பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 27, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 17

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 17

செங்கமலதாஸ் (1674 முதல் 1675)

தஞ்சைப் போரில் விஜயராகவ நாயக்கரும் அவரது மகன் மன்னாருதாசனும் இறந்து போன செய்தியைப் பார்த்தோம். மதுரை மன்னன் சொக்கநாத நாயக்கர் தனது ஒன்றுவிட்ட சகோதரன் அழகிரி நாயக்கரை தஞ்சாவூருக்கு மன்னனாக அறிவித்தார். 1673இல் பதவியேற்றுக்கொண்டு அழகிரி நிர்வாகத்தைச் சீரமைத்து ஒழுங்குபடுத்தி, போரினால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்யத் தொடங்கினார். அழகிரி நாயக்கர் தஞ்சாவூருக்கு பொறுப்பாளராகத்தான் இருந்தார் என்பதால் மதுரைக்குக் கப்பம் கட்ட வெண்டியிருந்தது. முதல் ஆண்டுக்கு மட்டும் அவர் கப்பம் செலுத்தினார். மறு வருஷம் இவருக்கு ஒரு அலட்சியம் ஏற்பட்டு மதுரைக்குக் கப்பம் செலுத்தவில்லை. இந்த அலட்சியப் போக்குக்குக் காரணம் விஜயராகவ நாயக்கரிடம் ராயசம் (செயலாளர் போன்ற பதவி) பணியாற்றிய தெலுங்கு பேசும் நியோகி பிராமணன் வெங்கண்ணா என்பவர் என்று சொல்லப்படுகிறது. தன்னால் பணியில் நியமிக்கப்பட்ட அழகிரி நாயக்கர் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் என்பதால் சொக்கநாதர் அவர்மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதற்கிடையே மதுரைக்கு ஒரு செய்தி வந்து சேர்ந்தது. அதாவது தஞ்சை நாயக்க மன்னர்களின் வாரிசுகள் விஜயராகவ நாயக்கரின் மரணத்தோடு முடிந்துவிடவில்லை. அவருக்கு ஒரு குழந்தை இருந்து அந்தக் குழந்தையை நாகப்பட்டினம் எடுத்துச் சென்று ஒரு வணிகரிடம் கொடுத்து வளர்த்துவருவதாக ஒரு செய்தி வந்து சேர்ந்தது.

முந்தைய விஜயராகவ நாயக்கரின் கீழ் முக்கியமான பதவியில் பணியாற்றிய ராயஸம் வெங்கண்ணா, மாறிவிட்ட சூழ்நிலையில் அழகிரி நாயக்கர் நிர்வாகத்தில் எந்த பொறுப்பும் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தினாலோ என்னவோ, இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து நாகப்பட்டினத்தில் வளரும் விஜயராகவ நாயக்கரின் குழந்தையைத் தேடி கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டினார். மேலும் மதுரை சொக்கநாத நாயக்கருக்கு அழகிரியின் போக்கில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதையும் பயன்படுத்திக் கொண்டு இதில் ஏதாவது விஷமம் செய்ய முனைந்தார் ராயஸம் வெங்கண்ணா. அழகிரியை நீக்கிவிட்டு தஞ்சாவூருக்கு எப்படியாவது நாகப்பட்டினத்தில் மறைந்து வளரும் விஜயராகவ நாயக்கரின் மகன் செங்கமலதாஸ் என்பவனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து ஆட்சியில் அமரச்செய்யத் துடித்தார் வெங்கண்ணா. இந்த செங்கமலதாஸ் எனும் பையன் விஜயராகவ நாயக்கரின் மகன் அல்ல, மன்னாருதாசன் என்ற பெயரில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த அவருடைய மகனுடைய பிள்ளை என்று சொல்வோரும் உண்டு. இதற்குக் காரணம் சொல்லும்போது விஜயராகவ நாயக்கர் போரில் இறக்கும்போது எண்பது வயதைத் தாண்டியவர், அப்படிப்பட்ட வருக்குச் சின்ன குழந்தை இருக்க நியாயமில்லை, அது அவருடைய பேரனாக இருக்க வேண்டும் எனும் வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தெரிகிறது. எப்படியாயினும் அந்தக் குழந்தை அவருடைய வாரிசுதானே.

ராயஸம் வெங்கண்ணா நாகப்பட்டினம் சென்று அங்கு வளர்ந்த செங்கமலதாஸ் பத்து அல்லது பன்னிரெண்டு வயது வரும்வரை காத்திருந்து, அதற்குப் பிறகு அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு பீஜப்பூர் சென்று அங்கு சுல்தான் அலிஅடில்ஷாவை சந்தித்து தஞ்சாவூர் ராஜ்யத்துக்கு இந்த செங்கமலதாஸ்தான் உண்மையான வாரிசு என்றும், அங்கு வந்து ஆக்கிரமித்திருக்கும் அழகிரியை அங்கிருந்து விரட்ட சுல்தான் உதவி செய்யவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட சுல்தான் தனது தளபதிகளில் ஒருவரான ஏகோஜி என்கிற வெங்கோஜியை அழைத்து ஒரு பெரும்படையுடன் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தார். வரும் வழியில் ஏகோஜியின் படை ஆரணியைப் பிடித்துக் கொண்டு, தஞ்சாவூரை நோக்கி முன்னேறி வந்தது. அப்போது தன்னை விரட்ட பீஜப்பூர் சுல்தானின் படைகள் ஏகோஜி தலைமையில் வருவதைத் தெரிந்துகொண்ட அழகிரி மதுரையில் இருந்த சொக்கநாத நாயக்கரிடம் உதவி கேட்டு அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் வேகமாக வந்து கொண்டிருந்த ஏகோஜியின் படைகள் தஞ்சாவூர் ராஜ்யத்தினுள் நுழைந்து நேராக தஞ்சையை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தது.

தஞ்சையிலிருந்து அழகிரி தன்னை எதிர்த்துப் போரிட வந்துகொண்டிருக்கும் சுல்தான் படைகளை எதிர்த்துப் போரிடக் கிளம்பி அய்யம்பேட்டைக்கு அருகில் இரு படைகளும் மோதிக்கொண்டன. அதில் சுல்தான் படைகள் சுலபமாக அழகிரியைத் தோற்கடித்து விட்டது. போரில் தோற்றுப்போன அழகிரி அரியலூர் வழியாகத் தப்பிச் சென்று மைசூரை நோக்கிப் பயணமானார். வெற்றி வீரனாக ஏகோஜி அய்யம்பேட்டையிலிருந்து கிளம்பி தஞ்சாவூர் கோட்டைக்குள் நுழைந்து, அங்கு செங்கமலதாசுக்கு தஞ்சை அரசனாக முடிசூட்டி வைத்தார். தனது நன்றியைத் தெரிவிக்க செங்கமலதாஸ் ஏகோஜிக்கு விலைமதிப்புள்ள பல பரிசுப்பொருட்களை அளித்து கெளரவித்தான். ராஜாவாக செங்கமலதாஸ் முடிசூட்டிக் கொண்ட பின்னர் அரண்மனையில் இருந்த சிலர் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த அரிய செல்வங்கள் இருக்குமிடத்தை அவனிடம் காட்ட, செங்கமலதாஸ் அவற்றை எடுத்து வைத்துக் கொண்டான். அந்த செல்வத்தின் மதிப்பு அன்றைய நிலைமையில் இருபத்தியாறு லட்சம் பகோடா என்கிறது செய்திகள். படையெடுத்து வந்த செலவுக்காக செங்கமலதாஸ் ஏகோஜிக்கு கும்பகோணம், மன்னார்கோயில் (மன்னார்குடி) பாபநாசம் ஆகிய ஊர்களிலிருந்து வசூலான வரித் தொகையைக் கொடுத்தான். அதன் பின் ஏகோஜி கும்பகோணத்தில் சிலகாலம் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. ஆனால் மெக்கன்சி சுவடிகளின் ஆதாரங்கள்படி ஏகோஜி ஊர் திரும்ப கொள்ளிடத்தைக் கடந்து திருமழபாடி சென்றபோது அவரது மனைவியரில் ஒருத்திக்குக் குழந்தை பிறந்ததால் அங்கு சிலகாலம் தங்கியிருந்ததாக எழுதப்பட்டிருக்கிறது.

கி.பி.1674 இல் தஞ்சையின் அரசனாக செங்கமலதாஸ் ஆளத் தொடங்கினான். அவனுடைய துரதிர்ஷ்டம் அவன் அமைதியாக ஆளமுடியாமல் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டுவிட்டது. காரணம் செங்கமலதாஸ் நாகப்பட்டினத்தில் வளர்ந்த வணிகரைத் தனக்கு அமைச்சராக வைத்துக் கொண்டான். இந்த பதவியை எதிர்பார்த்து எல்லா உதவிகளையும் செய்துவந்த ராயஸம் வெங்கண்ணாவுக்கு இதனால் ஆத்திரம் வந்து அவர் அரசனுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கிவிட்டார். இதனால் மனமுடைந்த வெங்கண்ணா ஊர் திரும்பாமல் தங்கியிருந்த ஏகோஜியிடம் சென்று, தஞ்சை ராஜ்யத்தை அவரையே எடுத்துக் கொள்ள தூண்டினார் வெங்கண்ணா. இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஏகோஜி, வெங்கண்ணாவின் ஆதரவு இருக்கும் தைரியத்தில் தஞ்சைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். ஏகோஜி தஞ்சைக்கு வந்து ஆட்சியை ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்பது தெரிந்தவுடன் செங்கமலதாஸ் அரியலூர் பக்கம் சென்றுவிட்டார். ஆகையால் எந்தவித பெரிய எதிர்ப்பும் இல்லாமல் தஞ்சாவூர் மராத்திய தளபதி ஏகோஜியின் கைக்கு வந்துவிட்டது. மராத்தியர்கள் நல்ல நிர்வாகிகள் என்பதால் முதலில் தஞ்சாவூர் ராஜ்யத்தில் இருந்த குழப்பங்களையெல்லாம் நீக்கி நல்ல நிர்வாகத்தைத் தொடங்கினர். நீண்ட காலமாக போரினாலும், குழப்பமான அரசியல் சூழ்நிலைகளாலும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தஞ்சாவூர் மக்களுக்கு மராத்தியர்கள் நல்ல நிர்வாகம், அமைதி ஆகியவற்றைக் கொடுத்தது கண்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். 1675இன் தொடக்க காலத்தில் தஞ்சாவூர் மராத்தியர் வசம் ஆனது. சரியாகச் சொல்லப்போனால் 1675 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஏகோஜி தஞ்சை ஆட்சியை மேற்கொண்டார். (1675 பிப்ரவரி 7ஆம் தேதி என்றும் ஒரு செய்தி தெரிவிக்கிறது.) ஏகோஜி காலத்து தஞ்சாவூர் ராஜ்யம் ஆறு சுபாக்களைக் கொண்டதாக இருந்தது, அவை திருவாடி (திருவையாறு), கும்பகோணம், மாயவரம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, இன்னொன்று வாளும்பட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு நீண்ட நெடிய காலம் தஞ்சை பகுதிகளை ஆண்ட நாயக்க மன்னர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை மராத்தியர்களிடம் இழந்து 1675 முதல் மராத்தியர் ஆட்சி இங்கு நிலை கொள்ளத் தொடங்கிவிட்டது. கடைசி நாயக்க மன்னரான விஜயராகவ நாயக்கர் காலத்தில் போர்த்துகீசியர்களும், டச்சுக்காரர்களும் சோழநாட்டு மண்ணில் காலடிஎடுத்து வைக்கத் தொடங்கிவிட்டனர் என்பதைப் பார்த்தோம். இவர்களில் போர்த்துகீசியர்களுடன் பல போர்களை நாயக்க மன்னர்கள் நடத்திய போதும், ஓரளவு நட்புணர்வுடன் டச்சுக்காரர்களுடன் பழகியிருக்கிறார்கள். டச்சுக்காரர்களுக்கு அவர்கள் வாணிபத்தை இந்த மண்ணில் நடத்திக் கொள்ள நாயக்கர் மன்னர்கள் சில பத்திரங்களை அவர்களுக்கு எழுதித் தந்திருக்கிறார்கள். அவைகளில் ஒன்றை இப்போது பார்ப்போம். அந்தக் கால மொழி நடை, தெலுங்கில் இருந்ததை அவர்களே தமிழிலும் மொழிபெயர்த்திருக்கின்றனர். அது இதோ:

மன்னர் விஜயராகவர் டச்சு கடற்படை தளபதி வான் கோயன்ஸ் என்பாருக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தின் தமிழாக்கம்.

"திரு சின்னப்ப செட்டி என்பார் நம்மிடம் சில மனுக்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றின்படி உங்கள் கம்பெனி நாகப்பட்டினம் துறைமுகம் மூலமாக இந்த நாட்டில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும்படியும், அந்த அனுமதியை ஒரு அரசு ஆணை மூலமாகப் பிறப்பிக்கும்படியும் அவர் கேட்டிருந்தார். அவர் கேட்டுக் கொண்டபடி டச்சுக்காரர்களாகிய நீங்கள் நாகப்பட்டினம் வந்திறங்கி உங்கள் வர்த்தகத்தைத் தொடங்க இதன்மூலம் அனுமதிக்கிறோம். நாகப்பட்டினம் பகுதியில் போர்த்துகீசியர் வசம் இருந்த துறைமுகம், வீடுகள், சரக்குகள் வைக்குமிடங்கள் அனைத்தும் உங்களிடம் வழங்கவேண்டுமென்று ஆணை பிறப்பித்திருக்கிறோம். இவை தவிர கீழ்கண்ட பத்து ஊர்களையும் உங்கள் வசம் ஒப்படைக்கிறோம். அவை, புத்தூர், முட்டம், பொருவளாச்சேரி, அண்டோனிபெட், கருவேப்பங்காடு, அலிஞ்சிலமங்கலம், சங்கமங்கலம், நிருத்தமங்கலம், மஞ்சக்கொல்லை, நரியாங்குடி ஆகியவைகள். இந்த ஊர்கள் ஏற்கனவே போர்த்துகீசியர் வசம் இருந்தவை, இவை தவிர போர்த்துகீசியர்களின் தேவாலயம், தோட்டங்கள் இவையும் அடங்கும். இவைகளை அனுபவித்துக் கொள்ளுவதற்காக நீங்கள் எங்கள் அரசாங்கத்துக்கு ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும். எங்கள் துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் துணிமணிகளுக்கும், தானியங்களுக்கும் எந்தவிதமான வரிகளும் விதிக்கப்பட மாட்டாது. எங்கள் கடற்கரையில் தரைதட்டி நிற்கும் கப்பல் உங்கள் உடைமை என்றாலும் எங்களுக்கு அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். உங்கள் வியாபார கப்பலில் பணம் கையாடல், உடமைகளைத் திருடி கிராமங்களில் பதுங்கியிருப்போரிடமிருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு உங்களிடம் அளிக்கப்படும். நீங்கள் எங்கள் ஊர்களில் வியாபாரம் செய்யும் போது பொதுவாக விதிக்கப்படும் சின்னஞ்சிறு வரிகள் உங்கள் விருப்பப்படிக்கு விலக்கு அளிக்கப்படும். இவைகளைக் கருத்தில் கொண்டு நீங்களும் உங்கள் கம்பெனியாரும் எங்களுடன் நட்புறவோடும் விசுவாசத்தோடும் மகிழ்ச்சியோடு உங்கள் வியாபாரத்தைத் தொடரவும், பூமியில் சந்திர சூரியர் இருக்கும் வரை இந்த ஒப்பந்தப்படி வரிகளைச் செலுத்திக் கொண்டு உங்கள் வியாபாரத்தைத் தொடரலாம். ஒப்பம்: விஜயராகவா.

காவிரி நதி பாய்ந்து வளப்படுத்தும் சோழ வளநாட்டை சோழ மன்னர்களைத் தொடர்ந்து பலகாலம் இடைவெளிக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் அரசாண்டதைப் பார்த்தோம். இவர்கள் காலம் தமிழகத்துக்குப் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். இறை பக்தியும், வீரமும், நேர்மையும் இவர்களுடைய மார்க்கமாக இருந்திருக்கிறது. இந்த மண்ணை ஆண்ட இந்த சிறப்பு மிக்க நாயக்க மன்னர்களான சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய மன்னர்களைப் போற்றி வணங்குவது ஒன்றே நாம் அவர்களுக்குச் செய்யும் கைமாறாகும். 

                                                            வணக்கம்.

1 comment:

துரை செல்வராஜூ said...

தொடர்ந்து படித்து வந்தேன்..
அரிய செய்திகள் பலவும் அறிந்து கொள்ள முடிந்தது.
பதிவுகளுக்கு மனமார்ந்த நன்றி..