பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 27, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 14

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 14

மீண்டும் விஜயராகவ நாயக்கர் ஆட்சி

இதற்கிடையில் மதுரையில் முத்துவீரப்ப நாயக்கர் இறந்து அவருக்குப் பின் சொக்கநாத நாயக்கர் 1659ஆம் வருஷம் ஜூலையில் பதவிக்கு வந்தார். இந்த சொக்கநாதர் பதவிக்கு வந்ததும் மீண்டும் மதுரைக்கும் தஞ்சைக்குமான விரோதம் தலைதூக்கி ஆடத் துவங்கியது. சொக்கநாதர் பதவிக்கு வந்தபோது அவருக்கு வயது 16. அதனால் அவருடைய பிரதானி, ராயஸம், தளவாய் ஆகியோர் கூட்டாக ராஜ்யத்தை நிர்வாகம் செய்து வரலாயினர். இப்படிப்பட்டவர்கள் வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பார்களா? ராஜாவோ சின்ன பையன், தங்களால் இயன்றவரை செல்வத்தைக் கொள்ளையடித்துப் பங்கு போட்டுவிடலாம் என்று முடிவு செய்தனர்.

மைனர் ராஜா சொக்கநாதனுக்கு நல்லது செய்வதைப் போல இந்த பிரதானி, ராயஸம், தளவாய் ஆகியோர் ஒரு யோசனை சொன்னார்கள். மதுரை படைகளை அனுப்பி பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின் படைகளோடு போரிட்டு அவர்களை விரட்டிவிடலாம் என்று. மன்னரும் சிறு வயதினர் தானே, அமைச்சர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு லிங்கம நாயக்கர் என்பவர் தலைமையில் நாற்பதினாயிரம் வீரர்களை அனுப்பி சுல்தானின் படைகளையும், அதன் தளபதிகளான ஷாஜி, மூலா எனும் முஸ்தாபா கான் ஆகியவர்களையும் விரட்டியடிக்க அனுப்பி வைத்தான். அப்போது அவர்கள் செஞ்சியில் முகாமிட்டிருந்தனர். அந்த சுல்தான் படைகளை விரட்டியடிக்க அனுப்பப்பட்ட லிங்கம நாயக்கர் எதிரிகளிடமே கையூட்டு வாங்கிக் கொண்டு போரிடாமல் திருச்சினாப்பள்ளியில் தங்கிக் கொண்டு காலம் தாழ்த்திக் கொண்டிருந்தார். 

இந்த சூழ்நிலையில் மதுரையில் சொக்கநாதருக்கு ஆலோசனை சொல்லுமிடத்தில் இருந்த பிரதானியும் ராயஸமும் (இவை பதவிகள்) ஒரு சூழ்ச்சியில் இறங்கினர். இந்த சொக்கநாதரை எமனுலகம் அனுப்பிவிட்டு அவனுக்கும் இளையவனான அவன் ஒன்றுவிட்ட தம்பியைப் பதவியில் அமர்த்திவிட்டால், தாங்களே எல்லா சுகங்களையும் அனுபவிக்கலாம் என்பது அவர்கள் திட்டம். இவ்விருவரின் திட்டத்தைத் தெரிந்து கொண்டாள் அரண்மனைப் பெண் ஒருத்தி. அவள் ராஜாவுக்கும் மதுரை ராஜ்யத்துக்கும் விசுவாசமுள்ளவள் என்பதால் இவ்விரு அமைச்சர்களின் சூழ்ச்சியை ராஜா சொக்கநாதரிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் சொக்கநாதர் சிறிதுகூட தாமதிக்காமல் நடவடிக்கை எடுத்தார். அமைச்சர்களில் ஒருவரான பிரதானியின் இரு கண்களும் குருடாக்கப்பட்டன. ராயஸம் பதவி வகித்தவர் கொல்லப்பட்டார். இந்த துர்மந்திரிகளின் மரணத்தையடுத்து சொக்கநாதரே நேரடியாக ராஜ்ய பரிபாலனத்தைக் கவனிக்கத் தொடங்கினார். 

பதவி ஏற்றுக் கொண்ட சொக்கநாதருக்குத் தான் ஏற்கனவே செஞ்சிக்கு நாற்பதினாயிரம் படைவீரர்களுடன் சுல்தான் படைகளை விரட்டியடிக்க லிங்கம நாயக்கரை அனுப்பினோமே, அவர் என்ன ஆனார்? ஏன் போரிடவில்லை, என்ன நடக்கிறது அங்கே என்று விசாரித்து ஓரளவு நடந்தவைகளைத் தெரிந்து கொண்டுவிட்டார். இந்த நிலையில் லிங்கம நாயக்கரை விரோதித்துக் கொண்டால் நமக்கு ஆபத்து நேரலாம் என்பதை உணர்ந்த புத்திசாலியான சொக்கநாதர் ஒரு தந்திரம் செய்தார். அந்த லிங்கம நாயக்கருக்கு செய்தி அனுப்பி, அவர் நலனில் அக்கறை கொண்டவர் போல, அவரைத் திரும்பவும் ஊருக்கு அழைத்து உறவு கொண்டாடுவது போல நடித்து, அவர் இங்கு வந்ததும் ஆளைத் தீர்த்துவிட எண்ணி அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பில் ஏதோ சூது இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட லிங்கம நாயக்கர் சாமர்த்தியமாக கட்சி தாவி, திருச்சினாப்பள்ளியிலிருந்து தப்பித்துச் சென்று செஞ்சியில் இருந்த எதிர்கட்சி தளபதியான ஷாஜியோடு சேர்ந்து கொண்டுவிட்டார்.

இந்த சின்ன பையன் சொக்கநாதனுக்கு இத்தனை சாமர்த்தியமா என்று எண்ணிக்கொண்டு அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணி லிங்கம நாயக்கர் தன்னுடன் இருந்த குதிரைப்படை வீரர்களில் பன்னிரெண்டாயிரம் பேரை அழைத்துக் கொண்டு போய் திருச்சினாப்பள்ளியை முற்றுகையிட்டார். இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தஞ்சை நாயக்கர் விஜயராகவர், எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் எனக் கருதிக் கொண்டு லிங்கம நாயக்கருக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில் லிங்கம நாயக்கர் மதுரையைத் தாக்கி போரிடுவதானால் தானும் தஞ்சாவூர் படைகளை அவருக்கு உதவிக்கு அனுப்புவதாக வாக்களித்தார். 

இந்த சூழ்நிலையில் திருச்சினாப்பள்ளி முற்றுகை லிங்கம நாயக்கர், விஜயராகவர் படைகளின் கூட்டு முயற்சிக்கு வெற்றி அளிக்கும் போல இருந்தது. அப்படி திருச்சினாப்பள்ளியைப் பிடித்துவிட்டால், சொக்கநாதரை உயிரோடு பிடித்துவிட வேண்டும், அப்பாடா ஒரு எதிரி ஒழிந்தான் என்று நிம்மதியாக இருக்கலாம் என்று விஜயராகவர் கனவு கண்டுகொண்டிருந்தார். தன்னுடைய அமைச்சர்கள், பிரதானி, ராயஸம் போன்றவர்களின் சூழ்ச்சிகள் பற்றி தெரிந்து கொண்ட சொக்கநாதர் படை தளபதி பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டு போரிடலானார். ஷாஜியையும், லிங்கமனையும் தீரமாக எதிர்த்தார். போரில் சொக்கநாதர் கரங்கள் வலுப்பெற்று எதிரி படைகள் தோற்றுக் கொண்டிருந்தன. வேறு வழியில்லாமல் மதுரையின் எதிரிகள் தஞ்சாவூருக்கு பின்வாங்கி வந்து சேர்ந்தனர். தன் படைகள் வெற்றி மேல் வெற்றியைக் குவிக்கும் மனோ நிலையில் இருப்பதை புரிந்து கொண்டு சொக்கநாதர் தன் படைகளைத் தஞ்சாவூர் மீது ஏவினார். தஞ்சையில் இருந்து கொண்டு ஷாஜிக்கும் லிங்கமனுக்கும் உதவி செய்து கொண்டிருக்கும் விஜயராகவ நாயக்கருக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க வேகம் கொண்டார் சொக்கநாதர். வழக்கம் போல் தான் தோற்போம் எனும் நிலைமை வந்ததும் விஜயராகவ நாயக்கர் எதிரியிடம் பரிபூரண சரணாகதி அடைந்து விட்டார். அவருடைய கூட்டாளிகளான ஷாஜியும், லிங்கமரும் செஞ்சிக்கு ஓடிவிட்டனர். இந்த செய்திகள் எல்லாம் 1662இல் வெளிநாட்டு மிஷனரிகளின் கடிதங்கள் மூலம் தெரிய வருகின்றன. சொக்கநாதரின் தஞ்சை படையெடுப்பு 1661இல் நடந்திருக்கலாம் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
ராஜ்யத்தில் குழப்பம்

இப்படி விஜயராகவ நாயக்கர் காலத்தில் தஞ்சாவூர் ராஜ்யத்தில் நடைபெற்ற சண்டை சச்சரவுகள் காரணமாக ராஜ்யமே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. அதன் விளைவுகளும் மக்களை அதிகமாக பாதித்திருந்தது. பெரும்பாலான மக்கள் இடம் பெயர்ந்து வெவ்வேறு இடங்களைத் தேடி குடியேறத் தொடங்கினார்கள். மக்களின் துயரைத் துடைக்க வழி தெரியாமல் விஜயராகவ நாயக்கர் சங்கடப்பட்டு வாழ்ந்தார். படையெடுப்புகள் நிகழ்த்திய கோரம் போதாதென்று அப்போது ஏற்பட்ட கொடிய பஞ்சமும் மக்களின் உயிர்களை பலி கொண்டன. உணவு கிடைக்காமல் மக்கள் தவிக்கத் தொடங்கினர். 

இப்படி மக்கள் வருந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தஞ்சை மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்த அன்னிய நாட்டு வாணிபக் கம்பெனிகள், குறிப்பாக டச்சுக்காரர்கள் ஒரு தந்திரம் செய்தனர். தங்களிடம் ஏராளமான உணவுப் பொருட்கள் இருக்கின்றன, வாருங்கள், வயிறார சாப்பிடுங்கள் என்று அழைத்துச் சென்று தங்கள் கப்பலில் ஏற்றி, அவர்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று அடிமைகளாக விற்கத் தொடங்கினர். 

விஜயராகவ நாயக்கர் மதுரை சொக்கநாதரிடம் சரண் அடைந்த பின்னர் சொக்கநாத நாயக்கர் ஊர் திரும்பி விட்டார். தஞ்சை மக்களும் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஊரும், மக்களும் அமைதியாக வாழ முற்பட்ட நேரத்தில் விஜயராகவ நாயக்கருக்கு மட்டும், தான் பட்ட அவமானத்தைத் துடைக்க மீண்டும் மதுரை மீது படையெடுத்து பழிவாங்க வேண்டுமென்கிற உணர்வு இருந்து வந்தது. ஆனால் அடிபட்டு ஓய்ந்து வீழ்ந்து கிடக்கும் இந்த நிலையில் தான் மட்டும் எதுவும் மதுரைக்கு எதிராக செய்ய முடியாது என்பதால் தக்க துணை வரும் என்று காத்திருந்தார் விஜயராகவர். அப்போதுதான், அதாவது 1663இல் பீஜப்பூர் சுல்தானின் தளபதியொருவன் தென்னகத்தின் மீது படையெடுத்து வந்து கொண்டிருந்தான். அவன் திருச்சினாப்பள்ளி கோட்டையை முற்றுகையிட்டான். தான் பட்ட அடி, அவமானங்கள் இவை அத்தனையையும் மறந்து விஜயராகவர் அந்த பீஜப்பூர் படைகளுக்கு உதவிகளைச் செய்தார். இப்படி பீஜப்பூரும் தஞ்சாவூரும் சேர்ந்து முற்றுகை இட்டும் திருச்சி விழவில்லை என்றதும் பீஜப்பூர் தளபதி சொக்கநாதருக்கு ஒரு தூது விட்டான். தங்களுக்கு இழப்பீடு கொடுத்து விட்டால் தான் திரும்பிச் சென்றுவிடுவதாகச் சொன்னான். இது நல்ல சந்தர்ப்பம் என்று பீஜப்பூர் தளபதிக்கு நஷ்ட ஈடு கொடுத்து அவனைத் திருப்பி அனுப்பிவிட்டு, தஞ்சாவூர் நாயக்கரை பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டு காத்திருந்தார் சொக்கநாதர்.

பீஜப்பூர் படைகள் திரும்பிப் போகும்வரை காத்திருந்துவிட்டு மதுரை சொக்கநாதர் படைகள் தஞ்சை மீது மீண்டும் படையெடுத்து வந்தது. வல்லமை பொருந்திய மதுரைபடைகள் வல்லம் கோட்டையைப் பிடித்துக் கொண்டு ஊருக்குள் நுழைந்தது. விஜயராகவ நாயக்கர் இந்த திடீர் படையெடுப்பை எதிர்பார்க்கவில்லை. வேறு வழியில்லாமல் சொக்கநாத நாயக்கரிடம் அவர்கள் கேட்டதைக் கொடுத்து சமாதானத்தை விலைகொடுத்து வாங்கிக் கொண்டார். முன்பு அச்சுத ராயர் காலத்தில் மதுரை நாயக்கர் வசம் இருந்த வல்லத்தை தஞ்சை வாங்கிக் கொண்டு திருச்சினாப்பள்ளியை அவர்களுக்குக் கொடுத்திருந்தனர். அப்போது மதுரை நாயக்கர்கள் இழந்த வல்லத்தை இந்த முறை போரிட்டு மீட்டுக் கொண்டுவிட்டனர். இந்த நிகழ்ச்சி 1663இல் நடந்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்றாளர்கள்.

இதற்கு அடுத்த வருஷமே தஞ்சை விஜயராகவ நாயக்கர் தன்னுடைய படைகளை வலுப்படுத்திக் கொண்டு மதுரையிடம் இழந்த இடங்கள் அனைத்தையும், வல்லம் உட்பட அனைத்து பிரதேசங்களையும் மீட்டுக் கொண்டுவிட்டார். மதுரை நாயக்கர்கள் ஐரோப்பிய கம்பெனிக்காரர்களிடம் உதவி கேட்டு தூது அனுப்பினார், ஆனால் அவர்கள் தாங்கள் வியாபாரத்துக்காக வந்திருப்பதால் இங்கு நடக்கும் போர்களில் எந்த பக்கத்திலும் சேர்வதில்லை என்பதில் அப்போது உறுதியாக இருந்தனர். மதுரை நாயக்கர்கள் இப்படி தஞ்சாவூர் படைகளிடம் தோற்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அப்போது ராமநாதபுரம் மறவர் ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்களைத் தீர்ப்பதில் சொக்கநாதர் ஈடுபட்டிருந்ததால் தஞ்சையை வெற்றிபெற முடியாமல் போயிற்று. குழந்தைகள் விளையாடும் ஏற்றப் பலகை (Seesaw) விளையாட்டு போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. ஆனால் மதுரை மட்டும் நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அடுத்த முறை தஞ்சைக்குக் கொடுக்கும் அடி, அவர்கள் எழுந்திருக்க முடியாத அடியாக அமைய வேண்டுமென்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்; அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.


No comments: