பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 27, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 9

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 9

அச்சுதப்ப நாயக்கர் கால கலைகள்.

போர்கள் ஒரு பக்கம், அமைதியான சூழ்நிலை ஒரு பக்கம், அமைச்சர் கோவிந்த தீக்ஷிதரின் ஆணைப்படி மக்களுக்குப் பயன்படக்கூடிய முன்னேற்ற திட்டங்கள் ஒரு பக்கம் என்று அச்சுதப்பரின் ஆட்சி நன்றாக முன்னேறி வந்தது. இறைப் பணிகளுக்கு அவர் மிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். 1608ஆம் ஆண்டில் செம்பொன்னார்கோயிலுக்கு அருகிலுள்ள விளநகர் எனும் ஊர் ஆலயத்தில் ஒரு பெரிய மண்டபம் கட்டிவைத்தார். மாயூரத்தை அடுத்த மூவலூரிலுள்ள மார்க்கசகாயேஸ்வரர் கோயிலுக்கு நிறைய நிலபுலன்களை எழுதி வைத்தார். அவை தவிர சிதம்பரம், பனைப்பாக்கம் ஆகிய இடங்களில் இருக்கும் கோயில்களுக்கும் நிலங்களை மானியமாகக் கொடுத்துதவினார். 

அச்சுதப்ப நாயக்கர் விஜயநகர பேரரசர் பரம்பரை வழக்கப்படி ஒரு வைஷ்ணவ பக்தர். திருவரங்கப் பெருநகருள் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாள் மீது சிறு வயது முதலே அசைக்கமுடியாத பக்தி. ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத சுவாமி ஆலயத்தின் வடக்கு, மேற்கு வாசல் கோபுரங்களை இவர் எழுப்பினார். எட்டு சுற்றுப் பிரகாரங்களையும் இவர்தான் வடிவமைத்துக் கட்டினார். விமானங்கள், கோபுரங்கள் ஆகியவற்றைக் கோயில் வளாகத்துள் கட்டிக் கொடுத்தார். உள் விமானங்களின் மேல் உள்ள தங்க முலாம் பூசியதும் இவர்காலத்தில்தான். ஆலயத்தின் துவஜஸ்தம்பம் தவிர விலை உயர்ந்த கற்கள் பதித்த கிரீடம் உட்பட பெருமாள் விக்கிரகத்தையும் இவர்தான் ஆலயத்துக்கு அளித்தார். ஸ்ரீரங்கம் காவிரியில் படித்துறையொன்றையும் கட்டித் தந்தார். இதற்கெல்லாம் ஊக்கமளித்தது அவருடைய அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர் என்றுகூட சொல்வதுண்டு. 

காவிரி நதிக் கரையில் புஷ்யமண்டபம் எனும் பெயரில் படித்துறையோடு கூடிய மண்டபங்கள் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட ஊர்களாவன, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு ஆகிய இடங்களாகும். ஏழை பிராமணர்களுக்கு உணவளிக்க இந்த மண்டபங்களைப் பயன்படுத்தி வந்தார்கள். திருவையாறு அருகே காவிரிக்குக் குறுக்கே ஒரு தடுப்பணையையும் இவர் அமைத்து, விவசாயத்துக்குத் தன்ணீர் கிடைக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்தார். (திருவையாற்றுக்கு அருகில் அப்படிப்பட்ட தடுப்பணை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை; ஒருக்கால் கல்லணையை சீர்படுத்திக் கட்டியிருப்பாரோ என்னவோ) இவர் சமஸ்தானத்திற்குட்பட்ட பற்பல சிறு கிராமங்களிலும் அக்ரஹாரம் எனும் குடியிருப்பை அமைத்து அங்கெல்லாம் வேதம் கற்றறிந்த பிராமணர்களை குடியேற்றினார். வேதங்களைப் பயிலவும், வேத முறைகளின்படி யாகங்களை மக்கள் நன்மைக்காக செய்யவும் இவர் ஊக்கமளித்தார். சோழநாட்டை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் வேத பிராமணர்களுக்கென்று நிலவுடைமை, பசுக்கள் இவைகள் தானமாகப் பெற்று வாழ்ந்த செய்தி நமக்குக் கிடைக்கிறது.

இலக்கியம் இவர் காலத்தில் செழித்து வளர்ந்தது. தமிழும், சம்ஸ்கிருதமும், தெலுங்கும் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். பற்பல இலக்கியங்கள் இந்த மொழிகளில் உருவாகி வந்தன. அப்போது இயற்றப்பட்ட சம்ஸ்கிருத, தெலுங்கு இலக்கியங்கள் தஞ்சை நாயக்க வம்சத்தின் பெருமைகளை பறைசாற்றின. அந்த இலக்கியங்கள் தஞ்சை நாயக்கர்கள் ஆண்ட பகுதிகளை இப்போது போல நெற்களஞ்சியம் எனும் பொருள்பட "சாலிவனம்" என்று அதாவது நெல்விளையும் காடு என்று குறிப்பிட்டு, நாட்டின் வளத்தைச் சொல்லி பெருமைப் பட்டன. ஆக மொத்தம் பொதுவாக நாயக்க மன்னர்கள் காலம், குறிப்பாக அச்சுதப்ப நாயக்கர் காலம் காவிரிபாயும் சோழவழநாடு செல்வச் செறுக்கோடும், வளத்தோடும் இருந்து இலக்கியங்கள், கலைகள் இவைகளின் மறுமலர்ச்சி காலமாகவும் விளங்கியிருப்பது தெரிகிறது. இத்தனை இருந்தும் இந்த நாயக்க வம்சத்தினர்களின் ஆட்சி குறித்து அதிகம் பேசவோ, எழுதவோபடவில்லை என்பது ஏன் என்பது தெரியவில்லை. காரணம் தெலுங்கு மொழி கோலோச்சியதால், தமிழில் எந்தவொரு இலக்கியமும் இவர்கள் மீது இயற்றப்படாமல் இருந்திருக்கலாம்.

அச்சுதப்ப நாயக்கர் பதவியேற்ற காலம் தொடங்கி தன்னுடைய இறுதி காலம் வரை எஜமான விசுவாசியாகவே இருந்திருக்கிறார். அச்சுத் தேவ ராயர் காலத்தில் தஞ்சைக்கு அனுப்பப்பட்ட இவருடைய தந்தை சேவப்பர் காலத்திலும் சரி, இவர் பதவியேற்ற காலம் முழுவதும் விஜயநகரத்தில் மன்னர்கள் தொடர்ந்து மாறியபோதும், அதாவது அச்சுத தெவராயர், சதாசிவ ராயர், திருமலை ராயர், ஸ்ரீரங்கா, வேங்கடபதி ராயர் ஆகியோரிடமும் இவரது விசுவாசம் மாறாமலே இருந்து வந்திருக்கிறது.

சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் விஜயநகர பேரரசுக்கு எதிராக எழுந்த மதுரை, செஞ்சி நாயக்கர்களின் கலவரத்தை அடக்குவதற்கு தஞ்சை நாயக்கர்கள் பேருதவி புரிந்து வந்திருக்கிறார்கள். 1565இல் நடந்த தலைக்கோட்டை யுத்தம் விஜயநகரத்து இந்து சாம்ராஜ்யத்தைத் தலைகீழாகப் புறட்டிப் போட்டுவிட்டு, தட்சிண சுல்தான்களின் ஆதிக்கம் பரவ காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் மத்தியில் விஜயநகரத்தில் வேங்கடபதி ராயரும், தெற்கே தஞ்சையில் அச்சுதப்ப நாயக்கரும் அவர்களது ஆட்சி நீடித்து நிலைக்க அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டனர். அச்சுதப்ப நாயக்கரின் இந்த அரிய பணிக்கு அமைச்சர் கோவிந்த தீக்ஷதரும், மகன் ரகுநாத நாயக்கரும் உறுதுணையாக இருந்து வந்தனர்.

மதுரையில் 1572 முதல் 1595 வரையிலான காலகட்டத்தில் அரசாண்ட மன்னர் வீரப்ப நாயக்கர். இவரோடு விஜயநகர மன்னர்கள் தஞ்சையை அடுத்த வல்லம் எனுமிடத்தில் போர் செய்ததாகவும் ஒரு செய்தி இருக்கிறது. எனினும் இந்த யுத்தம் குறித்த செய்தி சொல்வதற்குக் காரணம் எப்போதும் தஞ்சை நாயக்கர்கள் விஜயநகர மன்னர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காகத்தான்.

இந்த வல்லம் யுத்தத்துக்குப் பிறகு மதுரையை 1595 முதல் 1601 வரை அரசாண்ட 2ஆம் கிருஷ்ணப்ப நாயக்கரும் 1601 முதல் 1609 வரை அரசாண்ட முத்துகிருஷ்ணப்ப நாயக்கரும் முந்தைய வீரப்ப நாயக்கரைப் போலன்றி விஜயநகர பேரரசுக்கு அடங்கி நடந்து கொண்டிருந்திருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் மதுரை நாயக்கர்களுக்கும் தஞ்சை நாயக்கர்களுக்கும் எந்தவித உரசலும் இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் முத்துகிருஷ்ணப்ப நாயக்கருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த முத்து வீரப்ப நாயக்கர் காலத்தில் தஞ்சை நாயக்கர்களோடு ஒத்துப் போகவில்லை என்பது தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் முந்தைய மதுரை அரசர்களைப் போல் அல்லாமல் விஜயநகர பேரரசோடும் மோதல் போக்கையே கையாண்டிருக்கிறார். "ரகுனாதப்யுதயம்" எனும் சம்ஸ்கிருத இலக்கியத்தில் அச்சுதப்ப நாயக்கர் போர்த்துகீசியருடன் நாகப்பட்டினம் அருகே யுத்தம் செய்தது பற்றி குறிப்பிடுகிறது. அதில் போர்த்துகீசியர்களை 'பரசிகர்கள்' என்றும் மற்றொரு இலக்கியத்தில் பொதுவாக 'பறங்கியர்கள்" என்றும் குறிக்கிறார்கள்.

இத்தனைக்கும் இடையில் அச்சுதப்பரின் காலம் அமைதியான காலம் என்கிறது வரலாறு. தஞ்சை படைகள் பல போர்களில் பங்கு கொண்டாலும், இவர்களது இழப்பு ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை எனத் தெரிகிறது. அச்சுதப்பருக்கு யுத்தத்தைக் காட்டிலும் கலை இலக்கியங்களின்பால் ஈர்ப்பு அதிகமாக இருந்திருக்கிறது. இவர் காலத்தில்தான் நிர்வாக வசதிக்காக பல அரசாங்கக் கட்டடங்கள் கட்டப்பட்டதாகவும், பழுதுபட்ட பல ஆலயங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. திருவண்ணாமலை கோயிலுக்கு இவருடைய தந்தை செய்த கொடைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல அக்கோயிலின் கலசத்துக்கு தங்கக் கலசம் அளித்ததாகவும் தெரிகிறது. மத்தியார்ச்சுனம் என புகழ்பெற்ற திருவிடைமருதூர் மகாலிங்கர் ஆலயத்துக்கு ஆடிப்பூரம் உத்சவத்துக்காக ஒரு கிராமத்தையே கொடையாகக் கொடுத்திருக்கிறார். மாயூரத்தை அடுத்த மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயிலுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்திருக்கிறார். 

இவைகள் அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல இவர் ஒவ்வோராண்டும் இராமேஸ்வரம் யாத்திரை செல்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அங்கு இராமநாதசுவாமி கோயிலுக்குக் கோபுரங்கள் கட்டித் தந்திருக்கிறார். அங்கு ஒவ்வொரு நாளும் கடலில் நீராடி சுவாமி தரிசனத்துக்கு வரும் ஆயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். 

அச்சுதப்பரின் இறுதிக் காலம்.

இப்போதெல்லாம் பதவியில் இருப்போர் போதும், நமக்கு வயதாகிவிட்டது என்று இளைய தலைமுறையை பதவியில் அமர விடுவதில்லை. தசரத சக்கரவர்த்தி தன் தலைமுடியில் ஒன்று நரைத்து விட்டது என்பதைக் கண்டு, போதும் நாம் ஆண்டது, இனி ராமனை அரசனாக்குவோம் என்று அவனுக்குப் பட்டம் சூட்ட முனைந்தானாம். அது அந்தக் காலம். கேரளத்தில் அச்சுத மேனன் என்றொரு கம்யூனிஸ்ட் தலைவர். ஒரு முறை முதல்வராக இருந்த அவர் போதும், இனி வேறு யாராவது பொறுப்பேற்கட்டும் என்று விலகி நின்ற கதை நம் காலத்தில் நடந்தது. போகட்டும் அந்தக் கதைகள். நாயக்கர்கள் கதைக்கு வருவோம். அச்சுத மேனன் பற்றி பார்த்தோமல்லவா, அதே பெயரைக் கொண்டதாலோ என்னவோ அச்சுதப்ப நாயக்கரும் விஜயநகர சக்கரவர்த்தி வேங்கடபதி ராயர் 1614இல் காலமானவுடன், தான் ஆண்டதும் போதும் என்று பதவி விலகிக் கொண்டு, தனது மகன் ரகுநாத நாயக்கரை பதவியில் அமர்த்திவிட்டுத் தான் நற்காரியங்கள் புரிந்து இறை பணியில் தன் வாழ்நாளைக் கழித்திட முடிவு செய்தார். வானப்பிரஸ்த வாழ்க்கை வாழ்ந்தார்.அதற்காக அவர் ஸ்ரீரங்கம் சென்று ஆன்மிகத்திலும் வழிபாடுகளிலும் ஈடுபட்டு, வைஷ்ணவ அறிஞர்களோடு தொடர்பு கொண்டு இறுதிக் காலம் வரை வாழ்ந்தார். திருவரங்கன் கோயிலில் ஒரு வைணவ பக்தனைப் போல உடை அணிந்துகொண்டு, உடலெங்கும் பன்னிரெண்டு திருமண் இட்டுக் கொண்டு, அரங்கன் பெயரைச் சொல்லி கைங்கர்யங்கள் செய்து வந்த காட்சியை என்னவென்று சொல்வது. ஒரு மாமன்னன் வானப்பிரஸ்தனாகி அனைத்தையும் துறந்து பெருமாள் கைங்கர்யத்தில் ஈடுபட்ட அதிசயம் இங்குதான் நடக்க முடியும். அப்படிப்பட்ட அற்புதான வாழ்க்கை அச்சுதப்ப நாயக்கரின் வாழ்க்கை. மற்றவர்கள் பார்த்து பின்பற்றவேண்டிய அசாத்தியமான பண்புகளைக் கொண்டிருந்தவர் அவர். அவருக்கு அமைந்த அமைச்சரும் அப்படிப்பட்டவர் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். வாழ்க அச்சுதப்ப நாயக்கரின் பெருமை.

இவ்வளவும் சொல்லிய பின் அச்சுதப்பர் எப்போது இறந்தார்? தெரியவில்லை. ஒரேயொரு செய்தி மட்டும் அவர் இறந்த ஆண்டை கணக்கிட உதவுகிறது. ஒரு சம்ஸ்கிருத இலக்கியத்தில் அச்சுதப்பரின் ஆசியைப் பெறுவதற்காக ரகுநாத நாயக்கர் ஸ்ரீரங்கம் வந்து தந்தையிடம் ஆசி வேண்டினார் என்கிறது. அது நடந்தது 1617 என்பதால், அச்சுதப்பர் 1617க்குப் பிறகுதான் இறந்திருக்க வேண்டும்.


No comments: