கிச் சாப்பிடுவார். கள் குடிப்பார். கஞ்சாத் தின்பார். மண்ணிலே புரளுவார். நாய்களுடன் சண்டை போடுவார்.

             வீதியிலே பெண் பிள்ளைகளுக்கெல்லாம் அவரைக் கண்டால் இரக்க முண்டாகும். திடீரென்று ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அந்த வீட்டிலிருக்கும் சூழந்தைகள் நெற்றியிலே திருநீற்றைப்பூசி விட்டு ஓடிப்போவார். யாராவது திட்டினாலும், அடித்தாலும் பொறுத்துக் கொண்டு உடனே அவ்விடத்தை விட்டு ஓடிப்போய் விடுவார்.

              சாமானிய ஜனங்கள் அவருக்கு நூறு வயதுக்கு மேலே ஆகிவிட்டதென்றும், நெடுங்காலமாக, இப்போதிருப்பது போலவே, நாற்பதைம்பது வயது போலே தான் இருக்கிறாரென்றும் சொல்லுகிறார்கள். ஆனால் இந்த வார்த்தை எவ்வளவு தூரம் நிச்சயமென்பதை நிர்ணயிக்க இடமில்லை.

அவர் கையால் விபூதி வாங்கிப் பூசிக் கொண்டால் நோய் தீர்ந்து விடுமென்ற நம்பிக்கையும் பலர் கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி குள்ளச் சாமியார் ஒரு நாள் தாம் வீதியில் நடந்து வரும்போது, முதுகின்மேலே கிழிந்த பழங்கந்தைகளையெல்லாம் ஒரு பெரிய அழுக்கு மூட்டை கட்டிச் சுமந்து கொண்டு வந்தார்; இந்தச் சாமியாரைக் கண்டால் நான் கும்பிடுவது வழக்கம். அப்படியே கும்பிட்டேன். ஈயென்று பல்லைக் காட்டிப் பேதைச் சிரிப்புச் சிரித்தார். கண்ணைப் பார்த்தால் குறும்பு கூத்தாடுகிறது.

"ஏ சாமி, உனக்கென்ன பயித்தியமா? கந்தைகளைக் கட்டி ஏன் முதுகிலே சுமக்கிறாய்?" என்று கேட்டேன்.

"நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேலே சுமக்கிறேன்" என்று சொல்லி ஓடிப் போய் விட்டார். உடனே நான் பொருள் தெரிந்து கொண்டேன். அஞ்ஞானப் பழங்குப்பகளையும், பழங்கவலைகளையும், பழந் துன்பங்களையும், பழஞ் சிறுமைகளையும் மனதில் வீணாய்ச் சுமந்து திரியும் சாமான்ய மனிதனுடைய அறிவீனத்தை விளக்கும் பொருட்டு மேற்படி சாமியார் இந்தத் திருஷ்டாந்தத்தைச் சொன்னாரென்று தெரிந்து கொண்டேன்.

பின்னொரு நாள் அவரிடம் பரிகாசமாக நான் "சாமி இப்படிப் பிச்சை வாங்கித் தண்டச்சோறு தின்றுகொண்டு ஜீவனம் பண்ணுகிறாயே, ஏதேனும் தொழில் செய்து பிழைக்கக் கூடாதா?" என்று கேட்டேன். அந்தப் பரதேசி சொல்லுகிறார்:

            "தம்பி, நானும் தொழில் செய்துதான் பிழைக்கிறேன். எனக்கு வண்ணான் வேலை. ஐம்புலன்களாகிய கழுதைகளை மேய்க்கிறேன். அந்தக்கரணமான துணி மூட்டைகளை வெளுக்கிறேன்" என்றார்.

ஆம், பரிசுத்தப்படுத்தகிறவனே ஆசாரியன். அவனுடைய சொல்லை மற்றவர் ஆசரிக்க வேண்டும். மேலே சாமியாருடைய புற நடைகள் குடும்பம் நடத்தும் கிருஹஸ்தர்களுக்குத் தகுதியல்ல. ஆனால் அவருடைய உள்ள நடையை உலகத்தார் பின்பற்ற வேண்டும். ஐம்புலன்களாகிய கழுதைகளை மீறிச் செல்லாதபடி கட்டுபடுத்தி ஆள வேண்டும். உள்ளத்தை மாசில்லாதபடி சுத்தமாகச் செய்து கொள்ள வேண்டும்.

அழுக்குத் தீர்க்கும் தொழில் செய்வோர் நமது தேசத்தில் மாகாணத்துக்கு லக்ஷம் பேர் வேண்டும். ஹிந்துக்கள் தற்காலத்தில் குப்பைக்குள் முழுகிப் போய்க் கிடக்கிறார்கள், வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வில்லை. ஜலதாரைகளை ஒழுங்கு படுத்தவில்லை. கிணறு களையும், குளங்களையும், சுனைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை. கோயிற் குளங்களில் ஜலம் புழுத்து நெளிகிறது. நாற்றம் குடலைப் பிடுங்குகிறது.

மனுஷ்யாபிவிருத்தியாவது யாது?

புழுதியை நீக்கித் தரையைச் சுத்த மாக்குதல். அழுக்குப்போகத் துணியையும், நாற்ற மில்லாதபடி குளத்தையும், பொதுவாக எல்லா விஷயங்களையும் சுத்தமாக்கி வைத்துக் கொள்ளுதல்.

நான் மேற்படி சாமியாரிடம், "சாமியாரே, ஞானநெறியிலே செல்ல விரும்புவோன் முக்கியமாக எதை ஆரம்பத் தொழிலாகக் கொள்ள வேண்டும்?" என்று கேட்டேன்.

குள்ளச்சாமி சொல்லுகிறார்:

"முதலாவது, நாக்கை வெளுக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. புறஞ் சொல்லக் கூடாது. முகஸ்துதி கூடாது. தற்புகழ்ச்சி கூடாது. வருந்தச் சொல்லலாகாது. பயந்து பேசக் கூடாது. இதுதான் வண்ணான் தொழில் ஆரம்பம். பிறகு அந்தக் காரணத்தை வெளுத்தல் சுலபம். சில இடங்களில் பொய் சொல்லி தீரும்படியாக இருந்தால் அப்போது மௌனத்தைக் கொள்ள வேண்டும். மௌனம் சர்வார்த்த சாதகம். அதை விட்டுப் பேசும்படி நேர்ந்தால் உண்மையே சொல்ல வேண்டும்; உண்மை விரதம் தவறக்கூடாது. தவற வேண்டிய அவசியமில்லை. உண்மை கூறினால் தீங்கு நேரிடுமென்று நினைப்போர் தெய்வம் உண்மை யென்பதை அறிய மாட்டார்கள். தெய்வம் உண்மை. அதன் இஷ்டப்படி உலகம் நடக்கிறது. ஆதலால் பயப்படுகிறவன் மூடசிகாமணி. அந்தக்கரணத்தை வெளுத்தலாவது அதிலுள்ள பயத்தை நீக்குதல். அந்தக்கரணத்தைச் சுத்தி செய்து விட்டால் விடுதலை யுண்டாகும்" என்றார்.

பின்னுமொரு சமயம் மேற்படி குள்ளச்சாமி என்னிடம் வந்து "தம்பி, நீ இலக்கணக்காரனாச்சுதே! 'வண்ணான்' என்று வார்த்தையை உடைத்துப் பொருள் சொல்லுவாயா?" என்று கேட்டார்.

நான் நகைத்து: "சாமி, உடைக்கிற இலக்கணம் எனக்குத் தெரியாது" என்றேன்.

அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்: "வண் - ஆன்: வண்ணான். ஆன் என்பது ரிஷபம். வள்ளலாகிய ரிஷபம் நந்திகேசுரர். அவருடைய தொழில் சுத்தஞான மூர்த்தியாகிய சிவனைச் சுமந்து கொண்டிருந்த்தல். தமிழ் நாட்டு ஞானாசாரியர்களுக்கு ஆதிமூர்த்தியும் வள்ளலுமாகி நிற்கும் இந்த நந்தி பகவானுடைய தொழிலாகிய ஆசாரியத் தொழிலையே நான் வண்ணான் தொழிலென்று சொல்லுகிறேன். எனக்கு வண்ணான் தொழில்" என்று மேற்படி குள்ளச்சாமி சொன்னார்.



33. காற்று II



                ஒரு வீட்டு மாடியிலே ஒரு பந்தல், ஓலைப்பந்தல், தென்னோலை; குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரணக் கயிற்றினால் கட்டி, மேலே தென்னோலைகளை விரித்திருக்கிறது.

              ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது. ஒரு சாண் கயிறு.
இந்தக் கயிறு ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

             சில சமயங்களில் அசையாமல் "உம்" மென்றிருக்கும். கூப்பிட்டால் கூட ஏனென்று கேட்காது.

இன்று அப்படியில்லை. "குஷால்" வழியிலிருந்தது. எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.

"கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?"

பேசிப் பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.

ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக்கொண்டு சும்மா இருந்து விடும்; பெண்களைப்போல.

எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமே யில்லை.

ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறுண்டு.

ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.

ஒன்று ஆண், மற்றொன்று பெண். கணவனும், மனைவியும்.

அவை யிரண்டும் ஒன்றையொன்று மோகப் பார்வைகள் பார்த்துக் கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரசப் போக்கிலே இருந்தன.

அத் தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன். ஆண்கயிற்றுக்குக் கந்தன் எனப் பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் "வள்ளியம்மை". (மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்.)

கந்தன் வள்ளியம்மை மீது கையைப் போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.

             "என்ன கந்தா, சௌக்கியந்தானா? ஒருவேளை நான் சந்தர்ப்பம் தவறி வந்துட்டேனோ என்னவோ? போய் மற்றொரு முறை வரலாமா?" என்று கேட்டேன்.

அதற்குக் கந்தன்: "அடபோடா, வைதிக மனுஷன்! உன் முன்னே கூட லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?" என்றது.

"சரி, சரி, என்னிடம் ஒன்றும் கேட்க வேண்டாம்" என்றது வள்ளியம்மை. அதற்குக் கந்தன் கட கடவென்று சிரித்து, கை தட்டிக் குதித்து நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக் கொண்டது.

வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்குச் சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்குச் சந்தோஷந்தானே?

இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கு மிகவும் திருப்தி தான். உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?

வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டு விட்டது.

சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது.

மறுபடியும் கூச்சல்; மறும்படியும் விடுதல்; மறுபடியும் தழுவல்; மறுபடியும் கூச்சல்; இப்படியாக நடந்து கொண்டே வந்தது.

           "என்ன கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தை கூடச் சொல்லமாட்டேனென் கிறாயே? வேறொரு சமயம் வருகிறேன். போகட்டுமா?" என்றேன்."அட போடா! வைதீகம்! வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்றுகொண்டிரு. இவளிடம் சில வியவகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய்விடாதே இரு" என்றது.

நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நின்றதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது.

உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள். ஒருவரிக்கு ஒரு வர்ண மெட்டு; இரண்டெ 'சங்கதி', பின்பு மற்றொரு பாட்டு.

கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி, இது முடிந்தவுடன் அது; மாறி, மாறிப் பாடி - கோலாகலம்.

சற்று நேரம் ஒன்றை யொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே யிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும். அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும் - கோலாகலம்!

இங்ஙனம் நெடும் பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப்போனேன். நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.

           நான் திரும்பி வந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது. என்னைக் கண்டவுடன் "எங்கடா போயிருந்தாய்? வைதீகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே" என்றது.

"அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே?" என்று கேட்டேன்.

ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்! காற்றுத் தேவன் தோன்றினான். அவன் உடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர வூசிபோல ஒளிவடிவமாக இருந்தது.

"நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி."
காற்றே போற்றி, நீயே கண்கண்ட பிரமம்.

அவன் தோன்றிய பொழுதிலே வான முழுதும் பிராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது. ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.

காற்றுத் தேவன் சொல்வதாயினன்: "மகனே, ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை, அது செத்துப் போய்விட்டது. நான் பிராண சக்தி. என்னுடன் உறவு கொண்ட உடல் இயங்கும். என் உறவில்லாதது சவம். நான் பிராணன். என்னாலே தான் அச் சிறு கயிறு உயிர்த்திருந்து சுகம் பெற்றது. சிறிது களைப் பெய்தியவுடனே அதை உறங்க - இறக்க - விட்டு விடுவேன். துயிலும் சாவுதான். சாவும் துயிலே. நான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்து விடும். நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன். என்னை வணங்கி வாழ்க," என்றான்.

"நமஸ்தே வாயோ; த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி; த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி."



32. காற்று I

தேவதரிசனம்
       
மணல், மணல், மணல். பாலைவனம், பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.
மாலை நேரம்

அவ் வனத்தின் வழியே ஒட்டகங்களின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.
வாயு, சண்டனாகி வந்து விட்டான்.

பாலைவனத்து மணல்களெல்லாம் இடை வானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யமவாதனை; வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது.

வாயு கொடியவன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது.

அவன் செயல்கள் கொடியன. அவனை வாழ்த்துகின்றோம்.

வீமனும் அனுமானும், காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.

உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.

உயிர்தான் காற்று. பூமித் தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சுத் தான் பூமிக் காற்று. காற்றே உயிர். உயிர்களை அழிப்பவனும் அவனே. காற்றே உயிர். எனவே, உயிர்கள் அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. மரண மில்லை.

அகில வுலகமும் உயிர் நிலையே. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.

காற்றே, வா. மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனதை மயக்கும் இனிய வாசனையுடன் வா. இலைகளின் மீதும் நீர் நிலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த பிராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டு வந்து கொடு. காற்றே வா. 

எமது உயிர் நெருப்பு நீடித்து நின்று நல்ல ஒளி தரும் வண்ணம், நன்றாக வீசு. சக்தி குறைந்து போய் அதனை அவித்து விடாதே. பேய் போலே வீசி அதை மடித்து விடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக்கொண்டிரு. உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம். உன்னை வாழ்த்துகிறோம். 

சிற்றெறும்பைப் பார். எத்தனை சிறியது! அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது. யார் வைத்தனர்? மகா சக்தி. 

அந்த உறுப்புக்க ளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன. எறும்பு உண்ணுகிறது. உறங்குகிறது. மணம் புரிகின்றது. குழந்தை பெறுகிறது, ஓடுகிறது. தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்றுதான் ஆதாரம். மகா சக்தி காற்றைக் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகிறாள். காற்றைப் பாடுகிறோம். 

அஃதே அறிவிலே துணிவாக நிற்பது. உள்ளத்திலே சலனமாவது. உயிரில் உயிர், உடம்பில் வலிமை. வெளி யுலகத்தில் அதன் செய்கையை அறியாதார் யார்? அறிவார் யார்? காற்றுத் தேவன் வாழ்க.

