பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 23, 2014

"விஜயா" பத்திரிகை கட்டுரைகள்

5. பாரதியாரின் "விஜயா" பத்திரிகை கட்டுரைகள்.

திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
நடத்தும் அஞ்சல் வழிப் பயிற்சி - பாடம்
பாரதியாரின் "விஜயா" பத்திரிகை கட்டுரைகள்.

(மகாகவி பாரதியார் ஆசிரியராக பணிபுரிந்த ஒரே நாளேடு "விஜயா". 1909-1910 இல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்த நாளேடு, பாரதி நடத்திய பத்திரிகைகளின் குரல்வளை நசுக்கப்படவிருந்த தருணத்தில் அவருடைய எண்ணங்களையும், மனவோட்டங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. இதுவரை ஓரிதழ்கூட முழுமையாகக் கிடைக்காத "விஜயா" பத்திரிகையின் பல இதழ்களைப் பெருமுயற்சி செய்து பாரீஸ் நகரத்தில் கண்டுபிடித்து, அதனை வெளியிட்டிருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள்.

பாரதியின் "விஜயா" பத்திரிகை கட்டுரைகளை மிகச் சிரமப்பட்டு தேடிக் கண்டுபிடித்து நூலாக வெளியிட்டிருக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றாய்வு மையத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) இணைப் பேராசிரியர். தமிழ்ச் சமூக வரலாறு பற்றிய குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் செய்துள்ள இவர், வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் படைப்புகளைப் பதிப்பித்துள்ளார். "வ.உ.சி.யும் பாரதியும்", "பாரதியின் கருத்துப் படங்கள்" ஆகியவை பாரதியியலுக்கு இவருடைய பங்களிப்புகள். இவருடைய "பாரதி: 'விஜயா' கட்டுரைகள்" எனும் நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சில கட்டுரைகள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாடு இருந்த நிலைமையையும் அன்றைய பிரச்சனைகளையும் விவாதித்திருப்பதைக் காணமுடியும். வரலாற்று ஆவணமாக விளங்கும் பாரதியின் 'விஜயா' கட்டுரைகள் நிச்சயம் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகும். இந்த பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில கட்டுரைகளைப் படித்த பின், முழுவதையும் படிக்க ஆர்வம் நிச்சயம் ஏற்படும். அப்போது இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001 என்ற விலாசத்துக்கு எழுதி வாங்கி படியுங்கள். காலத்தால் மறக்கமுடியாத இந்த சாதனையைப் புரிந்துள்ள ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கும் "காலச்சுவடு" பதிப்பகத்தாருக்கும் எமது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். இனி "விஜயா" வில் மகாகவி பாரதி எழுதியுள்ள கட்டுரைகள் சிலவற்றைப் படித்து இன்புறுங்கள்.)

1. மாணவர்களும் அரசியலும். (விஜயா, 25 அக்டோபர் 1909)
அரசியல் கோட்பாடுகளை மாணவர்கள் படிப்பது நல்லதேயாயினும், அன்றாட ராஜீய விஷயங்களில் அவர்கள் ஈடுபடுவது உசிதமல்ல. ஆனால் இது ஒரு பொது விதியேயாகும்; ஆகவே இதற்கும் விலக்குண்டு. உதாரணமாக, ருஷ்யாவில் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தி, ஐரோப்பிய தேசங்களைப் போல் ஜனநாயக ஆட்சியை அமைப்பதில் மாணவர்களே முக்கியப் பங்கு வகிக்கின்றனர்; இதற்காக அவர்களை யாரும் குறை சொல்வதில்லை. மாறாக, உலகமே அவர்களது முயற்சிகளைப் போற்றுகிறது. இதைப் போலவே பாரசீகம், துருக்கி ஆகிய தேசங்களின் ராஜீய புரட்சிகளிலும் மாணவர்களின் பங்கு எவ்விதத்திலும் குறைவானதல்ல; ஆகவே புத்தியுள்ள மனிதர்கள் அவர்களைக் கண்டிப்பதில்லை. சூழ்நிலைகளுக்கேற்ப வழிமுறைகள் மாறுகின்றன. அமெரிக்காவில் கைக்கொள்ளும் வழிமுறைகள் ருஷ்யாவுக்குப் பொருந்தும் என்று புத்தியுள்ளவன் எவனும் சொல்லமாட்டான். அவர்களது பிற்கால வாழ்க்கைக்கும் சமூக சேவைக்கும் தேவையான கல்வியே அமெரிக்க மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும். ஆனால் இதே கல்வி இந்திய மாணவர்களுக்கும் உரியது என்று சொல்வது சரியாக மாட்டாது. தமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் சமூக சேவைக்கும் உரிய கல்வி இந்திய மாணவர்களுக்குத் தரப்படுவதில்லை. அந்நியர்களுக்கு உபயோகப்படக்கூடிய அளவிற்கே அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது அல்லது வழங்கப்படுவதில்லை. இந்த தேசத்தைப் பெரும் பிணி பீடித்துள்ள பொழுது அதனுடைய இளைய தலைமுறை மட்டும் எப்படி ஆரோக்கியமாக விளங்க முடியும்? எனவே, இந்த தேசத்தின் சுபிட்சம் மாணவர்களையே நம்பியுள்ளது. தேசத்தின் தற்கால நிலை எந்த ஒரு மனிதனையும் ஊக்கமிழக்கச் செய்துவிடும். பொது ஜனங்களின் எழுத்தறிவின்மையை நோக்க, தார்மீக பலமும், உன்னத லட்சியங்களுக்கான வேட்கையும், புத்தி கூர்மையும், சபலங்களை வெற்றி கொள்ளும் ஆற்றலும் மாணவர்களிடமே காணமுடியும். நமது கல்விச்சாலைகளில் நம்பிக்கை தரும் ஒரே அம்சம் மாணவர்கள் மட்டுமே. நமது தேசத்தைப் புனரமைப்பதில் இவர்கள் பங்கு பெறுவதை தேச விரோதிகள் தடுக்க முற்படுகிறார்கள்; நம்மில் அறிவற்ற மூடர்கள் சிலரும் அவர்களுக்கு ஒத்து ஊதுகிறார்கள். மார்லியின் சீர்திருத்தங்கள், சட்டசபைகள், சிவில் சர்வீஸ் பரீட்சைகள் முதலானவற்றில் நமது மாணவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்று நாம் பிரியப்படவில்லை. ஆனால், சுதேசியம், சுதேசியக் கல்வி, சரீரப் பயிற்சி ஆகியவை சாதாரண அரசியல் விஷயங்களல்ல; நமது தேசத்தில் பிறந்துள்ள புதிய சக்திக்கான ஆரம்பப் பயிற்சிகளேயாம். இவற்றில் மாணவர்கள் ஈடுபடலாகாது என்போர் அந்த சக்தியின் அழிவையே விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் விருப்பம் ஈடேறாது. ஏனெனில், வந்தேமாதர உணர்ச்சி மிக உறுதியாக நமது இளைய சந்ததியின் உள்ளங்களிலே ஊன்றியுள்ளது; அது இனி விலகாது.

2. இந்திய விவகாரங்கள் பற்றி லார்ட் கர்ஜன் (Curzon) (விஜயா, 25 அக்டோபர் 1909)
எடின்பரோ நகரில் ஆற்றிய ஓர் உரையில் லார்டு கர்ஜன் இந்திய விவகாரங்கள் பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்: 'இந்தியாவை நாம் இழப்போமானால் ஐரோப்பாவின் வலுவான சக்தி என்ற நிலையிலிருந்து விழுந்து, ஒரு மூன்றாந்தர நிலைக்கு வந்துவிடுவோம்.' லார்டு கர்ஜன் பெரிய ராஜீய நிபுணராதலால் அவர் கருத்தை நாம் மறுப்பதற்கில்லை. இந்தியாவின் மீதான ஆதிக்கத்தை இழக்கும் பட்சத்தில், ஸ்விட்சர்லாந்து போன்றதொரு சிறிய அரசாக இங்கிலாந்து இழிந்து விடுமென்றும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமென்றும் ஐரோப்பிய ராஜீய ஞானிகள் பலர் அபிப்பிராயப் படுகிறார்கள். இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து மீளும் எண்ணம் இந்தியாவிற்கு இருக்கக்கூடும் என்பதை லார்டு கர்ஜன் மறந்திருக்க மாட்டாராதலால் அவர் சொல்வதை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சுதேச ராஜாக்கள் பிரிட்டிஷ் ஆதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்றும் அவர் சொல்கிறார். ரெசிடெண்டுகள் மிக விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தம். சுதேச சமஸ்தானங்களில் ரெசிடெண்டுகளே பிரதானம் என்றும், ராஜாக்கள் என்றால் யாருக்கும் தெரியாது என்றும் நாம் அறிகிறோம். இந்தியாவை ஆளுவதன் மூலம் ஆங்கிலேயர்களுக்குக் கிடைக்கும் ராஜீய பயிற்சியும் படை வன்மையும், லெளகீக லாபங்களைவிட மிக அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார். இதிலும் அபிப்பிராய பேதம் உண்டாக ஏது உண்டு. கல்வியில் சிறந்த ஆங்கிலேயர்கள் பலர், இந்தியாவில் நடக்கும் எதேச்சாதிகார ஆட்சி, ஆங்கிலேய ஜாதியின் சுதந்திர உணர்ச்சிக்கு மாறான தன்மைகளை மெல்ல வளர்த்து வருவதாகக் கருதுகிறார்கள். இக்காரணம் பற்றியே பிரிட்டிஷ் ராஜீயவாதிகள் பலர் ஆங்கிலோ-இந்திய அதிகாரிகளிடம் எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்வதில்லை. எதேச்சாதிகாரம் செலுத்தி தேவர்களைப் போல் இந்தியாவில் வாழ்ந்த இவர்கள், தாய்நாடு திரும்பியதும் எந்தப் பொறுப்பான ராஜீய பதவிகளும் பெறாமல் சாதாரண ஜனங்களோடு சேர்ந்து விடுகிறார்கள். இத்தகைய பல் பிடுங்கிய பாம்புகள் அபரிமிதமாகப் பெருகினால், தம் தேசத்தின் ஜனநாயக ஆட்சி முறைக்கு பங்கம் ஏற்படுமோ என இங்கிலாந்து ராஜீயவாதிகள் பயப்படுகிறார்கள்.

3. வைஸிராயும் உதயபூர் ரானாவும் ("விஜயா" 9 நவம்பர் 1909)
சமீபத்தில் உதய்பூர் ராஜா அளித்த விருந்தில் வைஸிராய் ஆற்றிய உரை பற்றி 'விஜயா'வின் கருத்துக்கள்:-

பொது ஜனங்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளில் சுதேச மன்னர்கள் பிரிட்டிஷார் பக்கம் நிற்க வேண்டுமென்றும், அவர்களுடைய எதிர்காலமும் பிரிட்டிஷாரின் எதிர்காலமும் ஒன்றே என்றும் வைஸிராய் கூறியிருக்கிறார். ரானாவுக்கு வைஸிராய் செய்த உபதேசத்தின் இரண்டாம் பகுதி மெத்தவும் உண்மை. ஏனெனில் வெகு சீக்கிரத்தில் சுதேச சமஸ்தானங்களே இருக்கப் போவதில்லை; இன்னும் அரை நூற்றாண்டுக்கு இதே போக்கு நீடித்தால் அவை எல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சங்கமித்துப் போகும். அதன் பிறகு இருதரப்பின் எதிர்காலமும் ஒன்றாகத்தான் இருக்கும். நாம் வேடிக்கை செய்வதாக வாசகர்கள் கருதக்கூடாது. லார்டு மிண்டோவின் பேச்சிலேயே இதற்குத் தகுந்த ஆதாரம் உள்ளது. 1858 மற்றும் 1908 ஆகிய வருஷங்களில் வெளியிடப்பட்ட பிரகடனங்களை ஒப்பிட்டாலும்கூட நம் கூற்றின் உண்மை புலப்படும். 1858 பிரகடனத்தில் 'சுதேச மன்னர்கள்' பொது ஜனங்களிடமிருந்து வேறுபடுத்தப்பட்டு தனித்தனியாக அறிக்கை தரப்பட்டது. 44 ஆண்டுகள் கழித்து சக்கரவர்த்தியின் பெயரில் வெளிவந்துள்ள அறிக்கையில் இரு தரப்பாருமே "நமது இந்தியக் குறுநில மன்னர்களும் பிரஜைகளும்" எனச் சேர்த்தே குறிப்பிடப்பட்டுள்ளனர். இப்போதுள்ள நிலையே மேலும் 44 வருஷங்கள் நீடிக்கும் பட்சத்தில், "நமது குறுநில மன்னர்களும் பிரஜைகளும்" என்று தனியே பிரித்துப் பேச வேண்டியிராமல், இரு பிரிவினரிடையேயும் வித்தியாசம் மறைந்து போகும் என்று மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறோம். "நமது குறுநில மன்னர்க"ளிடையிலும் அனைவரும் உதய்பூர் ரானா போன்றவர்களல்லர்; அவருடைய ராஜீய கருத்துகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பரோடா கெய்க்வார் போல்வாரும் உண்டு. "நாம் அந்நியர்களல்ல; நாம் இந்திய ஜாதியில் ஒரு பகுதி. நாம் ஜனங்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் நன்கு அறிவோம். எனவே ஜனங்களது நலன்களுக்கும் எங்களது நலன்களுக்குமிடையே எந்த மோதலும் உண்டாகாது. எங்கள் விதியும் இந்திய ஜனங்களின் விதியும் கடைசிவரை ஒன்றாகவே இருக்கும்." சில தினங்களுக்கு முன்புதான் கெய்க்வார் மஹாராஜா ஆழ்ந்த அர்த்தமுள்ள இந்த வார்த்தைகளைக் கூறியுள்ளார். நமது ஜனங்கள் இவற்றை எக்காலத்தும் மறக்க மாட்டார்கள்.

4. தசாவதாரங்கள் ("விஜயா" 10 நவம்பர் 1909)
தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கி, பக்தர்கள் துன்பத்திற்குள்ளாகும் காலங்களில் அதர்மத்தை அழித்து, தர்மம் தழைக்க இறைவன் அவதாரம் செய்கிறான். இந்தியாவில் இதுவரை ஒன்பது முறை இறைவன் அவதரித்திருக்கிறான். பத்தாவது அவதாரம் இந்தக் கலியுகத்தில் நடைபெறும். இந்த க்ஷணம் தர்மம் பலமிழந்துள்ளது. அதர்மம் ஓங்கி நிற்கிறது. இறைவன் அவதரிக்கும் காலம் சமீபித்துவிட்டது உறுதி. இப்பொழுது ஓங்கியுள்ள அதர்மம் அழிந்து, தர்மம் அதன் இடத்தில் ஸ்திரமாக நிற்கும் என்பது இதிலிருந்து தெளிவு. ஒவ்வொரு தெய்வ அவதாரத்திற்கும் முன்னோட்டமாக, அவதார நோக்கம் ஈடேறும் வகையில் சில மகான்கள் தோன்றுவார்கள். அதே வேளையில் காலத்தின் அல்லது தேசத்தின் மொத்த அதர்மத்தின் பிரதிநிதியாக ஒரு மனிதனும் தோன்றுகிறான். இறைவன் அதர்மத்தை அத்தேசத்தின் மூலம் அழிக்கிறான்.

5. புதிய சட்டசபைகள் ("விஜயா" 18 நவம்பர் 1909)
(1909இல் மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டபோது மகாகவி அதை எதிர்த்துப்
போர்க்குரல் எழுப்பி எழுதிய கட்டுரைகள் சில கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன)
புதிய சட்டசபைகள் அமலுக்கு வந்துவிட்டன. ஜனத் தலைவர்கள், அதாவது ஆங்கிலம் படித்தவர்களில் கவர்ன்மெண்டாரால் தலைவர்களாகக் கருதப்படும் சிலர், ராஜாங்க விஷயங்களில் இதுவரை செலுத்திவந்ததைவிட அதிகச் செல்வாக்கை இந்தச் சட்டசபைகள் மூலம் செலுத்த முடியும். சட்டசபைகளில் உத்தியோகஸ்தரல்லாத அங்கத்தினர்களின் எண்ணிக்கைக் கூட்டப்பட்டுள்ளது; இதுவரை கேட்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் கேள்விகளை அவர்கள் எழுப்பலாம். மாகாண சட்டசபைகளிலும் உத்தியோகஸ்தரல்லாத அங்கத்தினர்கள் பட்ஜட் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தக்கூடும். ஆனால் இவர்களின் பிரசங்கங்களால் அதிகப் பிரயோஜனம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

இந்தச் சூழ்நிலையில், அதிகாரிகளல்லாத அங்கத்தினர்களின் பிரசங்கங்கள் பயனற்ற வீண் விவாதங்களாகவே அமையும் என்று அரசாங்கத் தீர்மானத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. மாகாண சபைகளில் உத்தியோகஸ்தரல்லாத அங்கத்தினர்கள் பெரும்பான்மையாக இருப்பதும் ஒரு புதிய தந்திரமேயாகும். ஏனென்றால் அவர்களில் மிகப் பலர் அரசாங்கத்தின் சார்பாகவே இருப்பார்கள் என்பது சாதாரண புத்தி இருப்பவர்களுக்குக்கூட வெளிப்படையாகப் புரியும். ஏனென்றால், அதிகாரிகளின் இஷ்டத்திற்கு மாறாக உத்தியோகஸ்தரல்லாத அங்கத்தினர்கள் தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் அதனைத் தூக்கி வீசும் அதிகாரம் கவர்னருக்கு உண்டு. மேலும், அரசாங்கம் சார்ந்த எந்த முக்கியமான பிரச்சனை பற்றியும் தீர்மானம் கொண்டுவரும் அதிகாரமும் இவர்களுக்கில்லை. எனவே, இந்தப் புதிய அங்கத்தினர்களுக்கு எவ்வித உண்மையான அதிகாரமுமில்லை. அரசாங்கம் எப்பொழுதும் போலவே பொறுப்பில்லாத, எதேச்சாதிகாரக் கொடுங்கோலாட்சியாகவே இருக்கும். உத்தியோகஸ்தரல்லாத அங்கத்தினர்களுக்கு உண்மையாகவே சில அதிகாரங்கள் இருக்கும் பட்சத்திலும்கூடப் பொது ஜனங்களுக்கு இதனால் ஒரு பலனும் ஏற்படப்போவதில்லை. வறுமை, பேடித்தனம், கல்வியறிவின்மை ஆகியனவே தற்கால இந்தியர்களின் மூன்று பெரும் பகைவர்கள்.

இந்தக் கவுன்சில்களின் இந்திய அங்கத்தினர்கள் இத்தீமைகளை நீக்கும் உபாயங்களை அறிவார்களா? நிச்சயமாக இல்லை. இவர்களால் வரிகளைக் குறைக்க முடியுமா? அந்நிய வஸ்துகளை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து, நம் தேசத்துத் தொழில் அபிவிருத்திக்கு உதவ முடியுமா? தேசமே பஞ்சத்தில் உழலும்போது நம்நாட்டு தானியங்களை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம்தான் உண்டா? ராணுவ மற்றும் பிற செலவுகளைக் குறைத்து, ஏழைக் குடியானவர்களுக்கு நன்மை புரியும் அதிகாரம்தான் இவர்களுக்குண்டா? நம் ஜனங்களின் ஆண்மையை விருத்தி செய்யும் பொருட்டு ஆயுதச் சட்டத்தை நீக்கும் அதிகாரம்தான் இவர்களுக்குண்டா? பட்ஜட்டை உருவாக்குவதில் இவர்களுக்குப் பங்குண்டா? கல்வி வளர்ச்சிக்குக் கூடுதலாக ஐம்பது லட்சம் ரூபாய் ஒதுக்கும் உபாயம்தான் இவர்களுக்குத் தெரியுமா?

இந்த தேசத்தின் ஆட்சியில் ஜனங்களுக்குக் கூடுதலான அதிகாரங்கள் இந்தச் சீர்திருத்தங்களின் மூலம் ஏற்பட்டுள்ளதென்று சொல்வதில் ஓர் இம்மியளவும் உண்மையில்லை. முகம்மதியர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் போன்ற தீமைகளே இந்தச் சீர்திருத்தங்களால் விளையக்கூடும். நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததைவிட அதிகத் தீமைகள் இந்தச் சீர்திருத்தங்களால் விளையாதது பற்றி நாம் மிகவும் சந்தோஷிக்கிறோம். இதைவிட அதிகத் தீமை விளைவிக்காதது பற்றி லார்டு மார்லி, லார்டு மிண்டோ, ஸ்ரீ கோகலே ஆகியோர்க்கு நாம் மிகுந்த வந்தனமளிக்கிறோம்.

6. லார்டு மார்லியின் சீர்திருத்தங்கள் ("விஜயா" 25 நவம்பர் 1909)
சீர்திருத்தங்கள் பற்றி வங்காள ஜனங்களின் அபிப்பிராயங்கள் 'விஜயா'வில் மறுபிரசுரம் பெற்றுள்ளன.

1) புதிய சட்டசபை பழைய சபையைவிட மோசமானது, ஏனெனில் எவருமே தமது அபிப்பிராயங்களைச் சுதந்திரமாகத் தெரிவிக்க வாய்ப்பில்லை என்று பாபு சுரேந்திரநாத் பானர்ஜி "வங்காளி" பத்திரிகையில் எழுதியுள்ளார். லாலா லஜபதி ராய், அஸ்வினிகுமார தத்தர், திலகர் மட்டுமல்லாமல், சுரேந்திரநாத், சவுத்ரி போன்றோருக்கும்கூட இந்த சபைகளில் இடம் இல்லை. பழைய சட்டசபையில் அங்கம் வகிக்க அருகரானவர்களும்கூடப் புதிய சபைகளில் அங்கத்தினராக அனுமதிக்கப்படமாட்டார்கள். சில ஐரோப்பியர்கள், அதிகாரிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட சில முகம்மதியர்கள், கலெக்டர்களைக் கண்டு அஞ்சும் சில ஜமீன் தார்கள் -- இவர்களுக்கே புதிய சபையில் அதிக இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சட்டசபைகளில் உத்தியோகஸ்தரல்லாதவர்களுக்குப் பெரும்பான்மை என்பது கேலிக்கூத்தே யாகும்.

2) அதிகாரிகள் விருப்பத்திற்கு விரோதமாகப் பொது ஜனங்களின் கஷ்டங்களைத் தைரியமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திர எண்ணங்கொண்ட தேசாபிமானிகள் புதிய சட்டசபையில் கால் வைக்க முடியாது என்று "அமிர்தபஜார் பத்திரிகை" கூறுகிறது. மேலும், 'சீர்திருத்தம்' என்ற பெயரில் அங்கத்தினர்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்திவிட்டு, அவர்கள் குரல் கொடுக்க முடியாமல் செய்வதின் பிரயோஜனமென்ன? எந்த இலக்கம் கொண்டு பூஜ்யத்தைப் பெருக்கினாலும் அது பூஜ்யம்தானே?

3) சீர்திருத்தங்களெல்லாம் வெறும் ஏமாற்று என்று வங்காளப் பத்திரிகைகள் எல்லாம் கூறுகின்றன. நாடியாவில் கூடிய சமீபத்திய மகாநாட்டில் அஸ்வினி குமார பானர்ஜி பின்வருமாறு கூறியுள்ளார்: "இந்தியாவில் நிலவும் பொதுவான கொந்தளிப்பை அடக்குமுறையால் அடக்கிவிடலாம் என்று எண்ணுவது அறிவீனமேயாகும். புதிய சீர்திருத்தங்கள் இந்தக் கொந்தளிப்பைச் சாந்தி செய்யும் என்று வேறு சிலர் நினைக்கின்றனர். 'புதிய சீர்திருத்தங்கள்' என்ற பதச்சேர்க்கையே பிழையாகும். புதிய அதிகாரங்களோ, சலுகைகளோ ஜனங்களுக்குக் கொஞ்சமும் கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. மாறாக பழைய உரிமைகள் சில பறிக்கப்பட்டுள்ளன. இந்தச் சீர்திருத்தங்கள் ஏமாற்று வேலையும், கேலிக்கூத்துமாகும் என்பதை நமது ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டும்." இவ்வாறாக வங்காள ஜனங்கள் இந்தச் சீர்திருத்தங்களின் உண்மை சுபாவத்தைப் புரிந்து கொண்டுள்ளார்கள்; சென்னை ஜனத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களோ, விளக்கை நோக்கி வரும் விட்டில் பூச்சிகளைப் போல் புதிய கவுன்சிலுக்கு அபேட்சகர்களாக முந்துகிறார்கள்.

7. புதிய சட்டசபைகள் ("விஜயா" 27 நவம்பர் 1909)
தேசத்திற்கு ஏதோ நன்மை புரிவது போல் புதிய சட்டசபையில் நுழைவதற்குப் பல அபேட்சகர்கள் முந்துகிறார்கள். பொது ஜனங்களிஜ் குறைகளை எடுத்துச் சொல்வதோடு, தங்களின் சுதந்திரமான அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி, அதிகாரிகளை ஜயிக்கலாம் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அந்தோ! இது எவ்வளவு வீண் பிரயத்தனம்! ஏன் இதற்குச் செலவிடும் பணங்களை சுதேசிக் கப்பல் கம்பெனிக்குக் கொடுக்கலாகாது! பணத்தைச் செலவிடுவதற்கு வேறு நல்ல உபாயங்கள் இல்லையா? குரல் கொடுப்பதற்கே வழியில்லாத சட்டசபைகளுக்குள் நுழைந்து இவர்கள் சாதிக்கப்போவது என்ன? இது பற்றி இவ்வளவு சங்கநாதம் செய்வானேன்? எதற்கு இவ்வளவு ஏஜண்டுகள்? நம் தேசத்துத் தொழில்களை அபிவிருத்தி செய்து ஏழை ஜனங்களைக் காப்பதற்கு எவரும் முன்வருவதில்லை. வங்காளத்தின் முக்கியத் தலைவர்கள் புதிய சட்டசபைகளைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளார்கள். அவற்றின் சுபாவத்திலேயே பயனற்றதும், பலவிதங்களிலும் தீங்கானதுமான இந்தச் சீர்திருத்தங்களை நாம் உதாசீனப்படுத்த வேண்டும் என்று இவர்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். பாபு சுரேந்திரநாத் பானர்ஜி, அம்பிகாசரண் மஜூம்தார் போன்ற பெரியோர் நம் மாகாணத்தில் இல்லாதது பற்றி நாம் மிகவும் விசனிக்கின்றோம். நம் தேசம் எப்படி விளக்கமுறும்? ஓ, எம் தேசத் தலைவர்களே! இன்னும் எவ்வளவு காலத்திற்குச் சோம்பியிருக்கப் போகிறீர்கள்? புதிய சட்டசபைகளைப் புறக்கணித்து, ஜனங்களுக்கு உண்மை நிலவரத்தை அறிவிக்கும் தைரியத்தை எப்பொழுது பெறப் போகிறீர்கள்? இந்தப் போலித் தலைவர்களை நம்பிப் புண்ணியமில்லை. ஜனங்கள் தாங்களாகவே பல்வேறு இடங்களில் கூட்டங்கள் கூடி, புதிய சீர்திருத்தங்களை நன்கு ஆராய வேண்டும். நமது சுயராஜ்ய தாகத்தைப் புதிய சீர்திருத்தங்கள் கொஞ்சமும் தீர்க்கவில்லை. நமது லட்சியங்களை அடைய இவை பயன்படவில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டு, நமது ஜனங்கள் இவற்றைப் புறக்கணிக்க வேண்டும்.

8. சுதேச அரசர்களும் ஆங்கில அதிகாரிகளும் ("விஜயா" 2 டிசம்பர் 1909)
சுதேச அரசர்களுக்கும் ஆங்கிலேயருக்குமான உடன்படிக்கையின் முக்கியமான ஷரத்துகளில் ஒன்று, சுதேச சமஸ்தானங்களின் உள்நிர்வாகத்தில் ஆங்கிலேய அதிகாரிகள் தலையிடலாகாது என்பதாகும். பெரும்பான்மையான சமயங்களில் இது மீறப்படுகின்றது. பரோடா சமஸ்தானத்திற்கு வைஸ்ராய் விஜயம் செய்தபொழுது அதன் மகாராஜா பின்வருமாறு கூறியிருக்கிறார்: "சுதேச சமஸ்தானங்கள் எல்லாம் தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் சுதந்திரத்துக்கு உட்பட்டு, தமது பிரஜைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் மேம்பாட்டுக்கு உழைத்து வருகின்றன. உள் நிர்வாகச் சுதந்திரம் குறைக்கப்பட்டால் பிரஜைகளின் நலனைப் பேணும் பொறுப்புக் குறைந்து, நன்மை செய்யும் விருப்பமும் தளர்ந்துவிடுகிறது."

பரோடாவின் ஆங்கில ரெசிடெண்டு, சமஸ்தானத்தின் அஸ்திவாரத்தினையே அசைக்க முயன்றிருக்கிறார் என்பதை மகாராஜாவின் கூற்று காட்டுகிறது. மைசூரின் ரெசிடெண்டு, மகாராஜா மைனராக இருந்த காலத்தில் அவருக்கு ஆசிரியராக இருந்ததால் அவர் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவரெனக் கருதலாம். மகாராஜாவின் அந்தரங்கக் காரியதரிசியும் ஓர் ஆங்கில சிவிலியனே. திவானும் அவரது கவுன்சிலும் கலந்துகொண்டு, மகாராஜாவின் ஒப்புதலுக்காக அனுப்பும் தீர்மானங்களில்கூட அவர் தலையிடுவதாகக் கேள்வி. இது போதாதென்று, அந்தரங்கக் காரியதரிசிக்குக் கீழே ஹுஜூர் காரியதரிசி என்று ஒருவரும் அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டிருக்கிறார். மகாராஜாவிற்கு இந்த ரெசிடெண்டு ஆசிரியராகவிருந்த காலத்தில், இந்த ஹுஜூர் காரியதரிசி அவருக்குக் கீழே ஒரு சாதாரண டியூட்டராக இருந்திருக்கிறார். இரண்டு காரியதரிசிகள் மீதும் ரெசிடெண்டு பேராதிக்கம் செலுத்துவதாகத் தெரிகிறது. எனவே, இம்மூவரும் கைகோக்கும் பட்சத்தில் திவானையும் அவரது கவுன்சிலையும் வெறும் பொம்மைகளாக ஆக்கிவிட முடியும். திவானும் அவரது மதிரிகளும் ஒப்புக்குத்தான் இருக்கிறார்களென்றும், உண்மையில் ஆட்சிபுரிவது ரெசிடெண்டா அல்லது மகாராஜாவா என்றும் மைசூரின் ஜனங்கள் வெளிப்படையாகவே பேசிக்கொள்கிறார்கள். சுதேச அரசர்களின் நிலைமை உண்மையில் பரிதபிக்கத் தக்கதே.

9. தென் ஆப்பிரிக்காவில் பாரத ஜனங்கள் ("விஜயா" 3 டிசம்பர் 1909 & சூரியோதயம் 5 டிசம்பர் 1909)
ஓரு நிருப நேயர் பின்வருமாறு எழுதுகிறார். (ஒரு "நிருப நேயர்" என்பது பாரதியின் புனைபெயர்)

திரான்ஸ்வாலிலும் நேட்டாலிலும் இந்தியர்கள் தினந்தோறும் சிறைக்குள் அடைக்கப்பட்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விஷயமே. இதைப் பரிசீலித்தோமானால், பின்வரும் பாடத்தை நாம் பெறலாம். எவர் ஒருவரும் தன் சுதந்திரத்தை இழக்கக்கூடாது. ஒருவனுக்கு அடிமையாக இருப்பதைவிடச் சிறையிலிருப்பது மேல். திரான்ஸ்வாலிலுள்ள நமது சகோதரர்கள் பார்லிமெண்டில் இடம் பிடிப்பதற்காகப் போராடவில்லை. ரெயிலில் பிரயாணம் செய்தல், கடற்கரையில் நடத்தல், வியாபாரம் செய்தல், பள்ளிக்கூடத்தில் படித்தல் போன்ற சாதாரண ஜனங்களுக்குரிய உரிமைகளையே அவர்கள் கேட்கிறார்கள். 'அடிமை ஜாதியான இந்தியர்களுக்கு இந்த உரிமைகளை ஏன் கொடுக்க வேண்டும்?' என்று வெள்ளையர்கள் கேட்கிறார்கள். ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி, பதினான்கு வயதுக்கு மேற்பட்டதால் ஒரு முகமதியச் சிறுவனைப் பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட்டதாக "ஆப்பிரிக்க வர்த்தமானி" பத்திரிகையில் சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. இதற்குக் காரணம் அச்சிறுவன் ஓர் இந்தியன். கிறிஸ்தவர்களுக்கும் முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் ஏமாற்றுத்தனமான கவுன்சில் சீர்திருத்தங்கள் வழங்கப்படலாம்; வெறும் விளையாட்டு பொம்மைகள் போன்ற சில விசேஷ சலுகைகள் முகமதியர்களுக்கு வழங்கப்படலாம்; வெள்ளையர் மீது கிறிஸ்தவர்களுக்கு விசுவாசமிருக்கலாம்; ஹிந்துக்களில் பலர் அரசாங்கத்திற்கு விசுவாசமாயிருக்கலாம். ஆனால் தென் ஆப்பிரிக்கவில் இவர்களில் எவருக்கும் உயர் கல்வி கிடைக்காது. அவர்கள் சுவாசிக்க சுதந்திரக் காற்று கிடைக்காது. தென் ஆப்பிரிக்க சமாச்சாரங்களைப் படித்த பின்பும் நீங்கள் வாளாயிருந்தால் தர்ம தேவதை சகிப்பாளா? வெறு எந்த தேசமும் உங்களைப் போல் மெத்தனமாய் இருக்குமா? அர்ஜூனன், குரு கோவிந்தர், சிவாஜி ஆகிய வீர புருஷர்களின் ரத்தம் உங்கள் நாளங்களில் ஓடவில்லையா? ஜப்பானியர் இத்தகைய அவமானத்தைச் சந்தித்தால் என்ன நடக்கும்? 300 வருஷங்களுக்கு முன்பு, ஒரு ஸ்பானிஷ்காரன் ஓர் ஆங்கிலேயனின் காதை அறுத்ததால் ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்கும் ஒரு யுத்தம் நடந்தது. சரித்திரம் அறிந்த வாசகர்களுக்குத் தெரியும். பாரத ஜனங்களால் பராக்கிரமச் செய்கைகளில் ஈடுபட முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் 'வர்ஜனம்'* (*புறக்கணித்தல்) என்ற பேடித்தனமான திட்டத்தையாகிலும் அனுஷ்டிக்கலாகாதா? அந்நிய வஸ்துக்கள், சட்டசபைகள், ராஜாங்க சேவை முதலானவற்றை வர்ஜனம் செய்யாமல், மழைக் காலத்தில் புறப்படும் விட்டில் பூச்சிகள் போல் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட முந்துகிறார்கள். இவர்களையெல்லாம் ஜாதி பிரஷ்டம் செய்யும் தைரியம் பொது ஜனங்களுக்கு எப்பொழுதுதான் வருமோ? ஓ! பாரதமாதா! நீ ஏன் மெளனமாயிருக்கிறாய்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு' என்றார் ஏசுபிரான். 'பகைவர்களை அழியுங்கள், அநீதியை ஒழியுங்கள், சுபிட்சமாய் வாழுங்கள், அப்பொழுதுதான் முக்தி கிடைக்கும்' என்றார் கிருஷ்ண பரமாத்மா. இந்த இரண்டு தீர்க்கதரிசிகளின் சீடர்களும் அவர்களது போதனைகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். ஐரோப்பியர்கள் கிருஷ்ண பரமாத்மாவையும், ஆரியர்கள் கிறிஸ்துவையும் சந்தோஷப் படுத்துகின்றனர் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். ஆரியர்களின் இரண்டொருவரே முனிபுங்கவர்களாக முடியும், மற்றவரெல்லாம் கிருஹஸ்தர்களாகத் தம் கடமையைச் செய்ய வேண்டும். ஓ! ஆரியர்களே! இதை உங்கள் மனதில் வையுங்கள்.

இதன்மீது பத்திராதிபர் பின்வருமாறு எழுதுகிறார்: பிரெஞ்சு இந்தியாவிலுள்ள குருட்டு கிறிஸ்தவர்களும் போலி ஹிந்துக்களும் இதைப் படித்தேனும் பாடம் கற்றுக்கொண்டு, வெள்ளையர்கள் விதித்த அடிமைச் சேவகத்தை விட்டொழிப்பார்களா? வெள்ளையர்களும் ஹிந்துக்களும் சமம் என்பதை ஓர்ந்து, ஓர் இந்தியரையே வைஸிராயாகத் தேர்ந்தெடுப்பார்களா?

10. தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் படும் கஷ்டங்கள் ("விஜயா" 8 டிசம்பர் 1909)
அந்நியர்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், நம்மை அடிமைகளாக நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும் தென் ஆப்பிரிக்காவில் போராடும் நம் சகோதரர்கள் படும் கஷ்டங்களை எண்ணிப்பார்க்க, துக்கத்தாலும் சந்தோஷத்தாலும் நம் நெஞ்சம் நிரம்புகின்றது. துக்கத்திற்கான காரணம் வெளிப்படை. சமத்துவத்திற்காகவும் சுதந்திரத் திற்காகவும் நமது சகோதரர்கள் எவ்வளவுதான் கஷ்டமனுபவித்தாலும், சுபிட்சம் சமீபித்துள்ளது என்று நினைக்க மிக்க மகிழ்ச்சி உண்டாகின்றது. பாரத மக்கள் எப்போது மீண்டும் ஆண்மை பெறுவர் என்று தர்மதேவதை காத்திருந்தாள். அந்தக் காலமும் வந்துவிட்டது. மனிதத் தன்மையே இல்லாத பன்றிகளும் ஓநாய்களும் திரான்ஸ்வாலை ஆள்கின்றன. மனிதர்கள் அத்தேசத்தை ஆளும்பட்சத்தில் காந்தி போன்ற மகான்கள் கஷ்டப் படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், தேசத்தின் பொருட்டும் தர்மத்தின் பொருட்டும் ஒருவன் அனுபவிக்கும் கஷ்டங்கள் பெரிதில்லை என்று காந்தி சொல்கிறார். பெரிய வார்டரின் கக்கூசைச் சுத்தம் செய்யுமாறு ஸ்ரீ காந்தியை மற்றொரு வார்டர் ஏவியபொழுது, அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் அதைச் செய்தார். "இதைப் போன்ற கஷ்டங்களைச் சுமத்துவதன் மூலம் எங்கள் மனோதைரியத்தைக் குலைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளட்டும்" என ஸ்ரீ காந்தி எழுதுகிறார். இதைவிடக் கொடிய துன்பங்களைச் சுமத்தினாலும் காந்தியினதும் அவரது தலைமையிலான பிற பாரத வீரர்களினதும் மனங்கள் குலையமாட்டா. நமது ஜாதீய கவுரவத்தைக் காக்கும் பொருட்டு நம்மவர்கள் காட்டும் தைரியத்தை வாயால் பாராட்டினால் மட்டும் போதுமா? தமது பெண்டிரும் குழந்தைகளும் பட்டினியால் வாடினபோதும், நம் சகோதர ரத்தினங்கள் அமைதியாகச் சிறை புகுந்துள்ளார்கள். அவர்களுடைய மனைவியரும்கூட, தேசத்தின் பொருட்டாக அவர்கள் உழைக்க ஊக்குவிக்கிறார்கள். அந்தப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சகாயம் புரிவது நமது கடமையல்லவா?

11. வைஸிராயின் தென்னிந்திய விஜயம் ("விஜயா" 8 டிசம்பர் 1909)
லார்டு மிண்டோ மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் முதலான இடங்களுக்கு விஜயம் செய்யப் போட்டிருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்லது என்று கேள்வியுறுகிறோம். சில விதங்களில் இது ஜனங்களுக்கு மிக்க நன்மை பயக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. முதலாவதாக, வைஸிராயை வரவேற்பதற்காக ஜனங்களிடமிருந்து வசூலித்த வரியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நிதி மிச்சப்படும். அவரது விஜயத்தால் விளைந்திருக்ககூடிய நன்மைகளை இழந்து விட்டோமோ எனச் சிலர் அபிப்பிராயப்படக் கூடும். நாம் அவ்வாறு கருதவில்லை. ஏனெனில் ஜனங்களின் எல்லாக் கோரிக்கைகளையும் கேட்கவும், அவர்களது குறைகளைக் களையவும் அவருக்கு அவகாசம் இராது. இரண்டாவதாக, போலீஸாரால் விளையக்கூடிய தொந்தரவுகளும் கஷ்டங்களும் இல்லாமல் போகும். ஜனங்கள் அமைதியாக வாழும் பிரதேசத்தில், வைஸிராயை அபாயங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி போலீஸாருக்கு ஏற்பட்டது என்று விளங்கவில்லை. உண்மையிலேயே வைஸிராய்க்கு ஆபத்து நேரிடக்கூடுமானால் போலீஸாரால் ஜனங்களுக்கு உண்டாகும் தொந்தரவுகளைக் கற்பனை செய்ய முடியவில்லை. இப்பொழுது இக்கஷ்டங்களெல்லாம் இல்லை. லார்டு மிண்டோவும் அமைதியாகத் திரும்பிச் செல்வார்; ஜனங்களுக்கும் நன்மைதான். லார்டு மிண்டோ பற்றி நமக்குப் பகையில்லையாதலால் அவருக்கு ஏற்பட்ட சுகவீனம் நமக்கு சந்தோஷம் தரவில்லை. ஜனங்களுக்கு எந்த தொந்தரவுமில்லாமல் லார்டு மிண்டோ வீடு திரும்புவது நமக்கு மகிழ்ச்சியே தருகிறது.

12. தேசியக் கல்லூரிகளின் மாணவர்கள் ("விஜயா" 13 டிசம்பர் 1909)
'விஜயா' இதழ், நான்கு தேசியக் கல்லூரிகளின் மாணவர்கள் அரசாங்கக் கல்லூரிகளிலோ, அரசாங்க உதவி பெறும் கல்லூரிகளிலோ சேர்வதைத் தடுக்கும் பம்பாய் அரசாங்கத்தின் ஆணையை வெளியிட்டுப் பின்வருமாறு எழுதுகிறது:

இந்தக் கல்லூரிகளில் ஆட்சேபகரமான பாடங்கள் போதிக்கப்படுவதாக பம்பாய் அரசாங்கம் கூறுகிறது. 'ஆட்சேபகரம்' என்பதன் அர்த்தம் என்ன என்பதை ஸ்பஷ்டமாக விளக்காமல், நான்கு கல்லூரிகளை நாசம் செய்வது நியாயமாகுமா? இந்தக் கல்விச்சாலைகள் ராஜதுரோகத்தைப் போதிக்கின்றன என்பதைத் தனது நீதி ஸ்தலங்களிலேயே ருஜுப்படுத்த வேண்டாமா? அவ்வாறு செய்யாமல், சிலர் சொல்வதைக் கேட்டு அவற்றை மூடிவிட அரசாங்கம் எத்தனிக்குமானால் ஜனங்கள் பொறுத்துக்கொள்வார்களா? இந்த தேசத்திலே கல்வியானது கார்த்திகை மாதப் பிறை போல் காண்பதற்கு அபூர்வமாய் இருக்கின்றது. ஆயிரத்தில் ஒருவர்கூட நல்ல கல்வி பெற்றவராகப் பார்க்கக் கிடைப்பதில்லை. நமது தேசத்தவர்க்கு அத்தியாவசியமான புராதன நன்மைகளில் கல்வியும் ஒன்று. அந்தக் கல்வியும் தேசிய வாழ்வுக்கு ஒரு கண்ணாடியாகவும், அதன் சுபிட்சத்திற்குத் தூண்டுகோலாகவும் இருக்க வேண்டும். அத்தகைய கல்வியை அளிப்பதற்கான கல்விச்சாலைகளை ஸ்தாபிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் அதிகாரிகள் நம் தேச சுபாவத்தை அறியாத அந்நியர்களா யிருப்பதினால், இந்த லட்சியத்தை அவர்களால் ஈடேற்ற முடிவதில்லை. மேலும், இவர்கள் ராணுவ பலத்தைப் பெருக்குவதிலும், ராணுவ அவசியத்திற்காக ரெயில் போடுவதிலும் அக்கறை செலுத்துகிறார்களேயன்றி, ஜனங்களின் கல்வி அபிவிருத்தி பற்றி அக்கறைப் படுவதில்லை. எனவே, ஜனங்களுக்கான தங்கள் கடமையில் தவறுவதோடன்றி, நம்மவர்கள் செய்யும் முயற்சிகளையும் முழுமையாக விசாரித்தறியாமல், தோல்வியுறச் செய்கிறார்கள். இவற்றால் ஜனங்களின் அதிருப்தி குறையுமா?

13. இந்தியாவில் ரயில்வே ("விஜயா" 21 பிப்ரவரி 1910)
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள ரயில்வேயை ஒப்பிட்டு "விஜயா" எழுதுவதாவது.

இந்தியாவில் மட்டும்தான் ரயில்வேக்களெல்லாம் அரசாங்கத்திற்குச் சொந்தமா யிருக்கின்றன. இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட ரயில்வே ஆரம்பம் முதலே பிரயாணி களுக்காகக் கட்டப்படவில்லை. இந்தியர்களின் செள்கரியத்திற்காக ரயில் உருவாக்கப் பட்டதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் அது இந்தியர்களை அடக்கி வைப்பதற்காக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு ராணுவத் துருப்புகளை அனுப்பி வைப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. எப்படி இந்திய ராணுவம் என்றால் இந்தியர்களை அடக்கி வைப்பதற்கான ராணுவம் என்று அர்த்தமோ, அதைப் போலவே இந்திய ரயில்வே என்றால் இந்தியர்களின் செல்வத்தைக் கொள்ளையிடும் ரயில்வே என்பது அர்த்தமாகும். ஆரம்பத்தில் அரசாங்கத்தின் சொந்த நலனுக்காக ரயில்வே உருவாக்கப்பட்டாலும், பஞ்ச காலங்களில் சுபிட்சமான இடங்களிலிருந்து வறட்சியான இடங்களுக்குத் தானியங்களைக் கொண்டு செல்வதற்குச் செளகரியமாக இருக்கின்றது என்று அரசாங்கம் சொல்கிறது. இதன் உண்மை இப்போது துலாம்பரமாகி விட்டது. இந்தியாவில் கடுமையான பஞ்சம் நிலவியபோதும், உணவுப் பண்டங்கள் ரயில் மூலமாக அந்நிய தேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறாக, பஞ்ச காலங்களில் ரயில்வேயினால் எந்த உபகாரமும் இல்லையென்பதோடு, ஜனங்களுக்குப் பெருத்த கஷ்டமும் உண்டாகின்றது. பல இடங்களில் செள்கரியங்கள் போதவில்லை என்பது மட்டுமல்லாமல், ஆங்கிலேயர்களாலும் கிழக்கிந்தியர்களாலும் ஏற்படும் தொந்தரவுகளுக்கும் முடிவில்லை. தீர்த்த யாத்திரை செல்லும் இந்தியர்களுக்கு ஆடுமாடுகளும் சரக்கு மூட்டைகளும் அடைக்கும் பெட்டிகளே தரப்படுகின்றன. ஆனால் பிரயாணிகளினால்தான் வருமானத்தின் பெரும்பகுதி கிடைக்கின்றது. ஆனால் இந்த வருமானமெல்லாம் கோடைக் காலத்தில் வெள்ளைக்காரர்கள் மலை வாசஸ்தலங்களுக்குச் செல்வதை செளகர்யப்படுத்துவதற்கே உபயோகிக்கப் படுகின்றது. இந்த ஆங்கில ஆட்சியில்தான் இது பாரபட்சமென்று சொல்லப்படுவதில்லை. மேலும் இந்த ரயில்வேக்களெல்லாம் மக்களின் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்டலும், முழுவதும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இது பற்றி இன்னும் விஸ்தரித்து எழுதினால் அது புதிய பத்திரிகை சட்டத்திற்கு விரோதமாகப் போகும்.

14. ஆங்கில பாஷை இந்தியர்களுக்குக் கற்பித்ததின் காரணம். (விஜயா, 22 பிப்ரவரி 1910)
முதல்முதலில் ஆன்கிலேயர்களில் சிலர், இந்தியர்களுக்கு ஆங்கிலத்தில் பயிற்சி கொடுக்கக்கூடாதென்றே எண்ணினார்கள். அவர்களில் பெயர்போன ஸமுஸ்கிருத பண்டிதரான வில்சன் என்பவர் ஒருவர். இவரைக் கேட்டபோது இந்தியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி கொடுத்துப் பரீக்ஷைகளுக்குரிய பட்டங்களைக் கொடுத்து விட்டால் ஆங்கிலேயர்களைப் பார்க்கிலும் சிலசமயம் மேன்மையாக நடத்த வேண்டி வருமென்றும் அது ஆங்கிலேயர்களுக்கு வெகு குறைவானதென்றும் 1835ம் வருஷத்தில் சொன்னார்.

இந்தியர்கள் புத்திசாலிகள்தான். ஆனால் ஆங்கிலோ இந்தியர்கள் (Britishers residing in India) இவர்களைச் சமானமாக நடத்த ஒப்புக்கொள்ளார். சமுத்திரத்தில் ஒரு துளி போன்ற இந்தச் சிறு ஆங்கிலக் கூட்டத்திற்கு இந்தியா முழுதும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்பதுதான் இவர் கருத்து. ஆனால் புத்தியபிவிருத்திக்கு ஆங்கிலம் ஒன்றுதானா, சுயபாஷை உதவாதா? என்று சிலர் கேட்டார்கள். அதற்குச் சுயபாஷையில் இந்தியர்கள் என்ன தேர்ச்சியடைந்தாலும், ஆங்கிலம் தெரியாது என்னும் காரணம் கூறி கீழ் உத்தியோகங்களிலேயே நிறுத்திவிடலாம். மேல் உத்தியோகங்களையெல்லாம் ஆங்கில ஆட்சியிருக்கும் வரையில், கெட்டிக் காரர்களாயில்லாதிருந்தாலும் ஆங்கிலேயர்களுக்கே கொடுக்கலாம் என்று எண்ணி வில்சன் என்பவர் ஆங்கில பாஷையை இந்தியர்களுக்குச் சொல்லக்கூடாது என்று வற்புறுத்தினார். இது ஒரு பக்ஷம். மற்றொரு பக்ஷத்தார், ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதுதான் மேலென்றும் அதைவிட்டு இந்தியர்களைத் தம் முக்கிய பாஷைகளான ஸமுஸ்கிருதம், அரபி முதலானவைகளில் பயிலச் செய்தால் ஆங்கில ராஜ்யத்திற்கே கேடு வருமென்றும் சொன்னார்கள். சமுஸ்கிருதத்தைப் படித்த ஹிந்துக்களெல்லாம் ஆங்கிலேயர்களை இழிவான மிலேச்சர்களென்றும், அவர்களின் நடை, உடை, பாவனையெல்லாம் ஆரிய தர்மத்துக்கு நேர் விரோதமென்றும் அவர்களோடு ஒரு மாதிரியான வியாபாரமும் வைத்துக் கொள்ளக் கூடாதென்றும், அவர்கள் கிட்ட நெருங்குவதுகூட மகா பாவமென்றும் கருதுகிறார்கள். இப்படியிருக்க இவர்களுக்குத் தம்முடைய பரம்பரையின் பெருமையைக் கூறும் சமுஸ்கிருதப் பயிற்சி கொடுத்தால் ஆங்கில ஆட்சி நிலைபெறாது மேலும் முஸல்மான்களுக்கு அரிப் சொல்லிக் கொடுப்பதைப் பார்க்கிலும் ஆபத்து வேறு வேண்டியதில்லை. முஸல்மான்களின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் இப்போதுதான் நாசம் செய்திருக்கிறார்கள். அவர்களைத் தம்முடைய பெருமையையே புகட்டும் அரபிக் கல்வியில் பயிலவைத்தால் அவர்கள் பெருத்த ஆவேசத்தோடு ஆங்கிலேயர்களை இந்தியாவினின்றும் துரத்த எத்தனிப்பார்கள். முஸல்மான்களின் கொள்கைகளில் ஆங்கிலேயர்களாகிய 'காபீர்'களைக் கொன்றால் தமக்கு மோக்ஷத்திற்குச் சமுசயமில்லை என்பது முக்கியமான கொள்கை. இம்மாதிரியாகச் சுயஜாதி நலமும், மதக் கொள்கையும் ஒன்று சேர்ந்து பெரிய சூரர்களாகிய முஸல்மான்களை ஏவினால் ஆங்கிலேயர்கள் வெகுநாள் ராஜ்யம் செய்ய முடியாது. ஆகையால், எவ்விதத்தாலும் இந்துக்களுக்குச் சமுஸ்கிருதமும் முஸல்மான்களுக்கு அரபியும் சொல்லிக்கொடுப்பது கூடவே கூடாதென்று மற்றொரு கக்ஷியார் வற்புறுத்தினார்கள்.

இவ்விரு கக்ஷியார்களின் விவாதத்தால் என்ன வெளிவருகின்றதால், இந்தியர்களை எந்தமாதிரியான கல்வியில் பயிலவைத்தால் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எப்போதும் அடிமைகளாகவிருந்து தம் பழைய உயர்ந்த நிலையை மறந்து விடுவார்கள் என்னும் ஒரே நோக்கம்தான் இரு கக்ஷியாரும் கொண்டது. இப்பொழுது சில அரவாய், கால்வாய் படிப்போடு சிலர் சொல்வது போல இந்தியர்களைக் கடைத் தேரவைப்பதற்குத்தான் மகா கருணையுள்ள ஆங்கிலேயர்கள் ஆங்கில பாஷையை நமக்குச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது சுத்த பிசகு.

ஆங்கில பாஷையை இந்தியாவில் பரவச் செய்ய வேண்டுமென்று பெரிய முயற்சி செய்த கவர்னர் ஜெனரல் இந்தியர்களுக்கு பெருத்த துரோகி. இந்த லார்ட் வில்லியம் பெண்டிங் சென்னை கவர்னராக இருந்தபோதுதான் சென்னை சிப்பாய்களை அடக்க முயல, அவர்கள் வேலூர் கலகத்தை நடத்தினார்கள். இவருக்கு இந்தியர்களை மேலுக்கு வர வொட்டாமல் தடுப்பதே முக்கிய நோக்கம். இவர் கவர்னர் ஜெனரலாயிருந்தபோதுதான் இந்தியர்கள் ஆங்கில பாஷை பயில வேண்டுமென்றும், இனிக் கவர்ன்மெண்டு பணத்தில் ஒரு காசுகூடச் ஸமுஸ்கிருத புத்தகங்களையும் அரபி புத்தகங்களையும் அச்சிடச் செலவழிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறந்தது.

வில்சன் சொல்லியதைப் போல் ஆங்கிலம் படித்த இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்களுக்குச் சமானமான உத்தியோகங்கள் கொடுக்கவேண்டி வருமே என்பதற்கு, இந்தியர்கள் என்ன படித்தாலும் சரி அவர்கள் பெரிய வேலைக்கு அருகரல்லரென்று செய்துவிட்டால், ஆங்கிலேயர்களின் பிழைப்புக்குக் கொடுதலுண்டாகாது என்றும், இது போதுமான காபந்து என்றும் எண்ணினார்கள். இன்னொரு யுக்தி இவர்கள் செய்தது என்னவென்றால், பெரிய உத்தியோகங்களுக்கு வர ஸிவில் ஸர்விஸ் என்று ஒரு பரிக்ஷை ஏற்படுத்தி, அதை இங்கிலாந்தில் நடைபெறும்படி செய்து இந்தியர்கள் அதில் தேரவேண்டுமானால் அதிக சிறுவயதிலேயே அந்தப் பரிக்ஷை கொடுக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு செய்தார்கள். இதனால் இந்தியர்கள் சிறு வயதிலேயே ஆங்கிலம் பயின்று இங்கிலாத்துக்குப் போய் பரிக்ஷை கொடுப்பது முடியாத காரியம் என்று எண்ணி செய்தார்கள் போலும். இந்தியாவை ஆள 8000 மைலுக்கப்புறமுள்ள ஒரு சிறு தீவில் பரிக்ஷை சிறு வயதிலேயே கொடுக்க வேண்டுமாம்! என்ன அழகான ஏற்பாடு! இதற்கும் பின்வாங்காமல் ஒரு இந்தியர் ஸ்ரீ ராஜாராம் மோஹன்ராய் என்பவர் தன் மகனை இந்திலாந்துக்கே அழைத்துப்போய் அந்த ஸிவில் ஸர்வீஸ் பரிக்ஷையைச் சிறு வயதிலேயே தேரும்படி செய்தார். அப்போது நம்மீது கருணையுள்ள கவர்மெண்டார் இந்த இந்தியனுக்கு வேலை கொடுத்தால் ஆங்கிலேயருக்கு கோபம் வரும் ஆகையால் இவருக்கு வேலை கொடுக்க முடியாதென்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார்கள்.

இவ்வளவு கட்டுப்பாடோடு இந்தியர்களுக்கு ஆங்கிலத்தில் பயிலக் காலேஜுகளைக் கட்டி ஆங்கிலேய உபாத்தியாயர்களுக்கு ஆயிரம் ஆயிரமாக ஏழைக் குடிமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பெருத்த கருணையுள்ள செயலுக்கு நம்மவர்களில் அநேக புத்திமான்கள் ஆங்கிலேயர்களுக்கு விழுந்து விழுந்து வணங்குகிறார்கள்.

15. 'இந்தியா' பத்திரிகைக்குத் தடை ("விஜயா" 23 மார்ச் 1910)
'இந்தியா' பத்திரிகையின் பிரதிகளையெல்லாம் இனி சென்னைப் பட்டினத்துப் போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிவிடும்படி தபாலாபீஸ்களுக்கெல்லாம் ஆங்கிலேய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது. மொழிபெயர்ப்பாளர்களின் மூலமாகவே அவர் பத்திரிகையின் விஷயங்களை அறியவருவாராதலால், மொழிபெயர்ப்பாளர் என்ன சொன்னாலும் அதைக் கேட்பதோடு, தம் இஷ்டப்படிதான் காரியமாற்றுவார் என்றே நமக்குத் தோன்றுகிறது. இவ்வுலகத்தில் உண்மை பேசுவோருக்கு அநேக சமயங்களில் கஷ்டங்களே நேர்வது இயற்கையே; அதிலும் இந்திய தேசத்தைப் பொறுத்தமட்டில், சென்ற நான்கைந்து வருஷங்களாகத் துன்பமே பரிசாக உள்ளது. தென்னிந்தியாவில் "இந்தியா" பத்திரிகையை ஆர்வமாகப் படிக்காதவர்களே இல்லை எனலாம். ஆங்கிலேய அரசாங்கத்திற்கு நல்லுபதேசம் சொல்வதில் சிறிது கண்டிப்பாக இருந்த போதிலும், இந்தியர்களின் அபிவிருத்தியே இப்பத்திரிகையின் நோக்கம். ஆங்கிலேய அரசாங்கமும்கூடத் தான் இந்தியர்களின் நன்மைக்காகவே இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஏன் இப்பத்திரிகையின் மீது அரசாங்கம் விரோதம் பாராட்ட வேண்டும் என்று தெரியவில்லை. இப்பத்திரிகை ஆரம்பித்த முதலே, தனது அதிகாரிகளின் மூலமாக சந்தாதார்களிடம் அவர்கள் சந்தா செலுத்துவது தனக்கு இஷ்டமில்லை என்று கூறியுள்ளதாக அறிகிறோம். ஆனால் ஜனங்கள் அப்பத்திரிகையின் மீது வைத்துள்ள அபிமானம் சிறிதும் குறையவில்லை. இப்பத்திரிகையிலே எழுதப்பட்டதெல்லாம் நியாயமாக இல்லாமல், வீண் கதையாக இருக்கும்பட்சத்தில், அரசாங்கத்திற்கு விரோதமாக ஜனங்கள் அதனை ஆதரித்திருக்க மாட்டார்கள். இது எப்படியிருந்த போதிலும் ஆங்கில அரசாங்கத்தின் கோபத்திற்குப் பலியாகி, 'இந்தியா' பத்திரிகை நின்றுவிட்டது. இப்போது நாம் 'இந்தியா'வின் சந்தாதாரர்களுக்குச் சொல்லிக் கொள்வதென்ன வென்றால், நமது "விஜயா" தினசரியை வாரப் பத்திரிகையாக மாற்றி, ஆங்கிலேய அரசாங்க விஷயங்களைத் தொடாமல் இந்திய ஜனங்களின் நன்மையை விருத்தி செய்யும் உபாயங்களைப் பற்றி மட்டுமே எழுதுவது என்று உத்தேசித்துள்ளோம்.

No comments: