பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, July 17, 2013

அதிராஜேந்திர சோழன் (1070)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


வீரராஜேந்திரன் கால வரலாற்றைச் சென்ற பதிவில் பார்த்தோமல்லவா? இனி அவனுடைய புதல்வன் அதிராஜேந்திரன் பதவிக்கு வந்ததையும், அதே ஆண்டு மாண்டுபோனதையும் இந்தப் பதிவில் பார்ப்போம். இவன் தந்தை வீரராஜேந்திரன் காலமானதும் இவன் பட்டத்துக்கு வந்தான். அதற்கு முன்பே இவனுக்கு ஆட்சிப் பொறுப்பில் அனுபவம் இருந்தது, காரணம் வீரராஜேந்திரன் காலத்திலேயே அவன் தன் மக்களுக்கு தொண்டைமண்டலத்தையும், பாண்டிய மண்டலத்தையும் கவனித்துக் கொள்ள தன் மகன்களையே நியமித்திருந்தான் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த அதிராஜேந்திரனுக்கு "பரகேசரி" எனும் பட்டப்பெயரும் உண்டு. ஒவ்வொரு சோழனுக்கும் இதுபோன்ற பட்டப்பெயர்கள் இருப்பதை கவனித்திருக்கலாம்.

இவனும் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டுதான் ஆட்சிபுரிந்தான். இவன் திருமணமானவனா இல்லையா பிள்ளை குட்டிகள் இருந்தனரா இல்லையா என்பது ஒன்றும் தெரியவில்லை. இவன் தந்தை காலமான பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இவன் ஒருசில மாதங்களே ஆட்சி புரிந்தான். இவன் காலத்தில் நாட்டில் நடந்த குழப்பத்தினாலோ என்னவோ கிளர்ச்சியும் கலகமும் ஏற்பட்டது. இந்தப் பூசலில் இளம் மன்னனான அதிராஜேந்திரன் கொல்லப்பட்டான் என்கிறது வரலாறு. இவனை யடுத்து சோழர்களுடன் திருமண உறவு கொண்டிருந்த வேங்கிநாட்டைச் சேர்ந்த சோழ இளவரசன் ராஜிகா எனும் பெயருடையவன் முதலாம் குலோத்துங்கன் எனும் பெயருடன் சோழ மண்டல சக்கரவர்த்தியாக அமர்த்தப்பட்டான்.

சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கிய மன்னர்களான வேங்கி நாட்டவர்க்கும் நீண்ட நெடுங்காலமாகத் திருமண பந்தம் இருந்து வந்தது. ராஜராஜனின் மகள் குந்தவையை வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்ததையும், அவர்களது மகனான ராஜராஜ நரேந்திரன் என்பானுக்கு முதலாம் ராஜேந்திரன் தன் மகளான அம்மங்காதேவியை மணம் முடித்துக் கொடுத்ததும், இப்படி அடுத்தடுத்து சோழர்களும் வேங்கி நாட்டாரும் திருமண பந்தம் கொண்டிருந்தனர். இதனால் வேங்கி நாட்டையாண்ட கீழைச் சாளுக்கியர்கள் பாதி சோழரும் பாதி சாளுக்கியருமாக இருந்திருக்கின்றனர். அந்த வழியில் வந்தவந்தான் முதலாம் குலோத்துங்கன்.

சாளுக்கிய வம்சம் சோழர்களுக்குப் பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கின்றனர். மேலைச் சாளுக்கியர்கள் சத்யாஸ்ரயன் காலத்திலிருந்து கீழைச் சாளுக்கியர்களோடும் சோழர்களோடும் போரிட்டு வந்திருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியர்களான வேங்கி நாட்டாரும் தங்களுக்குள் தாயாதி சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டும், அதில் ஒரு பக்கம் மேலைச் சாளுக்கியரிடம் உதவி பெறுவதும், மற்ற பகுதியினருக்கு சோழர்கள் உதவி செய்வதும் தொடர் கதையாக இருந்திருக்கிறது.

அதிராஜேந்திரனின் தந்தையான வீரராஜேந்திரன் வேங்கி விஷயத்தில் தலையிட்டு சோழர்களின் மாப்பிள்ளையான ராஜராஜ நரேந்திரன் சார்பில் போரிட்டிருக்கிறான். குந்தவையின் மகனான இந்த ராஜராஜ நரேந்திரன் 1061இல் இறந்து போகிறான். அதனால் அவனுக்குப் பின் வேங்கி நாட்டை 2ஆம் சக்திவர்மன் என்பவன் கிளர்ச்சி செய்து வேங்கியின் ஆட்சி சிம்மாசனத்தை அபகரித்துக் கொண்டான். இப்படி புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தது சோழர்களுக்குப் பிடிக்கவில்லை. சோழ ரத்தம் ஓடும் வேங்கி ராஜவம்சத்தானை பதவியில் அமரவைக்க அவர்கள் பெரிதும் முயன்றார்கள். அந்தப் போராட்டத்தில் புரட்சியால் ஆட்சியைப் பிடித்த 2ஆம் சக்திவர்மன் என்பவன் கொல்லப்பட்டான். அப்படி அவன் இறந்ததும் அவனுடைய தந்தையான விஜயாதித்தன் என்பான் பதவியில் உட்கார்ந்து கொண்டு சோழர்களை எதிர்த்துப் போரிட்டான். எனினும் சோழர்களின் வல்லமையின் முன்னால் தனித்து நிற்கமுடியாது என்பதை உணர்ந்தோ என்னவோ அந்த விஜயாதித்தன் சோழர்களுக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டும் அரசனாக வேங்கியில் இருக்க ஒப்புக் கொண்டான்.

இப்படி சாளுக்கியர்களுள் இரு பக்கத்திலும் முழுமையாக சோழர்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த காலத்தில் அதிராஜேந்திரனின் தந்தையும் இவனுக்கு முன்பு அரசனாக இருந்த சோழனுமான வீரராஜேந்திரன் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். பெரும்பாலும் அந்தக் கால அரசர்கள் ராஜதந்திரத்துடன் எதிரி நாட்டிலும் திருமண உறவு வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பல மன்னர்களுக்கு பலதாரம் இருப்பதன் காரணம் இதுதானோ என்னவோ?

வரலாறு இவ்வாறு போய்க்கொண்டிருந்த நிலைமையில் குந்தவையின் பேரனும், ராஜராஜ நரேந்திரனின் மகனுமான ராஜேந்திர சாளுக்கியன் (பின்னாளில் முதலாம் குலோத்துங்கன்) வேங்கி தனக்குத்தான் உரிமை ஆனால் விஜயாதித்தன் எப்படியோ ஆட்சியைப் பிடித்து வைத்துக் கொண்டுவிட்டான் என்பதை உணர்ந்து வேங்கியைத் தன்னதாக ஆக்கிக் கொள்ள முனைந்தான். என்ன இருந்தாலும் விஜயாதித்தன் சோழர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தாலும், சோழ பரம்பரை வாரிசு அல்லவா ராஜேந்திர சாளுக்கியன் எனும் முதலாம் குலோத்துங்கன்? சோழர்கள் அவனைத்தான் ஆதரித்தார்கள். விஜயாதித்தான் வேறு யாரும் இல்லை. குலோத்துங்கனின் பெரியப்பாதான், அதாவது காலம் சென்ற ராஜராஜ நரேந்திரனின் அண்ணன். இதெல்லாம் தாயாதிச் சண்டைகள்.

விஜயாதித்தனுக்கும் வேங்கியின் மீது உரிமை இருக்கிறது அல்லவா ஆகையால் ராஜேந்திர சாளுக்கியன் (முதலாம் குலோத்துங்கன்) வேங்கிக்கு வடக்கே உள்ள இப்போதைய சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தர் எனும் மலைப்பகுதியில் ஒரு ராஜாங்கத்தை அமைத்துக் கொண்டான். வீரராஜேந்திரன் காலமான பிறகு அதிராஜேந்திரனின் ஒருசில மாத ஆட்சிக்குப் பிறகு அவன் இறந்ததும் ராஜேந்திர சாளுக்கியன் சோழ அரசனாக முதலாம் குலோத்துங்கன் எனும் பெயரில் பதவியில் அமர்ந்தான்.

வீரராஜேந்திரனின் மகன் அதிராஜேந்திரனின் மரணம்.

சாளுக்கியர்கால பில்ஹணன் எனும் வரலாற்றாசிரியர் இந்த அதிராஜேந்திரனின் மரணம் பற்றிய குறிப்புகளைத் தருகிறார். வீரராஜேந்திரன் தன்னுடைய மகளை சாளுக்கியன் 4ஆம் விக்கிரமாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்த சில காலத்திற்குள் இறந்து விடுகிறான். தன் மாமனார் இறந்து போன செய்தியும் மைத்துனன் அதிராஜேந்திரன் பதவிக்கு வந்தபின் உள்நாட்டுப் போர் மூண்டுவிட்ட செய்தியையும் கேட்ட 4ஆம் விக்கிரமாதித்தன் தன் படைகளுடன் கலகத்தை அடக்க காஞ்சிபுரம் வருகிறான். அங்கிருந்து சாளுக்கிய விக்கிரமாதித்தன் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வருகிறான். அங்கு கலகக்காரர்களை அடக்கிவிட்டு மைத்துனன் அதிராஜேந்திரனை அரியணையில் ஏற்றுகிறான். நாட்டில் அமைதி ஏற்பட்டு உரியவன் பட்டத்துக்கும் வந்தபின் சுமார் ஒரு மாதகாலம் விக்கிரமாதித்தன் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்துவிட்டு இனி எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்து தன் நாடு திரும்புகிறான்.

அவன் சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பிய ஒரு சில நாட்களுக்குள் விக்கிரமாதித்தனுக்குத் தன் மைத்துனனும் சோழ அரசனுமான அதிராஜேந்திரன் கொல்லப்பட்டுவிட்டான் என்கிற செய்தி கிடைக்கிறது. அந்த செய்தி மேலும் சொல்கிறது ராஜேந்திர சாளுக்கியன் தன் படைகளுடன் வந்து சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டுவிட்டான் என்றும் அவனது இப்போதைய பெயர் முதலாம் குலோத்துங்கன் என்றும் கேள்விப்பட்டான். இதனால் ஆத்திரமடைந்த 4ஆம் விக்கிரமாதித்தன் குலோத்துங்கனை எதிர்க்கத் தன் படைகளுடன் புறப்பட்டான். அவனுக்கு உதவியாக மேலைச் சாளுக்கிய அரசன் 2ஆம் சோமேஸ்வரனும் சேர்ந்து கொண்டான்.

வீரராஜேந்திரனுக்குப் பிறகு அவன் மகன் அதிராஜேந்திரன் வரையிலும் கடைச் சோழர்கள் வம்சம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது, அதிராஜேந்திரனின் மறைவோடு அந்தப் பரம்பரை முடிவுக்கு வந்துவிட்டது குலோத்துங்கன் சோழர்களின் பெண்வழியில் வரும் வேங்கி வம்சத்துக்குப் போய்விட்டது.

குலோத்துங்கனின் பங்களிப்பு.

அதிராஜேந்திரனின் மரணத்துக்கு குலோத்துங்கன் காரணமா எனும் இந்த மில்லியன் டாலர் கேள்வி இன்னமும் தொக்கி நின்று கொண்டிருக்கிறது. அதிராஜேந்திரன் காலத்தில் காஞ்சிபுரத்துக் கலவரத்துக்கு யார் காரணம்? அந்த கலவரத்தை அடக்கத்தான் மேலைச் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் காஞ்சிக்கு வந்து பிறகு கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அமைதி நிலைநாட்டிவிட்டதாக நினைத்து ஊர் திரும்பினான். அப்படி விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்துக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அதிராஜேந்திரனுக்கு எதிரானவர்களை அடக்கினானே, அந்த எதிரிகள் யார்? அது குறித்து அங்கு கலவரம் அல்லது கலகம் ஏற்பட்டது? போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

அதிராஜேந்திரன் காலத்திய நிகழ்ச்சிகளை விவரிக்கக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் குலோத்துங்கன் சோழ மன்னனாக முடிசூட்டிக்கொண்ட பிறகு விக்கிரமாதித்தன் தன் பெரும் படையோடு வந்து குலோத்துங்கனைத் தோற்கடித்து சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிட்ட செய்தி கிடைக்கிறது. இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு கவனிக்கும்போது வேங்கி நாட்டானான குலோத்துங்கன் சோழ அரசுக்கு ஆசைப்பட்டு இங்கே வந்து வீரராஜேந்திரனின் மகனான அதிராஜேந்திரனுக்கு எதிராக செயல்பட்டிருக்க வேண்டுமென நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால் அவன் காலத்தில் தோன்றிய கலவரம் முன்பு சொன்னது போல உள்நாட்டு கலவரமாக இருக்க வாய்ப்பில்லை, வேங்கி நாட்டுப் படையெடுப்பே.

சோழ தேசத்தில் நடந்த அந்த கலவரத்துக்கு மதச்சாயமும் பூசப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜர் சோழ மன்னரால் துரத்தப்படுகிறார். இந்த காரணத்தினாலும் சோழ சாம்ராஜ்யத்தில் கலவரம் ஏற்பட்டிருக்கலாமோ எனும் எண்ணமும் சொல்லப்படுகிறது. ஆனால் வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி இவை எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர் கூற்றுப்படி ராமானுஜர் வாழ்ந்தது 2ஆம் குலோத்துங்கன் காலத்தில். அவன் தான் ராமானுஜரை சோழநாட்டிலிருந்து விரட்டியனுப்புகிறார், அவரும் கர்நாடகத்திலுள்ள மேல்கோட்டையில் சென்று தஞ்சம் அடைகிறார். ஆகையால் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளோடு அதிராஜேந்திரனின் மரணத்தை முடிச்சுப் போட முடியாது. இந்த காலகட்டத்தில் இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரை சோழ மன்னர்கள் அனைவருமே தீவிர சைவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதும் வரலாற்று உண்மையே.

வீரராஜேந்திரனுக்குப் பிறகு சில மாதங்கள் அரசனாக இருந்த அதிராஜேந்திரன் மரணமடைந்த பின் முதலாம் குலோத்துங்கன் வேங்கிநாட்டு சோழன் பதவிக்கு வருகிறான் என்கிறது வரலாறு.














1 comment:

துரை செல்வராஜூ said...

ராமானுஜருக்கு இடைஞ்சல் செய்த இரண்டாம் குலோத்துங்கன் தான் கிருமி கண்ட சோழன் என்பவனோ!...