பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 22, 2013

ஒரு நகைச்சுவை நடிகரின் தற்கொலை முயற்சி.

                               ஒரு நகைச்சுவை நடிகரின் தற்கொலை முயற்சி.
   தூத்துக்குடியில் ஒரு காங்கிரஸ்காரர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். பெருந்தலைவர் காமராஜ் அவர்களுக்கு நன்கு அறிமுகமான நண்பர். அவருடைய மகன். நடிப்புக் கலையில் திறமை உள்ளவர். அவர் பார்ப்பதற்கே நகைச்சுவை ததும்ப இருப்பார், அதிலும் அவருடைய நடிப்பு, பாட்டு இவைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர் திரைப்படங்களில் நடிக்க விரும்பி சென்னை வந்தார். பல ஸ்டுடியோக்களின் படிகளில் ஏறி இறங்கி தனக்கொரு வாய்ப்பு தருமாறு கேட்டார். பாவம், அவருக்கு எங்கு போனாலும் ஏமாற்றம். திறமை இருந்தும் அந்தத் திறமையைச் சோதித்து அவருக்கு யாராவது ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். நம் திரையுலகம் அப்படியொன்றும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்துவிடவில்லை. அவருக்கோ எப்படியும் படத்தில் நடித்துவிடவேண்டுமென்கிற ஆசை, இல்லை இல்லை வெறி. அவர் போகாத ஸ்டுடியோ கிடையாது, பார்க்காத இயக்குனர்கள் கிடையாது. எங்கு போனாலும் ஒரே பதில்; இல்லை.

ஒரு முடிவுக்கு வந்தார், கடைசியாக ஜெமினி ஸ்டுடியோவுக்குச் சென்று கேட்பது, அங்கு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு. ஆனால் விதி யாரை விட்டது, அங்கும் 'இல்லை' என்று கைவிரித்து விட்டார்கள். ஏமாற்றத்தின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளைஞர் உணவு உட்கொள்ளாமையாலும், அலைந்து திரிந்து சோர்வுற்றிருந்ததாலும், ஏமாற்றத்தினாலும் ஜெமினி ஸ்டுடியோவுக்குள் மயங்கி விழுந்தார்.

சுற்றிலும் ஒரே பரபரப்பு. யாரோ ஒரு இளைஞர் மயங்கி விழுந்துவிட்டார். உடனே ஜெமினி நிர்வாகத்தார் ஒரு ஆம்புலன்சை அழைத்து அந்த இளைஞரை அதில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

அன்று நள்ளிரவைத் தாண்டிய நேரம். மணி 1-30 ஆகிவிட்டது. ராயப்பேட்டை மருத்துவமனையில் நினைவு திரும்பியிருந்த அந்த இளைஞரிடம் காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரித்தனர். அவர்களுடன் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த அழகிய இளைஞர் ஒருவர், பெயர் ஆர்.கணேஷ், பி.எஸ்.சி., அவருடன் கேமராமேன் தம்பு, ஜெமினி ஸ்டுடியோ முதன்மை நிர்வாகி சர்மா ஆகியோர் நின்று கொண்டிருக்கின்றனர். போலீஸ் அதிகாரி ரங்காச்சாரி நினைவு திரும்பிய இளைஞரிடம் கேள்விகள் கேட்கிறார்.

                                                                      ஆர்.கணேஷ்,
"தம்பி உன் பெயர் என்ன?"

"சந்திரபாபு"

"தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் அருந்தினாயா?"

"ஆமாம்"

"ஏன்?"

"சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தேன். யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை...."

சிறிது அமைதி நிலவியது அங்கே. தொடர்ந்து அந்த இளைஞர் போலீஸ் அதிகாரியிடம் கேட்கிறார்:

"எனக்கு ஒரு சிகரெட் வேணும்". அதிகாரி ரங்காச்சாரி ஒன்றைக் கொடுத்தார். அது 'பிளேயர்ஸ்' பிராண்ட் சிகரெட். அதைப் பார்த்து சந்திரபாபு, "என் பிராண்ட் கோல்ட் ப்ளேக்" என்றார்.

போலீஸ் அதிகாரி ரங்காச்சாரி ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி அந்த பிராண்ட் சிகரெட் வாங்கிவரச் செய்து அவரிடம் கொடுத்தார்.

வழக்கு மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் வந்தது. அரசாங்கத் தரப்பில் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய ஆர்.கணேஷ், தம்பு, சர்மா ஆகியோர் சாட்சிகள்.

நீதிபதி கேட்டார், "ஏன் இப்படிச் செய்தாய்?"

"எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. அதான் விஷம் குடித்தேன்."

"இனிமேல் இந்த மாதிரி செய்வியா?"

"சொல்ல முடியாது"

"ஏன் அப்படி சொல்றே?"

சந்திரபாபு உடனே தன் பாக்கெட்டிலிருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்தார், அதிலிருந்து ஒரு குச்சியை எடுத்து பெட்டியில் உரசி அந்த தீ ஜ்வாலையைத் தன் கையில் வைத்தார்.

"என்ன செய்கிறாய்?" நீதிபதி கேட்டார்.

"நான் செய்ததை உங்களால் பார்க்கத்தான் முடிந்தது. ஆனால் அந்த சூட்டை உங்களால் உணர முடியாது. அதைப் போலத்தான் என் உணர்ச்சிகளை உங்களால் உணர்ந்து கொள்ள முடியாது"

"முதல் தடவை நீ இப்படி செய்தது என்பதால் உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன்"

அதன் பின்னர் அவருக்கு ஒரு சான்ஸ் கிடைத்தது. 1947ஆம் வருஷம் தீபாவளிக்கு அவருடைய முதல் படம் வெளிவந்தது. படத்தின் பெயர் "தன அமராவதி". மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா கதை வசனம் எழுதியது. எஸ்.எம்.குமரேசன், பி.எஸ்.சரோஜா, புளிமூட்டை ராமசாமி ஆகியோருடன் சந்திரபாபுவும் நடித்திருந்தார். இது அந்த சோகரஸ முடிவுக்கு ஆளான நகைச்சுவை நடிகரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி.

(அறந்தை நாராயணன் எழுதிய "தமிழ் சினிமாவின் கதை" என்ற நூலிலிருந்து.)

2 comments:

துரை செல்வராஜூ said...

நகைச்சுவை நடிப்பிலும் ஆடல் பாடலிலும் தனக்கென ஒரு தனியிடத்தை வைத்திருந்த திரு. சந்திரபாபு அவர்கள் - எளிதாக அந்த இடத்தைக் கைப்பற்றி விடவில்லை என அறிய முடிந்தது. நல்லதோர் பதிவு.

thanusu said...

சந்திரபாபுவின் ஆரம்பகால வாழ்க்கையை அறியமுடிந்தது