பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 3, 2013

தமிழ்நாடு காங்கிரஸ் சரித்திரத்தில் திருச்சி.

                                     தமிழ்நாடு காங்கிரஸ் சரித்திரத்தில் திருச்சி.


இன்றைய அரசியலில்கூட திருச்சி முக்கிய இடம் வகிக்கிறது. எந்த அரசியல் கட்சியானாலும் தங்கள் முதல் மகாநாட்டை திருச்சியில் நடத்துகிறார்கள். தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்ததும் ஒரு காரணமோ? நாகபுரி ரயில் சந்திப்பில் ஒரு கற்பலகை இந்தியாவின் மையப் பகுதி என்று குறிப்பிடுகிறது. அது போல திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியோ? 

நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் மதுரை நாயக்கர்களும், தஞ்சை நாயக்கர்களும் திருச்சியை மையமாகக் கொண்டு போரிட்டிருக்கிறார்கள். ஆற்காட்டு நவாப் முகமது அலிக்கும் சந்தா சாஹேபுக்கும் மத்தியில் நடந்த விவகாரங்களும், போர்களும் திருச்சியை மையமாகக் கொண்டு நடந்தவை. தி.மு.க.வின் இரண்டாவது மாநில மகாநாடு திருச்சியில் இப்போதைய ஸ்டேடியம் இருக்கும் இடத்தில் நடந்த நேரத்தில் தி.மு.க. தேர்தலில் நிற்பதா வேண்டாமா என்று 1957இல் முடிவு செய்த இடம் திருச்சி. முதன் முதலாக பா.ஜ.க. ரங்கராஜன் குமாரமங்கலத்தை நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றது இதே திருச்சி தொகுதியில்தான். ராஜாஜியை தஞ்சை சிறையில் அவமதித்த வெள்ளைக்கார ஜெயிலர் திருச்சியில் பணியாற்றியபோது ராஜாஜி 1937இல் சென்னை மாகாண பிரதமரானார். அப்போது ராஜாஜி திருச்சிக்கு வந்து பிரபல காங்கிரஸ்காரர் ரத்தினவேல் தேவரின் உறையூர் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரை வந்து சந்தித்த அதே வெள்ளைக்கார ஜெயிலரிடம் ராஜாஜி பழைய நிகழ்ச்சிகள் எதையும் பேசாமல் சிறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை மட்டும் சொல்லி நடைமுறைப்படுத்தச் சொல்லி அவரைப் போகச்சொன்னார். ஜெயிலருக்குக் குற்ற உணர்வு தலையைச் சொரிந்து கொண்டு வேறு ஏதாவது உண்டா என்று தயங்க, ராஜாஜி, ஒன்றுமில்லை நீங்கள் போகலாம் என்று சொன்ன பெருந்தன்மையான நிகழ்வும் திருச்சியில்தான் நடந்தது. அப்படிப்பட்ட திருச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகம் சில காலம் இருந்தது. 

1914இல் திருச்சி ஜில்லா காங்கிரசுக்கு மெளல்வி முர்தூ சையத் என்பவர் தலைவர். வக்கீல் ராதாகிருஷ்ண ஐயர் செயலாளர். டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் மாவட்டம் முழுவதும் சென்று கட்சியை வலுப்படுத்தினார். அப்போதெல்லாம் (இப்போது எப்படியோ?) காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பணி ஒவ்வோராண்டும் வருடம் ஒருமுறை நடக்கும் அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டிற்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது மட்டும் தான். 1922இல் ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் தலைவராக ஆனார். கமிட்டி அலுவலகம் இரட்டைமால் தெருவில் லக்ஷ்மிநாராயண ஐயர் வீட்டில் இருந்தது. (இந்த இரட்டை மால் வீதி என்பது மலைக்கோட்டை நுழைவு வாயிலுக்கு எதிர்புறம் சின்னக்கடைத்தெருவுக்கு இணையான தெருவாக இருக்கிறது)

1923ஆம் வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை ஆனந்தா லாட்ஜ் மாடியிலிருந்து சின்னக் கடைத்தெருவில் தேசபக்தர் ஆர்.சீனிவாச ஐயர் வீட்டிற்குக் கீழ்புறம் உள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. அந்த ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகத்தில் இருந்தவர்கள் விவரம் இதோ:-

தலைவர்: டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு.
உபதலைவர்கள்: சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி)
ஈ.வே.ராமசாமி நாயக்கர் (பெரியார்)
டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்
பொருளாளர்: (அந்தக் காலத்தில் பொக்கிஷதார் என்றழைப்பர்)
ந.மூ.கா.ஜாமியான் ராவுத்தர் (தோல் கிடங்கு அதிபர்)
காரியதரிசிகள் (செயலாளர்களுக்கு அந்த நாளைய பெயர்)
கே. சந்தானம் (பின்னாளில் கவர்னராக இருந்தவர்)
எஸ். ராமநாதன்
ஈரோடு தங்கபெருமாள்
கே.சுப்பிரமணியம்.
மானேஜர்: (அலுவலக நிர்வாகி)
எஸ்.வெங்கட்டராமன் (அப்போதுதான் கல்லூரியைவிட்டு வெளியேறியவர்)

இந்த மானேஜர் எஸ்.வெங்கட்டராமன் பற்றி சிறிது கூறவேண்டும். இவர் திருச்சி தேசியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இவருடன் அந்தக் கல்லூரியில் படித்தவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. இவ்விருவரும் காந்திஜியின் அறைகூவலை ஏற்று கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர்கள். 1930 வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்குகொள்ள ராஜாஜியிடம் அனுமதி கேட்டார் கல்கி. ராஜாஜி மறுத்துவிட்டு அலுவலகத்தைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டார். இருவரும் அலுவலகத்தைக் கவனித்துக் கொண்டனர்.

பின்னர் இந்த எஸ்.வெங்கட்டராமன் கைதாகி தஞ்சாவூர்  சிறையில் இருந்தார். இவருடன் காமராஜ் உட்பட பல தலைவர்கள் அப்போது  சிறையில் இருந்தனர். அப்போது வெங்கட்டராமன் என்பவருக்கு ஒரு தந்தி வந்தது. அதில் அவருடைய  தந்தை மரணமடைந்துவிட்டதாகச் செய்தி இருந்தது.  தஞ்சாவூர் சிறையில் காமராஜரோடு இருந்த ஆர்.வெங்கட்டராமன் (பின்னாளில் குடியரசுத் தலைவர்) அவர்களை அழைத்து சிறை நிர்வாகம் பரோலில் போக அனுமதி கொடுத்துவிட்டது. தந்தியில் 'புதுக்கோட்டையில் காலமாகிவிட்டார்' என்பதை நிர்வாகம் 'பட்டுக்கோட்டையில்' என்று புரிந்து கொண்டு இப்படி செய்தனர். எஸ்.வெங்கட்டராமன் ஊர் புதுக்கோட்டை, ஆர்.வெங்கட்டராமன் ஊர் பட்டுக்கோட்டை. இந்த குழப்பத்தால் வந்த வினை.அவர் பட்டுக்கோட்டைக்கு வந்தால் அங்கு அவர் தந்தை நன்றாகவே இருந்தார்கள். பின்னர்தான் தெரிந்தது தந்தி வந்தது எஸ்.வெங்கட்டராமனுக்கு என்பதும், அவருடைய  தந்தை புதுக்கோட்டையில் காலமாகிவிட்டார் என்பதும். என்ன செய்வது? அவருடைய பிராப்தம் அவ்வளவுதான்.

இந்த எஸ்.வெங்கட்டராமன் ஒரு தேசிய பத்திரிகை நடத்தி வந்தார். அதில் பெரிய முதலாளிகளின் கம்பெனி விளம்பரங்களை போட மறுத்துவிட்டார். தேசியம், சுதேசி ஆகிய விளம்பரங்கள் மட்டும்தான் அதில் வெளிவரும். அமரர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் அவருடைய ஏஜென்சியில் வந்த லைஃப்பாய் சோப் விளம்பரம் தந்து கணிசமான தொகையையும் தரவிரும்பினார். எஸ்.வெங்கட்டராமன் மறுத்துவிட்டார். இப்படி பத்திரிகை நடத்தினால் என்ன ஆகும்? நொடித்துவிட்டது. பத்திரிகைக்கு மூடிவிழா. பிறகு அவர் பாம்பே  லைஃப் எனும் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து சுதந்திரமடைந்த காலத்தில் சென்னை கிளை மேலாளராக இருந்து வந்தார். இவர் காலமான போது  H.D.ராஜா போன்றவர்கள் வந்து மரியாதை செலுத்தினர். (என்னுடைய தியாகிகள் வரலாற்றைப் படித்த ஒரு அம்மையார் தன்னுடைய தந்தையார் பற்றி ஏன் எழுதவில்லை என்று எனக்கு வினா எழுப்பினார். அவர் பெயர், ஊர் எல்லாம் விசாரித்துவிட்டு ஆய்வு செய்தபோது இந்த எஸ்.வெங்கட்டராமன் பற்றிய விவரங்கள் கிடைத்தன. அவற்றைத் தொகுத்து என்னுடைய வலைப்பூவில் ஏற்றியிருக்கிறேன். அந்த தியாகியின் மகள் பெயர் திருமதி சரஸ்வதி கல்யாணம். வெளிநாடு ஒன்றில் இருக்கிறார். வயது 76. அவருடைய மகள் சென்னையில் இன்சூரன்ஸ் கல்வித் துறையில் ஈடுபட்டிருக்கிறார்).

திருச்சி தாலுகா காங்கிரசில் ரா.நாராயண ஐயங்கார் தலைவராக இருந்தார். துணைத் தலைவராக இருந்தவர் அப்போது ரயில்வேயில் வேலை பார்த்துவந்த எம்.கல்யாணசுந்தர முதலியார் (ஆம்! கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாணசுந்தரம்தான்) இந்த அலுவலகம் திருச்சி ஆண்டார் தெருவில் இருந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமை இரவு அங்கு தேசிய பஜனை நடைபெறுவது வழக்கம்.

தமிழ்நாடு காங்கிரஸ் சென்னைக்கு மாற்றம்.

டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு கைது செய்யப்பட்டபின், துணைத் தலைவராக இருந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாநில காங்கிரஸ் அலுவலகத்தை ஈரோட்டுக்கு மாற்றிக் கொண்டார். அப்போது அலுவலக நிர்வாகி எஸ்.வெங்கட்டராமனும் ஈரோடு செல்ல நேர்ந்தது.

1927இல் அகில இந்திய காங்கிரஸ் மகாநாடு சென்னையில் நடந்தது. வரவேற்புக் குழு தலைவராக இருந்தவர் எஸ்.சீனிவாச ஐயங்கார். இவர் சென்னையில் புகழ்மிக்க வக்கீல். பஞ்சாப் ஜாலியன்வாலாபாகில் நடந்த படுகொலையைக் கண்டித்து தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்தவர். ஆங்கில அரசு கொடுத்த கெளரவ பட்டங்களையும் துறந்தார். அதனால் மக்கள் செல்வாக்கு இவருக்கு அதிகமாக இருந்தது. ஆகையால் இவர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரானார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கிராம பிரச்சார வகுப்பு திருச்சியில் தொடங்கப்பட்டது. இதில் ஆசிரியர்களாக இருந்து போதித்தவர்கள்: மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா, வ.வெ.சு.ஐயர், டாக்டர் நாயுடு, எம்.கல்யாணசுந்தரம், சாத்தூர் சுப்பிரமணிய நயினார், திருநெல்வேலி திருகூடசுந்தரம் பிள்ளை, ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், ஈ.வே.ரா. அகியோர்.

1919இல் மகாத்மா காந்தி அலி சகோதரர்களான முகமது அலி, ஷஜகத் அலி ஆகியோருடன் முதன் முதலாக திருச்சிக்கு விஜயம் செய்தனர். டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் காந்திஜியும், அலி சகோதரர்களும் பேசியதன் விளைவு திருச்சியில் இஸ்லாமியர்கள் பெருமளவில் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டனர்.

1927இல் மறுபடியும் காந்திஜி திருச்சிக்கு விஜயம் செய்தார். இம்முறை கதர் அபிவிருத்திக்காக. அவருடன் கஸ்தூரி பாயும், மகாதேவ தேசாயும் வந்திருந்தனர். அப்போது கொள்ளிடம் பாலம் உடைந்திருந்ததால் காந்திஜியை ஒரு வண்டியில் ஏறச் சொன்னார்கள். காந்திஜி மறுத்துவிட்டு ஒரு தடியை ஊன்றிக் கொண்டு பாலத்தைக் கடந்தார்.

1933இல் ஹரிஜன நல நிதி வசூலிக்க மீண்டும் காந்திஜி திருச்சி வந்தார். அப்போது அவர் தீண்டாமை ஒழிப்பு பற்றி பல இடங்களில் பேசினார். அப்படியொரு கூட்டம் ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தபோது சில சுயமரியாதை இயக்கத் தொண்டர்களும், சனாதனிகளும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். "காந்தியே திரும்பிப் போ!" என்று கோஷமிட்டனர். கூட்டத்தில் இந்த ஆர்ப்பட்டாக்காரர்களுக்குச் சரியான பதில் கொடுத்தார் காந்திஜி. ஹரிஜன நல நிதிக்காகக் கூட்டத்தில் பலர் தங்கள் மோதிரங்களையும், வளையல்களையும், சங்கிலிகளையும் கழற்றிக் கொடுத்தனர். அவற்றை காந்திஜி அந்தக் கூட்டத்திலேயே ஏலத்துக்கு விட்டு பணமாக்கினார். ஏலத்தை அவர் தமிழில் நடத்தியதுதான் சிறப்பம்சம். 'ஒரு தரம், இரண்டு தரம்', 'சீக்கிரமா கேளுங்க', 'ஏலம் விட்டுடட்டுமா?' என்றெல்லாம் அவர் தமிழில் பேசியது கண்டு கூட்டத்தினர் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது. 

கடைசி முறையாக 1946இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப்பிரவேசம் முடிந்த பிறகு கோயிலினுள் செல்வதற்காக காந்திஜி ரயிலில் பயணம் செய்து வந்தார். ஒவ்வொரு ஊரிலும் சிறப்பான வரவேற்பு.

1926இல் தென் இந்திய ரயில்வேயில் ஒரு பெரிய வேலை நிறுத்தப் போராட்டம். ரயில்வே வேலை நிறுத்தத்தைத் தூண்டி அரசாங்கத்துக்கு நஷ்டம் உண்டுபண்ணியதாக ஆர்.கிருஷ்ணசாமி பிள்ளை, அடைக்கலசாமி பிள்ளை, பழனிவேல் முதலியார், சுவாமிநாத அய்யர், டி.வி.கே.நாயுடு, மாயவரம் ஜி.நாராயணசாமி நாயுடு ஆகியோரைக் கைது செய்து வழக்கு நடந்தது. இதற்கு "திருச்சி ரயில்வே சதி வழக்கு" என்று பெயர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த வழக்கை முன்னின்று நடத்தியது. பிரபல காங்கிரஸ்காரரும், தேசிய வாதியுமான கே.பாஷ்யம் ஐயங்கார் இவ்வழக்கில் ஆஜராகி விடுதலை வாங்கித் தந்தார். இப்படி சுதந்திரப் போரில் திருச்சியின் பங்கு ஏராளம். முடிந்தால் மேலும் பல செய்திகளை பின்னுமொரு கட்டுரையில் தருகிறேன்.

2 comments:

துரை செல்வராஜூ said...

அரிய தகவல்களுடன் நல்லதொரு பதிவு!.. நன்றி ஐயா!..

G SRIDHARAN said...


I do not know how many Trichyite know about this.
Good information.

Sridharan G