பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 9, 2013

மனிதாபிமானம்



ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளை அடைவதைத் தவிர இந்த சமூகத்துக்காக செய்ய வேண்டிய கடமைகள் சில உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அப்படி வெளியுலக உறவே இல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு, தன் வருமானம், தன் குடும்பம் என்று வாழ முடியாதா என்றால் முடியும். ஆனால் அப்படி வாழ்பவன் வெறும் புழு, பூச்சிகளைப் போல வாழ்ந்து மடிபவன். தானும் வாழ்ந்து நம்மைச் சுற்றியுள்ள இந்த சமூகத்துக்காகவும் சில பணிகளை, உதவிகளை, விட்டுக் கொடுத்தலை தன் சொந்தப் பணியாகக் கருதி செய்பவன் உண்மையான இந்த மண்ணின் பிரஜையாகக் கருதப்படுவான். அப்படி என்ன தனியொரு மனிதன் செய்துவிட முடியும் என்பது எனக்குப் புரியாமல் இருந்தது. பின்னர் அனுபவம் காரணமாக நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் ஒத்துழைப்பு தரமுடியும், அனுசரித்து வாழமுடியும், சுக துக்கங்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியும் என்றெல்லாம் புரியத் தொடங்கியது. எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவம் இரண்டை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். மேற்சொன்ன கருத்துக்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கருத்தையொட்டி சிந்தித்தபோது என் நினைவுக்கு வந்தது இந்த நிகழ்ச்சிகள் இவை, அவ்வளவே!

சில வருடங்களுக்கு முன்பு (ஆண்டு நினைவில் இல்லை) நானும் என் குடும்பத்தாரும் திருப்பதி சென்றிருந்தோம். அங்கு ஒரு குடில் வாடகைக்கு எடுத்துக் கொண்டு போன அன்றே சந்நிதிக்கு வரிசையில் சென்று இரவுக்குள் தரிசனம் முடித்துக் கொண்டு குடிலுக்கு வந்தோம். மறுநாள் விடியற்காலையில் மூன்று மணிக்கு எழுந்து அங்குள்ள புஷ்கரணியில் குளித்துவிட்டு ஈரத் துணியோடு உள்ளே சென்று அங்கப்பிரதட்சணம் செய்யலாம், சென்று அங்கப்பிரதட்சணம் முடிந்தவுடன் நேராக சந்நிதிக்கு அழைத்துச் செல்வார்கள், அப்போதும் தரிசனம் செய்யலாம் என்றார்கள்.

அப்போது இளம் வயது. மூன்று மணிக்கு எழுந்திருப்பதோ, குளிரில் புஷ்கரணியில் குளித்தெழுவதோ சிரமமாகத் தெரியவில்லை. அனைவரும் சென்று ஸ்நானம் செய்து அங்கப்பிரதட்சணம் செய்யும் இடம் சென்றோம். அங்கு அப்போதே வரிசையில் பலரும் அங்கப்பிரதட்சணம் தொடங்கும் நேரத்துக்காகக் காத்துக் கொண்டு பிரகாரத்தில் படுத்திருந்தனர். அந்த வரிசையில் இடமில்லாமல் நெருக்கியடித்துக் கொண்டு அனைவரும் நீளநெடுகப் படுத்துக் காத்துக் கிடந்தனர்.

ஒரு இடத்தில் சில இளைஞர்கள், அவர்களோடு வந்திருந்த சில பெரிசுகள் என்று நிறைய பேர் வரிசையாகப் படுத்திருந்தனர். அந்த இடத்தின் இடையில் இருவர் சேர்ந்து கொள்ளும் அளவுக்கு இடைவெளி இருந்தது. நான் சென்று அந்தவொரு இடத்தில் சேர்ந்துகொள்ள முயன்றேன். ஆனால் என்னை அங்கு அருகில் படுத்திருந்த பலரது கரங்கள் பிடித்துத் தள்ளிவிட்டன. ஏன் என்றேன். இங்கு ஆள் வருகிறார், நீ போய் வேறு இடம் பார் என்றது அந்தத் தமிழ்க் குரல்.

அப்படி குரல்கொடுத்த இளைஞனைப் பார்த்தேன். இடையில் வேட்டி, மேலே வெறும் உடம்பு, வேட்டிக்கு மேல் கட்டிய துண்டு. மார்பில் பூணூல், நெற்றியில் நாமம். சென்னையிலிருந்து பெருமாள் தரிசனத்துக்கு வந்த கூட்டமென்று புரிந்தது. மேலும் எங்காவது இடம் கிடைக்குமா, அந்த வரிசையில் சேர்ந்துகொள்ளலாம் என்று தவித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடி அலைந்தேன். ஆங்காங்கே சில இடங்கள் இருந்த போதும், அங்கெல்லாம் என்னை உள்ளே நுழைய அருகிலிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் ஒரு இடத்தில் தைரியமாகப் போய் படுத்தேன். அவ்வளவுதான், அடுத்த விநாடி நான் பிடித்துத் தூக்கி வரிசைக்கு வெளியே எறியப்பட்டேன். மனத்தில் கோபம், வருத்தம், நெஞ்சை அடைப்பது போல துக்கம், அழுகை வருவது போல கண்களில் கண்ணீர். இறைவன் சந்நிதியில் அவன் தரிசனத்துக்கு வந்தவனுக்கு இப்படியொரு வரவேற்பா. புரியவில்லை. நான் செய்தது என்ன தவறு? முன்கூட்டியே வந்து இரவே படுத்து இடம் பிடித்திருக்க வேண்டுமோ? அல்லது இவர்களைப் போல கூட்டமாக வந்து சினிமா தியேட்டரில் இடம்பிடிப்பதைப் போல துண்டு விரித்து இடம் பிடித்திருக்க வேண்டுமோ, புரியவில்லை.

வேண்டாம், இந்த அங்கப்பிரதட்சணம் செய்யவில்லை என்று பெருமாள் கோபித்துக் கொள்ளமாட்டார். அவருக்குத் தெரியும். தன்னை தரிசிக்க வந்து அங்கப்பிரதட்சணம் செய்ய காத்துக் கொண்டு பிரகாரத்தில் அடுத்தவனுக்கு இடம் கொடாமல் பிடித்துத் தள்ளூம் முரட்டு பக்தர்களுக்கு மட்டும் அவர் அருள் புரிந்து கொள்ளட்டும் என்று போன காரியத்தைச் செய்யாமல் திரும்பினேன். அதுதான் திருப்பதி சென்று வழிபட்ட கடைசி நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். இருபது வருடங்களாவது ஓடியிருக்கும் இப்போது.

சோத்துக்கு இப்படி அடித்துக் கொண்டால் பரவாயில்லை; அல்லது ரயிலில் அல்லது பஸ்சில் இடம் பிடிக்க இப்படி அடித்துப் பிடித்து இடம் பிடித்தாலும் சரி. ஆனால் இங்கு கடவுள் தரிசனத்துக்கும், பக்தி செலுத்துவதற்கும் கூடவா நெருக்கடி, சுயநலம். பாவம் அவர்களாவது வைகுண்டம் போகட்டும், என்னைப் போன்றவர்கள் பூமியோ, நரகமோ எங்களுக்கு ஏற்ற இடத்திலேயே இருந்து கொள்கிறோம், பரவாயில்லை.

இதைச் சொல்லும்போது இன்னொரு நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. டெல்லியிலிருந்து கிளம்பி பேருந்தில் பத்ரிநாத் பயணம் சென்றோம். ஒரு பஸ்சில் 35 பேர். ஏற்பாடு செய்தவர்கள் பஸ்சிலேயே உணவு தயாரிக்கும் ஆட்களையும் அழைத்து வந்திருந்ததால் அந்த ஒரு வாரப் பயணத்தில் தங்கும் ஒவ்வொரு இடத்திலும் உணவு தயாரித்து வழங்கினர். இருப்பதோ 35 பேர். ஒவ்வொரு இடத்திலும் உணவு தயாரானதும் ஒவ்வொருவர் கையிலும் தைத்த இலையைக் கொடுத்து சாப்பாடு தயார் என்றதும், எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிப்போய் ஒவ்வொரு சாதமாக இலையில் வாங்கி மடக் மடக்கென்று விழுங்கிவிட்டு மீண்டும் வந்து இலையைக் காட்டி மறுபடியும் வாங்கிக் கொண்டிருந்தார்கள். என்னையும் சேர்த்து ஐந்து பேர் மட்டும் வயதில் இளையவர்களாக (அப்போது) இருந்த காரணத்தால் மற்றவர்கள் சாப்பிட்டபின் கடைசியில் சாப்பிடலாம் என்று இருந்தோம். அடித்துப் பிடித்து பலமுறை வாங்கி சாப்பிட்டவர்கள் ஒருவழியாக முடித்தபின் எங்கள் ஐந்து பேருக்கும் அதிகமாகவே உணவு பாக்கியிருந்தது. ஆனால் என்னை உறுத்திய விஷயம் என்னவென்றால், ஒருமுறை சாப்பிட்டு அடுத்த முறை உணவை இலையில் வாங்கும்போது அடுத்தவன் இலையைத் தள்ளிவிட்டு தான் முந்தி நீ முந்தியென்று அடித்துக் கொண்டது கல்யாண வீட்டு வாயிலில் விட்டெறிந்த இலைக்குப் பறக்கும் ஜீவன்கள் நினைவு வந்தது.

என்னுடன் இருந்த அந்த ஐந்து பயணிகளில் ஒருவர் புளு ஸ்டார் நிறுவனத்தில் பொறியாளர். மற்றொருவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர். மற்றொருவர் ஸ்டேட் வங்கி ஊழியர், இன்னொருவர் மதுரையில் கல்லூரி பேராசிரியர், கடைசி மனிதர் கனரா வங்கி அதிகாரி. இவர்களில் புளு ஸ்டார் பொறியாளர் இளையவர். அவர் சொன்னார், அடுத்த இடத்திலிருந்து இவர்களை வரிசையில் உட்காரவைத்து நாம் ஐந்து பேரும் இவர்களுக்குப் பரிமாறிவிடுவோம். இவர்கள் கூட்டத்தை இடித்துக் கொண்டு எச்சில் இலையை நீட்டி உணவு வாங்குவது நன்றாக இல்லை, நாம் இறுதியில் சாப்பிடுவோம் என்றார். பின்னர் அதனை செயல்படுத்தினோம். கார்வால் ஜில்லா தலைநகரான ஸ்ரீநகர் எனும் ஊரிலிருந்து இந்த ஏற்பாடு. மிக அற்புதமாக பிரச்சினையின்று உணவு வழங்கல் நடந்தது. எங்களது முயற்சி வெற்றி பெற்றது. சாப்பிடுவதிலும் தள்ளுமுள்ளூ நின்று போனது.

மனிதனின் அடிப்படையான உணர்வு தனக்கு இல்லாமல் போய்விடுமோ என்பதுதான். அதை முறைப்படி செய்தால் நன்றாகவே நடக்கும், அடித்துப் பிடித்துக்கொண்டு முந்துவதால் கசப்புதான் மிஞ்சும். மனிதப் பிறவியின் நோக்கமும் அடித்துப் பிடித்துக் காரியமாற்றுவது அல்ல. இதுதான் நான் புரிந்து கொண்டது.

2 comments:

துரை செல்வராஜூ said...

பக்குவமற்ற மனிதன் தான், தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி - தனக்கு இல்லாமல் போய்விடுமோ - என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் பல சமயங்களில் அநாகரிகமாக நடந்து கொள்கின்றான். திருப்பதியில் நிகழ்ந்த விஷயம் உண்மையில் வருந்தச் செய்தது.

kmr.krishnan said...

இது போன்ற நிகழ்வுகள்தான் மானுடத்தைப் பற்றிய நமது கண்ணோட்டத்தை
சமைக்கின்றன. அடிப்படையில் மனைதன் சுயநலவாதியா? பிறர் நலம் பேணுபவனா? 'பாதிமனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா,மீதிமனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா!'

குழுமன நிலையில் தலைமை சரியாக‌ இல்லாவிடில் உடல் வலிவுள்ளது, வலிமை இல்லாதவற்றை அடக்க, வெல்லப் பார்க்கும்.தலைமை வந்து சீரமைத்தால் ஒழுங்கு முறைக்கு வரும். அந்தத் தலைமைப் பொறுப்பை நீங்கள் எடுத்தது நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.

திருப்பதி போன்ற கூட்டம் மிகுதியுள்ள கோவில்களுக்குப் போகாமல் இருப்பதே நலம்.

நல்ல அநுபவப்பதிவுதான்! நன்றி!