பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 1, 2013

தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள்

இதற்கு முன்பு "தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு" எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தேன். அது முழுமையாக அமையவில்லை. மேலும் நாயக்கர் வரலாற்றை ஆழ்ந்து பார்க்கும்போது முந்தைய கட்டுரையில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் மாறுபட்டிருந்ததைக் காணமுடிந்தது. இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரை ஓரளவுக்கு தஞ்சை நாயக்கர்கள் பற்றிய முழுமையான வரலாறாக இருக்கும் படித்துக் கருத்துக் கூறுங்கள். நன்றி.

               தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள்  

சோழ நாட்டின் தலைநகராகச் சிறப்புற்று விளங்கிய இடம் தஞ்சாவூர். கடைச் சோழர்களான விஜயாலயன் பரம்பரை தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுடைய பாரம்பரிய ஆட்சி 1279 வரை சோழ நாட்டில் நிலைபெற்றிருந்தது. அதன் பின் சோழ மன்னர்கள் சிதறிப்போய், பாண்டியர், ஹொய்சாளர், நாயக்கர், மராத்தியர் என பலர் ஆண்டபின் 1855 முதல் ஆங்கிலேயர்களின் அதிகாரத்தின்கீழ் வந்தது என்பது வரலாறு கூறும் செய்தி. 

தஞ்சாவூருக்கு இந்தப் பெயர் வரக்காரணமாகக் கூறப்படும் புராண செய்தியொன்று இருக்கிறது. தஞ்சன் எனும் அசுரன் ஆனந்தவல்லி அம்மன் சமேதரான ஸ்ரீ நீலமேகப்பெருமாளால் வதம் செய்யப்பட்டதாகவும், அந்த அசுரன் இறக்கும் தறுவாயில் இவ்வூருக்குத் தன் பெயரையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதனால் இவ்வூர் தஞ்சபுரி அல்லது தஞ்சாவூர் என அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் பழைமையை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் மகாபாரதப் போரின் போது பாண்டிய மன்னன் குருக்ஷேத்திரப் போரில் சண்டையிட்ட இரு பிரிவினருக்கும் உணவளித்ததாகச் சொல்லப்படும் செய்தியொன்று போதும். சோழ நாடு பல தலைநகர்களைப் பல்வேறு காலகட்டத்தில் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. மனுநீதிச் சோழன் காலத்தில் சோழ நாட்டின் தலைநகர் திருவாரூர். பின்னர் பூம்புகார், உறையூர், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவைகளும் சோழர்களின் தலைநகரங்களாக இருந்து வந்திருக்கின்றன. 

பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் பல்லவன் பக்கம் போராடிய சிற்றரசன் விஜயாலயன் போரில் வென்றபிறகு தஞ்சையை ஆண்ட பெரும்பிடுகு முத்தரையனிடமிருந்து தஞ்சையை மீட்டு ஆட்சிபுரியலானான். அப்போது விஜயாலயன் தனது தலைநகரை பழையாறையிலிருந்து தஞ்சைக்கு மாற்றிக் கொண்டான். தன்னுடைய குலதெய்வமான நிசும்பசூதனிக்குத் தஞ்சாவூரில் ஒரு கோயில் எழுப்பி வழிபட்டான். விஜயாலயனின் காலம் கி.பி.846 முதல் 880 வரை. ராஜராஜ சோழன் காலம் வரை தஞ்சை தலைநகரமாக இருந்து, பின்னர் அவரது புதல்வர் ராஜேந்திர சோழன் காலத்தில் தலைநகரம் கங்கைகொண்டசோழபுரத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்கள் ஆதிக்கம் முடிவடைந்து பாண்டியர்கள் வசம் தஞ்சாவூர் போய்விட்டது. அதன்பின் பல்வேறு ஆட்சியாளர்கள் சிதறிப்போய் ஆங்காங்கே ஆட்சிபுரிந்து வரும் நிலையில் கிருஷ்ணதேவராயரின் விஜயநகர சாம்ராஜ்யம் கோலோச்சத் தொடங்கியது. தென்னாடு முழுவதும் கிருஷ்ணதேவ ராயரின் ஆட்சி பரவத் தொடங்கியது. விஜயநகர சாம்ராஜ்யம் கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதும் பரவிக் கிடந்தது. ஆங்காங்கே இருந்த பகுதிகளை ஆள நாயக்க மன்னர்கள் தங்கள் ராஜப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார்கள். அப்படி அனுப்பப்பட்ட ராஜப்பிரதிநிதிகள் அனைவருமே மன்னரின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், ராஜ வம்சத்தினரின் உறவினர்களாகவும் பார்த்து அனுப்பப்பட்டனர். உறவினர்களை ஊக்குவிக்காமல் வெளியாரை நம்பினால் என்ன ஆவது, அதனால்தான் உறவினர்களுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு அரசியலில்.

அப்படி அனுப்பப்பட்டவர்கள் விஜயநகரப் பேரரசின் பெயரால் தமிழ்ப் பகுதிகளான மதுரை, தஞ்சாவூர், திருச்சினாப்பள்ளி முதலான பகுதிகளில் ஆட்சி புரிந்தனர். நாயக்க மன்னர்கள் தாங்கள் ஆண்ட பகுதிகளுக்குத் தங்களுடன் படை வீரர்கள் தவிர, மகா பண்டிதர்களையும், கலை வல்லுனர்களையும் கூட அழைத்துச் சென்றனர். இசையும், கலைகளும் இவர்கள் காலத்தில் செழித்து வளர்ந்தன. இந்தக் குறுநில மன்னர்களும் கலை ஆர்வலர்களாகவும், நன்கு கற்றுத் தேர்ந்த பண்டிதர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

பழைய ஆலயங்களை, சிதிலமடைந்தவற்றை மீண்டும் புதுப்பித்துக் கட்டியும், புதிய பல ஆலயங்களை நிர்மாணித்தும் இவர்கள் அரிய சேவைகளைப் புரிந்திருக்கின்றனர். இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள், ஆற்றில் மக்கள் இறங்கி நீராட அரிய படித்துறைகள் முதலியன இன்றளவும் அவர்கள் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் அவரது குமாரர் ரகுநாத நாயக்கர் ஆகியோருடைய காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் செய்த செயற்கரிய சாதனைகளை இன்றும் மக்கள் போற்றிப் பாராட்டுகின்றனர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆட்சி குறித்தும், அவர்கள் செய்த பொதுமக்களுக்கான தொண்டுகள் குறித்தும், நிர்வாகம் இவை பற்றியெல்லாம் விரிவாக முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியிருக்கிறார். தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடு இது. தஞ்சாவூரின் வரலாற்றைப் பற்றி 'தஞ்சாவூர்', 'திருவாரூர்', தஞ்சை நாயக்கர்கள் வரலாறு, மராத்திய மன்னர்கள் வரலாறு போன்ற செய்திகளை அதிகம் வெளிக் கொணர்ந்தவர் என்கிற முறையில் முனைவர் குடவாயில் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

கிருஷ்ணதேவராயரின் மரணத்துக்குப் பிறகு அவரது தம்பி அச்சுததேவராயரின் ஆட்சி நடைபெற்றது. இந்த அச்சுததேவராயரின் மைத்துனியின் கணவர் பெயர் சேவப்ப நாயக்கர். ஆரணியில் இருந்த இந்த சேவப்ப நாயக்கர் தஞ்சைக்கு அரசராக நியமித்து அச்சுததேவராயர் இவரைத் தஞ்சாவூருக்கு அனுப்பினார். ஆக, 1535ஆம் ஆண்டில் தஞ்சையில் நாயக்கர்கள் ஆட்சி வெற்றிகரமாக சேவப்ப நாயக்கர் தலைமையில் தொடங்கியது.

சேவப்ப நாயக்கர். (1532 - 1580)





நாயக்கர் வகுப்பில் பலிஜா பிரிவினைச் சேர்ந்தவர்கள் இவர்கள். தஞ்சைக்கு அனுப்பப்பட்ட சேவப்ப நாயக்கரின் காலம் 1532 முதல் 1580 வரையிலானது. இவருடைய தந்தையார் பெயர் திம்மப்ப நாயக்கர். இந்த திம்மப்ப நாயக்கர் ஆற்காடு பிரதேசத்தில் ராஜப்பிரதிநிதியாக இருந்தவர். இவரை திம்மப்பா என்றும் திம்மப்ப பூபதி என்றும் அழைப்பார்கள். ஆற்காடு பகுதியின் ஆளுகைக்குப் பொறுப்பான இவர் இப்போதைய வேலூர் மாவட்டம் நெடுங்குன்றம் எனும் ஊரில் இருந்து கொண்டு ஆட்சி புரிந்தார்.

விஜயநகர சாம்ராஜ்யம் இப்போதைய ஆந்திரப் பிரதேசத்தில் பரவியிருந்த ஒரு பெருமைக்குரிய இந்து சாம்ராஜ்யம். இதனை தெற்கே தமிழ்ப்பேசும் பகுதிகளுக்கு விரிவு படுத்த இந்த நெடுங்குன்றம் பகுதியிலிருந்து தான் தொடங்கினர். தென் தமிழகம் உட்பட அனைத்துப் பகுதிகளும் நாயக்கர் ஆட்சிக்கு அடிகோலியது இந்த நெடுங்குன்றம் ஆட்சிதான். அதற்கு வித்திட்ட பெருமை திம்மப்ப நாயக்கருக்கு உண்டு.

யார் இந்த திம்மப்பர்? நாம் முன்பே குறிப்பிட்டபடி விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் தங்கள் பகுதிகளை ஆள்வதற்கு கூடியமட்டும் தங்கள் உறவினர்களையே தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அப்படி உறவினர்கள் இல்லையென்றால், அவர்களது நம்பிக்கைக்குரிய ஊழியர்களை அனுப்புவார்கள். அப்படி இந்த திம்மப்பர் ஆற்காடு பகுதிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக இவர் மாமன்னர் கிருஷ்ணதேவராயரிடம் வாயில் காப்போனாகப் பணியாற்றி வந்தார். அந்தப் பணிக்கு "வாசல்" என்று பெயர். மன்னரின் வாசல் எனும் பதவியோடு இவர் தளவாய் எனும் படைத்தளபதியாகவும் இருந்தார். மன்னரின் தளவாயாக இருந்த காலத்தில் ரெய்ச்சூர் உட்பட பல பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்று போரிட்டிருக்கிறார் இவர். இவருடைய சகோதரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் நாகம்ம நாயக்கர். நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர்தான் மதுரைப் பகுதியை ஆள அங்கு அனுப்பப்பட்டு அவர் மூலம் தென் தமிழகம் முழுவதும் நாயக்கர் ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டது.

நாகம்ம நாயக்கரும் திம்மப்ப நாயக்கரும் அண்ணன் தம்பி என்பதைப் பார்த்தோம். இதில் நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கும், திம்மப்பரின் மகன் சேவப்பர் தஞ்சைக்கும் அனுப்பப்பட்டனர். இவர்கள் அனைவருமே மாமன்னர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இவர்களைப் பற்றியும் சிறிது விரிவாகத் தெரிந்து கொள்வது நல்லதுதானே!

திம்மப்ப நாயக்கருக்கு நான்கு பிள்ளைகள். இவர்கள் பெத்தசேவா, சின்னசேவா, பெத்தமல்லா, சின்ன மல்லா என்ற பெயர் உடையவர்கள். இவர்களில் சின்னசேவா என்பவர்தான் நமது கதாநாயகனான சேவப்ப நாயக்கர். சேவா என்பது சேவப்பர் என்பதன் சுருக்கம். தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு இவருடைய பெயரைத் தமிழில் "சிறு சேவா" என்று குறிப்பிட்டனர். சரி மற்ற பிள்ளைகள் என்னவானார்கள்? அது பற்றிய விவரம் தெரியவில்லை. சரித்திர ஆசிரியர்களும் இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சேவப்பருக்கு முன்னதாக சோழ தேசத்துக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தின் கவர்னராக இருந்த செல்லப்பா என்கிற வீரநரசிம்மரைத் தொடர்ந்து இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். "தஞ்சாவூரு ஆந்திர ராஜ்யலு சரித்திரமு" எனும் தெலுங்கு இலக்கியம் சேவப்பருக்கு அவருடைய திருமணம் மூலம் கிடைத்த வரதட்சிணை தஞ்சாவூர் என்கிறது. ஆனால் வேறு சில செய்திகள் சேவப்பர் தன் வீரத்தினால் போரிட்டு இந்த தஞ்சாவூர் ஆட்சியைக் கைப்பற்றினார் என்கிறது.இப்படி தொடங்குகிறது இந்த நாயக்கர் வம்சத்தின் வரலாறு. 

திம்மப்பர் ராஜாங்க பணியில் இருந்த காரணத்தால், முதலில் அவருடைய குமாரர்களும் ராஜாங்கத்தில் பணி அமர்த்தப்பட்டனர். தஞ்சைக்கு அனுப்பப்பட்ட சேவப்ப நாயக்கர் முதலில் கிருஷ்ணதேவராயரிடம் பணிபுரிந்து வந்தார். இவருடைய பணி சிறப்பாக இருப்பதை உணர்ந்து மன்னர் இவரிடம் அக்கறை காண்பித்து இவருக்கு உரிய அந்தஸ்தையும் கொடுத்திருந்தார். சேவப்ப நாயக்கர் நல்ல நிர்வாகியாகவும் பெயர் பெற்றிருந்தார். 

கிருஷ்ணதேவராயரின் சகோதரர் அச்சுததேவராயர். அண்ணனுக்குப் பிறகு அச்சுததேவராயர்தான் விஜயநகர சக்கரவர்த்தியாகப் பதவிக்கு வந்தார். இவருடைய மனைவியின் பெயர் திருமலாம்பா. அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், சிறந்த நிர்வாகியுமாகத் திகழ்ந்த சேவப்பருக்கு இந்தத் திருமலாம்பாவின் சகோதரியைத் திருமணம் செய்து வைத்தனர். அந்தப் பெண்ணின் பெயர் மூர்த்திமாம்பா. இந்தத் திருமணத்தின் மூலம் சேவப்பர், ராஜாவின் சகலையாக ஆகிவிட்டார். சேவப்பர் தஞ்சாவூரின் அரசராக ஆனதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ராஜாவின் குடும்பத்தில் அல்லவா பெண் எடுத்திருக்கிறார் சேவப்பர். அதற்கு வரதட்சிணையாக தஞ்சாவூரைப் பெற்றார் என்றும் சொல்பவர்கள் உண்டு. 

முதலில் சேவப்பர் அச்சுததேவராயருக்கு அடப்பக்காரனாக பணிபுரிந்தார். அது என்ன அடப்பக்காரன்? அடப்பக்காரன் என்றால் மன்னருக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுக்கும் பணி. அட இது என்ன? மன்னருக்கு தாம்பூலம் மடித்துக் கொடுப்பது என்பது அவ்வளவு உயர்ந்த பணியா? அதை இவரைப் போன்ற ஒருவர் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று தோன்றுகிறதல்லவா? இது ஒன்றும் அப்படிப்பட்ட எளிய, தாழ்ந்த பணி அல்ல. அடப்பக்காரனாக மன்னர் வைத்துக் கொள்கிறார் என்றால், அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான, உறுதியான பாதுகாவலராக இருப்பவரைத்தான் வைத்துக் கொள்வார். காரணம் வெற்றிலை மடித்துக் கொடுப்பவன் அதில் ஏதாவது விஷம் கலந்து கொடுத்துவிட்டால் மன்னரின் கதி? ஆகவே மிகவும் நம்பிக்கை உள்ளவராகத்தான் இந்த பதவிக்கு வைத்துக் கொள்ள முடியும். அந்தப் பதவியிலும் இருந்தவர் நமது சேவப்பர். நம்பிக்கை, நாணயம், மன்னரை பாதுகாக்கும் உணர்வு அதற்கான வீரம் அத்தனையும் இருந்ததால்தான் சேவப்ப நாயக்கர் மன்னரிடம் இந்த பணியைச் சிறப்பாக செய்து வந்தார். சுருக்கமாகச் சொல்வதென்றால் மன்னரின் அந்தரங்க பாதுகாவலராகப் பணி புரிந்தவர் சேவப்ப நாயக்கர்.

சேவப்ப நாயக்கருக்கு ராஜப்பிரதிநிதியாக பதவி உயர்வு கொடுத்து முதலில் ஆற்காட்டுக்கும், பின்னர் தஞ்சாவூருக்கும் அனுப்பக் காரணமாக இருந்தவர் மன்னர் அச்சுததேவராயர் என்பதால்தான், பின்னாளில் சேவப்ப நாயக்கர் தனது மகனுக்கும் மன்னரின் பெயரையே வைத்தார். அந்த மகனின் பெயர் அச்சுதப்ப நாயக்கர். சேவப்ப நாயக்கர் தஞ்சாவூருக்கு மன்னராக வந்து பதவியேற்ற காலம் தொட்டே அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கரும் இளவரசராக இருந்து கொண்டு தந்தைக்கு உதவி செய்து வந்தார்.

சேவப்ப நாயக்கர் தஞ்சாவூரைத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டு பாண்டியர்களால் அழிக்கப்பட்ட தலைநகருக்கு அருகிலேயே புதிதாக ஒரு நகரத்தை உருவாக்கிக் கொண்டு அங்கு நீர்நிலைகளையும், ஆலயங்களையும், மாளிகைகளையும் உருவாக்கி ஒரு புதிய ராஜ்யத்தை உருவாக்கினார். அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு இன்றும்கூட 'சேவப்பநாயக்கன் ஏரி' இருக்கிறது. அங்கு ஏரியும் இல்லை, தன்ணீரும் இல்லை, அதனை சமப்படுத்தி அங்கு வீடுகளைக் கட்டிக் கொண்டு மக்கள் ஒரு குடியிருப்பாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூருக்கு ஒரு விளையாட்டு அரங்கம் (Stadium) தேவை என்பதை உணர்ந்து இந்த சேவப்ப நாயக்கன் ஏரி பகுதியில் அன்றைய அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அடிக்கல்கூட நாட்டினார். பின்னர் ஸ்டேடியம் இப்போது இருக்கும் கணபதிநகர் பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.

                             
                                                                  சிவகங்கைக் குளம்

இந்த சேவப்பன் நாயக்கன் ஏரியில் சுற்றுப்புற மேட்டுப் பகுதிகளிலிருந்து மழைநீர் வந்து தேங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த நீர் ஏரிக்கு வந்த பிறகு அதை பெரிய குழாய்கள் மூலம் சிவகங்கைக் குளத்துக்குக் கொண்டு சென்று, அது நிரம்பியதும் நகரின் மற்ற குளங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் நீர்நிலைகள் பாதுகாப்பை உருவாக்கி யிருந்தார். இதுபோன்ற அமைப்புகள் புதுக்கோட்டையிலும் திவான் சேஷையா சாஸ்திரி காலத்தில் உருவாக்கப்பட்டு நகரின் பல நீர்நிலைகள் மழைக்காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நிரம்பி கடைசியில் புதுக்குளம் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததைக் காண்கிறோம். தஞ்சாவூரிலும் நீர்நிலைகளுக்கு பூமிக்கு அடியில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் அமைப்பு இருந்திருக்கிறது.

சேவப்ப நாயக்கரைப் பற்றிய ஆதாரபூர்வமான கல்வெட்டுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சோழ தேசத்தில் இவர் ஆட்சி புரிந்தது மட்டும் வரலாற்று ஏடுகளில் பதிவாகியிருக்கிறது. இவருடைய காலத்தில் திருச்சினாப்பள்ளி தஞ்சாவூர் ராஜ்யத்திற்கு உட்பட்டும், வல்லம் மதுரை நாயக்கர்களிடமும் இருந்திருக்கிறது. இவர் திருச்சியை மதுரை நாயக்கர்களிடம் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வல்லத்தை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது. 

இனோரு வரலாற்றுச் செய்தியும் இவர் காலத்தைப் பற்றி சொல்லப்படுகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் தளபதி ராமராஜ விட்டலர் தன்னுடைய படைகளோடு திருச்சினாப்பள்ளியில் தங்கிக்கொண்டு திருவாடி (திருவையாறு) ராஜாவோடும், தென்னிந்திய கடற்கரை பரவர்களோடும் 1545இல் போரிட்டுக் கொண்டிருந்த போது சேவப்பர் தளபதி ராமராஜருக்கு படைகளைக் கொடுத்து உதவியும், மற்ற உதவிகளையும் செய்ததாகத் தெரிகிறது.

சேவப்ப நாயக்கர் தஞ்சாவூர் ராஜ்யத்தில் பல கோயில்களைக் கட்டியிருக்கிறார். இடிந்து சிதிலமான பல கோயில்களைப் புதுப்பித்திருக்கிறார். அவர் காலத்திற்கு முந்தி இங்கு படையெடுத்து வந்த வட இந்திய சுல்தான்கள் படைகளினால் நாசமாக்கி இடிக்கப்பட்ட பல கோயில்களையும் சரிசெய்ய முடியாவிட்டாலும், பல கோயில்களின் இடிபாடுகளிலிருந்த பொருட்களைக் கொண்டு ஏதாவதொரு கோயிலையாவது புதுப்பித்துக் கட்டியிருக்கிறார்கள். அப்படிக் கட்டப்பட்ட கோயில்களில் செந்தலை கோயிலும் ஒன்று. 

முன்பே குறிப்பிட்டபடி தஞ்சையில் நீராதாரத்தைப் பெருக்கியதைப் போல நாட்டின் பல இடங்களிலும் பல குளங்களை வெட்டி தண்ணீரைச் சேகரித்து வைக்க ஏற்பாடு செய்தார். வேதங்கள் ஓதிய பிராமணர்களுக்கென்று பல அக்ரஹாரங்களை அமைத்துக் கொடுத்து அவற்றை வேத பண்டிதர்களுக்கு சர்வமான்யமாகக் கொடுத்துதவினார். 

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் வெளிப்பிரகார மதிற்சுவற்றை சீர்படுத்தி ஒழுங்காக்கிக் கட்டிக் கொடுத்தார். சிதம்பரம் நடராஜா கோயிலின் கோபுரத்தைக் கட்டிக் கொடுத்தார். திருப்பதி பெருமாளின் மூலத்தானத்துக்கும், ஸ்ரீசைலம் ஆலயத்தின் விமானத்துக்கும் தங்கத் தகடுகள் வேய்ந்து உதவினார். இவை தவிர 1550இல் நாஞ்சிக்கோட்டைக்கருகில் ஒரு இஸ்லாமிய மசூதிக்கு என ஏழு வேலி நிலத்தை நன்கொடையாக அளித்தார். 1574இல் மாத்வ ஆச்சார்யரான விஜயேந்திர தீர்த்தருக்காக ஒரு கிராமத்தை கொடையாக வழங்கினார். தவிரவும் 1579இல் திருவிளந்துறை எனும் இடத்தில் இருந்த ஒரு புத்த விஹாரத்துக்காக நிலங்களை வழங்கியிருக்கிறார். இப்படி மத வேற்றுமை பாராட்டாமல் அனைவருக்கும் தேவையான உதவிகளை இவர் செய்து வந்திருக்கிறார். 

இவருடைய காலத்தில் போர்த்துகீசியர்கள் நம் நாட்டுக்கு வியாபாரம் செய்ய வந்திருந்தார்கள். இவர்கள் தவிர, ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று பல ஐரோப்பிய நாட்டவர்களும் தாங்கள் கால்பதிக்க இடம் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தனர். போர்த்துகீசிய வியாபாரிகளுக்கு இவர் ஆதரவு கொடுத்து இடம் கொடுத்து உதவியிருக்கிறார். பிரான்சிஸ் சேவியர் என்பார் எழுதியுள்ள சுயசரிதையில் சேவப்பர் போர்த்துகீசியர்களுக்குச் செய்த உதவிகளைக் குறித்து எழுதியிருக்கிறார். 

சேவப்பர் தன்னுடைய காலத்திலேயே தன்னுடைய மகனை யுவராஜாவாக வைத்துக் கொண்டு அவரும் ராஜ்ய பரிபாலனத்தில் முழுமையா ஈடுபட வைத்தார் அல்லவா? அதைத் தொடர்ந்து 1563இல் தான் தர்ம காரியங்களைக் கவனிக்க முடிவு செய்து மகனையே ராஜ்யத்தை ஆளும்படி ஏற்பாடு செய்துகொண்டார்.

ராஜ்யத்தை நல்ல முறையில் ஆண்ட திருப்தியில் மன்னர் சேவப்பர் 1580இல் காலமானார். அச்சுதப்பர் தந்தை நிழலில் இருந்து கொண்டு ஆண்ட நிலை மாறி இப்போது தனித்து ஆட்சிபுரியலானார்.

அச்சுதப்ப நாயக்கர். (1560 -1614)
நாயக்கர் காலத்து திருமலைநாயக்கர் மகால் மதுரை

சேவப்ப நாயக்கரின் புதல்வர் அச்சுதப்ப நாயக்கர் என்பதையும், தந்தை காலத்திலேயே இவர் இளவரசராக இருந்து ராஜ்ய விஷயங்களைக் கவனித்து வந்தார் என்பதைப் பார்த்தோம். சேவப்ப நாயக்கருக்கு தஞ்சை மன்னன் என்கிற பதவியை வழங்கிய விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தியும் கிருஷ்ணதேவ ராயரின் தம்பியுமான அச்சுததேவ ராயரின் நினைவாக சேவப்பரின் மகனுக்கு அச்சுதப்ப நாயக்கர் என்று பெயரிடப்பட்டது. இவர் தஞ்சாவூர் ராஜ்யத்தை 54 ஆண்டுகள் சிறப்பாகவும், அமைதியாகவும் ஆட்சி புரிந்து வந்திருக்கிறார். இவர் தன் தந்தையிடம் யுவராஜாவாக பணியாற்றியதைப் போல இவர் காலத்தில் இவருடைய மகன் ரகுநாத நாயக்கர் தந்தைக்குத் துணை புரிந்து வந்தார்.

1560ஆம் ஆண்டு தொடங்கி 1580வரையிலான இருபது ஆண்டுகளில் தந்தைக்குத் துணையாக இருந்து கொண்டு ராஜ்ய பாரத்தை நடத்திக் கொண்டிருந்த அச்சுதப்ப நாயக்கர் 1580 தொடங்கி 1614 வரையிலான காலகட்டத்தில் ராஜ்யத்தின் மன்னனாக தனித்து ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் மக்கள் சுகமாகவும், அமைதியாகவும், நிலையான ஆட்சியின் கீழ் வாழ்ந்து வந்தனர். 

சேவப்ப நாயக்கரின் மூத்த மகன் இந்த அச்சுதப்ப நாயக்கர். இவருடைய மனைவி மூர்த்திமாம்பா. இந்த அச்சுதப்ப நாயக்கரை சின்னசேவா அச்சுதா என்றும் சேவப்ப அச்சுதா என்றும்கூட குறிப்பிடுகின்றனர். அச்சுதப்ப நாயக்கர் தஞ்சாவூரை 54 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கிறார். இவருடைய காலத்தில் கட்டடக் கலையும், சிற்பக் கலையும், கலை இலக்கியங்களும் சிறப்பாக வளர்ச்சியடைந்தன. இசை, நடனம் போன்ற கலைகள் வளர்ச்சியடைந்தன. இவருடைய 54 ஆண்டு ஆட்சிக் காலத்தின் முற்பகுதி பெரும்பாலும் அமைதியாகத்தான் நடைபெற்றது. ஆனால் அவருடைய ஆட்சியின் கடைசி கட்டத்தில் முகமதியர் படையெடுப்புகளாலும், போர்த்துகீசியர்களோடும் இவர் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இவர் விஜயநகர சக்கரவர்த்தியுடன் சுமுகமான உறவை மேற்கொண்டு வந்தார். அவர்கள் ஈடுபடும் போர்களில் எல்லாம் தஞ்சை மன்னரான அச்சுதப்ப நாயக்கர் பேருதவிகள் புரிந்தார். அச்சுதப்ப நாயக்கரின் வெற்றிக்குப் பின்புலத்தில் இருந்தவர் ஒரு அமைச்சர்; கர்நாடக தேசத்து கன்னடம் பேசும் பிராமணர், அவர் பெயர் கோவிந்த தீக்ஷிதர். மகா பண்டிதரான கோவிந்த தீக்ஷிதரின் சாதுர்யம், அறிவாற்றல், செயல் திறன் இவைகளால் அவருக்கு மட்டுமல்ல, அவரது எஜமானரான அச்சுதப்ப நாயக்கரும் நல்ல பெயர் கிடைத்தது. இன்று வரை கோவிந்த தீக்ஷிதரின் பெயர் மக்களின் நினைவில் இருக்கிறதென்றால், அதற்கு அவருடைய செயற்கரிய சாதனைகளே காரணம்.

வல்லம்பிரகார யுத்தம்:


1579இல் மதுரையை ஆண்ட மன்னன் முத்து வீரப்ப நாயக்கர் (Muttu Virappa Nayaka (1609—1623). முத்து வீரப்ப நாயக்கர் தன்னை மிக அதீதமான வல்லமையுள்ள அரசன் என்று நினைத்துக் கொண்டு, தன்னை மன்னனாக ஆக்கிய விஜயநகர சாம்ராஜ்யத்தையே எதிர்த்துக் கொண்டார். விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்து விடுபட்டு மதுரையைச் சுதந்திர நாடாக இவர் அறிவித்து விட்டார். தான் பார்த்து பிடித்து வைத்த ராஜா தன்னையே எதிர்க்க வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைப் போல இவன் பாய்கிறானே என்று விஜயநகரப் பேரரசர் இரண்டாம் வேங்கடபதி ராயர் பெரும் படையுடன் வீரப்பநாயக்கரை எதிர்த்துப் போரிட வந்து சேர்ந்தார். வழக்கம் போல சக்கரவர்த்திக்கு அடங்கிய தஞ்சை மன்னன் அச்சுதப்ப நாயக்கர் தனது படையுடன் விஜயநகர படைகளோடு சேர்ந்து கொண்டார். இவ்விரு படைகளும் தஞ்சையை அடுத்த வல்லம் எனும் ஊருக்கருகில் மோதிக் கொண்டன. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியின் படையும், தஞ்சை படையும் எதிர்த்துப் போரிடுகையில் மதுரைப் படைகள் தாக்குப்பிடிக்க முடியுமா என்ன. வெற்றி விஜயநகர படைகளுக்கும், தஞ்சை படைகளுக்கும்தான். முத்து வீரப்ப நாயக்கர் தோல்வியடைந்தார். 

போர்களில் வெற்றிபெற்ற மன்னர்கள் தங்கள் வெற்றி சிறப்புக்களை உடனடியாக கல்வெட்டிலோ அல்லது செப்புத் தகடுகளிலோ பதித்து வைத்து விடுவது வழக்கம். இதற்கு மாறாக அச்சுதப்பர் எந்த கல்வெட்டிலும் இந்த வெற்றிச் செய்தியை பதித்து வைக்கவில்லை. ஒருக்கால் இப்போதைய அரசியல் வாதிகளைப் போல இருந்திருந்தால் தஞ்சை ராஜ்யம் முழுவதும் வெற்றிவிழாக்களைக் கொண்டாடியிருப்பார். நல்ல காலம் அப்போது அப்படிப்பட்ட அரசியல் நிலைமை இல்லை.

அவர் தன் வெற்றியை பறைசாற்றிக் கொள்ளவில்லையே தவிர புதுக்கோட்டை செப்பேடுகளில் இந்த விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதிலும் ஒரு சிக்கல். அந்த செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள ஆண்டில் வேங்கடபதி ராயர் சக்கரவர்த்தியாக இல்லை, அவர் அதற்குப் பிறகுதான் ஆட்சிக்கு வந்தார், ஆகவே இதில் ஏதோ தவறு இருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

போர்த்துகீசியர்களுக்கு எதிரான போர்.

நாகப்பட்டினத்துக்கருகில் அச்சுதப்ப நாயக்கர் 'பரங்கியர்'களுடன் போரிட்டு வெற்றி பெற்றதாக "சாஹித்யரத்னாகரம்" எனும் நூலில் ராமபத்ராம்பா எழுதுகிறார். பரங்கியர்கள் என்று பொதுவாக நாம் ஐரோப்பிய வெள்ளை நிறத்தவர்களைக் குறிப்பது வழக்கம். இங்கு குறிப்பிடப்படும் 'பரங்கியர்' அனேகமாக அப்போது அங்கு வந்து குடியேறியிருந்த போர்த்துகீசியர்களைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இலங்கையில் குடியேறியிருந்த போர்த்துகீசியர்கள் மெல்ல நாகப்பட்டினத்திலும் வந்து குடியேறினார்கள். தென்னாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளெங்கும் இவர்கள் வந்து குடியேறிய காலம் அது. கள்ளிக்கோட்டை, கோவா போன்ற இடங்கள் நீண்ட நெடுங்காலம் இவர்கள் வசம் இருந்தது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இவர்களுடைய முக்கியப் பணி உள்ளூர் வாசிகளை மதமாற்றம் செய்வது. அவர்கள் எங்கு குடியேறுகிறார்களோ அந்தப் பகுதி மக்களை உடனடியாக மதமாற்றம் செய்து விடுவது என்பது இவர்கள் வழக்கம். அதுபோலவே இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் இவர்கள் மதமாற்ற நடவடிக்கைகளில் இறன்கியதை யாழ்ப்பாண மன்னர் எதிர்த்தார். ஆனால் இவர்கள் காரியத்தில் குறியாக இருந்த காரணத்தால் யாழ்ப்பாண மன்னர் இவர்கள் மீது போர் தொடுத்தார். அந்தப் போரில் தங்களுக்கு உதவ வேண்டுமென்று தஞ்சை மன்னரிடம் வேண்டுகோள் விடுத்தார் யாழ்ப்பாண மன்னர்.

இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லப்படும் காலகட்டத்தில், அதாவது 17ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் போர்த்துகீசியர்கள் நாகப்பட்டினம் அருகிலும் வந்து குடியேறியிருந்தார்கள், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தையும் எப்படியாவது தங்கள் வசம் கொண்டுவந்துவிட வேண்டும் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்த நேரம். அதற்கான படையெடுப்புகளையும் அவர்கள் முனைப்புடன் செய்து வந்தார்கள். இருந்த சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கையில் யாழ்ப்பாண மன்னர் இவர்களுடைய முயற்சிகளை முறியடிக்க இந்த யுத்தத்தில் உதவும்படி தஞ்சை அரசருக்குக் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அச்சுதப்ப நாயக்கரும் தனது படைகளை அனுப்பி போர்த்துகீசியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றிருக்க வேண்டும். இவற்றுக்கு மேலும் வலுவூட்டும்படியான மற்றொரு செய்தி என்னவென்றால், அந்த சமயத்தில் தஞ்சை மன்னர் போர்த்துகீசியர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் அப்போது தரங்கம்பாடி பகுதியில் வந்து குடியேறியிருந்த டச்சுக்காரர்களோடு நட்புரிமை கொண்டிருந்தார் என்பதுதான். இருக்கலாம் ஒரு ஐரோப்பிய எதிரியை முறியடிக்க மற்றொரு ஐரோப்பிய எதிரியுடன் கைகோர்த்தது, பின்னரும் பிரிட்டிஷ் பிரெஞ்சுக்காரகளை வைத்து பகடையாடியதை வரலாற்றில் பார்க்கிறோமே.

அச்சுதப்ப நாயக்கர் கால கலைகள்.



போர்கள் ஒரு பக்கம், அமைதியான சூழ்நிலை ஒரு பக்கம், அமைச்சர் கோவிந்த தீக்ஷிதரின் ஆணைப்படி மக்களுக்குப் பயன்படக்கூடிய முன்னேற்ற திட்டங்கள் ஒரு பக்கம் என்று அச்சுதப்பரின் ஆட்சி நன்றாக முன்னேறி வந்தது. இறைப் பணிகளுக்கு அவர் மிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். 1608ஆம் ஆண்டில் செம்பொன்னார்கோயிலுக்கு அருகிலுள்ள விளநகர் எனும் ஊர் ஆலயத்தில் ஒரு பெரிய மண்டபம் கட்டிவைத்தார். மாயூரத்தை அடுத்த மூவலூரிலுள்ள மார்க்கசகாயேஸ்வரர் கோயிலுக்கு நிறைய நிலபுலன்களை எழுதி வைத்தார். அவை தவிர சிதம்பரம், பனைப்பாக்கம் ஆகிய இடங்களில் இருக்கும் கோயில்களுக்கும் நிலங்களை மானியமாகக் கொடுத்துதவினார். 


அச்சுதப்ப நாயக்கர் விஜயநகர பேரரசர் பரம்பரை வழக்கப்படி ஒரு வைஷ்ணவ பக்தர். திருவரங்கப் பெருநகருள் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாள் மீது சிறு வயது முதலே அசைக்கமுடியாத பக்தி. ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத சுவாமி ஆலயத்தின் வடக்கு, மேற்கு வாசல் கோபுரங்களை இவர் எழுப்பினார். எட்டு சுற்றுப் பிரகாரங்களையும் இவர்தான் வடிவமைத்துக் கட்டினார். விமானங்கள், கோபுரங்கள் ஆகியவற்றைக் கோயில் வளாகத்துள் கட்டிக் கொடுத்தார். உள் விமானங்களின் மேல் உள்ள தங்க முலாம் பூசியதும் இவர்காலத்தில்தான். ஆலயத்தின் துவஜஸ்தம்பம் தவிர விலை உயர்ந்த கற்கள் பதித்த கிரீடம் உட்பட பெருமாள் விக்கிரகத்தையும் இவர்தான் ஆலயத்துக்கு அளித்தார். ஸ்ரீரங்கம் காவிரியில் படித்துறையொன்றையும் கட்டித் தந்தார். இதற்கெல்லாம் ஊக்கமளித்தது அவருடைய அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர் என்றுகூட சொல்வதுண்டு. 

காவிரி நதிக் கரையில் புஷ்யமண்டபம் எனும் பெயரில் படித்துறையோடு கூடிய மண்டபங்கள் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட ஊர்களாவன, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு ஆகிய இடங்களாகும். ஏழை பிராமணர்களுக்கு உணவளிக்க இந்த மண்டபங்களைப் பயன்படுத்தி வந்தார்கள். திருவையாறு அருகே காவிரிக்குக் குறுக்கே ஒரு தடுப்பணையையும் இவர் அமைத்து, விவசாயத்துக்குத் தன்ணீர் கிடைக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்தார். இவர் சமஸ்தானத்திற்குட்பட்ட பற்பல சிறு கிராமங்களிலும் அக்ரஹாரம் எனும் குடியிருப்பை அமைத்து அங்கெல்லாம் வேதம் கற்றறிந்த பிராமணர்களை குடியேற்றினார். வேதங்களைப் பயிலவும், வேத முறைகளின்படி யாகங்களை மக்கள் நன்மைக்காக செய்யவும் இவர் ஊக்கமளித்தார். 

வேத பண்டிதர்களுக்கென்று ஒரு குடியிருப்பைக் கட்டி அங்கு அவர்களை குடியமர்த்துவது என்றால், தரிசாக கிடக்கும் ஒரு பகுதியில்தான் அந்தக் குடியிருப்பு கட்டப்படும். அங்கு போய் இருபது அல்லது முப்பது குடும்பங்கள் குடியேறி வேதம் பயின்று, பயிற்றுவித்துக் கோண்டிருந்தால் மட்டும் போதுமா? அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள். அதற்கும் மன்னர் மானியங்களைக் கொடுத்தார். இதுபோன்ற அக்ரஹாரங்களில் மேற்கில் வைணவ ஆலயமொன்றும், கிழக்கில் சிவாலயம் ஒன்றையும், நீர்நிலைகளுக்கு அருகில் விநாயகருக்கு ஆலயமும் எழுப்பி வைப்பார்கள். இந்த வேதபிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களில் உழுது பயிரிட்டு பாடுபட பல குடும்பங்கள் அங்கு குடியேறும். இப்படி திடலாகக் கிடந்த ஒரு இடத்தில் புதிதாக கிராமமொன்று உருவாகிவிடும். அப்படி உருவான பல கிராமங்களைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கிறோம்.

இலக்கியம் இவர் காலத்தில் செழித்து வளர்ந்தது. தமிழும், சம்ஸ்கிருதமும், தெலுங்கும் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். பற்பல இலக்கியங்கள் இந்த மொழிகளில் உருவாகி வந்தன. அப்போது இயற்றப்பட்ட சம்ஸ்கிருத, தெலுங்கு இலக்கியங்கள் தஞ்சை நாயக்க வம்சத்தின் பெருமைகளை பறைசாற்றின. அந்த இலக்கியங்கள் தஞ்சை நாயக்கர்கள் ஆண்ட பகுதிகளை இப்போது போல நெற்களஞ்சியம் எனும் பொருள்பட "சாலிவனம்" என்று அதாவது நெல்விளையும் காடு என்று குறிப்பிட்டு, நாட்டின் வளத்தைச் சொல்லி பெருமைப் பட்டன.



அச்சுதப்பரின் இறுதிக் காலம்.

இப்போதெல்லாம் பதவியில் இருப்போர் போதும், நமக்கு வயதாகிவிட்டது என்று இளைய தலைமுறையை பதவியில் அமர விடுவதில்லை. தசரத சக்கரவர்த்தி தன் தலைமுடியில் ஒன்று நரைத்து விட்டது என்பதைக் கண்டு, போதும் நாம் ஆண்டது, இனி ராமனை அரசனாக்குவோம் என்று அவனுக்குப் பட்டம் சூட்ட முனைந்தானாம். அது அந்தக் காலம். கேரளத்தில் அச்சுத மேனன் என்றொரு கம்யூனிஸ்ட் தலைவர். ஒரு முறை முதல்வராக இருந்த அவர் போதும், இனி வேறு யாராவது பொறுப்பேற்கட்டும் என்று விலகி நின்ற கதை நம் காலத்தில் நடந்தது. போகட்டும் அந்தக் கதைகள். நாயக்கர்கள் கதைக்கு வருவோம். அச்சுத மேனன் பற்றி பார்த்தோமல்லவா, அதே பெயரைக் கொண்டதாலோ என்னவோ அச்சுதப்ப நாயக்கரும் விஜயநகர சக்கரவர்த்தி வேங்கடபதி ராயர் 1614இல் காலமானவுடன், தான் ஆண்டதும் போதும் என்று பதவி விலகிக் கொண்டு, தனது மகன் ரகுநாத நாயக்கரை பதவியில் அமர்த்திவிட்டுத் தான் நற்காரியங்கள் புரிந்து இறை பணியில் தன் வாழ்நாளைக் கழித்திட முடிவு செய்தார். வானப்பிரஸ்த வாழ்க்கை வாழ்ந்தார்.அதற்காக அவர் ஸ்ரீரங்கம் சென்று ஆன்மிகத்திலும் வழிபாடுகளிலும் ஈடுபட்டு, வைஷ்ணவ அறிஞர்களோடு தொடர்பு கொண்டு இறுதிக் காலம் வரை வாழ்ந்தார். அற்புதான வாழ்க்கை அச்சுதப்ப நாயக்கரின் வாழ்க்கை. மற்றவர்கள் பார்த்து பின்பற்றவேண்டிய அசாத்தியமான பண்புகளைக் கொண்டிருந்தவர் அவர். அவருக்கு அமைந்த அமைச்சரும் அப்படிப்பட்டவர் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். வாழ்க அச்சுதப்ப நாயக்கரின் பெருமை.

இவ்வளவும் சொல்லிய பின் அச்சுதப்பர் எப்போது இறந்தார் என்பது தெரியவேண்டாமா ? தெரியவில்லை. ஒரேயொரு செய்தி மட்டும் அவர் இறந்த ஆண்டை கணக்கிட உதவுகிறது. ஒரு சம்ஸ்கிருத இலக்கியத்தில் அச்சுதப்பரின் ஆசியைப் பெறுவதற்காக ரகுநாத நாயக்கர் ஸ்ரீரங்கம் வந்து தந்தையிடம் ஆசி வேண்டினார் என்கிறது. அது நடந்தது 1617 என்பதால், அச்சுதப்பர் 1617க்குப் பிறகுதான் இறந்திருக்க வேண்டும்.

ரகுநாத நாயக்கர். (1600 - 1634)

அச்சுதப்ப நாயக்கர் காலத்திலேயே பதவிக்கு வந்துவிட்டவர் அவருடைய குமாரர் ரகுநாத நாயக்கர். தஞ்சை நாயக்கர் பரம்பரையில் மூன்றாவது மன்னர் இவர். 1600 தொடங்கி 1634 வரையிலான காலகட்டத்தில் இவர் தஞ்சையை ஆண்டார். இதே 1600இல்தான் இங்கிலாந்து நாட்டில் இந்தியாவுக்கு வந்து வாணிபம் செய்வதற்காக கிழக்கிந்திய கம்பெனி எனும் ஒரு ஸ்தாபனம் உதயமானது. 

தஞ்சையை ஆண்ட நான்கு நாயக்க மன்னர்களில் இவர்தான் சிறப்பானவர் என்று சொல்கிறார்கள். இவர் காலம் தஞ்சை ராஜ்யத்தின் பொற்காலம். காரணம் கலை, இலக்கியம், கர்நாடக இசை போன்ற துறைகளில் தஞ்சை சிறந்து விளங்கியது. அச்சுதப்ப நாயக்கரின் மூத்த மகன் இவர். தனக்கு புத்திர பாக்கியம் வேண்டும் என்று எல்லா தெய்வங்களையும் பிரார்த்தித்துப் பிறந்த மகன் இந்த ரகுநாத நாயக்கர். ராஜாவின் அன்பிற்குரிய புத்திரன் என்பதால் மிக அருமையாகப் போற்றப்பட்டு வளர்ந்தார் ரகுநாதர். இளம் வயதிலேயே சாஸ்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார். போர்க்கலையிலும் வல்லவராக விளங்கினார் ரகுநாதர். தந்தையார் ராஜாவாக இருந்த போதே இவரை யுவராஜாவாக நியமித்திருந்ததால் நிர்வாக விஷயங்களிலும் நன்கு தேர்ந்தவராக இருந்தார் இவர். 

இவருக்கு அன்றைய ராஜ வம்சத்தின் வழக்கப்படி பல மனைவியர் இருந்தனர். மூத்த பட்டத்து ராணியாக இருந்தவர் கலாவதி என்பார். மன்னருக்குப் பல ஆசை நாயகிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ராமபத்ராம்பா என்பவர். இவர்தான் நாயக்கர் வரலாற்றை இலக்கியமாக நூலாக்கித் தந்தவர். விஜயநகர சாம்ராஜ்யம் சிறப்புற்று விளங்கிய காலத்தில் தட்சிண சுல்தான்கள் எனும் தென்னாட்டு சுல்தான்களோடு போர் நடப்பது வழக்கமாக இருந்தது. தன்னுடைய இளம் வாலிப பருவத்திலேயே ரகுநாதர் கோல்கொண்டா சுல்தானுடன் போர் புரிந்திருக்கிறார். 

அச்சுதப்பர் வாழ்ந்த காலத்திலேயே இவர் யுவராஜாவாக அக்கப்பட்டாரல்லவா? அப்படி இவர் யுவராஜாவாக நியமிக்கப்பட்ட ஆண்டு 1600. அதுமுதல் பதினான்கு வருடங்கள் அதாவது 1614 வரை இவர் தன் தந்தைக்கு உதவியாக செயல்பட்டு வந்தார். 1614க்குப் பிறகு ரகுநாதரே ராஜாவாக முடிசூட்டிக் கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்யத் தொடங்கி விட்டார். அதுமுதல் 1634 வரையில் இவர்தான் தஞ்சை நாயக்க ராஜ்யத்தின் ஏகசக்ராதிபதியாக விளங்கினார்.

ரகுநாத நாயக்கர் காலத்தில் போர்கள்.

ரகுநாத நாயக்கர் தன்னுடைய ஆட்சி காலத்தில் பல போர்களைச் சந்தித்திருக்கிறார். விஜயநகர பேரரசு சார்பிலும் போரிட்டார், தன்னுடைய ராஜ்யத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த சில சிற்றரசர்களோடும் போரிட்டார், கடல்கடந்து யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்த போர்த்துகீசியர்களுடனும் போரிட்டு வெற்றி பெற்றார். அவற்றை விவரமாகப் பார்ப்பதற்கு முன்பாக அந்த யுத்தங்களின் பின்னணியைச் சற்று பார்ப்போம்.

இவர் காலத்தில் விஜயநகர சக்கரவர்த்தியாக இருந்தவர் இரண்டாம் ஸ்ரீரங்கா. இவருக்கும் ஜக்கராயா என்பவருக்கும் விஜயநகர் அரசர் பதவிக்கு போட்டி இருந்தது. இருவரும் எதிரிகளாகப் போர் புரிந்தனர். இவர்களுக்குள் நடந்த போரில் இரண்டாம் ஸ்ரீரங்கா கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த தஞ்சை ரகுநாதர் ஜக்கராயர் மீது போர்தொடுத்தார். ஜக்கராயரின் மீது போரிடும் முன்பாக ஜக்கராயரின் சிற்றரசனாக இருந்த சோழகன் என்பவர் கொள்ளிடம் அருகில் இருந்த கோட்டையில் இருந்து கொண்டு ரகுநாதரைத் தடுத்துப் போர் புரிந்தார். இந்த சோழகரை கும்பகோணம் வரை துரத்தியடித்துவிட்டு கொள்ளிடத்துக் கோட்டையையும் பிடித்துக் கொண்டார் ரகுநாதர்.

சோழகருக்கு எதிரான போர்.

ராமபத்ராம்பா எழுதியுள்ள வரலாற்றுக் காவியத்தில் சோழகருக்கு எதிரான போர் பற்றி குறிப்பிடுகிறார். கொள்ளிடம் அருகே ஆற்றுக்கிடையே அமைந்த தீவு ஒன்றை ஆண்டுகொண்டிருந்தவர் சோழகர். இவர் செஞ்சி மன்னனுக்குக் கீழ்படிந்த ஒரு சிற்றரசன். செஞ்சியை ஆண்டவரும் ஒரு நாயக்க மன்னரே. இந்த சோழகர் ஆண்ட பகுதியொன்றும் பெரும் நிலப்பரப்பு அல்ல. ஏதோ பெயருக்கு ராஜா என்றாலும் இவர் வழிப்பறி செய்து பொருள் சேர்த்துக் கொண்டிருந்தார் என்கின்றனர். ஆழ்வாரில் ஒருவரான திருமங்கை மன்னனே பெருமாள் கைங்கர்யத்துக்காக வழிப்பறி செய்தாரல்லவா? அதனால்தானோ என்னவோ இந்த சோழகரும் வழிப்பறி செய்து வாழ்ந்தார். இவரை எப்படியாவது அடக்கி வைத்துவிட எண்ணி ரகுநாத நாயக்கர் முடிவு செய்து இவரோடு போரிட முடிவு செய்தார்.

முதலில் ரகுநாத நாயக்கர் இந்த சோழகரின் தலைமையகத்தைத் தாக்கினார். கும்பகோணத்துக்கு அருகில் இருந்தது இந்தப் பகுதி. சோழகருக்கு கிருஷ்ணப்ப நாயக்கர், போர்த்துகீசியர்கள், முகமதிய வியாபாரிகள் ஆகியோர் உதவி செய்தனர். அந்த பலத்தைக் கொண்டு அவர் பலம் பொருந்திய ரகுநாதரை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் இறுதியில் ரகுநாத நாயக்கர் பீரங்கிகளைக் கொண்டு குண்டு மழை பொழிந்து போரில் வெற்றிக் கொடி நாட்டினார். சோழகரைப் பிடித்து அவருடைய குடும்பத்தாரோடு சிறையில் தள்ளி அவர்களுடைய தொல்லைக்கு ஒரு முடிவு கட்டினார்.


இதனைத் தொடர்ந்து ரகுநாத நாயக்கர் அப்போது யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போர்த்துகீசியர்கள் மீது போர்தொடுத்தார். அங்கு சென்று அவர்களோடு போரிட்டு வென்றபின் ஊர் திரும்பினார். அந்தப் போர் பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

யாழ்ப்பாணப் படையெடுப்பு.

சின்னஞ்சிறிய பகுதியின் தலைவனாக இருந்த போதிலும், பலம் பொருந்திய பல நண்பர்களையும் போர்த்துகீசியர்களையும் சேர்த்துக் கொண்டு வல்லமை பொருந்திய தஞ்சை நாயக்க மன்னரை எதிர்த்துப் போரிட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சோழகர். இவருடன் நடந்த போரில் இவருக்கு ஆதரவாக இருந்த போர்த்துகீசியர்களை தண்டிக்க எண்ணினார் ரகுநாத நாயக்கர். இந்த படையெடுப்புக்கு ரகுநாத நாயக்கரே தலைமையேற்று படை நடத்திச் சென்றார். கடல்கடந்து சென்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த யுத்தத்தில் தஞ்சை நாயக்கர் படைகள் வெற்றி பெற்று போர்த்துகீசியர்களை அங்கிருந்து துரத்தியடித்தது. வெற்றி பெற்று சொந்தமாக்கிக் கொண்ட யாழ்ப்பாணத்துக்கு அந்த தேசத்து ராஜா ஒருவரை பதவியில் அமர்த்திவிட்டு ரகுநாத நாயக்கர் ஊர் திரும்பினார். பாவம் அந்த ராஜா, இரண்டு ஆண்டுகள் மட்டுமே ராஜ்யத்தை ஆண்டபின் 1619இல் அவரை பதவியிலிருந்து தூக்கியடித்த உள்ளூர் எதிரிகள் அவரைக் கொன்றும் போட்டனர்.

அதன் பின் விஜயநகர மன்னர் ஸ்ரீரங்காவைக் கொன்ற ஜக்கராயர் மீது பார்வையைத் திருப்பினார். திருச்சிக்கருகில் இருக்கும் தோப்பூர் எனுமிடத்தில் பல லட்சம் வீரர்கள் கொண்ட இரு பக்கத்துப் படைகளும் மோதின. இந்தப் போரில் ரகுநாத நாயக்கர் வெற்றி பெற்றார். இந்த தோப்பூர் யுத்த வெற்றியை ஒரு வெற்றி ஸ்தூபி எழுப்பி கொண்டாடினார், அதன் பின்னர் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியைப் பிடித்துக் கொண்டார்.

அச்சுதப்ப நாயக்கர் காலத்திலேயே அவர் தலைமையில் அவருடைய மகன் ரகுநாத நாயக்கர், அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர், யாழ்ப்பாணத்திலிருந்து ஓடிவந்து தங்கியிருந்த அந்நாட்டு அரசர் ஆகியோர் கூடி விஜயநகர பேரரசருக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் ஜக்கராயர் மீதும் தெற்கே அவருடைய ஆதரவாளரான சோழகர் மீதும் படையெடுப்பது பற்றி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் ரகுநாத நாயக்கர் இப்போது இந்தப் படையெடுப்பையும் நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்.

தோப்பூர் யுத்தம்.

அந்த காலகட்டத்தில் தோப்பூர் யுத்தம் என்பது மிகவும் பெரிய யுத்தமாகக் கருதப்பட்டிருக்கிறது. வட நாட்டில் நடந்த பல யுத்தங்கள் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்ட அளவுக்கு இந்த தோப்பூர் யுத்தம் எழுதப்படவில்லையாதலால் இதனைப் பற்றி பலரும் அறிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 1616 டிசம்பர் 16ஆம் நாள் இந்த யுத்தம் நடந்திருக்கிறது. ரகுநாத நாயக்கர் பற்றி ராமபத்ராம்பா எனும்அவருடைய ஆசைநாயகியொருவர் எழுதிய வரலாற்று நூலில் இந்த விவரம் குறிக்கப்படுகிறது. 

இந்த தோப்பூர் திருச்சி கல்லணைக்கு அருகில் இருப்பதாக முன்பே சொல்லியிருக்கிறோம். இப்போது கல்லணைக்கு அருகில் இருக்கும் தோகூர் என வழங்கப்படும் ஊர்தான் இந்தத் தோப்பூர்.இந்த யுத்தத்துக்காக ரகுநாத நாயக்கர் தன் படைகளுடன் சென்று திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பழமார்நேரி எனும் ஊரில் 1616ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே சென்று முகாமிட்டிருந்தார் என்றும் தொடர்ந்து அந்த வருஷம் டிசம்பர் மாதம் தோப்பூர் யுத்தம் நடந்ததாகவும் தெரிகிறது. இந்த தோப்பூர் யுத்தத்தின் பின்னணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? இப்போது பார்ப்போம்.

ரகுநாத நாயக்கர் தஞ்சாவூரில் திறமை மிக்க அரசாட்சியைக் கொடுத்து வந்த நேரத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைமையில் வாரிசுரிமைப் போர் துவங்கியது. வேலூர், சந்திரகிரி ஆகிய இடங்களில் இந்த வாரிசுரிமைப் போர் தொடர்ந்து நடைபெற்றது. தக்ஷிண சுல்தான்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தோற்கடித்து அது சின்னாபின்னமடைந்த நிலையில், விட்ட குறை தொட்ட குறையாக விஜயநகர மன்னர்கள் மேலும் தெற்கே வேலூர் சந்திரகிரி ஆகிய இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த அரசர் வரிசையில் இரண்டாம் வெங்கட ராயரின் தம்பி கொப்புரி ஜக்க ராயர் என்பவர் இருந்தார். இவருக்கு ஒரு ஆசை நாயகி, ஆடம்பரமும், பதவி மோகமும் கொண்ட ராணியாகத் திகழ்ந்தார். அவர் பெயர் ஒபவம்மா. இவருக்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தான். அவனுக்குத்தான் ராஜ்யத்தை ஆளும் உரிமை என்று இந்த ஒபவம்மா தூண்டுதலினால் இரண்டாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசுரிமை பெற்றவரையும், அவருடைய முழு குடும்பத்தையும் வேலூர் சிறையில் கொன்றுவிட்டனர். 

இந்த சூதும் சதியும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க இந்த ஒபவம்மாவின் கணவர் ஜக்க ராயரை எதிர்த்து காளஹஸ்தி பகுதியை ஆண்ட எச்சமன் என்பவர் ராம தேவர் என்பவர்தான் பட்டத்துக்கு உரியவர் என்று கலகம் விளைவிக்கத் தொடங்கினார். வேலூர் சிறையில் அடைபட்டிருந்த இந்த ராமதேவரை இந்த காளஹஸ்தி அதிபர் விடுவித்து வெளிக் கொணர்ந்து விட்டார். ஜக்கராயர் மட்டும் என்ன இளைத்தவரா? இவர் போய் செஞ்சியை ஆண்டுகொண்டிருந்த நாயக்க மன்னரையும், மதுரையில் இருந்த முத்துவீரப்பரையும் சந்தித்து காளஹஸ்தி எச்சமனையும், ராமதேவரையும் எதிர்த்து போரிடும்படி தூண்டினார்.

காளஹஸ்திக்காரர் மட்டும் என்ன இளிச்சவாயனா என்ன? அவர் பங்குக்கு தஞ்சை ரகுநாத நாயக்கரை சந்தித்து உதவி கேட்டார், ராமதேவனை பதவியில் அமர்த்த. ரகுநாத நாயக்கர் வஞ்சனையில்லாமல், தனக்கு இன்றும் என்றும் விஜயநகர சாம்ராஜ்யாதிபதிகள்தான் எஜமானர்கள் எனும் உணர்வுடையவர்.

இந்த நிலையில் பழைய விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றுவிட்ட நிலையிலும், அதன் பிரிவுகளாக ஆங்காங்கே சிதறிக் கிடந்த நாயக்க வம்சத்து சிற்றரசர்கள் தங்களுக்குள் பதவிப் போராட்டத்தில் குதித்தனர். ஜக்கராயர் ஒரு பெரும் படையுடன் திருச்சினாப்பள்ளிக்கு அருகில் வந்து சேர்ந்தார். மதுரை முத்துவீரப்பர் தனது திருச்சினாப்பள்ளி படைகளுடன், செஞ்சி, மதுரை ஆகிய இடங்களிலிருந்தும் படைகளை வரவழைத்துக் கொண்டார். இவர்கள் தவிர கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்ய வந்து சேர்ந்திருந்த போர்த்துகீசியர் களிடமிருந்தும் படைவீரர்களைக் கேட்டுப் பெற்று தனக்கு உதவிக்காகக் கொண்டு வந்திருந்தார். 

விஜயநகரத்து படைகளை தன்னுடைய காளஹஸ்தி படையுடன் சேர்த்து எச்சமன் தலைமை வகித்து அழைத்து வந்தான். அப்படி அந்த படைகள் வரும் வழியில் தஞ்சைக்கு வந்து ரகுநாத நாயக்கரின் படைகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். போதாதற்கு கர்நாடகப் பகுதிகளிலிருந்து படைகளும், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த படைகளும், டச்சுக்காரர்களும் இந்த படையில் சேர்ந்து கொண்டனர். இப்போது இரு கட்சிகள் ஒன்றுக்கொன்று மோத தயாராக நின்றன.

ஒன்று ஜக்கராயர் தலைமையில், மதுரை, திருச்சி, செஞ்சி, போர்த்துகீசியர் ஆகிய படைகள். எதிரில் விஜயநகர சாம்ராஜ்யப் படைக்கு காளஹஸ்தி எச்சமன் தலைமையில் தஞ்சை ரகுநாத நாயக்கர் படை, கர்நாடகப் படை, யாழ்ப்பாணப் படை, டச்சுக்காரர்கள் படை ஆகியவை எதிர் வரிசையில் நின்றன.

இவ்விரு படைவீரர்களும் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தோப்பூர் எனுமிடத்தில் 1616ஆம் வருஷத்தில் ஒருவரையொருவர் எதிர்கொண்டு மோதினர். இந்த தோப்பூர் திருச்சினாப்பள்ளிக்கும் கல்லணைக்கும் இடையில் உள்ள சிறிய ஊர். இந்த இடத்தில் கூடிய இவ்விரு படைகளிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம் இருக்குமென்று சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். தென்னகத்தில் நடந்த போர்களில் மிக அதிக அளவில் வீரர்கள் கலந்துகொண்ட போர்களில் இந்த தோப்பூர் போரும் ஒன்று என்பது அவர்கள் கருத்து.

போர் உக்கிரமாக நடந்தது. விஜயநகர படைகள் எச்சமன், ரகுநாத நாயக்கர் ஆகியோர் தலைமையில் வீரமாகப் போரிட்டனர். ஜக்கராயர் தலைமையிலான படையால் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. போரின் உச்ச கட்டத்தில் ஜக்கராயர் எச்சமனால் கொல்லப்பட்டார். ஜக்கராயர் படைகள் தலைதெறிக்க ஓடத்தொடங்கினர். ஜக்கராயரின் தம்பி எதிராஜர் உயிர் பிழைக்க ஓடிவிட்டார். மதுரை முத்துவீரப்ப நாயக்கர் தப்பி ஓட முயல்கையில் எச்சமனின் தளபதியிடம் திருச்சினாப்பள்ளி அருகே மாட்டிக் கொண்டார். செஞ்சி மன்னர் செஞ்சி கோட்டை தவிர மற்ற எல்லா இடங்களையும் இழந்து நின்றார். இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான ஒபவம்மாவின் வளர்ப்பு மகன் இரண்டாம் வெங்கடராயர் சிறைபட்டான். இந்த போரின் வெற்றியை தஞ்சை ரகுநாத நாயக்கரும், எச்சமனும் சிறப்பாகக் கொண்டாடினர். ராம தேவனுக்கு ராமதேவ ராயர் எனப் பெயர் சூட்டி 1617இல் மகுடம் சூட்டி, இதன் நினைவாக பல இடங்களில் வெற்றி ஸ்தூபிகளை எழுப்பி கொண்டாடினர். புதிய மன்னன் ராமதேவராயருக்கு அப்போது வயது 15. இப்படியாக சோழ மண்டலத்தில் நாயக்க மன்னர்களில் தலைசிறந்தவராகவும், கலை இலக்கியங்களில் மட்டுமல்ல, போரிலும் தான் வீரம் மிக்கவர் என்பதை நிரூபித்தார் ரகுநாத நாயக்கர். 

பிற போர்கள்:

சோழகருடனான யுத்தம், தோப்பூர் யுத்தம், யாழ்ப்பாண யுத்தம் ஆகியவை தவிர வேறு சில போர்களிலும் ரகுநாத நாயக்கர் ஈடுபட்டார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் போரிட்டு போர்த்துகீசியர்களைத் துரத்திவிட்டு உள்ளூர் ராஜாவை பதவியில் அமர்த்திய பின்னர் அவரும் இரண்டே ஆண்டுகளில் கொல்லப்பட்டு புரட்சி ஏற்பட்டது அல்லவா? அந்த நிகழ்வுகளைத் தன்னால் தடுத்து நிறுத்த முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் மட்டும் ரகுநாதருக்கு இருந்தது. அதனால் தொடர்ந்து போர்த்துகீசியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டேயிருந்தார். மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் 1620 ஆம் ஆண்டுவாக்கில் இருமுறை போர்த்துகீசியர்களுக்கு எதிராக போரிட்டு எழுந்தார்கள். ரகுநாதரும் அந்த காலகட்டத்தில் ஐந்து முறை படைகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைப் பிடிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை.

கலைகளும் கர்நாடக இசையும்.

ரகுநாத நாயக்கருக்கு கர்நாடக இசையில் ஆர்வம் அதிகமிருந்ததால் அதை மக்கள் கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தினார். மன்னருடைய தாய்மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கில் இயற்றப்பட்ட கர்நாடக இசை கீர்த்தனைகளில் அதிகம் கவனம் செலுத்தலானார். தமிழ்நாட்டில் தெருக்கூத்து போல, தெலுங்கு கன்னடம் பேசும் பகுதிகளில் வழங்கிவந்த கிராமியக் கலையான "யட்சகானம்" எனும் கலையில் இவர் அதிக ஆர்வம் காட்டினார். வாத்திய இசையில் வீணை வாத்தியம் வாசிப்பதிலும் இவர் வல்லவராக இருந்தார். யட்சகானத்துக்காக பாடல்களையும் இவர் இயற்றியிருக்கிறார். 

க்ஷேத்ரவ்யர் என்பவர் புகழ்பெற்ற வாக்யேயக் காரர். அவர் தஞ்சைக்கு வந்து மன்னருக்காக பல பதங்களை இயற்றித் தந்திருக்கிறார். நாயக்க மன்னர்கள் அனைவருமே சிறந்த வைணவ பக்தர்கள் என்பதால் இவர் பல பெருமாள் கோயில்களை புனரமைப்பு செய்து கொடுத்திருக்கிறார். கும்பகோணம் நகரத்தில் அமைந்திருக்கும் புகழ்வாய்ந்த ராமஸ்வாமி ஆலயம் இவரால் கட்டப்பட்ட கோயில். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகமும், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி ஆலயத்தின் கோபுரமும் இவரால் கட்டப்பட்டவை. கும்பகோணத்தை அடுத்த ஒப்பிலியப்பன் கோயிலை விரிவு படுத்தியும், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தின் விரிவாக்கத்தையும் இவரே செய்து முடித்தார். திருவையாறு கோயிலுக்கு தேர் அமைத்துக் கொடுத்து, தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து வைத்தார். பசுபதிகோயிலிலும் தேரோட்டம் சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்தார்.

இசைக் கருவிகளுள் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் கரங்களில் தவழும் இசைக் கருவி வீணை. மிகப் புனிதமான இந்த இசைக் கருவி இவர் காலத்தில் இருந்த அமைப்பை மாற்றி இப்போது நாம் பார்க்கும் வீணை அமைப்பை இவர்தான் உருவாக்கினார். இசைக் கலையில் வல்லவரான இவர் ஜயந்தசேனா எனும் புதிய ராகமொன்றையும் ராமானந்தா எனும் தாளத்தையும் கண்டுபிடித்தார். தெலுங்கு மொழியில் பல இசைக் காவியங்களையும் எழுதி உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவைகளில் சில பாரிஜாதப்ரஹரணமு, வான்மீகிசரித்திரம், ருக்மணிபரிணயம், யக்ஷகானம், ராமாயணம் முதலியன. சங்கீத சுதா எனும் சம்ஸ்கிருத நாடகமும், பரதசுதாவும் இவரால் எழுதப்பட்டவை.

ராமபத்ராம்பா, மதுரவாணி, செமகுரு வெங்கடராஜு, கிருஷ்ணத்வாரி ஆகியோர் இவருடைய காலத்தில் சிறந்த அறிஞர்களாக விளங்கியவர்கள். மன்னன் ரகுநாத நாயக்கர் குதிரை சவாரி செய்வதிலும், வாட்போரிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

வேதவித்துக்களாகத் திகழ்ந்த பிராமணர்களிடம் மன்னருக்கு அபிமானம் அதிகம் இருந்தது. இவர் காலத்தில் அமைந்துக் கொடுக்கப்பட்ட அக்ரஹாரங்களில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு ஏராளமான வசதிகளும், வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஏழை பிராமணர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் இவர் ஏராளமாக உதவிகளை வாரி வழங்கியிருக்கிறார். ஸ்ரீரங்கம் கோயில் பராமரிப்புக்காக இவர் ஒரு கிராமத்தையே கோயிலுக்கு எழுதி வைத்தார். மாத்வ குருவான விஜயேந்திர தீர்த்தருக்கும் அவருடைய கும்பகோணம் மடத்துக்கும் ஏராளமாக சொத்துக்களை எழுதிவைத்தார்.

ஐரோப்பியர்களுடனான உறவு.

டென்மார்க்கிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் இந்தியா வந்து குடியேறி வர்த்தகம் செய்து வந்த ஐரோப்பிய வியாபாரிகளிடம் இவர் நல்ல உறவு வைத்திருந்தார். ரகுநாத நாயக்கர் அரசப் பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக சென்னப்பட்டினம் அருகில் சாந்தோம் கடற்கரைப் பட்டினமான நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் போர்த்துகீசியர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கி நடத்தி வந்தனர். டச்சுக்காரர்களும் தங்கள் பங்குக்கு 1610இல் புதிதாகத் தொழிலைத் தொடங்கினர். இங்கிருந்த மன்னர்களுக்கு போர்த்துகீசியர்களிடம் நல்லெண்ணம் இருக்கவில்லை, ஆனால் டச்சுக்காரர்களை முழுமனதோடு ஆதரித்து வந்தனர். ஓரளவுக்கு போர்த்துகீசியர்களை அடக்கி வைக்க இதை ஒரு உபாயமாகக்கூட இவர்கள் பயன்படுத்தி வந்தனர். 

டேனிஷ்காரர்கள் கடற்கரைப் பட்டினமான தரங்கம்பாடியில் 1620இல் ஒரு குடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயர்களுடைய கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகளாக ஜான்சன் என்பவரும் புராக்டன் என்பவரும் தஞ்சாவூருக்கு வந்து அரசவையில் மன்னன் ரகுநாத நாயக்கரைச் சந்தித்திருக்கின்றனர். மன்னரிடம் அவருடைய பிரதேசத்தில் வியாபாரம் செய்வதைப் பற்றி வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். அவருடைய சம்மதத்தின் பேரில் 1624இல் கம்பெனி சார்பில் ஒரு தூதுக்குழு காரைக்காலுக்கு வந்து இறங்கி பின்னர் தஞ்சாவூர் சென்று மன்னரை அரசவையில் சந்தித்திருக்கின்றனர். 

கிழக்கிந்திய கம்பெனி வியாபாரிகளின் தூதுக்குழுவை மன்னர் அன்போடு வரவேற்று உபசரித்திருக்கிறார். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, அவர்கள் காரைக்காலில் வியாபாரத்தைத் தொடங்க அனுமதி அளித்திருக்கிறார். முதலில் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு இப்படி அனுமதி கொடுத்தாரே தவிர, பிறகு என்ன நினைத்தாரோ என்னவோ அவர்கள் ஆண்டொன்றுக்கு 7000 ரியால் வாடகை கேட்டிருக்கிறார். மன்னர் ஏன் இப்படி மாறினார் என்பதற்கு ஆங்கில கம்பெனியார் சொன்ன காரணம் மன்னர் போர்த்துகீசிய, டேனிஷ் வியாபார நிறுவனங்களின் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு இப்படி நடந்து கொள்கிறார் என்று காரணம் கற்பித்தனர். 

மன்னருடைய உத்தரவை ஏற்றுக் கொள்ளாத கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியான ஜான்சன் இங்கிலாந்துக்குத் திரும்பிவிட்டார். ஆனால் இப்படி மன்னரின் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொண்டு, நாடு திரும்பிய ஜான்சனின் நடத்தையை கம்பெனி ஏற்றுக் கொள்ளவில்லை. கிழக்கிந்திய கம்பெனியார் புதுச்சேரியையும் தங்கள் வியாபாரத் தலமாக ஆக்கிக் கொள்ள செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னர்கள் மூலம் முயன்று பார்த்து அதிலும் தோல்வி கண்டனர்.

ரகுநாத நாயக்கரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள்.

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ரகுநாத நாயக்கர் ஆட்சி புரிந்தாலும் தஞ்சை சோழமண்டலத்தின் எல்லைகளையும் தாண்டி அவரது ஆட்சி விரிவடைந்திருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர், திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடி, காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி, வேலூர் அருகில் நெடுங்குன்றம் மற்றும் நாரத்தம்பூண்டி ஆகிய இடங்களிலும் இவர் காலத்திய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சைப் பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்களிலேயே எல்லா துறைகளிலும் சாதனை படைத்தவராகவும், கல்வி அறிவு மிக்கவராகவும், இசை, இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவராகவும், போர்க்கலையில் தேர்ந்தவராகவும் விளங்கிய முதன்மையான மன்னர் ரகுநாத நாயக்கரே! இவருக்குப் பிறகு இவருடைய குமாரர் விஜயராகவ நாயக்கர் தஞ்சை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

அமைச்சர் கோவிந்த தீட்சதர்.

தஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரின் கடைசி நாட்கள் தொடங்கி ரகுநாத நாயக்கர் காலம் வரை அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து வழிகாட்டி, நல்ல பல காரியங்களை மக்கள் நலனுக்காக செய்தவர் கோவிந்த தீட்சதர். சோழ நாட்டின் தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவர் பெயரை இன்றும் சொல்லக்கூடிய எத்தனை இடங்கள்? ஐயன் கடைத் தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம் இதுபோன்ற இடங்களில் ஐயன் என்பது இவரைக் குறிக்கும் சொல். இவர் அந்த காலத்தில் செய்த செயற்கரிய சாதனைகளின் சரித்திரச் சான்றுகள் இவை.

ஒரு மன்னன் தன் குடிமக்களுக்கு என்னவெல்லாம் செய்து தரவேண்டும், தான் சுகபோகங்களோடு வாழ்க்கை நடத்துவதும், எதிரிகளோடு போர் புரிந்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிடுவதும், தன் மக்கள், தன் சுற்றம் இவர்களின் நல்வாழ்வை மட்டும் பேணிப் பாதுகாப்பது மட்டும் ஆட்சி அல்ல. பின் என்ன செய்ய வேண்டும்? மக்கள் பயன்பாட்டுக்கான தர்ம காரியங்களைச் செய்வது, கல்விக்காக, உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக, ஒரு இடம் விட்டு வேறொரு இடம் பயணம் செய்ய நல்ல சாலைகளை அமைப்பதற்காக, நீர் நிலைகளை நல்ல முறையில் பேணி பாதுகாக்கவும், புதிய நீர் நிலைகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒரு அரசின் தலையாய பணி அல்லவா? அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் செய்து தந்தவர் இந்த கன்னடத்து பிராமண அமைச்சர். எழுபத்தைந்து ஆண்டுகள் இவர் அமைச்சராக மூன்று மன்னர்கள் காலத்தில் இருந்து தொண்டாற்றியவர் கோவிந்த தீட்சதர்.

இதில் என்ன புதுமை இருக்கிறது. வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போது எல்லா மன்னர்களுமே செய்த பணிகள் எவை என்பதைக் குறிப்பிடுகையில், அவர்கள் சாலைகளைப் போட்டார், வழிநெடுக மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார் என்றுதானே எழுதுகிறார்கள் என்று சொல்வதும் புரிகிறது. ஆனால் இவர் சாதனை அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல செயல்பாடுகள் இவர் செய்திருக்கும் சாதனை. கும்பகோணம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது மகாமகம். கும்பேஸ்வரன் கோயிலின் இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த விழாவில் மக்கள் மூழ்கி எழும் மகாமகக் குளத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். அந்த மாபெரும் குளத்தையும், சுற்றிலும் படிக்கட்டுகளையும், அதனைச் சுற்றி பதினாறு சிவலிங்கங்கள் அதற்குரிய மண்டபங்கள் இவை அத்தனையையும் கட்டிமுடித்தவர் இந்த கோவிந்த தீட்சதர்.

இவரது இந்த சாதனையைப் பாராட்டி நாயக்க மன்னர் ஒருவர் இவருக்கு துலாபாரம் செய்து தராசில் ஒரு தட்டில் இவரை உட்காரவைத்து மற்றொரு தட்டில் பொன்னை அள்ளிக் கொட்டி இவருக்கு அளித்தாராம். அந்த சிலையை மகாமகக் குளக் கரையிலுள்ள ஒரு மண்டபத்தில் இப்போதும் பார்க்கலாம்.

கும்பகோணம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பது, குறிப்பாக பெரிய கடைத்தெருவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இராமசாமி கோயில். இதனைக் கட்டியவர் கோவிந்த தீட்சதர். இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா? இங்கு இராமாயணக் காட்சிகள் அனைத்தையும் பிரகாரச் சுவற்றில் வண்ணத்தில் தீட்டிவைத்தது இவரது சாதனை. கும்பகோணத்தில் மங்களாம்பிகா அம்மன் கோயில், பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் கோயில், பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆலயம் இவைகள் அனைத்துமே இவரது அர்ப்பணிப்புகள்.

புதிதாக உருவாக்கிய கோயில்கள் தவிர, மிகப் பழமையான சில கோயில்களை இவர் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார். அவை விருத்தாச்சலம், திருவண்ணாமலை, சிதம்பரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள புகழ்மிக்க ஆலயங்கள்.

காவிரி ஒரு புனித நதி. கரையெங்கும் காவிரித்துப் புகழ் பரப்பி ஓடும் ஜீவநதி. அந்த காவிரியின் கரையெங்கும் படித்துறைகள். புனிதத் தலங்களில் புஷ்ய மண்டபங்கள், அவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை என்று இன்றும் மக்கள் பயன்பாட்டுக்குக் காணக்கிடைப்பவை. மயிலாடுதுறையிலும், திருவிடைமருதூரிலும் மகாதானத் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மகாதானம் என்றால் என்ன? வேத விற்பன்னர்களுக்குத் தானமாக வீடுகளைக் கட்டிக் கொடுத்து புகழ்மிக்கத் தலங்களான இந்த ஊர்களில் மக்கள் நன்மைக்காக யாகங்களை செய்துவர வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகள் இவை. இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் சில ஊர்களை முழுவதும் தானமாகக் கொடுத்திருந்தார், அவை மூவலூர், தேப்பெருமநல்லூர், சூலமங்கலம், ஊத்துக்காடு, சாலியமங்கலம் முதலியவை.

தெருக்கள் மட்டுமா இவர் மகா தானமாகக் கொடுத்தவை, அல்ல, சில ஊர்களும் கூட இதில் அடங்கும். குறிப்பாக திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ள ஈச்சங்குடி, கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள வரகூர், கந்தமங்கலம் ஆகிய ஊர்கள் இதே காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு மகா தானமாக அளிக்கப்பட்டவை. இங்கு குறிப்பிடும் ஈச்சங்குடி கிராமத்தில்தான் காஞ்சி பரமாச்சாரியார் என வழங்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமியின் தாயார் அவதரித்தார். எங்கும் எப்போதும் மக்கள் வளத்தோடும், மனமகிழ்ச்சியோடும் வாழ வேதங்கள் ஓதப்படவேண்டும் எனும் எண்ணத்தில் எங்கும் வேத கோஷம் முழங்குவதற்காக இத்தனை ஊர்களை, தெருக்களை தானமாகக் கொடுத்து வந்திருக்கிறார் கோவிந்த தீட்சதர். கோவிந்த தீட்சதர் பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. மூன்று நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. அச்சுதப்ப நாயக்கர் இந்த பெருமகனாருக்கு எடைக்கு எடை பொன் கொடுத்து துலாபாரம் செய்ததாகச் செய்திகள் உண்டு. அந்த பொன்னைக் கொண்டுதான் கோவிந்த தீட்சதர் கும்பகோணம் மகாமகக் குளத்தை சீரமைத்து அதனைச் சுற்றி பதினாறு மண்டபங்களையும் கட்டி படித்துறையையும் அமைத்துக் கொடுத்தாராம். கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தை புனரமைத்து ராஜகோபுரத்தைக் கட்டி சேவப்ப நாயக்கர் காலத்தில் குடமுழுக்கும் செய்வித்தார்.

வேதங்கள், சாஸ்திரங்கள் இவற்றில் புலமை மிக்க கோவிந்த தீட்சதர் அவற்றில் கண்டபடி தர்ம காரியங்களைச் செய்து பல அறக்கட்டளைகளையும் நிறுவிவைத்தார். இவருடைய அரும் பெரும் பணிகளைப் பாராட்டி போற்றி திருவிடைமருதூர், திருவெண்காடு, மாயூரம் ஆகிய இடங்களில் இவர் செய்த மகா தானங்களை நினைவுகூறும் வகையில் "மகாதானத் தெரு" அமைக்கப்பட்டன. தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையிலும், திருவையாற்றிலும், திருவலம்சுழியிலும், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் இவர் கட்டிய புஷ்ய மண்டபங்கள் இன்றும் இவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமிக்கு வெள்ளியில் ரிஷப வாகனமும், வெள்ளித் தேரும் செய்து கொடுத்த வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கும்பகோணத்தில் ராஜா காவ்ய வேத பாடசாலையொன்றை 1542இல் தொடங்கிவைத்து அங்கு ரிக், யஜுர், சாமம் ஆகிய வேதங்கள் தவிர ஆகமத்தையும் குருகுல முறைப்படி கற்றுக் கொடுக்க வைத்தார். இவரைப் பற்றி படிக்கும்போது அடடா! இப்படிப்பட்ட மகானை நாம் பார்க்கமுடியவில்லையே என்கிற ஏக்கம் ஏற்படத்தான் செய்யும், இல்லையா? அந்த ஏக்கத்தைப் போக்க ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் இவருக்கும் இவரது மனைவி நாகம்மாளுக்கும் ஒரு உருவச்சிலைகள் இருக்கின்றன.

"மக்கள் நலனும் வாழ்வும் அமைதியும் சதாசர்வ காலம் வேதகோஷம் முழங்குவதில்தான் இருக்கிறது" என்கிறது மனுஸ்மிருதி. வேதங்கள் ஓதப்படுவதோடு, இளைய பிரம்மச்சாரிகளுக்கு அதனைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். அதற்காக வேத பாடசாலைகளையும் அவர் உருவாக்கிவைத்தார். கும்பகோணம் ராஜா பாடசாலை என்ற அமைப்பு இன்றும் உயிர்ப்போடு இயங்கி வருவதை நாம் அறிவோம். இந்த ராஜா பாடசாலையில் ரிக், யஜுர், சாம வேதங்களோடு, ஆகம சாஸ்திரமும் பயிற்றுவிக்கப் படுகிறது. இதுபோன்றதொரு பாடசாலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு வேதத்தை அத்யாயனம் செய்து முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகும். இந்த பாடசாலையில் படித்துப் பின் இசைத் துறையில் பிரபலமடைந்தவருள் ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் முக்கியமானவர்.

வேதம் படித்த ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் இசைத் துறையில் கர்நாடக சங்கீத மூவருள் ஒருவராக ஆனாரா என்று வியப்பாக இருக்கும். வியப்படைய வேண்டாம். காரணம் இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த கோவிந்த தீட்சதர் இசையிலும் வல்லவர். "அத்வைத வித்யா ஆச்சார்ய" என்ற பட்டப்பெயரோடு விளங்கிய இவர் கர்நாடக சங்கீதத்தில் "சங்கீத சுதாநிதி" எனும் அற்புதமான இசை நூலையும் இயற்றியிருக்கிறார். அதுமட்டுமல்ல "திருவையாறு புராணம்" சம்ஸ்கிருத மொழியில் இருந்ததை ஒரு புலவரைக் கொண்டு இவர் தமிழில் மொழியாக்கம் செய்யச் செய்திருக்கிறார்.

கோவிந்த தீட்சதருடைய மூத்த மைந்தன் யக்ஞநாராயண தீட்சதர். இவர் வேத சாஸ்திரங்களில் படித்துத் தேர்ந்தவர் என்பதுகூட இவர் பல இலக்கியங்களையும் படைத்திருக்கிறார். அவை ரகுநாத நாயக்கர் மீதான "ரகுநாத பூபால விஜயம்", "ரகுநாத விலாஸ நாடகம்", "சாஹித்ய ரத்னாகரம்" ஆகியவை.

இவருடைய இளைய மைந்தன் வேங்கடமகி என்பார் பல இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். சம்ஸ்கிருத இலக்கியங்கள் தவிர இசைத் துறையில் "சதுர்தண்டி பிரகாசிகா" எனும் நூலையும் இயற்றியிருக்கிறார். இவருக்கும் பல மகா பண்டிதர்கள் சீடர்களாக இருந்திருக்கின்றனர்.

காஞ்சி மகாபெரியவருடைய தாயார் பிறந்த ஊர் ஈச்சங்குடி என்று முன்பு குறிப்பிட்டோம் அல்லவா? அது தவிர 1814 முதல்1857 வரை காஞ்சி மடத்து ஆச்சாரியாராக இருந்த மற்றொரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த தீட்சதர் வம்சத்தில் பிறந்தவர். கோவிந்த தீட்சதரின் இளைய மகன் என்று குறிப்பிட்ட வேங்கடமகி என்பவரின் பேரன் இந்த ஆச்சார்யார்.

இத்தகு பெருமைமிகு அமைச்சர் கோவிந்த தீட்சதரின் சிலை அவருடைய துணைவியார் நாகம்மாள் உருவத்துடன் கல் சிற்பமாக பட்டீஸ்வரம் ஆலயத்தில் பார்க்கலாம். ராமேஸ்வரம் கோயிலிலும் இவர்கள் சிலையை நிறுவியிருக்கிறார்கள். கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரத்தில் மிக எளிய இல்லத்தில் வாழ்ந்த இவர் யோகநித்திரையில் இருக்கும்போதே உயிர் நீத்தார்.

இத்தகைய மதியூகியாகவும், நிர்வாகத் திறன் கொண்டவராகவும், தர்மத்தின்பால் பற்று கொண்டவராகவும் இருந்து நீண்ட நெடுங்காலம் தஞ்சை நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றிய கோவிந்த தீட்சதரால் நாயக்கர் வம்சம் புகழ்பெற்றதா, நாயக்க மன்னர்கள் கொடுத்த வாய்ப்பினால் தீட்சதர் தன் திறமையை வெளிப்படுத்தினாரா என்பது பட்டிமன்றத்துக்குரிய தலைப்பாக இருக்கும்.

விஜயராகவ நாயக்கர் (1590 - 1673)

விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளாக தஞ்சைக்கு அனுப்பப்பட்ட நாயக்க ராஜாக்களில் முதல் ராஜா சேவப்ப நாயக்கர். அவர் தொடங்கி வைத்த வரிசையில் தஞ்சைக்குக் கடைசி நாயக்க அரசராக ஆகப் போகிற விஜயராகவ நாயக்கர் 1634இல் தனது ஆட்சியைத் தொடங்கினார். அந்த ஆண்டு தொடங்கி 1673 வரையிலான 39 ஆண்டுகள் அவர் தஞ்சாவூரை ஆண்டிருக்கிறார். மதுரை சொக்கநாத நாயக்கரோடு போரிட்டு இவர் கொலையுண்ட ஆண்டோடு சேவப்ப நாயக்கர் பரம்பரையின் ஆட்சி தஞ்சையில் முடிவுக்கு வந்துவிட்டது. முதிர்ந்த வயதுடைய விஜயராகவ நாயக்கரை மதுரையில் ஆண்ட சொக்கநாதரும் அவர் தம்பி அழகிரியுமாகச் சேர்ந்து போர்க்களத்தில் தலையைக் கொய்து இவரது வாழ்வை முடித்த கதை ஒரு சோகக் கதை.

மிகவும் புகழ்வாய்ந்த தஞ்சை நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கரின் மூத்த மகன் விஜயராகவ நாயக்கர். இவருடைய தந்தையார் காலமான பிறகு அதே 1634ஆம் ஆண்டில் இவர் பதவிக்கு வந்தார். நீண்ட நெடிய இவருடைய ஆட்சியில் தந்தை ரகுநாத நாயக்கரைப் போல சொல்லக்கூடிய செயற்கரிய சாதனைகள் எதையும் இவர் படைத்ததாகத் தெரியவில்லை. தந்தையைப் போல இவருக்கும் இசையிலும், கலைகளிலும் ஆர்வம் இருந்தது. தன்னுடைய தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் ஒரு காவியமாக இவர் இயற்றியிருக்கிறார்.

நீண்ட நெடுங்காலம் தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் முடிவு சோகமான முடிவு. தந்தை ரகுநாத நாயக்கரைப் போலவே இவரும் கலை ஆர்வலர். மன்னாருதாசன் என்றழைக்கப்பட்டவர். இவர் வயது முதிர்ந்த பின்னர்தான் போர்க்களத்தில் கொலையுண்டார் எனினும் இவரது வாழ்க்கை சிறப்பானது. இவரது முடிவு குறித்து அறிந்து கொள்ள நாம் மதுரை சொக்கநாத நாயக்கரிடம் போகவேண்டும்.

மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் தஞ்சை விஜயராகவ நாயக்கரின் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். ஆனால் விஜயராகவர் இந்த சம்பந்தத்தை மறுத்து விட்டார். காரணம் இருந்தது அவர் அப்படி மறுத்ததற்கு. இதற்கு முன்பு மதுரை திருமலை நாயக்கருக்கு தஞ்சை நாயக்கர் பெண் கொடுத்து சம்பந்தம் செய்து கொண்டார்கள். ஆனால் அந்தப் பெண் சந்தேகமான சூழ்நிலையில் மதுரையில் கொலையுண்டாள். அது குறித்து தஞ்சைக்காரர்களுக்கு மிகுந்த மன வருத்தம். ஏற்கனவே ஒரு பெண்ணை மதுரைக்குக் கொடுத்து பட்டது போதாதா, மறுபடியுமா என்று எண்ணிதான் விஜயராகவர் பெண் தர மறுத்தார். விடுவாரா சொக்கநாதர். எப்படியாவது தஞ்சை மீது படையெடுத்துச் சென்று விஜயராகவரைத் தோற்கடித்து விட்டு அவர் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவது என்று முடிவு செய்தார். 

அதற்காக மதுரை படைகளை தயார் செய்தார். 1673இல் மதுரை படைகள் திறமைசாலிகளான இரு படைத் தளபதிகள் தலைமையில் தஞ்சை நோக்கிப் புறப்பட்டது. தஞ்சைக்குள் புகுமுன்பாக வல்லம் கோட்டையைத் தாக்கி மதுரைக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். தொடர்ந்து தஞ்சை கோட்டை முற்றுகைக்கு ஆளாகியது. கோட்டிக்குள்ளிருந்து போர் புரிய ஆயத்தமான விஜயராகவர் தன் படை மதுரை படையிடும் தோற்றுவுடும் என்பதை உணர்ந்திருந்தார். அப்படி தான் போரிட்டு மடிந்து போக நேர்ந்தால், தன் பெண்ணோ வேறு எந்த அரண்மனைப் பெண்டிரோ, மதுரைக் காரர்களிடம் மாட்டிக் கொண்டு அவமானப் படக்கூடாது என்று எண்ணி, அரண்மனையை உள்ளே பெண்களை வைத்து வெடிவைத்துத் தகர்த்து விட்டார். அத்தனை பெண்களும் அதில் மாண்டுபோனார்கள், அவருடைய மகளையும் சேர்த்து.

தற்கொலைப் படையைப் போல தன் வீட்டுப் பெண்டிரை பலி கொடுத்து அவரும் அவருடைய மகனுமாகப் போர்க்களம் போனார்கள். அங்கு சொக்கநாதன் படையுடன் கடுமையான போர் நடந்தது. தஞ்சாவூர் வடக்கு வீதியும் ராஜகோபாலசுவாமி வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள கோயிலுக்கு எதிரில் நடந்த போரில் விஜயராகவர் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டார். அவரது தலையை மதுரைப் படைத் தளபதி சமுக்கம் வெங்கடகிருஷ்ணப்ப நாயுடு என்பார் வெட்டிக் கொய்துவிட்டார். மனிதாபிமானமென்பதே சிறிதுமில்லாமல் வயது முதிர்ந்த விஜயராகவரை இப்படி வெட்டிக் கொல்லக் காரணமாக இருந்த சொக்கநாதரைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

சொக்கநாத நாயக்கர்:

மதுரையை ஆண்ட நாயக்கர் வம்சத்தில் முத்து அழகாத்ரி நாயக்கர் என்பவரின் மகன் இந்த சொக்கநாத நாயக்கர். இவர் பதவி ஏற்றுக்கொண்ட சமயம் இவருக்கு வயது 16. அந்த இளம் வயதில் இவர் மதுரையில் இருந்த முசல்மான் படைகளை வெளியே விரட்டிவிட்டார். செஞ்சியின் மீது பெரிய படையொன்றை அனுப்பி அந்த கோட்டையைப் பிடித்துக் கொண்டார். வயதில் இளையவரான மன்னரை ஏமாற்றி இவரது படைத் தலைவர்கள் நன்றாகக் கொள்ளையடித்தார்கள். இவரது நடவடிக்கைகளில் மனம் கசந்த மதுரை வாசிகள் இவருக்கு எதிராகக் கலகம் செய்யவும் முயன்றனர். அப்படி நடந்த கலகத்துக்குத் தலைமை தாங்கியவரும் சொக்கநாதரிடம் படைத்தலைவராக இருந்தவர்தான். இந்த தளபதியின் குட்டு வெளிப்பட்டுவிட்ட நிலையில் மன்னர் இவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பதற்கு முன்பாக இவர் கட்சி மாறி முன்பு விரட்டப்பட்ட முகமதியர் படைகளோடு சேர்ந்து கொண்டுவிட்டார். இந்த தளபதி தான் சேர்ந்து கொண்ட படையை திருச்சினாப்பள்ளி மீது திருப்பி அதைப் பிடித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

அந்த துரோகி தளபதிக்கு எதிராகப் போரிட சொக்கநாதர் அனுப்பிய படையின் தளபதியும் மன்னருக்கு எதிராக எதிரிகளோடு சேர்ந்து கொண்டுவிட்டார். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன சொக்கநாதர் தானே படைத் தலைமையை ஏற்றுக் கொண்டு புரட்சிப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு அவர்களை தஞ்சைக்கும் செஞ்சிக்குமாக விரட்டிவிட்டார்.

சொக்கநாதர் பெற்ற வெற்றி ஓராண்டு கூட நிலைக்கவில்லை. மறு ஆண்டில் தோற்று ஓடிப்போன படைகள் மீண்டும் ஒன்று சேர்ந்து திருச்சினாப்பள்ளியையும், மதுரையையும் சூறையாடிவிட்டுப் போய்விட்டார்கள். போரின்போது அவர்கள் இழைத்த மனிதாபிமானம் இல்லாத கொடுமைகள் சொல்லும் தரமன்று. திருச்சினாப்பள்ளியைப் பிடித்துக் கொண்ட அந்த கும்பலுக்கு சொக்கநாதர் பெருமளவில் செல்வத்தை அள்ளிக் கொடுத்து சமாதானமாகப் போக நேர்ந்தது. இந்த கும்பலின் பின்னணியில் இருந்தவன் சந்தாசாஹேப். இந்த போரில் தனக்கு உதவி செய்ய முன்வராத தஞ்சை நாயக்கர் மீதும் ராமநாதபுரம் சேதுபதி மீதும் சொக்கநாதருக்கு ஆத்திரம். ஆகையால் அவர் ராமநாதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்று வழிநெடுக பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார். இந்தப் போரில் ராமநாதபுரம் மறவர் படைகள் மறைந்திருந்து தாக்கி சொக்கநாதரைப் பின்வாங்கும்படி செய்தது குறிப்பிடத் தக்கது.

ராமநாதபுரத் தாக்குதலை யடுத்து சொக்கநாதரின் பார்வை தஞ்சாவூரின் பக்கம் திரும்பியது. அங்கு வழியில் வல்லம் கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டு தஞ்சையின் மீது போரிட்டு விஜயராகவரை கொடுமையாக வெட்டிக் கொன்றார்கள். அத்தோடு நான்கு மன்னர்கள் மட்டுமே ஆட்சிபுரிந்த தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. விஜயராகவர் போர்க்களத்தில் கொலையுண்டு மாண்டு போவதற்கு முன்பு அவர் வெடிமருந்து வைத்து வெடித்து அரண்மனைப் பெண்களையெல்லாம், சொக்கநாத நாயக்கர் மணம் பேசிய தன்னுடைய மகள் உட்பட அனைவரையும் கொன்றுவிட்டார்.

தான் மணம்புரிய விரும்பிய பெண் மாண்டுபோனதில் சொக்கநாதருக்கு மிகுந்த வருத்தம். அந்தப் பெண் நல்ல அழகி, அதுமட்டுமல்ல நல்ல புத்திசாலிப் பெண். இந்த விவகாரங்கள் எல்லாம் தொடங்குமுன்பாகவே சொக்கநாதருக்கும் இந்தப் பெண்ணுக்கும் ரகசிய காதல் மலர்ந்திருக்கிறது. அந்த ரகசியத்தை அங்கு பணிபுரிந்த வேலைக்காரப் பெண் ஒருத்தி ராஜா விஜயராகவரிடம் சொல்லிவிட்டாள். அதனால் ஆத்திரமடைந்த விஜயராகவர் அந்தப் பெண்ணையும் ஈவு இரக்கம் காட்டாமல் கொன்றுவிட்டார்.

இந்த துயர சம்பவத்துக்குப் பிறகு மதுரை சொக்கநாதரால் அமைதியாக அட்சிபுரிய முடியவில்லை. தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவார். இறந்து போன தனது காதலியின் சாம்பலை அங்கிருந்த நீர்நிலைகளில் தூவினார். சதா அவள் நினைவாகவே காலத்தைப் போக்கினார் சொக்கநாதர்.

தஞ்சையை, அதன் மன்னரைப் போர்க்களத்தில் வெட்டிப் போட்டுவிட்டு ராஜ்யத்தை அபகரித்துக் கொண்ட சொக்கநாதர் தஞ்சையைத் தன் ஒன்றுவிட்ட சகோதரன் அழகிரி என்பாரிடம் கொடுத்து ஆளச் சொல்லிவிட்டு மதுரை வந்துவிட்டார். துயரக் கடலில் வீழ்ந்துவிட்ட சொக்கநாதருக்கு மதுரையையும் சரியாக ஆளமுடியவில்லை, தஞ்சையில் இருந்த அழகிரியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை.

தஞ்சையின் சுதந்திரப் பறவையாக பதவியேற்ற அழகிரிக்கு அங்கு பெரிய சோதனை காத்திருந்தது. விஜயராகவரின் மகன் செங்கமலதாஸ் என்பவன் குழந்தையாக இருந்தபோதே ஒரு தாதி கொண்டு போய் நாகப்பட்டினத்தில் வளர்த்து பெரியவனாக ஆக்கியபின் ஒரு அமைச்சரின் துணையோடு பீஜப்பூர் சுல்தானின் உதவியைக் கேட்டுப் பெற்று பெரிய மராத்திய படையுடன் வந்து அழகிரியைத் தோற்கடித்துவிட்டு ராஜ்யத்தை ஏகோஜி எனும் மராத்திய மன்னர் பறித்துக் கொண்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் தம்பி இந்த ஏகோஜி. அவரைத் தொடர்ந்து தஞ்சாவூர் 178 ஆண்டுகள் மராத்திய மன்னர்களின் ஆட்சியில் இருந்தது என்பதும், நாயக்கர் வம்ச ஆட்சி இத்தோடு இங்கு முடிவடைந்து மங்களம் பாடப்பட்டுவிட்டது என்பதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது.

எது எப்படியிருந்த போதிலும் ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் போன்றவர்கள் கலை, இசை போன்றவற்றுக்குச் செய்திருக்கிற சேவை மிகவும் சிறப்பானவை, போற்றிப் பாராட்டப்பட வேண்டியவை. மொழியில் நமக்கு அன்னியப் பட்டிருந்தாலும், தெலுங்கு பேசும் நாயக்கர் மன்னர்களும், மராத்தி மொழி பேசிய மராட்டியர்களும் தஞ்சை மண்ணுக்குச் சிறப்பாகவே பணிபுரிந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்கள் நினைவினைப் போற்றுவோம்.

No comments: