பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 23, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 5

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 5

அச்சுத தேவ ராயர்.

கிருஷ்ணதேவ ராயரின் மறைவுக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யாதிபதியாக 1529இல் அச்சுத தேவ ராயர் பதவிக்கு வந்தார். இவர் கிருஷ்ணதேவ ராயரின் இளைய சகோதரர். கர்நாடக சங்கீத உலகின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த புரந்தரதாசரின் தந்தையார் இவர் காலத்தில் வாழ்ந்தி ருந்தார். அச்சுத தேவராயருக்குப் பிறகு வாரிசுரிமைப் போர் விஜயநகரத்தில் உருவானது. இறுதியில் இவருடைய தம்பியின் மகன் சதாசிவ ராயர் மன்னராக ஆனார். சதாசிவ ராயர் பதவிக்கு வந்தபோது அவர் சிறுவனாக இருந்தபடியால் ராமராயர் என்பவரின் மேற்பார்வையில் ஆட்சி நடைபெற்றது. இந்த ராமராயர் என்பவர் கிருஷ்ணதேவ ராயரின் மாப்பிள்ளையாவார்.

அச்சுத தேவ ராயர் பதவியேற்ற காலம் ஒன்றும் அவருக்குச் சாதகமாக இல்லை. கிருஷ்ண தேவராயர் காலத்திய நாடு போல இப்போது இல்லை. அமைதி குலைந்து, நிர்வாகம் கலகலத்துப் போயிருந்தது. சாம்ராஜ்யத்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்புகளும், கலகங்களும் தோன்றிக் கொண்டிருந்தன. எதிரிகள் இவரது வீழ்ச்சியை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். இந்த சூழ் நிலையில் சாம்ராஜ்யத்தைத் திறமையுடன் வழிநடத்திச் சென்றவர் ராமராயர்.

இவருடைய காலத்தில் பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில்ஷா ஏற்கனவே கிருஷ்ணதேவ ராயரிடம் இழந்த தனது நாட்டையும், ரைச்சூர் கோட்டையையும் போரிட்டுத் திரும்பப் பிடித்துக் கொண்டார். எனினும் அவரைப் போலவே தங்கள் நாட்டைப் போரிட்டு மீட்டுவிட துடித்த ஒடிஷா கஜபதி ராஜாவும், கோல்கொண்டா சுல்தானும் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. இந்த நிலையில் அச்சுத தேவ ராயர் தன்னுடைய தளபதி சலகராஜு திருமலை என்பவரின் தலைமை யில் தன்னுடைய படைகளை தெற்கு நோக்கி செலுத்தினார். தெற்குக் கோடிவரை சென்று திருவாங்கூர், உம்மாத்தூர் ஆகிய இடங்களில் போர் செய்து அந்தப் பகுதிகளைப் பிடித்துக் கொண்டார். திரும்ப வந்து துங்கபத்திரை நதிக்கு வடக்கிலுள்ள பல இடங்களையும் பீஜப்பூர் சுல்தானிடம் இழந்த ரெய்ச்சூரையும், முட்கலையும் மீண்டும் பிடித்தார்.

இவருடைய ஆட்சி பற்றியும், போர்களில் பெற்ற வெற்றிகள் பற்றியும் சம்ஸ்கிருதத்தில் 'அச்சுதாப்யுதயம்' எனும் நூலும் 'வரதாம்பிகாபரிணயம்' எனும் நூலும் வெளிவந்திருக்கின்றன. அச்சுத தேவ ராயர்தான் மன்னர் எனினும் நிர்வாகத்தைக் கவனித்து வந்த கிருஷ்ணதேவ ராயரின் மருமகன் ராமராயர்தான் உண்மை அரசனைப் போல இருந்து வந்தார். ராம ராயரின் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் அரசில் பல உயர்ந்த நிலைகளில் அமர்த்தப் பட்டனர். மன்னர் அச்சுத தேவ ராயருக்கும், அண்ணன் மாப்பிள்ளை ராமராயருக்கும் ஏற்படும் சச்சரவுகளைச் சில சமயங்களில் பாமனி சுல்தான்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார்கள் எனும் செய்திகளும் கிடைக்கின்றன. இப்படி உள்நாட்டு நிலவரங்களால் நாடு சில சங்கடங்களை எதிர் கொள்ள நேர்ந்தது. ராஜ்யம் வலுவிழக்கத் தொடங்கியது. இவற்றின் உச்ச கட்டமாக 1540இல் ராமராயர் தன் இளைய மாமனாரும், நாட்டின் சக்கரவர்த்தியுமான அச்சுத தேவ ராயரைக் கைது செய்து சிறையிலிட்டு விட்டார். சிறைப்பட்ட அச்சுத தேவ ராயர் இரண்டு வருஷங்கள் கழித்து 1542இல் இறந்து போனார்.

வேங்கடா எனும் வெங்கடராயர்.

அச்சுத தேவ ராயரின் மரணத்தையடுத்து அவருடைய மகன் வேங்கடா எனும் வெங்கடராயர், வெங்கடாத்ரி ராயர் என அழைக்கப்பட்டவர் பதவிக்கு வந்தார். பதவிக்கு வந்த சில காலத்துக்குள் இந்த வேங்கட ராயர் கொலை செய்யப்பட்டார். இதன் பின் அச்சுத தேவ ராயரின் மகன் சதாசிவ ராயர் புதிய அரசராகப் பதவி ஏற்றார். இவருக்கும் ராம ராயரே அமைச்சராக இருந்து ஆட்சி புரிய உதவி செய்தார். மன்னராக இருந்த சதாசிவ ராயர் பொம்மை அரசராக மட்டுமே இருக்க முடிந்தது ராம ராயரே ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தன் கைகளில் எடுத்துக் கொண்டார்.

அச்சுத தேவ ராயர் காலத்தில் விஜயநகரத்தில் திருவேங்கலநாதப் பெருமாளுக்கு ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. இது அச்சுத ராயர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. 

திருமலை தேவ ராயர்.

1565இல் சதாசிவ ராயருக்குப் பிறகு ராமராயரின் இளைய சகோதரன் திருமலை தேவ ராயர் பதவிக்கு வந்தார். இந்த ராமராயர்தான் கிருஷ்ணதேவ ராயரின் மாப்பிள்ளை என்பதை ஏற்கனவே பார்த்தோமல்லவா, அவருடைய தம்பிதான் இந்த திருமலை. இவர் பதவிக்கு வருவதற்கு முன்பாக அதிகாரத்தில் இருந்த ராமராயர் 1565இல் தலைக்கோட்டை யுத்தத்தில் இறந்து போய்விட்டார். அவர் இறந்த செய்தி அறிந்ததும் விஜயநகரத்து அரச செல்வங்கள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு திருமலை ராயர் குழந்தை குட்டிகளுடன் ஊரை விட்டு ஓடிவிட்டார். அப்படிப் போகும்போது தன்னுடைய குழந்தையான சதாசிவன் என்பனையும் தூக்கிக் கொண்டு போய்விட்டார்.

ஊரைவிட்டு ஓடிய திருமலை பல ஆண்டுகள் பலவிதமான சிரமங்களுக்கு ஆளானார். பின்னர் சிறுகச் சிறுகத் தன் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டு மீண்டும் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆந்திரத்திலுள்ள பெணுகொண்டா எனுமிடத்தில் துவக்கினார். சாம்ராஜ்யத்தின் தலைமை அகமான விஜயநகரத்தில் நடக்கும் இந்த சலசலப்புகளைச் சாக்காகக் கொண்டு தெற்கே மதுரையிலும், செஞ்சியிலும் அரசாண்ட நாயக்கர்கள் தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்து விட்டனர். மற்ற சில நாயக்க மன்னர்கள் விஜயநகர பேரரசின் மேலாண்மைக்குச் சவால் விட்டனர்.

1567இல் திருமலை ராயர் மீது மீண்டும் பீஜப்பூர் சுல்தான் படையெடுத்தார். இந்த முறை பேராசி கொண்ட சுல்தானுக்குத் தோல்விதான் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், பீஜப்பூர் ராஜ்யத்தின் சில பகுதிகளையும் இழக்கும்படி நேர்ந்தது. இந்த நேரத்தில் திருமலை ராயர் மிகவும் சாமர்த்தி யமாகத் தங்கள் மேலாதிக்கத்துக்குச் சவால் விட்டுச் சுதந்திர நாடாக இருக்க அறிவிப்பு செய்த சில தெற்கு நாயக்க மன்னர்களை சமாதானப் படுத்தி அவர்களிடம் கப்பம் செலுத்தச் சொல்லி வாங்கிவிட்டார். அப்படி கப்பம் கட்டிய நாயக்கர்கள் தஞ்சை நாயக்கர்கள், மைசூர் மன்னர் ஆகியோராவர். இவர்களைப் பின்பற்றி மதுரை, செஞ்சி நாயக்கர்களும் தயக்கத்தோடு கப்பம் கட்டத் தொடங்கினர். 

இப்படி திருமலை ராயர் ஓரளவுக்கு விஜயநகரம் இழந்த பெருமைகளை மீட்டெடுத்தார். மன்னர் திருமலை ராயருக்கு மூன்று குமாரர்கள். முதல் மகன் ஸ்ரீரங்கன் பெணுகொண்டாவில் இருந்தான். இரண்டாவது ராம ராயர் இவர் கன்னட ராஜ்யத்துக்கு பொறுப்பு வகித்தார். மூன்றாவது மகன் வெங்கடா 2 இவர் தமிழகத்தில் இருந்த சந்திரகிரிக்குப் பொறுப்பு வகித்தார். இவை அத்தனைக்கும் பெண்கொண்டாதான் தலைநகரம். 1572இல் திருமலை தேவ ராயர் பதவி விலகினார். தனக்கு மிகவும் வயதாகிப் போனதால் இனி ஆட்சி செய்ய முடியாது இனி ஆன்மீகத்தில் ஈடுபட்டு வாழ விரும்பி அதுபோலவே வாழ்ந்து 1578இல் இறந்து போனார்.

இப்படி கிருஷ்ணதேவ ராயரால் புகழின் உச்சிக்குச் சென்ற விஜயநகர சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. திருமலை தேவ ராயருக்குப் பிறகு 14 ஆண்டுகள் ஸ்ரீரங்க ராயரும், 28 ஆண்டுகள் 2ஆம் வெங்கட ராயரும், 1614 ஒரு வருஷம் 2ஆம் ஸ்ரீரங்க ராயரும், 15 ஆண்டுகள் ராம தேவ ராயரும், 10 ஆண்டுகள் 3ஆம் வெங்கட ராயரும், இறுதியாக 4 ஆண்டுகள் 3ஆம் ஸ்ரீரங்க ராயரும் ஆட்சி செய்த பின் விஜயநகர சாம்ராஜ்யம் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.

விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையும் காலகட்டத்தில் ஆண்ட முக்கியமான அரசர் 2ஆம் வெங்கட ராயர். இவர் 1586 முதல்1614 வரை ஆண்டவர். இவர் முதலாம் ஸ்ரீரங்க ராயரின் தம்பி. வெங்கட ராயரின் காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் சிறப்பாக விளங்கியது. இவர் காலத்தில் தக்ஷிண சுல்தான்களான பிஜப்பூர், கோல்கொண்டா சுல்தான்களுக்குச் சவாலாக விளங்கினார். உள்நாட்டு அமைதியை நிலைநாட்டியவர் இவர். நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ப்பதில் இவர் பங்கு அதிகம். தமிழ்நாட்டுப் பகுதிகளில் விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு எதிராகக் கிளம்பிய நாயக்கர்களை அடக்கியதோடு, தெலுங்கு பேசும் பகுதிகளில் பலவற்றைத் தம் ராஜ்யத்தினுள் சேர்த்துக் கொண்டார். இவர் 1592இல் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் தலைநகரை பெனுகொண்டாவிலிருந்து சந்திரகிரிக்கு மாற்றிக் கொண்டார். இந்த இடம் திருப்பதிக்கும் தெற்கே சில காத தூரத்தில் உள்ளது. பெனுகொண்டா என்பது இப்போது அனந்தப்பூர் ஜில்லாவில் இருக்கிறது. வேலூர் கோட்டையை இவர் தன்னுடைய இரண்டாவது தலைநகராக வைத்துக் கொண்டிருந்தார். 


No comments: