பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 8, 2014

"சின்ன மேளம்"

     பிரகதீஸ்வரர் ஆலயத்தில் "சின்ன மேளம்" நாட்டிய விழா

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சித்திரைத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும் தஞ்சாவூர் ஹெரிடேஜ் கலை மற்றும் கலாசார அகாதமி சார்பில் ஏப்ரல் 25 முதல் மே 12 வரை தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் "சின்ன மேளம்" நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. இந்து ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகளில் நடன நிகழ்ச்சிகள் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் முக்கிய நிகச்சியாகும். பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி, மாற்றம், நிறைவு அத்தனையும் ஈசன் நடராஜப் பெருமானின் அதிசய விளையாட்டு என்பதால் அந்த நடராஜன் ஆடிய ஆட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக ஆலயங்களில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நமது ஆலயங்களில் நடனங்கள் 2000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே நடைபெற்று வந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. மேலும் ஆலயங்களில் காணப்படும் சிற்பங்களிலும் நடனக் கலையின் தாக்கம் அதிகம் தென்படுவதைக் காண்கிறோம். தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் விமானத்தின் உட்புறம் மேல் அடுக்கில் உள்ள சுற்றுப் பிரகாரத்தில் 108 நடனக் கரணங்களில் ஒருசில பூர்த்தியாகாத சிற்பங்கள் தவிர ஏனைய காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாகக் காணக் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ஆப்பரா என வழங்கும் முறையில் நம் ஆலயங்களில் ஈசனின் திருவிளையாடல் நிகழ்ச்சிகளை நாட்டிய நாடகங்களாக ஆக்கி நடனமாடி வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நாட்டிய முறையில் கடைபிடிக்கப்படும் முத்திரைகளே கரணங்கள் எனும் பெயரில் கல்லிலும் வடித்திருக்கிறார்கள்.

பக்தி இயக்கம் தமிழகத்தில் பரவிக்கிடந்த காலத்தில் 6ஆம் நூற்றாண்டில் ஆலய வழிபாட்டில் இசையும் நாட்டியமும் முக்கிய அங்கம் வகிக்கத் தொடங்கின. அப்போதைய மன்னராட்சியில் மன்னனை மக்கள் வணங்கி வழிபடுவதற்கும் மேலாக இறைவன் திருவுருவங்களையும் அன்போடும் பாசத்தோடும் வணங்கி மகிழ மக்கள் இசையையும் நாட்டியத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். கோயிலிகளில் இறைவனைத் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்புவதும், நீராட்டுதல், அழகுபடுத்துதல், ஊஞ்சல் ஆடுதல், வீதிவலம் வருதல், இரவில் பள்ளியறை செல்லுதல் என இப்படி பல நிகழ்ச்சிகளுக்கும் ஆடலும் பாடலும் பயன்பட்டன. இந்த இசை, நடனப் பணிகளைக் கவனித்துக் கொள்ள தேவதாசி எனும் பெண்டிர் இருந்தனர். தஞ்சை பெருவுடையார் ஆலயத்துக்கு ராஜராஜன் காலத்தில் 400க்கும் அதிகமான தளிச்சேரி பெண்டிர் என வழங்கப்பட்ட ஆடல்மகளிர் இருந்தனர். இந்த நடன மங்கையருக்குப் பயிற்றுவிப்போர் நட்டுவனார் என வழங்கப்பட்டனர். ஆக, இந்த அரிய கலைக்கு நடனம் ஆடுவோர், நடனம் பயிற்றுவிப்போர், பக்க வாத்தியங்கள் வாசிப்போர், பாடல்கள் புனைவோர், நடன சித்திரம் வரைவோர், கல்லில் சிலை வடிப்போர் ஆகியோர் தங்கள் வாழ்வை அற்பனித்து வந்தனர். 

ஆலயங்களில் உற்சவ மூர்த்தியரை ஆலயத்துள்ளும், வெளியிலும், வீதி உலாவிற்கும் எடுத்துச் செல்லும் காலங்களில் இந்த நடனமணிகள் சதிர் என வழங்கும் ஆடலை ஆடுவர். அதற்குப் பக்க வாத்தியங்களாக, அமைந்த கருவிகளே சின்னமேளம் என வழங்கப் பெற்றது. தஞ்சை நால்வர் என வழங்கப் பெற்ற புகழ்பெற்ற நாட்டிய, இசை ஆசான்களே இந்தக் கலை வளர அரும்பாடுபட்டவர்கள். அந்த நால்வர் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு எனும் பெயருடைய தஞ்சையின் மாமணிகள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த நடனக் கலை சங்க காலத்திலும், அதன் பிறகும், பக்தி இயக்கம் வளர்ந்த காலத்திலும், சோழர்கள் காலத்திலும், விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும், நாயக்கர், மராத்திய மன்னர்கள் ஆட்சியிலும் மறுமலர்ச்சி பெற்று வளர்ந்த கலையாகும். ஆலயங்களிலிருந்து சுவாமி புறப்பாடு ஆகி தெருக்களின் வழியாக வீதிவலம் வரும்போது ஆடல்கலை வல்லவர்கள் தெருக்களில் பக்க வாத்தியங்களோடு நடனமாடுவது வழக்கம். இரவில் ஆலயத்தில் சுவாமி விக்கிரகங்களை பள்ளியறைக்குக் கொண்டு சேர்க்கும் வரை ஆடியபின் வீடுசெல்வது என்பது வழக்கம். அப்படி இவர்கள் நடனம் ஆடும்போது பக்க வாத்தியங்களாகப் பயன்படுத்தப்பட்ட பல வாத்தியங்களில் தம்பூரா, முகவீணை, ஒத்து, தாளம், மத்தளம், புள்ளாங்குழல் ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும். இவை அத்தனையும் சேர்ந்ததே 'சின்ன மேளம்".

தஞ்சை பெரிய கோயிலில் நெடுநாட்கள் ஆலய வழிபாட்டில் சின்ன மேளம் நிகழ்ச்சிகள் நடந்து வந்திருக்கின்றன. 1855இல் மராத்திய மன்னர் இரண்டாம் சிவாஜி காலமான பிறகு ஆங்கிலேயர்கள் கோயிலையும் நாட்டையும் தங்கள் நேரடி ஆட்சியில் கொண்டு வந்தனர். அப்போதுவரை வழக்கத்தில் இருந்துவந்த சின்ன மேளம் நிகழ்ச்சி பின்னர் நடக்காமல் போனது.

தஞ்சை நால்வர் சிஷ்ய பரம்பரையினர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா காலத்தில் இந்த 'சின்ன மேளம்' நாட்டிய நிகழ்ச்சியை நடத்த முற்பட்டனர். அதற்காக ஒரு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சின்ன மேளம் நிகழ்ச்சி மீண்டும் நடக்கத் தொடங்கியிருக்கிறது. தஞ்சை அரண்மனை தேவஸ்தான அறங்காவலரும், தஞ்சை மூத்த இளவரசருமான பாபாஜிராஜா பான்ஸ்லே பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தஞ்சை கலை பண்பாட்டு அமைப்பின் உதவியோடு இந்த சின்ன மேளத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வரும் பொறுப்பு தஞ்சை பரதநாட்டிய ஆசிரியரும், சிறந்த நட்டுவனாருமான கலைமாமணி பி.ஹேரம்பநாதன் அவர்களிடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சின்ன மேளம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பெற்று தமிழகம் தவிர, அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களிலிருந்தும் கலைஞர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

இந்த ஆண்டு புது டெல்லி சங்கீத நாடக அகாதமியின் தலைவர் திருமதி லீலா சாம்சன் அவர்கள் கடந்த 25ஆம் தேதி துவக்கி வைத்து, அவரே முதல் நிகழ்ச்சியில் நடனமாடினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரு நிகழ்ச்சிகள் என்று மே 12 வரை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அந்த ஆண்டு மொத்தமாக 31 கலைக் குழுக்கள் வந்து பங்கேற்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.



No comments: