பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 22, 2014

அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்.



அரசியல் கட்சிகள் சில திட்டமிட்டே தொடங்கப்படுகின்றன. ஏதாவது ஒரு துறையில் புகழ்பெற்று மேலும் வளர்ச்சி பெற அந்தத் துறையில் வாய்ப்புகள் இல்லையென்றால், அப்படிப்பட்ட நபர்கள் தேர்ந்தெடுப்பது அரசியல். அதிலும் முந்தைய துறையில் கணிசமான செல்வாக்கு ஏற்பட்டு இவரைப் பின்பற்றுவோர் அதிகம் இருந்தால் நிச்சயம் ஒரு புது கட்சி துவங்கிவிடும். சில நேரங்களில் ஒரு கட்சியில் இருந்து கொண்டே அங்கு மேலும் உயர் பதவிக்கு வழியில்லாத இரண்டாம் தர அல்லது மூன்றாம் தர தலைவர்கள் தாங்களே தலைவர்களாக ஆகவேண்டுமென்ற எண்ணத்தில் ஏதாவதொரு சாக்கை வைத்துக் கொண்டு புதிய கட்சி துவங்குவார்கள். இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு.

டெல்லியில் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியபோது இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளிடம் நம்பிக்கை இழந்த, ஊழலைக் கண்டு மலைத்துப் போய், இவைகளை இந்த நாட்டைவிட்டு ஒழிக்கவே முடியாது எனும் நிலையில் செயலற்றுப் போய் இருந்த மக்கள் இந்த போராட்டத்தைக் கண்டு நம்பிக்கை அடைந்தார்கள். இதோ ஒரு காந்தியத் தொண்டர், இவர் உண்மையாகவே ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர், இவரை ஊக்கப்படுத்தினால் ஓரளவுக்காவது ஊழல் தடுக்கப்படும் என்று நடுத்தர, ஏழை, எளிய, ஊழைப்பாளி மக்கள், மாணவர்கள் நம்பினர். அதன் பயனாய் மக்கட் கூட்டம் பெருமளவில் அவரைப் பின்பற்றத் தொடங்கியது. அவரும் தன்னைப் பின்பற்றும் தொண்டர்களிடம் தன்னால் போராட முடியும், தனக்கு மன வலிமையோடு உடல் வலிமையும் இருக்கிறது என்பதைக் காட்ட ஊர்வலம் நடத்தி அதில் ஓடவும் செய்து காட்டினார். எப்போதுமே இவரைப் போன்ற ஒருவருக்கு செல்வாக்குப் பெருகுகிறது என்றதும், எதிர்காலத்தில் நல்ல அறுவடை கிடைக்கும் என்ற எண்ணத்தில் பல சுயநலப் பேர்வழிகள் இவரோடு கைகோத்துக் கொள்வது எப்போதும் நடப்பதுதான். அதுபோலத்தான் இவர் போராட்டங்களில் பங்குகொண்ட கேஜ்ரிவால் அண்ணாவோடு இருந்து பின்னர் தனிக்கடை வைத்து வியாபாரம் தொடங்கினார். அரசியல் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தில்தான் டெல்லி தேர்தல் வந்தது. தேர்தல் களத்தில் குதித்துத்தான் பார்ப்போம், கிடைத்ததைப் பீராய்ந்து கொண்டு முடிந்தால் அரசியல் இல்லையேல் இருக்கவே இருக்கிறது பொதுத் தொண்டு எனும் பெயரில் மீண்டும் போராட்டங்கள் என்று ஆம் ஆத்மி எனும் பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார், டெல்லி தேர்தலிலும் போட்டியிட்டார்.

தேர்தல் தொடங்கிய நேரத்தில் டெல்லியில் பாஜகவா காங்கிரசா என்றுதான் தொடங்கியது. போகப்போக மூன்றாவதாக வந்து கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி திடீரென்று முன்னேறத் தொடங்கியது. ஊடகங்கள் அனைத்துமே ஒருமுகமாக ஆம் ஆத்மி இந்த தேர்தலில் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டப்போகிறது என்று ஆரூடம் சொல்லின. மற்ற கட்சியினர் எகத்தாளமாக சிரித்து ஆம் ஆதிமியாவது ஆட்சிக்கு வருவதாவது, இதெல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்று அதை பொருட்படுத்தாமல் ஒதுக்கினர். ஆனால் அந்த அதிசயம் நடந்தது. ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைப் பெற்று இரண்டாமிடம் பெற்றுவிட்டது. பாஜகவுக்கும் பெரும்பான்மை இல்லை. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் அரசியல் கட்சிகள் என்ன செய்வார்கள், குதிரை பேரம் நடத்துவார்கள். அல்லது மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்துக் கொள்வார்கள். எப்படியாவது ஆட்சி அமைப்பதில் ஊக்கம் காட்டுவார்கள். டெல்லி அரசியலில் இப்போது ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியா எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமான் தருமியிடம் கேள்விகளை நீ கேட்கிறாயா, நான் கேட்கட்டுமா என்பார், தருமி வேண்டாம் வேண்டாம் எனக்குக் கேட்கத்தான் தெரியும், நானே கேட்கிறேன் என்பார். அதைப்போல அரவிந்த் கேஜ்ரிவால் எதிரணியில் இருந்து கேள்விதான் கேட்பேன், ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தான் சுட்டிக் காட்டிய தவறுகளைத் திருத்தவும், ஊழல் இல்லாமல் ஆட்சி புரியவும் இப்போது இருக்கின்ற அதிகார அமைப்பை வைத்துக் கொண்டு நடத்திக் காட்ட முடியுமா என்கிற அச்சம் அவருக்கு இருப்பதால் ஆட்சி செய்ய ஒப்பவில்லை.

இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது. அங்குகூட இப்போதைய அமைப்பில் கட்சிகள் எதுவும் அப்போதும் இல்லை. அங்கு செனட் எனும் அமைப்பும் அதில் பிரிவுகளும் இருந்திருக்கின்றன. சாதாரண பொது மக்களின் பிரதிநிதிகள் அதில் அங்கம் வகித்திருக்கின்றனர். செல்வச் சீமான்களுக்கும் பிரதிநிதிகள் அந்த அவையில் இருந்தனர். வணிகர்கள் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர். இப்படி வெவ்வேறு குழுவினராக இவர்கள் செயல்பட்டது ஓரளவுக்கு இப்போதைய ஆளும் கட்சி எதிர்கட்சி போலத்தான் அமைந்திருந்தது.

ரோமாபுரியின் வீட்சிக்குப் பிறகு ஐரோப்பா அரசியல் கூச்சல் இல்லாமல் அமைதியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1678க்குப் பிறகு இங்கிலாந்தில் மறுபடி இந்த அரசியல் பிரிவுகள் தோன்றின. அது என்ன 1678ஆம் வருஷம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆம்! அந்த ஆண்டில் இங்கிலாந்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ரோமன் கேதலிக்கர்கள் இரண்டாம் சார்லஸ் மன்னனைத் தீர்த்துக் கட்டிவிட்டு அவர்கள் பிரிவைச் சேர்ந்த சார்லசின் தம்பி டியூக் ஆப் யார்க் ஜேம்ஸை அரசனாக்க முயல்வதாக ஒரு பரபரப்புச் செய்தி உலவியது. அப்படி அவர்கள் எதையும் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாதபோதும் இங்கிலாந்து பாராளுமன்றம் எல்லா ரோமன் கேதலிக்கர்களையும் ஒதுக்கிவிட்டு டியூக் ஆப் யார்க் ஜேம்சை அரசு கட்டிலுக்கு உரிமையில்லாதவராகவும் ஆக்கிவிட்டார்கள். அரசர் இரண்டாம் சார்லசுக்கோ இங்கிலாந்து நாடாளுமன்றம் அரச வம்சத்தாரின் விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதி நாடாளுமன்றத்தையே கலைத்து விட்டார். இப்போது 'செகூலர்' எனும் சொல் இந்திய அரசியலில் அதிகமாக ஈடுபடுகிறதல்லவா? பாஜக என்றால் மதவாதிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஜனதாதள் போன்றவர்கள் செகூலரிஸ்ட் என்கின்றனர். மதமே அரசியலை நிர்ணயிப்பதற்கும், ஒரு மதத்தில் இருப்பவர்கள் அரசியலில் வருவதற்கும் வித்தியாசமில்லையா என்ன? நம் செகூலரிஸ்டுகள் ஒருவன் 'இந்து' என்று சொல்லிவிட்டாலே அவன் மதவாதி. ஆட்சிபுரிபவன் ஒரு அவன் மதப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டாலே அவன் மதவாதி. அப்படியில்லாமல் இந்து பண்டிகைகள் எல்லாவற்றையும் குறைசொல்லி எதிர்த்துவிட்டு, மற்றெல்லா மதங்களின் பண்டிகைகளிலும் கலந்து கொள்பவந்தான் செகூலரிஸ்ட். இந்த செகூலரிசம் ஏற்பட்டது இங்கிலாந்தில் நடந்ததுதான், இங்கு நடப்பது கேலிக்கூத்து.

இங்கிலாந்து மக்கள் இரு பிரிவாக பிரிந்தனர். ஒரு பிரிவு சார்லஸ் மன்னனுக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவு அவருக்கு எதிராகவும் திரும்பினர். புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கும்படி கேட்ட எதிர் பிரிவினர் 'பெட்டிஷனர்கள்' எனப்பட்டனர். மன்னனுடைய ஆதரவாளர்கள் அரசனுடைய கட்டளைக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்ததனால் 'எதிர்ப்பாளர்கள்' "Abhorrers" என வழங்கினர். ராஜாவின் கட்டளையை மாற்ற நினைப்பவர்களை இவர்கள் எதிர்த்தார்கள். இப்படி இவர்கள் எதிரெதிராக இருவேறு கட்சியினராகப் பிரிந்தனர். பிறகு ராஜாவின் ஆதரவாளர்கள் "Tories" என வழங்கப்பட்டனர். இந்த சொல் புராட்டஸ்டண்ட் ஆட்சியை எதிர்க்கும் அயர்லாந்து ரோமன் கேதலிக்கர்களைக் குறிக்கும். இந்த பழைய பெயர்கள் புதிய சொற்களைத் தாங்கி வரத் தொடங்கின.

அரசருக்கு சர்வ வல்லமையுள்ள அதிகாரங்கள் இருக்கவேண்டுமென்பது 'டோரிக்களின்' விருப்பம். இன்னொரு கட்சியினருக்கு சாதாரண மக்களின் செல்வாக்கு ஆட்சியில் இருக்கவேண்டுமென்பது. இவ்விரண்டு கட்சிகளும்தான் இங்கிலாந்தில் இருவேறு கட்சிகளாக உருவெடுத்தன. இப்போது இங்கிலாந்தில் டோரி என்பது கன்சர்வேடிவ் கட்சியாகவும், மற்றொரு கட்சி லேபர் கட்சியாகவும் இருந்து வருகின்றன.

பின்னாளில் உருவான ஐக்கிய அமெர்க்க நாட்டிலும் இருவேறு கட்சிகள் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்று உருவாகி ஆளத் தொடங்கின. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இவ்விரு பெரிய கட்சிகள் தவிர ஓரிரண்டு குட்டிக் கட்சிகளும் உண்டு. ஆனால் இந்தியாவில் அப்படி இரு கட்சி என்பது இல்லாமல் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக ஆகி பல்வேறு கட்சிகள், தேர்தல் என்று வந்தால் இந்த குட்டிக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய கட்சியோடு கூட்டணி அமைத்து முற்போக்கு கூட்டணி, ஜனநாயகக் கூட்டணி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு தேர்தல் முடிந்தபின்னர் அவரவர் கட்சியை வைத்துக் கொண்டு போராட்டம், அது இது என்று காலத்தை நடத்துகின்றனர்.

எத்தனை கட்சிகள் இருக்கின்றனவோ, அத்தனை கட்சிகளுக்கும் கொள்கை என்று ஒரு விளக்கப் புத்தகம் உண்டு. அந்த கொள்கைகளைத்தான் அவர்கள் கடைபிடிக்கிறார்களா என்றெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு நாம் பார்க்கக் கூடாது. அந்தந்த சமயத்தில் எது சாத்தியமாகிறதோ, பெரிய கட்சிகள் செய்வதை ஏற்றுக் கொள்வதோ அல்லது எதிர்ப்பதோ அதெல்லாம் அவரவர் சேர்ந்த கூட்டணிகளைப் பொறுத்து அமையும். இந்த சமரசத்துக்குக் "கூட்டணி தர்மம்" என்று பெயர். பிரதமர் ஒரு திட்டத்தை முன்மொழிந்து செயல்படுவார். அவர் கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சிக்கு அதன் கொள்கைப் பிரகடனத்தின்படி ஏற்புடையது இல்லாவிட்டாலும் கூட்டணி தர்மத்துக்காக அதை ஏற்றுக் கொள்வர். இது பரஸ்பரம் இரு கட்சிக்கும் பொருந்தும்.

இந்திய அரசியல் எங்கே போகிறது? மக்கள்தான் சிந்தித்து இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

No comments: