பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 7, 2013

வெற்றி வேற்கை. (2)

வெற்றி வேற்கை. (2)

முந்தைய பதிவில் முதல் பத்து வரிகளுக்கு விளக்கங்களைப் படித்தீர்கள். இந்தப் பதிவில் அடுத்த பத்து வரிகள் படித்துவிட்டுக் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

11. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்:
ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதியா? சமூகத்தில் பெண்கள் எதிர்த்துப் பேசக் கூடாது, அடங்கிப் போக வேண்டும். மற்றவர்கள் எதிரில் பெண்கள் உரத்த குரலில் சிரிக்கக் கூடாது. பாஞ்சாலி சிரித்தாள், பாரதப்போர் வந்தது என்றெல்லாம் நம் பெரியவர்கள் சொல்வதுண்டு இல்லையா? இதைக் கேட்கும் இப்போதைய பெண் விடுதலையாளர்கள் ஆணாதிக்கம் இது. இதை ஒழித்தே தீருவோம் என்று குரல் கொடுப்பார்கள். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும், பொதுவாக ஆண்கள் பேசுவது, நடந்து கொள்வது, விவாதங்களில் கலந்து கொண்டு பேசும்போது அவர்களது பாணி, இவைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. சிவபெருமான் ஆடிய ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவனைப் போல் காலை தலைக்கு மேலே உயர்த்தி ஆடமுடியாமல் தில்லை காளி கோபமடைந்து காட்டுக்குள் போய்விட்டாள் என்கிறது நம் புராணம். பெண்களுக்கு அழகு எதிர்த்துப் பேசாதிருத்தல், அதிலும் குறிப்பாக கணவனை எதிர்த்துப் பேசுவோர் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. இது குறித்து யாராவது எதிர் பேச வந்தால் நான் இல்லை.

12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்:
இதில் என்ன அதிசயம். குலப் பெண்கள் கணவனை அன்போடு உபசரித்து, வேளா வேளைக்கு அவனுக்கு உணவு பரிமாறி, அவளும் வேலைக்குச் செல்பவள் என்றாலும், அன்பில் குறையாமல் நடந்து கொள்வதுதான் சிறந்தது. அதனால்தான் அத்தகைய பெண்களைக் குலமகள் என்கின்றனர். மாறாக, வெற்றி வேற்கை. சோறு வைத்திருக்கிறேன் போய் கொட்டிக்க, எனக்குத் தூங்கணும் என்றா சொல்வாள் பெண். சொல்ல மாட்டாள் இல்லையா? குடும்பம் இனிமையாக இருக்க வேண்டுமானால் கணவன் மனைவியைப் பேணுதலும், மனைவி கொழுநனைப் பேணுதலும் அவசியம்.

13. விலைமகட்கு அழகு மேனி மினுக்குதல்:
மிகப் பண்டைய காலமும் இல்லாமல், தற்போதைய நாகரிக உலகமும் இல்லாமல் இருந்த இடைப்பட்ட காலத்தில் 'விலைமகள்' எனும் சொல்லும், ஆண் மனைவி தவிர வெளியே உறவு வைத்துக் கொண்டு அதனால் அந்தக் குடும்பம் தொல்லைகளுக்கு ஆளானதையும் நாம் கேள்விப் படுகிறோம், பழைய கதைகளிலும் படிக்கிறோம். அப்போதெல்லாம் பெண்கள் அறியாமை இருளில் இருந்ததால் இதுபோன்ற சூழ்நிலைகளை அழுது கழித்திருக்கிறார்கள், ஆண்களை எதிர்த்துப் போராடியதாகத் தெரியவில்லை. சரி இந்த வரிக்கு வருவோம். விலைமகளின் தொழில் அது. அந்த தொழிலுக்கு ஏற்றவாறு அவள் தன்னை அழகு படுத்திக் கொண்டு, கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு கண்களை அலைபாய விட்டால்தான் அவள் தொழில் நடக்கும் என்பதால் அவளுக்கு அழகு 'மேனி மினுக்குதல்' என்று இந்த வரியில் குறிப்பிடுகிறார். இது சமூக நியாயமாகக் கொள்ள முடியாவிட்டாலும், அவரவர்க்கு அவரவர் தொழில் முக்கியம் என்பதால், அவளுடைய இலக்கணம் அது என்பதோடு இதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நல்ல குடும்பத்துப் பெண்கள் இதுபோன்று நடந்து கொள்ள மாட்டார்கள்; நடந்து கொள்ளக் கூடாது என்பது விதி.

14. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்:
எல்லா நூல்களையும் கற்று அந்நூல்கள் கூறும் அறங்களை நன்கு புரிந்து கொண்டு வாழ முற்படுபவர்களே அறிஞர் எனலாம். தான் கற்றது போதும் என்று இல்லாமல் மேலும் மேலும் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து கசடறக் கற்று, அதன் வழி நடத்தல் வேண்டும். தான் கற்ற நீதிகளை நன்கு உணர்ந்து மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதற்குத் தக்கபடி வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். ஆக, நல்ல நூல்களைக் கற்றல், கற்றவற்றை நன்கு உணர்ந்தல்; உணர்ந்தபடி அடக்கத்துடன் வாழ்க்கையை நடத்துதல் இவைகள் எல்லாம் அறிஞர்க்கு அழகு.

15. வறிஞர்க்கு அழகு வறுமையிற் செம்மை:
இதற்கு முந்தைய வரியில் அறிஞர் பற்றி கூறியமையாலோ என்னவோ அடுத்த வரியில் வறிஞர் பற்றி குறிப்பிடுகிறார். வறிஞர் என்பவர் ஏழை என்கிறது தமிழ் அகராதி. உண்ண உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் இல்லாமல் வருந்துவோர் வறிஞர். வறுமையால் வருந்துபவர் வறிஞர். அப்படிப்பட்ட வறிஞர்கள் தன்னுடைய வறுமையைப் போக்கிக்கொள்ள தீய வழிகளில் ஈடுபட்டு பொருள் ஈட்ட முயற்சி செய்யாமல், வறுமையை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அற்பத்தனமாக பிறரிடம் ஈயென்று பல்லைக் காட்டி அவர்கள் இரங்கிக் கொடுக்கும் பொருளை வாங்கி வயிறு வளர்க்க முற்படாமல், அந்த வறிய நிலையிலும் தன்னுடைய சுய கெளரவத்தைக் காப்பாற்றி உள்ளதைக் கொண்டு உவகையோடு வாழ்தலே இன்பம். வறியவன் என்பதால் அவனுக்கு சுய கெளரவம் இல்லாமல் போய்விடக்கூடாது. மயிர் நீப்பின் வாழா கவரிமான் அன்னார் உயிர் நீப்பின் மானம் வரின் எனும் குறளை நினைவில் கொள்வோம்.

16. தேம்படு பனையின் திரள்பழத்து ஒருவிதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
பனைமரம் நாம் தினமும் கண்டு களிக்கும் மரவகைதான். நகரங்களில் அல்ல, கிராமங்களில். இந்த பனை மரத்தில் பழங்கள் உண்டு. அவைகளைக் கோடை காலத்தில் கொத்து கொத்தாகப் பறிந்துக்கொண்டு வந்து சாலையோரங்களில் போட்டு அதனை கலை நுணுக்கத்தோடு சீவி, அதனுள் இருக்கும் மூன்று நுங்குகளை எடுத்து உண்பர். மூன்று கண்களையுடைய இந்தப் பனம்பழங்கள் சிவபிரானின் முகமோ? யார் கண்டது! இந்தப் பழங்களை முத்தவிட்டு மரத்திலேயே இருந்தால் அதில் மூன்று விதைகள் உருவாகும். அதில் ஏதாவதொன்று பூமியில் விழுந்து பனங்கன்று முளைத்து, அதிலிருந்து மரமொன்று வானளாவ வளர்ந்தாலும், அந்த மரத்தின் நிழலில் ஒருவராவது வெயில் நேரத்தில் ஒண்டிக்கொள்ள முடியுமா? முடியாதே. அது போல சிவபிரான் அருளால் தனியொருவன் செல்வத்தைப் பெருக்கிக்கொண்டு சீமானாக வாழ்ந்தாலும், வானுயர புகழ் மண்ட மாளிகையில் வாழ்ந்தாலும், ஆலமரம்போல் தழைத்து வளர்ந்த மரம்போல அண்டிய அனைவர்க்கும் நிழல் தரும் மரமாக இருக்காமல் நெடிதுயர்ந்த பனையாக இருப்பானாகில் யாருக்கு என்ன பயன்? பயனற்ற மனிதராகத்தான் அவர்கள் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பர்.

17. தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீர்க் கயத்துள் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே!
முந்தைய வரிகளின் தொடர்ச்சியாக அமைந்ததைப்போல இருக்கும் இந்த வரிகள் சொல்லும் செய்தி முந்தைய வரிகளின் கருத்துக்கு நேர் மாறானது. ஆலமரம் பரந்து விரிந்த மரம். சாலையோரங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தழைத்து வளர்கின்ற மரம் ஆல். மரம்தான் பெரிதே தவிர அதில் விளையும் கனிகள் மிகச் சிறியன. அவை ஒவ்வொன்றிலும் ஏராளமான விதைகள். மீன் முட்டைகளைவிட சிறியவை அவை. அந்த சிறிய விதைகளில் ஏதேனும் ஒன்று பூமியில் விழுந்து கன்றாகி, செடியாகி, மரமாக தழைத்து வளர்ந்த பின்னர், அந்த மரத்தின் நிழலில் அரசன் ஒருவனின் பட்டத்து யானை முதல், குதிரைகள் பூட்டிய ரதங்கள், காலாட்படைகள் அனைத்தும் நின்று இளைப்பாற நிழல் அல்லவா கொடுக்கிறது. ஆலம்விதை போன்ற கண்களுக்குத் தெரியாத சிலர் நம் சமூகத்தில் இருப்பர். அத்தகையவர் பரந்த மனப்பான்மையும், ஊருக்கு உதவும் மனோபாவமும் கொண்டவராக இருப்பர். ஊருக்குப் பயன்படும் அத்தகையோர் ஆலமரத்துக்கு ஒப்பாவர். யாருக்கும் நிழல் தராத பனையாக இருப்பதினும், ஊருக்கே நிழல்தரும் ஆலாக இருப்பது பெருமையன்றோ?

18. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
ஊரில் பெரிய மனிதர்கள் என்று மதிக்கப்படுபவர் அனைவருமே பெரிய மனிதர்களுக்கு இருக்க வேண்டிய இரக்கம், பிறருக்கு உதவும் தயாள குணம், உடுக்கை இழந்தவன் கைபோல பிறர்க்கு துணை புரிய ஓடோடிச் செல்லும் பண்பு, குடும்பத்துத் தலைவன் போல சமூகத்துக்குத் தலைவனாக இருந்த உதவும் எண்ணம் இவைகள் இல்லாமல் இருந்தால் அவரை பெரியோர் எனக் கொண்டாடலாமா? தோற்றத்தாலும், வயது முதிர்தலாலும், செல்வச் செறுக்காலும் அவர் பெரியவர் போலத் தோன்றினாலும் அவர்களைப் பெரியோர் என்று ஒப்புக் கொள்ள முடியுமா? மாறாக ஒருவர் ஊருக்கு உதவும் ஊரணி போன்றவராகவும், ஏனையோருக்குப் பயன்படும் பழுத்த நற்கனிகளையுடைய மரம் போலவும் இருப்பாரானால் அவர் உண்மையில் பெரியோரே!

19. சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
சிலரை அவர்களது வாழ்க்கைத் தரம், வருமானம், செல்வாக்கு இவற்றை வைத்துத்தான் இந்தச் சமூகம் மதிக்கிறது. அவர்களது பார்வையில் கணிசமாகத் தோன்றாதவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. நம் எதிரில் வெள்ளையும் சொள்ளையுமாக என்பார்களே அப்படி பகட்டாக வாழ்ந்து கொண்டு, பழைய சோறு தின்றாலும், அவர் தின்ற இலையில் சிறிது விளக்கெண்ணையைத் தடவி பிறர் பார்க்கும் வண்ணம் வாயிலில் எறிந்து, இவர் அத்தனை நெய் போட்டு சோறு உண்டதாகக் காட்டிக் கொள்ளும் அற்பர்களாக இருந்தால் ஊருக்கு என்ன பயன்? நாம் பொருட்படுத்தாத ஒரு மனிதன், எளியவன் ஆனால் சமயத்தில் ஓடிவந்து உதவக்கூடிய பண்புடையவனாக இருந்தால், அவனை அவன் செல்வச் செழிப்பினால் மட்டுமல்ல, தோற்றத்தினால் மட்டுமல்ல, அவன் நடத்தையால், எண்ணத்தால், அவன் செய்யத் துடிக்கும் உதவிகளினால் அவன் சிறியவன் அல்ல, பெரியோனே!

20. பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்.
குழந்தைகளைப் பெற்று, வளர்த்து ஆளாக்கி அவர்களை ஊர் மெச்சும் நல்லவர்களாக ஆக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் எண்ணியபடி பெற்ற பிள்ளைகள் எல்லாம் ஊர் மெச்சும் குழந்தைகளாக, பெற்றோர்களைத் தாங்கும் நல்ல மக்களாக வளர்ந்து விடுகிறார்களா? இல்லையே! ஆக பிள்ளைகள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், ஆனால் அவர்கள் நல்ல பிள்ளைகளாக ஆவது நம் கையில் இல்லை இறைவன் கருணையில் இருக்கிறது. "எந்த பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்றொரு திரைப்பட பாடல் உண்டு. ஒருகால் பிள்ளைகளை வளர்க்கும் அன்னையின் கையில் அந்த பொறுப்பு இருக்கிறதோ என்னவோ?

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான விளக்கங்கள்..பாராட்டுக்கள்.

துரை செல்வராஜூ said...

45 வருடங்களுக்கு முன் தனியார் வழங்கிய தமிழ் பாட புத்தகத்தில் மாலைப்பொழுதில் தாயின் அருகில் அமர்ந்து அவர்கள் சொல்லிக் கொடுக்க - படித்ததெல்லாம் மனதில் நிழலாடுகின்றதே!....

kmr.krishnan said...

"பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் இல்லை" என்பது ஒரு தத்துவக் கண்ணோட்டத்தில் பார்த்தால்,காய்க்கின்ற எல்லாமே காய் ஆவதில்லை.
பூவில் கருகுவதும்,பிஞ்சில் வெம்புவதும்,காற்றில் விழுவதுவும் என முழுமையடையாமல் ஆவது உண்டு. அது போல பெறப்படும் மகவுகள் முழுமையடைவது நம் வசம் இல்லை. அதைச்செய்ய வேண்டியது இறையருளே

பிள்ளை வளர்ப்பில் கீதை உபதேசத்தை மனதில் உள் வாங்கிக் கொண்டு பலன் கருதாமல் கடமை ஆற்ற வேண்டும்.

அதிலும் பெண்குழந்தைகள் நாம் வளர்த்த தென்னை மரம் அடுத்த வீட்டுத் தோட்டத்தில் காயைப் பொழிவது போலத்தான்.

எனவே இந்த அறிவுரை பிள்ளை வளர்த்து தளர்வுறுவோருக்காகக் கூறப்பட்டது என்று கொள்ளலாகுமோ?

தங்கள் தமிழ்ப் பணிக்குத் தலை வணங்குகிறேன். நன்றி!

kmr.krishnan said...

"பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் இல்லை" என்பது ஒரு தத்துவக் கண்ணோட்டத்தில் பார்த்தால்,காய்க்கின்ற எல்லாமே காய் ஆவதில்லை.
பூவில் கருகுவதும்,பிஞ்சில் வெம்புவதும்,காற்றில் விழுவதுவும் என முழுமையடையாமல் ஆவது உண்டு. அது போல பெறப்படும் மகவுகள் முழுமையடைவது நம் வசம் இல்லை. அதைச்செய்ய வேண்டியது இறையருளே

பிள்ளை வளர்ப்பில் கீதை உபதேசத்தை மனதில் உள் வாங்கிக் கொண்டு பலன் கருதாமல் கடமை ஆற்ற வேண்டும்.

அதிலும் பெண்குழந்தைகள் நாம் வளர்த்த தென்னை மரம் அடுத்த வீட்டுத் தோட்டத்தில் காயைப் பொழிவது போலத்தான்.

எனவே இந்த அறிவுரை பிள்ளை வளர்த்து தளர்வுறுவோருக்காகக் கூறப்பட்டது என்று கொள்ளலாகுமோ?

தங்கள் தமிழ்ப் பணிக்குத் தலை வணங்குகிறேன். நன்றி!