பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, September 27, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 12

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 12

விஜயராகவ நாயக்கர் (1590 - 1673)

விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளாக தஞ்சைக்கு அனுப்பப்பட்ட நாயக்க ராஜாக்களில் முதல் ராஜா சேவப்ப நாயக்கர். அவர் தொடங்கி வைத்த வரிசையில் தஞ்சைக்குக் கடைசி நாயக்க அரசராக ஆகப் போகிற விஜயராகவ நாயக்கர் 1634இல் தனது ஆட்சியைத் தொடங்கினார். அந்த ஆண்டு தொடங்கி 1673 வரையிலான 39 ஆண்டுகள் அவர் தஞ்சாவூரை ஆண்டிருக்கிறார். இந்த விஜயராகவ நாயக்கருக்கு மன்னாருதாசர் என்றொரு பெயரும் உண்டு. மதுரை சொக்கநாத நாயக்கரோடு போரிட்டு இவர் கொலையுண்ட ஆண்டோடு சேவப்ப நாயக்கர் பரம்பரையின் ஆட்சி தஞ்சையில் முடிவுக்கு வந்துவிட்டது. முதிர்ந்த வயதுடைய விஜயராகவ நாயக்கரை மதுரையில் ஆண்ட சொக்கநாதரும் அவர் தம்பி அழகிரியுமாகச் சேர்ந்து போர்க்களத்தில் தலையைக் கொய்து இவரது வாழ்வை முடித்த கதை ஒரு சோகக் கதை.

மிகவும் புகழ்வாய்ந்த தஞ்சை நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கரின் மூத்த மகன் விஜயராகவ நாயக்கர். இவருடைய தந்தையார் காலமான பிறகு அதே 1633ஆம் ஆண்டில் இவர் பதவிக்கு வந்தார். இவருக்கு நடந்த முடிசூட்டு விழாவின்போது இவர் "சோடச மகாதானம்" என்கின்ற பதினாறு வகையான தானங்களை வழங்கியதாகத் தெரிகிறது. இந்தச் செய்தியை இந்த மன்னரின் அவையில் இருந்த புலவர் ஒருவர் தன்னுடைய "விஜயராகவ வம்சாவளி" எனும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த நூலில் இந்த தானங்கள் வழங்கப்பட்ட காலத்தையும் குறிப்பிடுகிறார். அதாவது 1633 ஆகஸ்ட்-செப்டம்பருக்கு இணையான ஸ்ரீமுக ஆண்டு ஸ்ரவண மாதம் என்பதிலிருந்து இது தெரியவருகிறது. நீண்ட நெடிய இவருடைய ஆட்சியில் தந்தை ரகுநாத நாயக்கரைப் போல சொல்லக்கூடிய செயற்கரிய சாதனைகள் எதையும் இவர் படைக்காவிட்டாலும், தந்தையின் வழியில் திறமையாக ஆட்சி புரிந்திருக்கிறார். தந்தையைப் போல இவருக்கும் இசையிலும், கலைகளிலும் ஆர்வம் இருந்தது. இவரே ஒரு நல்ல தெலுங்கு மொழிக் கவிஞர். தன்னுடைய தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் ஒரு காவியமாக இவர் இயற்றியிருக்கிறார்.

இவர் பதவியேற்ற காலம் தந்தை ரகுநாத நாயக்கர் விட்டுச் சென்ற அமைதி, வளம் போன்ற அம்சங்கள் நிறைந்திருந்த நாடாகத்தான் இருந்தது. அவர் நீண்ட காலம் இந்த நாட்டை ஆண்டு வந்தார். அவருடைய காலம் தொடக்கக் காலத்தைப் போல அத்தனை அமைதியாக இருக்கவில்லை. உள்நாட்டுத் தொல்லைகள், எதிரிகளால் தொல்லை, போர் என்று எப்போதும் குழப்பமாகவே இருந்து வந்திருக்கிறது. அவர் காலத்தில் நாயக்கர் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த அன்னியர் படையெடுப்புகள் காரணமாக இவர் அதிகம் அதிர்ந்து போயிருந்தார். ஒரு பக்கம் மதுரை நாயக்கர்களின் அச்சுறுத்தல், மறுபுறம் சுல்தான்கள் படையெடுப்பினால் உருவான அபாயம். இவருடைய நிலைமையே இப்படி ஆபத்துக்கள் சூழ்ந்து இருந்ததால் இவர் தங்கள் எஜமானர்களாகிய விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு அதிக அளவில் உதவிகள் எதையும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். 

கி.பி.1642இல் 3ஆம் ஸ்ரீரங்க ராயர் விஜயநகரத்து மாமன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலாக அவருக்கு நாலா பக்கமிருந்தும் யுத்த மேகங்கள் சூழ்ந்து அச்சுறுத்தத் தொடங்கி விட்டன. விஜயநகர சாம்ராஜ்யமே சரியுமளவுக்கு ஆபத்துக்கள் வரும்போது தஞ்சாவூர் ராஜ்யம் மட்டும் எப்படித் தாக்குப்பிடிக்க முடியும்? பீஜப்பூர், கோல்கொண்ட சுல்தான்கள் விஜயநகரத்தின் மீது படையெடுத்து வந்தனர். மதுரையும், மைசூரும் சுதந்திரமாக இருக்க முயற்சியில் ஈடுபட்டிருந்தன. மதுரையில் திருமலை நாயக்கரும், மைசூரில் காந்திருவ நரச உடையாரும் சாம்ராஜ்யத்துக்கு எதிராக ஆகினர். செஞ்சி நாயக்கர் வழக்கம்போல மதுரை நாயக்கர்களுக்கு பின்பாட்டுப் பாடத் தொடங்கினர். இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு நடுவே விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆதரித்து வந்த ஒரே ராஜ்யம் தஞ்சாவூர் ராஜ்யம். அந்த பணியை விஜயராகவ நாயக்கர் மிகவும் சாமர்த்தியமாகச் செய்ய வேண்டியிருந்தது.

தெற்கே இப்படி விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு எதிரான கலகம் வெடித்து வந்ததைக் கருத்தில் கொண்டு விஜயநகர மன்னர் தெற்கே படையெடுத்து வந்தார். இந்த முயற்சியை முறியடிக்க வேண்டி மதுரை திருமலையரசர் கோல்கொண்டா சுல்தானுக்கு ஆள் அனுப்பி விஜயநகரத்தின் மீது படையெடுக்க வேண்ட, அவரும் அதற்கு உடன்பட்டு படையெடுக்க விஜயநகர மன்னர் தென்னக படையெடுப்பை விலக்கிக் கொண்டு கோல்கொண்டா படைகளுடன் போரிட வேண்டியிருந்தது. மதுரை நாயக்கர்களின் சூழ்ச்சி பலித்தது மட்டுமல்ல, தங்கள் நிலைகளையும் காப்பாற்றிக் கொண்டனர்.

இந்த குழப்பங்களுக்கிடையில் மதுரை, செஞ்சி நாயக்கர்கள் தஞ்சை விஜயராகவ நாயக்கர் மீது அவர் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று வன்மம் கொண்டனர். இதற்கிடையில் சுல்தான்களின் குதிரைப்படை ஒன்று தஞ்சை மீது தாக்குதல் நடத்தியது; அப்போது விஜயநகரப் படைகள் தஞ்சையின் உதவிக்கு வரமுடியவில்லை. தஞ்சை மன்னர் விஜயராகவ நாயக்கருக்கு மதுரையை உதவி கேட்டு அணுக முடியவில்லை, காரணம் இவ்விரு அரசுகளுக்குமிடையே இருந்த விரோதம். ஆகையால் விஜயராகவ நாயக்கர் தஞ்சையைத் தாக்கிய சுல்தான் படைகளுடன் ஏராளமான பொருட்செலவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு போரையும் உயிர்ச் சேதங்களையும் தவிர்க்க வேண்டியதாகி விட்டது.

No comments: