பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, June 10, 2013

வெற்றிவேற்கை (8)


வெற்றிவேற்கை (8)

வெற்றிவேற்கை விளக்கக் கட்டுரையின் நிறைவுப் பகுதி இது. சிறார்களுக்கான இலக்கியம் என்று இதுபோன்ற இலக்கியங்களை நாம் அலட்சியப் படுத்திவிடக் கூடாது. சின்னஞ்சிறிய வயதில் மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துக்களை இதுபோன்ற இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. படிக்கின்ற காலத்தில் இதன் முக்கியத்துவம் தெரியாமலே படித்து பின்னர் மறந்தும் போய்விடுகின்றோம். அதனால்தான் இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்க வேண்டும். இராமாயணக் கதை தெரியாதவர் எவரேனும் நம்மில் இங்கு உண்டோ? அப்படி இருந்தும் ஒவ்வொரு ஊரிலும் எத்தனை முறை இராமாயணம் சொல்லும் போதும் நாம் திரும்பத் திரும்பப் போய்க் கேட்கிறோமே, ஏன்? நல்ல விஷயங்களை அப்படி பலமுறை கேட்பதால் அவை நம் அடிமனதில் பதிந்து தவறு செய்யாமல் நம்மைக் காக்கும் என்பதால்தான். அதுபோலவே இதுபோன்ற நீதிநூல்களை அடிக்கடிப் படித்து நினைவில் கொள்ள முயற்சி செய்வோமே!

71. தன் ஆயுதமும் தன் கையிற் பொருளும்
பிறன் கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.

ஒருவன் தன் வாழ்க்கையை நடத்த ஏதேனும் ஒரு தொழில் புரிந்தே ஆகவேண்டும். அப்படி ஒரு தொழில் செய்ய என்னென்ன தேவை. தொழில் நடத்த ஒரு இடம் தேவை. மூலதனம் தேவை, உழைக்க ஆட்கள் தேவை, அவர்களை வழிநடத்த முதல் போடுபவனின் உழைப்பு தேவை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தொழில் நடத்த விரும்புகின்றவன் தன்னிடமுள்ள இடம், தளவாடங்கள், மூலதனம் இவை அனைத்தையும் வேறொருவன் கையில் கொடுத்துவிட்டு தான் நிம்மதியாகப் படுத்து உறங்குவானானால், அவனால் என்ன சாதிக்க முடியும்? அப்படிப்பட்டவன் சோம்பேறியாக எதற்கும் பயனின்றி வீணில் பொழுதைக் கழிக்கும் அறிவிலியாக இருப்பான். அவன் இந்த சமூகத்தில் ஒரு பதரைப் போன்றவன்.

72. வாய்ப்பறை ஆகவும் நாக்கடிப்பு ஆகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்.

இப்போது போல தொலை தொடர்பும், ஒலி பெறுக்கி, வானொலி, தொலைக்காட்சி இவைகள் வராத காலத்தில் ஊர்மக்களுக்கு ஒரு செய்தியை அறிவிக்க பறை அறைந்து ஒருவன் தெருத்தெருவாகப் போய் சொல்ல வேண்டிய செய்தியை "இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் ......." என்று தொடங்கி சொல்ல வந்த செய்தியைச் சொல்லிக் கொண்டே செல்வான். அதற்கு அவனுக்குப் பயன்படுவது பறையும், கையில் இரு குச்சிகளும்தான். குச்சிகளைக் கொண்டு பறையை அடித்துக் கொண்டு செய்தியை பரப்புவது அவன் தொழில். பறையொலி கேட்டதும் மக்களும் ஏதோவொரு செய்தி சொல்ல வந்து கொண்டிருக்கிறான், என்னவென்று கேட்போம் என்று கவனமாக இருந்து செய்திகளை அறிந்து கொள்வார்கள். அதுபோலவே அந்தக் காலத்தில் பெரியோர்கள் மக்களுக்கு ஏதேனும் நல்ல செய்திகளை, அறிவுரைகளை, வழிகாட்டுதல்களைச் சொல்ல வேண்டுமானால், தங்களது வாயைப் பறையாகவும், நாக்கை குச்சிகளாகவும் பயன்படுத்தி செய்திகளை, அறிவுரைகளைச் சொல்லுவார்கள். அப்படி அவர்கள் சொல்லும் நல்ல செய்திகளை மக்கள் கவனத்துடன் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.

73. பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால்
மெய்போலும்மே மெய்போலும்மே.

சிலருக்குப் பொய் பேசுதல் என்பது இயல்பானது. வாயைத் திறந்தால் பொய்கள் வந்து கொட்டும். பொய் பேசுபவனுக்கு, பொய் பேசாமல் சிறிது நேரம்கூட இருக்க முடியாது. யாரிடமாவது ஏதாவதொரு பொய்யை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருப்பான். அப்படி அவன் பொய் பேசுவதில் அவனுக்குக் கொஞ்சம் கூட கூச்சமோ, அவமானமோ கிடையாது. அவனுக்குத் தொழில் பொய் பேசுதல். அப்படிப்பட்டவர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டு அவனைக் கண்டதுமே இவன் இனி பேசப்போகின்றவை அனைத்தும் பொய்களே, அவற்றை நம்பிவிடக்கூடாது என்று மனத்தை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். சாதாரண மக்களைக் காட்டிலும் இதுபோன்றவர்கள் அதீத திறமைசாலிகளாக இருப்பர். அவர்கள் சொல்லும் பொய் உண்மை போலவே இருக்கும். சந்தர்ப்பங்களை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் சொன்னது மெய்யோ என்று எண்ணத் தோன்றும், அத்தகைய வாசாலகர்கள் அவர்கள். அவர்களைப் போன்றவர்கள் சொல்லும் செய்திகளை நன்றாக ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

74. மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே.

சிலர் உண்மையை மட்டுமே பேசுவார்கள்; பொய் பேசத் தெரியாதவர்கள். ஆனால் அவர்களுக்குப் பொய் பேசுபவனைப் போல வாசாலகமாகப் பேசி பிறரை நம்ப வைக்கவோ, சரளமாகப் பேசவோ தெரியாது. அதனால் அவன் உண்மையைத் தட்டுத் தடுமாறி சொல்லும் முறையைப் பார்த்து, இவன் பொய் சொல்லுகிறானோ என்று எண்ணத் தோன்றும். பொய் பேசுபவனுக்குத்தான் நல்ல திறமை வேண்டும். உண்மை பேசுபவன் எதார்த்தவாதி, ஆகையால் அவன் வெகுஜன விரோதியாகவே இருப்பான். பேசும் திறன் இல்லாமையால் அவன் பேசும் உண்மை கூட பொய் போலத் தெரியும். அதற்காக அவன் பேசுவதெல்லாம் பொய் என்று எண்ணிவிடாமல், அவன் சொல்பவைகளை நன்கு ஆராய்ந்து பார்த்து அதிலிருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

75. இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந்தவர் தாம்
மனம் உற மறுகிநின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாள் ஆகும்மே.

நெடிய வரிகள் இவை. இதன் பொருளைப் பார்ப்போம். ஒருவர் மற்றொருவர் மீது ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு வழக்குத் தொடர்கிறார். வழக்கைத் தொடர்பவர் வாதி, வழக்குத் தொடுக்கப்பட்டவர் பிரதிவாதி. இவ்விருவரும் நீதிபதியிடம் செல்கின்றனர். அந்த நீதிபதி இவ்விருவரும் சொல்லும் கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். பின்பு அவர்கள் சொன்னவற்றில் இருக்கும் உண்மையை, நியாயத்தை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். பின்னர் அவ்விருவரும் ஒப்புக்கொள்ளும் விதத்தில் தன்னுடைய தீர்ப்பை நியாயம், நடுநிலை தவறாமல் அளிக்க வேண்டும். அப்படிக்கின்றி நீதிபதி நடுநிலை தவறி தீர்ப்புக் கூறிவிடுவாராயின் நியாயம் தன் பக்கம் இருப்பவர் வருந்தி கண்ணீர் சிந்துவர். அப்படி பாதிக்கப்பட்டவர் நீதி தவறிவிட்டதே என்று கண்ணீர் வடித்தால், அந்தக் கண்ணீர் தவறான தீர்ப்பை அளித்த நீதிபதியை மட்டுமல்ல, அவருடைய சந்ததி முழுவதையும் அறுத்து அழித்துவிடுகின்ற வாளாக மாறிவிடும். அவரைக் காக்க பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவருமே வந்து நின்றாலும் அவரைக் காப்பாற்ற முடியாது. தவறான தீர்ப்பைக் கொடுத்தவரும் அவருடைய சந்ததியினரும் அழிவது திண்ணம்.

76. பழியா வருவது மொழியாது ஒழிவது.
சிலர் உணர்ச்சிப் பெறுக்கில் பழிவரும் சொற்களைப் பேசிவிடுவர். உதிர்த்த சொல்லைத் திரும்பப் பெறமுடியாது. ஒரு பழமொழி உண்டு, 'வடக்கே போன மேகமும், பறத்தையர் வீட்டுக்குப் போன செல்வமும் திரும்ப வராது'. சொல்லுக சொல்லை அச்சொல்லை பிறிதோர் சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து. கோபமோ, மகிழ்ச்சியோ எந்த உணர்வில் இருக்கும்போதும் நாம் சொல்லுகின்ற சொல் நம் மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் வேண்டும். வீண் பழியை உண்டாக்கும் சொற்கள் தவிர்க்கப் படவேண்டும். நம்மை மறந்த நிலையில் கூட நம் வாயில் பழிச்சொற்கள் வரக்கூடாது; அப்படி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக பேசுகின்ற போதே நல்ல சொற்களை மட்டுமே பேசிப் பழக்கப்படுத்திக் கொண்டால், விரும்பினால்கூட தீய சொற்கள் நம் வாயில் வராது. கெட்ட, தீய சொற்களைச் சொல்லாமல் விடுதல் நன்று.

77. சுழியா வருபுனல் இழியாது ஒழிவது.
ஆற்றில் புதுவெள்ளம் வருகிறது. அந்த புதுவெள்ளத்துக்கு வேகம் அதிகம். அதனை உணராமல் அந்த ஆற்று சுழலில் ஒருவன் இறங்கினால் அது அவனை மூழ்கடித்துவிடும். மனமும் ஒரு ஆற்றைப் போன்றதுதான். அது கோபம், ஆத்திரம் அடையும்போது, சுழன்று வரும் காட்டாற்று வெள்ளம் போல வேகமாக வரும். அப்படி நம்மை அறியாமல் அந்த கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் ஆட்பட்டு அதில் இறங்கிவிடுவோமானால் அது நம்மை அடித்துக் கொண்டு போய் மூழ்கடித்து விடும். இந்த ஆபத்தை உணர்ந்து செயல்படுதல் விவேகமான செயல்.

78. துணையோடு அல்லது நெடுவழி போகேல்.
வாழ்க்கையில் நாம் எந்த முடிவையும் எடுக்கும் முன்பாக நம்மீது உண்மையான அக்கறையும் பற்றும் உள்ள ஒருவரிடம் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது நல்லது. எல்லா நேரங்களிலும் நம் மனம் சரியாக சிந்தித்து முடிவெடுக்கும் என நம்பமுடியாது. சில சந்தர்ப்பங்களில் நாம் தனித்து எடுக்கும் முடிவு தவறானதாகக்கூட இருந்து விடலாம். அதனால் ஏற்படும் விளைவுகள் நமக்குப் பாதகமாக அமைந்துவிடும். நெடுவழிப் பயணம் மேற்கொள்ள விருக்கிறோம். அப்படி நெடும்பயணம் போகும் போது வழியில் என்னென்ன இடையூறுகள் வரலாம், என்னென்ன தடைகள் ஏற்படும், ஆபத்துக்கள் வந்தால் எப்படி சமாளிப்பது போன்ற பலவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்படியானாலும் தனித்து அவற்றைச் சமாளிப்பதைக் காட்டிலும் உடன் ஒருவன் துணையாக வந்தால் நம் பயணம் இனிதாக முடியும் அல்லவா. ஆகவேதான் நெடுவழியில் பயணம் செய்யும்போது ஒரு துணையையும் கூட்டிச் செல்வது நலம். அந்தப் பயணம் வாழ்க்கைப் பயணம் என்றால், வாழ்க்கைத் துணைவி, மனைவி துணையாக வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

79. புணை மீது அல்லது நெடும்புனல் ஏகேல்.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நமக்குத்தான் நீச்சல் தெரியுமே என்று அதில் இறங்கிவிடக் கூடாது ஆற்று நீரின் வேகம் பொதுவாக ஆபத்தானதாக இருக்கும். ஆகவே ஆற்றைக் கடக்க படகு, பரிசல்  அல்லது தெப்பம் இவற்றைக் கொண்டு கடக்க வேண்டுமே தவிர நீந்திப் போய்விடலாம் என்று ஆற்றில் இறங்கிவிடக் கூடாது. எந்த வேலையில் இறங்கும் போதும் அதிலுள்ள சாதக பாதங்களைக் கணக்கிட்டு, பாதகமாக இருக்குமென்றால் அதற்குத் தேவையான பாதுகாப்புகளைப் பலப்படுத்திக் கொண்டு அந்த காரியத்தில் ஈடுபடவேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வு தேவை என்பதை இந்த வரி நமக்குக் கூறுகிறது.

80. எழில் ஆர்முலைவரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே.

இது மிக முக்கியமான அறிவுரை. பொதுவாக ஆண், பெண் இருபாலரிலும் ஆண்களே, பெண்களைக் கண்டு மயங்கி, தன்வயம் இழந்து, புத்தி கெட்டு பொருந்தாத செயல்களைச் செய்யத் துணிபவர்கள். சபலம், அல்லது பெண்களின் அழகிய மார்பு, செவ்வரி படிந்த மயக்கும் கண்கள், சாகசமான பேச்சு இவற்றால் மதிமயங்கி செய்யக்கூடாதவற்றையும் செய்யத் துணிந்துவிடுவார்கள். இது உலக இயற்கை. இறைவன் படைப்பில் பெண்களுக்கு அத்தகைய சாகசத்தைக் கொடுத்து, ஆணுக்கு பலவீனத்தையும் கொடுத்து படைத்திருக்கிறான். அழகிய பெண்கள் என்பதற்காக, அவள் சாகசமாக இன்பம் தரும் சொற்களைக் கொஞ்சிக் கொஞ்சிச் சொல்கிறாள் என்பதற்காக ஏமாந்துவிடாமல் இருப்பவனே ஆண்மகன். ஒரு பெண்ணுக்கு மிகவும் சிரமமான காரியமொன்று ஆகவேண்டியிருக்கிறது. அவள் அடுத்த பெண்ணிடம் சொல்வாள், அதோ பார் அங்கு ஒரு அசடு, பெண்களைப் பார்த்து வழிந்து கொண்டிருக்கிறது. அதனிடம் சொன்னால் போதும் ஓடிப்போய் இந்தக் காரியத்தை செய்துமுடித்துவிட்டு வந்து நிற்கும், அதனிடம் சொல்லி இந்தக் காரியத்தை முடித்துக் கொள்ளலாம் என்பாள். புரிந்து கொண்டால் சரி! இதற்கு மேல் சொல்லி நமக்கு ஏன் வீண் வம்பு.

81. வழியே ஏகுக வழியே மீளுக.
எந்தவொரு செயலைச் செய்ய வேண்டியிருந்தாலும், அதற்குரிய நேர்வழியில் சென்று அந்தச் செயலை முடிக்க முயற்சி செய்தல் வேண்டும். எதற்கும் குறுக்கு வழி தேடக்கூடாது. நமக்கென்று சிலர் அமைவார்கள். இந்த செயலுக்கு ஏன் இப்படி அலைகிறாய், எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார், அவரிடம் சொன்னால் போதும் காரியம் முடிந்துவிடும் என்று குறுக்கு வழி காண்பிப்பார். வேண்டாம். எதையும் நேர் வழியில் சென்று சாதிப்போம். அதனால் கால தாமதம் ஆனாலும், செலவு ஆனாலும் பரவாயில்லை. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு தேவை. அவசரமாகப் போக வேண்டியிருப்பதால் ஒரு பயண ஏஜண்டிடம் சென்று யார் பெயரிலோ பதிவான ஒரு டிக்கெட்டில் பயணம் செய்கிறோம். சில நேரங்களில் அந்த ஏஜெண்டே டிக்கெட் பரிசோதகரிடம் போட்டுக் கொடுத்து விடுவார். பாதி வழிப் பயணம் செய்கையில் அந்த பரிசோதகர் வந்து உன்னுடைய பெயர், முகவரி அனைத்தையும் துறுவித் துறுவிக் கேட்டு உண்மையை வரவழைத்து தண்டம் அழ வைத்துவிடுவார். தேவையா இந்த அவமானம். ஆகவே நேர்வழி செல்லுதலே வாழ்க்கையை நேர்மையாக நடத்தும் வழி. நம் போக்கும், வரத்தும் நேர்மையாக இருத்தல் அவசியம்.

82. இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே.
இதுவரை எண்பத்தியோறு அறவுரைகளைப் பார்த்தோம். பிறருக்கு புத்திமதி சொல்வதி எளிது. அதனைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இருந்தாலும் சொல்லுவதைச் சொல்லி வைத்தால், கேட்பவர்கள் கேட்டுக் கொண்டு அதன் வழி நடக்கட்டும், இல்லையேல் விதிவிட்ட வழி, நாம் என்ன செய்ய முடியும் என்று வாய்மூடி இருக்கத்தான் வேந்தும். இவ்வுலகத்தில் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய நீதிகளை இதுவரை பார்த்தோம். கடைபிடித்தல் அவரவர்க்குரிய உரிமை.

83. வாழிய நலனே! வாழிய நலனே!!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதல்லால் வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். அதுதான் எந்த இலக்கியமும் கூறும் சுப வாக்கியம் (ஸ்வஸ்தி வசனம்) . வாழி உலகம், வாழி மக்கள், வாழிய நலங்கள் எல்லாம்.

இதுவரை வெற்றிவேற்கை வாக்கியங்களைப் பார்த்தோம். நமக்குத் தெரிந்த வகையில் அதற்கு விளக்கங்களைக் கொடுத்தோம். பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி! வாழ்க!




1 comment:

துரை செல்வராஜூ said...

பசுமரத்தாணி போல பதிய வேண்டியவை. நம் மக்களை வெண்ணெய் இருந்தும் நெய்க்கு அலையும் மூடர்களாக ஆக்கி விட்டது இன்றைய கல்வி முறை. 73,74,78,79, 83 - மனதில் பதிந்தவை. அன்புடையீர்!.. மீண்டும் என்னை ஒரு பாலகனாக ஆக்கின - தாங்கள் வழங்கிய வெற்றி வேற்கையும் அதன் விளக்கமும்!.. உங்கள் தாள் மலர்களைப் பணிகின்றேன் ஆசானே!...ஞானமும் கல்வியும் நல்லருட்செல்வமும் எல்லோர்க்கும் நிறைவதாக!...