மழைக்காலம். மாலை நேரம். குளிந்த காற்று வருகிறது. நோயாளி உடம்பை மூடிக் கொள்ளுகிறான், பயனில்லை. காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. உயிர் காற்றாயின் அதற் கஞ்சி வாழ்வதுண்டோ? காற்று நம்மீது வீசுக. அது நம்மை நோயின்றிக் காத்திடுக.

மாலைக் காற்று நல்லது. கடற் காற்று மருந்து. ஊர்க் காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர். அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை. அதனால், காற்றுத் தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான். காற்றுத் தேவனை வணங்குவோம். அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது. 

காற்று வருகிறான். அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் வரும் வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்தி வைப்போம். அவன் நல்ல மருந்தாகி வருக. அவன் நமக்கு உயிராகி வருக. அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம். அவன் சக்தி குமாரன். மகாராணியின் மைந்தன். 

அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க.




31. சும்மா II



                 அப்போது குள்ளச்சாமியார் சொல்லுகிறார்: "கேள் தம்பி, நான் சும்மா இருக்கும் கக்ஷியைச் சேர்ந்தவன். நீ சொல்லியபடி சந்நியாஸிகள் சும்மா இருந்ததினால் இந்தத் தேசம் கெட்டுப்போகவில்லை. அதர்மம் செய்ததினால் நாடு சீர் கெட்டது. சந்நியாஸிகள் மாத்திரம் அதர்மம் செய்யவில்லை. இல்லறத்தார் அதர்மம் தொடங்கியது துறவறத்தாரையும் சூழ்ந்தது. உண்மையான யோகிகள் இன்னும் இந்தத் தேசத்தில் இருக்கிறார்கள். அவர்களாலே தான் இந்தத் தேசம் சர்வ நாசமடைந்து போகாமல் இன்னும் தப்பிப் பிழைத்திருக்கிறது. இப்போது பூ மண்டலம் குலுங்கிப் பல ராஜ்யங்களும் சரிந்து கொண்டிருக்கையிலே ஹிந்து தேசம் ஊர்த்துவ முகமாக மேன்மை நிலையை நோக்கிச் செல்லுகிறது. தானும் பிழைத்தது. உலகத்தையும் உஜ்ஜீவிக்கும்படி செய்யலாம் என்ற தைரியம் ஹிந்து தேசத்தின் மனதில் உண்டாயிருக்கிறது. இதற்கு முன் இப்படி எத்தனையோ பிரளயங்களில் இருந்து தப்பிற்று. சில தினங்களுக்கு முன்பு ஜகதீச சந்திரவஸு கல்கத்தாவில் தம்முடைய நவீன சாஸ்திராலயத்தை பிரதிஷ்டை செய்யும்போது என்ன சொன்னார் - வாசித்துப் பார்த்தாயா? "பாபிலோனிலும், நீலநதிக்கரையிலும் இருந்த நாகரீகங்கள் செத்து மறுஜன்மமடைந்து விட்டன. ஹிந்துஸ்தானம் அன்று போலவே இன்றும் உயிரோடிருக்கிறது. ஏனென்றால் எல்லா தர்மங்களிலும் பெரிய தர்மமாகிய ஆத்ம பரித்தியாகம் இந்த தேசத்தில் சாகாதபடி இன்னும் சிலரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது" என்று ஜகதீச சந்திர வஸு சொன்னார்.

          இங்ஙனம் குள்ளச் சாமியார் சொல்லிவருகையில் வேணு முதலி "சாமியாரே! உமக்கு இங்கிலீஷ் தெரியுமா? நீர் பத்திரிகை வேறே வாசிக்கிறீரா? ஜகதீச சந்திரவஸு பேசிய விஷயம் உமக்கெப்படித் தெரிந்தது?" என்று கேட்டான். 

          அப்போது குள்ளச்சாமியார் சொல்லுகிறார்: அநாவசியக் கேள்விகள் கேட்காதே. நான் சொல்வதைக் கவனி: ஹிந்து தேசத்தினுடைய ஜீவனை யுக யுகாந்தரங்களாக அழியாதபடி பாதுகாத்து வருவோர் அந்த யோகிகளே. கடூரமான கலியில் உலகம் தலைகீழாகக் கவிழ்ந்துபோகும் சமயத்தில் கூட ஹிந்துஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து மற்றவர்களையும் காக்கக்கூடிய ஜீவசக்தி இந்நாட்டிற்கு இருப்பது அந்த யோகிகளின் தபோபலத்தாலன்றி வேறில்லை. ஹா, ஹா, ஹா, ஹா! பலவிதமான லேகியங்களைத் தின்று தலைக்கு நூறு, நூற்றைம்பது பெண்டாட்டிகளை வைத்துக் கொண்டு தடுமாறி, நாள் தவறாமல் ஒருவருக்கொருவர் நாய்களைப்போல அடித்துக் கொண்டு, இமயமலைக்கு வடபுறத்திலிருந்து அன்னியர் வந்தவுடனே எல்லாரும் ஈரச் சுவர் போலே இடிந்து விழுந்து ராஜ்யத்தை அன்னியர் வசமாகத் தந்த உங்கள் ராஜாக்களுடைய வலிமையினால் உங்கள் தேசம் பிழைத்திருக்கிறதென்று நினைக்கிறாயா? போது விடிந்தால் எவன் செத்துப் போவான், ஸபண்டீகரணம், பிராமணார்த்த போஜனங்கள் பண்ணலாம் என்று சுற்றிக்கொண்டு, வேத மந்திரங்களைப் பொருள் தெரியாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த உங்கள் பிராமணர்களால் இந்த தேசம் சாகாத வரம் பெற்று வாழ்கிற தென்று நினைக்கிறாயா? உங்கள் வைசியருடைய லோபத்தன்மையால் இந்த நாடு அமரத்தன்மை கொண்டதா? சூத்திரருடைய மௌட்டியத்தாலா? பஞ்சமருடைய நிலைமையாலா? எதால் ஹிந்துஸ்தானத்துக்கு அமரத் தன்மை கிடைத்ததென்று நீ நினைக்கிறாய்?.

 அடா, வேணு முதலி, கவனி.  நீ யுத்தம் முடிந்த பிறகு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் ஹிந்து தர்மத்தை நிலைநாட்டப் போவதாகச் சொல்லுகிறாய். நீ ஹிந்து ஸ்தானத்து மகாயோகிகளின் மகிமை தெரியாமல் ஹிந்து மதத்தை யெப்படி நிலைநிறுத்தப் போகிறாய், - அதை நினைக்கும்போதே எனக்கு நகைப்புண்டாகிறது.

"அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்! பார்! பார்!".

இங்ஙனம் குள்ளச் சாமி சொன்னவுடன் நானும் வேணு முதலியும் அவரை உற்றுப் பார்த்தோம்.

குள்ளச் சாமி நெடிய சாமி ஆய்விட்டார்.

நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச் சாமியார் ஏழேமுக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார்.

ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப்போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப் போலவே இருந்தது. குனிந்தால் பிள்ளையார் போலிருந்தது. நிமிர்ந்து பார்க்கும் போது விஷ்ணுவின் முகத்தைப் போலே தோன்றியது. அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்:

அடா, வேணு முதலி, கேள். நான் ஹிந்துஸ்தானத்து யோகிகளுக்கெல்லாம் தலைவன். நான் ரிஷிகளுக்குள்ளே முதலாவது ரிஷி. நான் தேவர்களுக்கெல்லாம் அதிபதி. நானே பிரம்மா,  நானே விஷ்ணு,  நானே சிவன்.  நான் ஹிந்துஸ்தானத்தை அழியாமல் காப்பாற்றுவேன். நான் இந்த பூமண்டலத்தில் தர்மத்தை நிலைநிறுத்துவேன்.
நான்  கிருதயுகத்தை ஸ்தாபனம் செய்வேன். நானே பரம புருஷன். இதற்குமுன் ஆசாரியர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்? எல்லா உயிரும் ஒன்று.. ஆதலால் காக்கை, புழு முதலிய ஜந்துக்களிடம் குரூரமில்லாமல் கருணை பாராட்டுங்கள் என்றனர்.

அடா, வேணு முதலி, கவனி.

சைவாச்சாரியர் வைஷ்ணவத்தை விலக்கினர். வைஷ்ணசாரியர் சைவத்தை விலக்கினர்.
நான் ஒன்று செய்வேன்.

காக்கையைக் கண்டால் இரக்கப்படாதே, கும்பிடு. கை கூப்பி நமஸ்காரம் பண்ணு! பூச்சியைக் கும்பிடு! மண்ணையும் காற்றையும் விழுந்து கும்பிடு! என்று நான் சொல்லுகிறேன்.

நான் வேதத்திலே முன் சொன்ன வாக்கை இப்போது அனுபவத்திலே செய்து காட்டப் போகிறேன். புராணங்களை யெல்லாம் விழுங்கி ஒன்றாக நாட்டப் போகிறேன். ஹிந்து தர்மத்தைக் கூட்டப் போகிறேன். அடா, வேணு முதலி கேள், மண்ணும் காற்றும், சூரியனும் சந்திரனும், உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானும் தெய்வமென்றும் வேதம் சொல்லிற்று. இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வமில்லை. நம்முன்னே காண்பது நாராயணன். இதை நம்முள்ளே நாட்டி இதை வணங்கி இதன் தொழுகைக் கனியில் மூழ்கி, அங்கு மானிடன் தன்னை முழுது மறந்து விடுக.

அப்போது தன்னிடத்து நாராயணன் நிற்பான். இந்த வழியை நான் தழுவியபடியால் மனுஷ்யத் தன்மை நீங்கி அமரத் தன்மை பெற்றேன். ஆதலால் நான் தேவனாய்விட்டேன். இவைதான் தெய்வம். இதைத் தவிர வேறு தெய்வ மில்லை. தேவர்களுக்குள்ளே நான் அதிபதி. என் பெயர் விஷ்ணு; நானே சிவன் மகன் குமாரன். நானே கணபதி, நான் அல்லா, யேஹோவான். நானே பரிசுத்த ஆவி, நானே யேசு கிருஸ்து, நானே கந்தர்வன், நானே அசுரன், நான் புருஷோத்தமன், நானே ஸமஸ்த ஜீவராசிகளும். "நானே பஞ்ச பூதம்! அஹம் ஸத்! நான் கிருதயுகத்தை ஆக்ஞாபிக்கிறேன்! ஆதலால் கிருதயுகம் வருகிறது. எந்த ஜந்துவும், வேறு எந்த ஜந்துவையும் ஹிம்சை பண்ணாமலும் எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துக்களையும் தேவதா ரூபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதியுண்டானால் அது தான் கிருதயுகம் - அதை நான் செய்வேன். அடா வேணு முதலி! நான் உன் முன்னே நிற்கிறேன், என்னை அறி" என்று குள்ளச் சாமி சொன்னார். நான் அத்தனைக்குள்ளே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டேன்.

சுமார் அரைமணி நேரத்துக்குப் பின்பு எனக்கு மறுபடி பிரக்கினை ஏற்பட்டது. அப்போது பார்க்கிறேன். வேணு முதலி என் பக்கத்தில் மூர்ச்சை போட்டுக் கிடக்கிறான். பிறகு அவனுக்குச் சிகிச்சை செய்து நான் எழுப்பினேன்.

குள்ளச் சாமியார் எங்கே யென்று வேணு முதலி என் பத்தினியிடம் கேட்டான்.

அவள் சொன்னாள்: "குள்ளச்சாமி இப்படித்தான் கீழே இறங்கி வந்தார். கொஞ்சம் பாயசமும் ஒரூ வாழைப் பழமும் கொடுத்தேன். வாங்கித் தின்றார். குழந்தைகளுக்கும் எனக்கும் விபூதி பூசி வாழ்த்தி விட்டுப் போனார். 'நீங்கள் மெத்தையிலே என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு  'இரட்டை பாஷை யென்றால் அர்த்தமென்ன? என்பதைப் பற்றி அந்த வேணு முதலி மடையன், தர்க்கம் பண்ணுகிறான்' என்று சொல்லிச் சிரித்து விட்டுப் போனார்" என்று சொன்னாள்.


30. சும்மா I



          நேற்று சாயங்காலம் நான் தனியாக மூன்றாவது மெத்தையில் ஏறி உட்கார்ந்திருந்தேன். நான் இருக்கும் வீட்டில் இரண்டாவது மெத்தையிலிருந்து மூன்றாம் மெத்தைக்கு ஏணி கிடையாது. குடக்கூலி வீடு. அந்த வீட்டுச் செட்டியாரிடம் படி (ஏணி) கட்டும்படி எத்தனையோ தரம் சொன்னேன். அவர் இன்றைக்காகட்டும், நாளைக்காகட்டும் என்று நாளைக் கடத்திக் கொண்டு வருகிறார். ஆதலால் மூன்றாம் மெத்தைக்கு ஏறிப்போவது மிகவும் சிரமம். சிறிய கைச்சுவர் மேல் ஏறிக்கொண்டு அங்கிருந்து ஒரு ஆள் உயரம் உந்தவேண்டும். மூன்றாங் கட்டின் சுவரோரத்தைக் கையால் பிடித்துக்கொண்டு கைச்சுவர் மேலிருந்து உந்தும்போது கொஞ்சம் கை வழுக்கி விட்டால் ஒன்றரை ஆள் உயரம் கீழே விழுந்து மேலே காயம் படும். நான் தனிமையை விரும்புவோன். ஆதலால், சிரமப்பட்டேறி அடிக்கடி மூன்றாங் கட்டிலே போய் உட்கார்ந்திருப்பது வழக்கம். இந்த மார்கழி மாதத்தில் குளிர் அதிகமானபடியால் வெயில் காய்வதற்கும் அது இதமாம். இங்ஙனம் நேற்று மாலை நான் வெயில் காய்ந்து கொண்டிருக்கையிலே குள்ளச்சாமியாரும் வேணு முதலியும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இரண்டாங்கட்டு வெளிமுற்றத்தில் வந்து நின்று கொண்டு என்னைக் கைதட்டிக் கூப்பிட்டார்கள். நான் இறங்கி வரும் பொருட்டாக வேஷ்டியை இடுப்பில் வரிந்து கட்டினேன். அதற்குள் குள்ளச் சாமியார் என்னை நோக்கி "நீ அங்கேயே இரு, நாங்கள் வருகிறோம்" என்று சொன்னார்.

       இந்தக் குள்ளச் சாமியாரைப்பற்றி முன்னொருமுறை எழுதியிருப்பது ஞாபகமிருக்கலாம். இவர் கலியுக ஜடபரதர், மகா ஞானி, சர்வஜீவ தயாபரன். ராஜயோகத்தால் மூச்சைக் கட்டி ஆளுகிற மகான். இவர் பார்ப்பதற்குப் பிச்சைக் காரன் போலே கந்தையை உடுத்திக்கொண்டு தெருக்களில் உலாவுவார். இவருடைய மகிமை ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் மாத்திரம் எப்படியோ தெரிந்திருக்கிறது. தெருவில் இவர் நடந்து செல்லுகையில் ஸ்திரீகள் பார்த்து இவரைக் கை யெடுத்துக் கும்பிடுவார்கள்.

            குழந்தைகளெல்லாம் இவரைக் கண்டவுடன் தாயை நோக்கி ஓடுவது போலே ஓடி இவருடைய முழங்காலை மோர்ந்து பார்க்கும். இவர் பேதை சிரிப்புச் சிரித்துக் குழந்தைகளை உச்சி மோர்ந்து பார்ப்பார். ஆனால் சாமானிய ஜனங்களுக்கு அவருடைய உண்மையான மகிமை தெரியமாட்டாது. கண்மூடித் திறக்கு முன்னாகவே கைச்சுவர் மேல் ஒரு பாய்ச்சல் பாய்ந்து அங்கிருந்து மேல்மெத்தைக்கு இரண்டாம் பாய்ச்சலில் வந்து விட்டார். இவரைப் பார்த்து இவர் போலே தானும் செய்ய வேண்டுமென்ற எண்ணங் கொண்டவனாய் வேணு முதலி ஜாக்கிரதையாக ஏறாமல் தானும் பாய்ந்தான். கைப்பிடிச் சுவர்மேல் சரியாகப் பாய்ந்து விட்டான். அங்கிருந்து மேல்மெத்தைக்குப் பாய்கையில் எப்படியோ இடறித் தொப்பென்று கீழே விழுந்தான். இடுப்பிலேயும் முழங்காலிலேயும் பலமான அடி; ஊமைக் காயம். என் போன்றவர்களுக்கு அப்படி அடிபட்டால் எட்டு நாள் எழுந்திருக்க முடியாது. ஆனால் வேணு முதலி நல்ல தடியன். "கொட்டாப்புளி ஆசாமி." ஆதலால் சில நிமிஷங்களுக்குள்ளே ஒருவாறு நோவைப் பொறுத்துக் கொண்டு மறுபடி ஏறத் தொடங்கினான்.

              குள்ளச் சாமியார் அப்போது என்னை நோக்கி, "நாமும் கீழே இறங்கிப் போகலாம்" என்று சொன்னார். சரி யென்று நாங்கள் வேணு முதலியை ஏற வேண்டாமென்று தடுத்து விட்டுக் கீழே இறங்கி வந்தோம். இரண்டாங் கட்டு வெளி முற்றத்திலேயே மூன்று நாற்காலிகள் கொண்டு போட்டு உட்கார்ந்து கொண்டோம்.

             அப்போது வேணு முதலி என்னை நோக்கி "அங்கே தனியாக ஹனுமாரைப் போலே போய்த் தொத்திக் கொண்டு என்ன செய்தீர்?" என்று கேட்டான்.

             "சும்மாதான் இருந்தேன்" என்றேன்.

வந்து விட்டதையா வேணு முதலிக்குப் பெரிய கோபம். பெரிய கூச்சல் தொடங்கி விட்டான்.

            "சும்மா, சும்மா, சும்மா, சும்மா இருந்து சும்மா இருந்து தான் ஹிந்து தேசம் பாழாய்க் குட்டி சுவராய்ப் போய் விட்டதே? இன்னம் என்ன சும்மா? எவனைப் பார்த்தாலும் இந்த நாட்டில் சும்மாதான் இருக்கிறான். லக்ஷலக்ஷ லக்ஷமாகப் பரதேசி, பண்டாரம், ஸந்நியாசி, சாமியார் என்று கூட்டம் கூட்டமாகச் சோம்பேறிப் பயல்கள். கஞ்சா அடிக்கிறதும், பிச்சை வாங்கித் தின்கிறதும், சும்மா உலாவுகிறதும்தான் அந்தப் பயல்களுக்கு வேலை. இரண்டு வேளை ஆகாரம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தொழில் செய்யும் வழக்கம் இந்த தேசத்திலே கிடையாது. ஜமீந்தார், மிட்டாதார், பண்ணையார், மிராசுதார், இனாம்தார், ஜாகீர்தார், மடாதிபதிகள், ராஜாக்கள் எல்லாருக்கும் சும்மா இருப்பதுதான் வேலை. சோம்பேறிப் பயல்களுடைய தேசம்" என்று பலவிதமாக வேணு முதலி ஜமாய்க்கிற சமயத்தில் குள்ளச்சாமி மேற்கு முகமாகச் சூரியனை நோக்கித் திரும்பிக் கொண்டு, "சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என் றெம்மால் அறிதற்கெளிதோ பராபரமே" என்ற தாயுமானவர் கண்ணியைப் பாடினார். வேணு முதலி அவரை நோக்கி, "சாமியாரே, நீர் ஏதோ ராஜயோகி என்று காளிதாஸர் சொல்லக் கேள்விப்பட்டேன். உம்முடன் நான் பேசவில்லை. காளிதாஸரிடம் நான் சொல்லுகிறேன். நீர் சந்நியாசி யென்று சொல்லி ஜன்மத்தையே மரத்தின் ஜன்மம் போலே யாதொரு பயனுமில்லாமல் வீணாகச் செலவிடும் கூட்டத்தைச் சேர்ந்தவர். மரமாவது பிறருக்குப் பழங்கள் கொடுக்கும், இலைகொடுக்கும், விறகு கொடுக்கும். உங்களை மரத்துக்கொப்பாகச் சொல்லியது பிழை. உங்களாலே பிறருக்கு நஷ்டம்; மரத்தால் பிறருக்கு எத்தனையோ லாபம்" என்றான். இங்ஙனம் வேணு முதலி சொல்லிக்கொண்டிருக்கும் போதே குள்ளச் சாமியார்;

            "சும்மா இருக்கச் சுகம் சுகமென்று சுருதியெல்லாம் 
            அம்மா நிரந்தரம் சொல்லவுங் கேட்டு அறிவின்றியே 
            பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால்             வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே!"

     என்று தாயுமானவருடைய பாட்டொன்றைச் சொன்னார்.

             வேணு முதலிக்குக் கீழே விழுந்த நோவு பொறுக்க முடியவில்லை. அந்தக் கோபம் மனதில் பொங்குகிறது. அத்துடன் சாமியார் சிரித்துச் சிரித்துப் பாட்டு சொல்வதைக் கேட்டு அதிகக் கோபம் பொங்கிவிட்டது. வேணு முதலி சொல்லுகிறான்:

               "ஓய் சாமியாரே, நீர் பழய காலத்து மனுஷ்யன்; உம்முடன் நான் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. என்னுடைய சாமர்த்தியம் உமக்குத் தெரியாது. நான் பன்னிரண்டு பாஷைகளிலே தேர்ச்சியுடையவன். உமக்குத் தமிழ் மாத்திரம் தெரியும். நான் இந்த யுத்தம் முடிந்தவுடன் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போய் அங்கெல்லாம் இந்து மதத்தை ஸ்தாபனம் செய்யப் போகிறேன். நீர் தெருவிலே பிச்சைவாங்கித் தின்று திண்ணை தூங்குகிற பேர்வழி. உமக்கும் எனக்கும் பேச்சில்லை. தேசத்திற்காகப் பாடுபடுவதாக 'ஹம்பக்' பண்ணிக்கொண்டிருக்கிற காளிதாஸர் - இந்த விதமான சோம்பேறிச் சாமியார்களுடன் கூடிப் பொழுது கழிப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை விளைவிக்கிறது. உங்களிடமிருந்து தான் அவர் இந்த சும்மா இருக்கும் தொழில் கற்றுக் கொண்டார் போலும்!" என்று வேணு முதலி இலக்கணப் பிரயோகங்களுடன் பேசத் தொடங்கினான்.

மறுபடி சாமியார்:

          "சும்மா இருக்கச் சுகம் உதய மாகுமே 
           இம்மாயா யோகம் இனி ஏனடா - தம்மறிவின் 
           சுட்டாலே யாகுமோ சொல்ல வேண்டாம் கர்ம 
           நிஷ்டா சிறு பிள்ளாய் நீ"

என்ற தாயுமானவருடைய வெண்பாவைப் பாடினார். 
அப்போது வேணு முதலி என்னை நோக்கி "ஏனையா! காளிதாஸரே, இந்தச் சாமியார் உமக்கு எத்தனை நாட்பழக்கம்?" என்று கேட்டான். நான் ஜவாப் சொல்லாமல் "சும்மா" இருந்து விட்டேன். அப்பொழுது குள்ளச்சாமியார் சொல்லத் தொடங்கினார்.

               அத்துடன் இந்தக் கதையே வெகு நீளம். அது சுருக்கிச் சொன்னாலும் இரண்டு பாகங்களுக்குள்ளே தான் சொல்ல முடியும். நாலைந்து பாகம் ஆனாலும் ஆகக்கூடும்.  அவ்வளவு நீண்டகதையை இத்தனை காயிதப் பஞ்சமான காலத்தில் ஏன் சொல்லப் புறப்பட்டீர் என்றாலோ அது போகப் போக ஆச்சரியமான கதை. அற்புதமான கதை! இதைப்போலே கதை நான் இதுவரை எழுதினது கிடையாது. நான் வேறு புஸ்தகங்களிலே படித்ததும் கிடையாது. நீங்கள் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். எழுந்து கூ கூ கூ என்று கூவி ஆடிப்பாடிக் குதிக்கத் தொடங்குவீர்கள். நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன். காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன். ஆதலால் உலகத்திலே இதற்கு முன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமான கதையை உங்களுக்குச் சொல்லப் புறப்பட்டேன். ஆனால் இந்த வியாசம் நீண்டு போய்விட்டதே; அடுத்த பாகத்தில் தானே சொல்ல முடியும். நான் வாக்குத் தவற மாட்டேன். இரண்டாம்பாகம் சீக்கிரம் உங்களுக்குச் சொல்லுகிறேன். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள்.