பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, November 16, 2013

பாரத ரத்னா விருதுகள்



இந்தியப் பிரதமர் இன்று இருவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இவ்விருவரில் ஒருவர் விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனைகளைச் செய்துள்ள டெண்டுல்கர், மற்றொருவர் விஞ்ஞானி. பாரத ரத்னா விருது இந்திய அரசு வழங்கும் தலையாய விருது. இதுவரை இவ்விருதினைப் பெற்றவர்கள் 41பேர். இப்போது வழங்கப்படுகின்றவர்களையும் சேர்த்து 43 பேராக ஆகின்றனர்.

பாரத ரத்னா விருது 1955 ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட காரணத்தால் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் படேல் போன்ற தலைசிறந்த தலைவர்களுக்கு இது வழங்கப்படவில்லை. இந்தக் காரணத்தையொட்டி 1966ஆம் ஆண்டில் காலஞ்சென்ற சாதனையாளர்களுக்கும் இவ்விருது வழங்கப்படத் தொடங்கியது. அதன் பிறகு காலஞ்சென்ற 12 சாதனையாளர்கள் இவ்விருதினைப் பெற்றிருக்கிறார்கள்.

இதில் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடத் தக்கது.1992இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது. அவருடைய மரணம் சந்தேகத்துக்குரியதாக வரலாற்றில் பேசப்படுவதால் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனையொட்டி அந்த ஆண்டில் அவருக்குக் கொடுக்க வேண்டிய விருது தவிர்க்கப்பட்டது.

இந்திரா காந்தி தேர்தலில் தோற்று ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் அதாவது 13-7-1977 தொடங்கி 1980 குடியரசு நாள் வரையிலான காலகட்டத்தில் இந்த விருது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த விருதை உலகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராயினும் பெறும் தகுதியுடையவராவர். இந்தியர்களுக்கு மட்டும் எனும் விதி இல்லை. அப்படி வெளி நாட்டில் பிறந்த அன்னை தெரசாவுக்கு 1980ஆம் ஆன்டிலும், கான் அப்துல் கபார் கான் அவர்களுக்கு 1987லும் தென் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்ட வீரர் காந்திஜியைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டிருந்த நெல்சன் மண்டேலாவுக்கு 1990லும் இவ்விருது வழங்கப்பட்டது.

இவ்விருது வழங்கப்படுவது குறித்து சில சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அவைகளையெல்லாம் கடந்துதான் இப்போதும் இது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த "பாரத ரத்னா" விருது என்பது வட்டவடிவிலான ஒரு தங்க மெடலில், தேசிய சின்னம் பொறிக்கப்பட்டு, நாட்டுக் குறிக்கோளும் எழுதப்பட்டிருக்கும். தொடக்க காலத்தில் அரசிலை வடிவில் அமைக்கப்பட்டு அதில் பாரத ரத்னா எனும் எழுத்துக்கள் தேவ நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தன. மெடலின் பின்புறம் தேசிய சின்னமும் குறிக்கோளும் பொறிக்கப்பட்டிருந்தன.

2011ஆம் ஆண்டில் இந்த விருதுகளை விளையாட்டுக்களில் சாதனை புரிந்த வீரர்களுக்கும் அளிக்கலாம் என்று தீர்மானித்து முடிவு செய்தனர். தேசியப் பணிகளில் முன்னிலை வகித்தவர்கள், சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட இந்த விருது அதன் பின் விளையாட்டு வீரர்களுக்கும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில் சாதனையாளர்கள் தவிர இப்போது சச்சின் டெண்டுல்கருக்குக் கொடுக்கப்பட விருப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களும் இந்த விருதால் கெளரவிக்கப்பட விருக்கின்றனர். இந்த விருது பெறும் இளைய வயதினராக தன்னுடைய 40ஆவது வயதில் டெண்டுல்கர் இதனைப் பெறுகிறார்.

இந்த விருது பெற்றவர்களில் வயதில் மிகவும் மூத்தவர் தோண்ட் கேஷவ் கார்வே தான் தன்னுடைய 100ஆவது வயதில் இதனைப் பெற்றவர். காலஞ்சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட வகையில் சர்தார் வல்லபாய் படேல் 75 வய்தானவர் இதனைப் பெற்றவர். இவ்விருதினை பெற்றவர்களின் விவரமும், பெற்ற ஆண்டும் கீழே காணலாம்.

வ.எண்.                                   பெயர்                                                               வாழ்ந்த காலம்        விருது பெற்ற ஆண்டு.

1. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்          1878 1972                1954
2. சர் சி.வி.ராமன்                                                          1887 1970                1954
3. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்             1888 1975                1954
4. பகவான் தாஸ்                                                           1869 1958                1955
5. விஸ்வேஸ்வரையா                                              1861 1962                 1955
6. பண்டிட் ஜவஹர்லால் நேரு                              1889 1964                 1955
7. கோவிந்த் வல்லப் பந்த்                                          1887 1961                 1957
8. டி.கே.கார்வே                                                              1858 1962                 1958
9. டாக்டர் பி.சி.ராய்                                                       1882 1962                 1961
10. பி.டி.தாண்டன்                                                          1882 1962                 1961
11. பாபு ராஜேந்திர பிரசாத்                                         1884 1963                 1962
12. டாக்டர் ஜாகிர் உசேன்                                           1897 1969                 1963
13. பி.வி.கானே                                                                1880 1972                1963
14. லால் பகதூர் சாஸ்திரி                                          1904 1966                 1966
15. இந்திரா காந்தி                                                           1917 1984                 1971
16. வி.வி.கிரி                                                                     1894 1980                 1975
17. கு.காமராஜ்                                                                  1903 1975                1976
18. மதர் தெரசா                                                                 1910 1997                1980
19. வினோபா பாவே                                                      1895 1982                1982
20. கான் அப்துல் கஃபார் கான்                                    1890 1988                1987
21. எம்.ஜி.ராமச்சந்திரன்                                                1917 1987               1988
22. பி.ஆர்.அம்பேத்கர்                                                     1891 1956                1990
23. நெல்சன் மண்டேலா                                               1918                         1990
24. ராஜீவ் காந்தி                                                               1944 1991                1991
25. வல்லபாய் படேல்                                                    1875 1950                1991
26. மொரார்ஜி தேசாய்                                                    1896 1995                1991
27. மெளலானா அபுல் கலாம் ஆசாத்                      1888 1958                1991
28. ஜே.ஆர்.டி.டாட்டா                                                     1904 1993               1992
29. சத்யஜித் ரே                                                                  1922 1992                1992
30. ஏ.பி.ஜே.அப்துல் கலாம்                                          1931                         1997
31. குல்ஜாரிலால் நந்தா                                                1898 1998                1997
32. அருணா ஆசஃப் அலி                                               1908 1996                1997
33. எம்.எஸ்.சுப்புலட்சுமி                                               1916 2004                1998
34. சி.சுப்ரமணியம்                                                          1910 2000                 1998
35. ஜெயப்பிரகாஷ் நாராயண்                                     1902 1979                1999
36. பண்டிட் ரவிஷங்கர்                                                 1920 2012                 1999
37. அமர்த்தியா சென்                                                      1933                          1999
38. கோபிநாத் போர்டோலோய்                                 1890 1950                 1999
39. லதா மங்கேஷ்கர்                                                      1929                          2001
40. பிஸ்மில்லா கான்                                                     1916 2006                 2001
41. பீம்சேன் ஜோஷி                                                        1922 2011                 2008
42. சி.என்.ஆர்.ராவ                                                           1934                          2014
43. சச்சின் டெண்டுல்கர்                                                1973                          2014

மெளலான அபுல் கலாம் ஆசாத் இந்த விருதுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த போது, அவருக்குக் கொடுக்க வேன்டுமெங்கிற கோரிக்கை எழுந்தபொது அதனை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. அந்தக் காலத்தில் எத்தனை நேர்மையோடு தலைவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

புதிதாக இந்த ஆண்டு விருதுகள் அறிவித்திருக்கிற இந்த நேரத்தில் விருது பெற்ற அத்தனை பேரையும் நினைவில் கொண்டு வந்து வாழ்த்துவோம், வணங்குவோம்.

1 comment:

துரை செல்வராஜூ said...

அருமையான தகவல்களுடன் விரிவான பதிவு!..
புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி!..