பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 18, 2013

தமிழகத்தின் வடக்கெல்லை போராட்டம். (பகுதி 3)

தமிழகத்தின் வடக்கெல்லை போராட்டம். (பகுதி 3)
Dr.S.Radhakrishnan


பாரத நாடு விடுதலை அடைந்த நாளன்று டில்லி நகரம் கோலாகலத்தோடு கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் மகாத்மா காந்தி வங்காளத்தில் நவகாளி எனுமிடத்தில் நடந்த மதக் கலவரத்தைத் தடுத்து நிறுத்த அங்கு சென்று கலவரப் பிரதேசத்தில் கால்நடையாகப் பயணம் செய்து கொண்டிருந்தார். சுதந்திரத்துக்குக் காரணமான அந்த மகான் எந்தவொரு பதவியையோ, பெருமையையோ எதிர்பார்க்கவில்லை. தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ, சுதந்திரத்தை அனுபவிக்கும் பக்குவம் இந்திய மக்களுக்கு இன்னமும் வரவில்லையோ என்கிற கவலைகூட அவர் மனத்தை அரித்தது. அவருக்கு மட்டுமா? அவரைப் போன்ற தன்னைப் பற்றியோ, தன் குடும்பம் பற்றியோ கவலைப்படாத தேசபக்தர்கள் நாட்டை மட்டுமே நினைத்துப் பாடுபட்ட வரலாறு நமக்குத் தெரியும். மகாத்மாவின் அடியொற்றி தமிழ்நாட்டிலும் ஒரு தலைவர் சுதந்திரம் அடைந்த பின் தமிழர்களின் நலன், தமிழ்நாட்டின் வளம் இவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு பாடுபட்டவர் சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. அவர்கள்.

1947 ஆகஸ்ட் 16ஆம் தேதியன்றே அவர் சென்னை மாகாணம் மொழிவாரியாகப் பிரிக்கப்படப் போகிறது என்பதையும், வடக்கெல்லை பகுதியில் உள்ள பகுதிகள் எந்த மொழி பேசுவோர் அதிகம் இருக்கிறார்களோ அந்தப் பகுதிகள் தமிழகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ இணைக்கப்படும் என்பது தெரிந்து, தமிழ்ப் பகுதிகள் அதிகமுள்ள சித்தூர் மாவட்டத்தைத் தெலுங்கர் அதிகமுள்ள பகுதி என்று அறிவிக்கப்பட்டு அந்தப் பகுதிகள் ஆந்திரத்துக்குப் போய்விடப் போகிறது என்கிற ஆபத்தை உணர்ந்த தமிழ்ப் பிரதேசங்களை மீட்கும் எண்ணத்துடன் சித்தூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பதியும், நகரி புத்தூரும், திருத்தணியும் தமிழரின் பிரதேசம், அவை நம் கையைவிட்டுப் போய்விடப் போகிறது என்கிற ஆதங்கத்தில் அவர் இந்தப் பயணத்தை மேற் கொண்டார்.

அது தவிர சுதந்திர தின கொண்டாட்டங்கள் சென்னை கடற்கரையில் மாபெரும் (மாபெரும் எனும் சொல்லுக்கேற்ப பெரிய கூட்டம்தான்) கூட்டத்தில் ஐயா ம.பொ.சியும் கலந்து கொண்டாரே தவிர, அவரைப் பேசச் சொன்னபோது, வேண்டாம் என்று மறுத்துவிட்டார். காரணம் விடுதலையில் மனமில்லாதவரா அவர்? அதற்காகவா பல ஆண்டுகள் சிறையில் தவமிருந்தார்? சிறையில் இறந்துவிடுவார் எனும் அச்சத்தில் அல்லவா அவரை அரசாங்கம் விடுதலை செய்தது. அதுவல்ல அவர் பேசாமல் இருந்ததற்குக் காரணம். சுதந்திர இந்தியாவில் தமிழ் பேசும் பகுதிகள் கொண்ட தமிழகம் அமையவும், தமிழ் ஆட்சிக் கட்டிலில் அமரவும், சென்னை மாகாணம் எனும் பெயரை தமிழ்நாடு என்று மாற்றவும் அவர் இனி போராடவேண்டியிருக்கிறதே என்கிற கவலை அவர் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது.

1947 ஆகஸ்ட் 16இல் அவர் சென்னையிலிருந்து புறப்பட்டு திருவாலங்காடு எனும் புகைவண்டி நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சாலை வழியாக ஊர் ஊராக திருப்பதி வரை செல்லும் பயணத் திட்டத்தோடு வந்திருந்தார். அப்போது அவருடைய கோஷம் "வேங்கடத்தை விடமாட்டோம்", "திருத்தணிகை தமிழருடையதே" என்பது போன்ற கோஷங்கள்தான்.

இந்த நோக்கத்துக்காக அவர் "வடவெல்லைப் பாதுகாப்புக் குழு" எனும் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். காங்கிரசுக்குள் இருந்து கொண்டு இவர் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று பேசுவதை, தேசியம் பேசுகின்ற காங்கிரசார் விரும்பவில்லை என்பது இறுதியில் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றியபோது வெளிப்பட்டது. அப்படி அவர் வடக்கெல்லை பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நேரத்தில் அவருக்கு மங்கலங்கிழார் எனும் தமிழ்ப் புலவர் உடனிருந்தார். போகுமிடங்களில் எல்லாம் தெலுங்கர்கள் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டங்களில் கலவரமிழைத்தனர். ஆனாலும் இவருக்கு ஜனார்த்தனம் எனும் இளைஞர் உட்பட பல தொண்டர்கள் உடனிருந்து இவரைப் பாதுகாத்தனர்.

1953 மார்ச் மாதம் 25ஆம் தேதி பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி சித்தூர் மாவட்டம் பிரச்சினைக்குட்படாத பகுதி என்பதால் அதனை ஆந்திரத்தில் இணைத்துவிட மத்திய அரசு தீர்மானம் செய்துவிட்டது. இந்த முடிவு தமிழர் தலைவர் ம.பொ.சி. அவர்களுக்கு அதிர்ச்சியையும், உடனடியாக இதனை எதிர்த்துப் போராடவும் தூண்டுகோலாக அமைந்தது.

வடவெல்லை பாதுகாப்புக் குழுவுக்கு ஐயா ம.பொ.சி. தலைவர். கே.விநாயகம் எனும் திருத்தணி வக்கீல் செயலாளர். இவர் பின்னாளில் சட்டசபையில் கலக்கிக் கொண்டிருந்தவர். இந்த விநாயகத்துக்கு இப்போது உள்ள வழக்கப்படி ஐயாவும் "தளபதி" என்று பெயரிட்டு அழைத்து மகிழ்ந்தார்.

இதுபோன்ற வேடிக்கைகள் எல்லாம் தமிழ்நாட்டில்தான் நிகழும். நாம் இன்னமும் சரித்திர காலத்தில் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, தளபதி, போர் வாள், பாசறை போன்ற சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு கற்பனையான உலகில் சஞ்சரித்து வருகிறோம். அது கிடக்கட்டும், நம் வரலாற்றுக்கு வருவோம்.

சித்தூர் மாவட்டத்தில் ஐயா ம.பொ.சி சுற்றுப் பயணம் செய்த காலத்தில் அவரோடு உறுதுணையாக இருந்தவர்களில் மங்கலங்கிழார், சித்தூர் சி.வி.சீனிவாசன், தணிகை என்.சுப்பிரமணியம், பொதட்டூர்பேட்டை ஏ.ச.தியாகராஜன், ஏ.ச.சுப்பிரமணியம், சித்தூர் வழக்கறிஞர் என்.அரங்கநாத முதலியார், திருவாலங்காடு ஊராட்சித் தலைவர் திருமலைப் பிள்ளை, தணிகை காந்தி, ஜோதிடர் சடகோபாச்சாரியார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

1953 ஏப்ரல் 8ஆம் தேதியை "தமிழ் ராஜ்யக் கோரிக்கை நாள்" என தமிழரசுக் கழகம் கொண்டாடியது. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் பிரியும் அதே நேரத்தில் அப்போது சென்னை மாகாணத்தின் பகுதியாக ஒட்டிக் கொண்டிருந்த தென் கன்னட, மலபார் மாவட்டங்களையும் பிரித்து எஞ்சிய பகுதியை "தமிழ் மாநிலம்" என்ற பெயரில் அறிவித்திட வேண்டுமென்ற கோரிக்கையை தீர்மானம் நிறைவேற்றி முன்வைத்தது தமிழரசுக் கழகம்.

காங்கிரசின் அப்போதைய தலைவர்களாயிருந்த திரு காமராஜ், திரு ராஜாஜி ஆகியோர் இதுபோன்ற போராட்டங்களை விரும்பவில்லையாயினும் பெரும்பாலான காங்கிரசார் ஐயாவை ஆதரிக்கத் தயங்கவில்லை. அப்படிப்பட்ட தலைவர்களில் சிலர் அனைவரும் அறிய ஐயாவோடு இணைந்து பாடுபடத் தயாராயினர். அவர்களில் சென்னை மேயர் டி.செங்கல்வராயன், திருமதி டி.என்.அனந்தநாயகி, திருமதி சரஸ்வதி பாண்டுரங்கன், டாக்டர் குருபாதம், சின்ன அண்ணாமலை, கவி.கா.மு.ஷெரீப், வேலூர் வி.கே.குப்புசாமி முதலியார், ஜி.உமாபதி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திருத்தணியைச் சேர்ந்தவர். அவர் அப்போது சித்தூர் மாவட்டம் முழுமையும் ஆந்திரத்தில் இணைவதை ஆதரித்தார். அப்போது டில்லி நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த திருப்பதியைச் சேர்ந்த அனந்தசயனம் ஐயங்கார் அவர்களும் ஆந்திரருக்கு ஆதரவாகப் பணியாற்றினார். இவரைப் பற்றி ஐயா ம.பொ.சி. குறிப்பிடுவதைப் பார்ப்போம். ஐயா சொல்கிறார், "சித்தூர் தமிழ் ஐயங்காரான இவர் அசல் ஆந்திரரைவிடவும், தீவிரமாக இருந்தார். இப்படி ஆந்திரரெல்லாம் - டாக்டர் ராதாகிருஷ்ணன், அனந்தசயனம் போன்ற இருமொழி (தமிழ்/தெலுங்கு) பேசுவோர் ஓரணியில் திரண்டு நின்றது போல் தமிழர் எவரும் இருக்கவில்லை (எனது போராட்டம் பக். 345)

மத்திய அமைச்சராக விளங்கிய ஆர்.வெங்கட்டராமன் பட்டுக்கோட்டைக் காரர். அவர் சொல்கிறார், சித்தூர் மாவட்டம் ஆந்திரத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது, அதன் எந்தப் பகுதி மீதும் தமிழர் உரிமை கொண்டாடுவதற்கில்லை என்று தன் அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

ராஜாஜி சட்டப் பேரவையில் பேசுகையில் சொன்னார், "திருப்பதி கலாசாரத் துறையில் இன்னமும் தமிழ்ப் பிரதேசம்தான். அதை ஆந்திரர் மறுக்க முடியுமா? ஆயினும் அரசியல் துறையில் நாம் (தமிழர்) அதை இழந்துவிட்டோம். திருப்பதி நமக்குத் திரும்பாது. அதைக் கண்ணெடுத்தும் பார்க்க வேண்டாம். திருப்பதி ஆந்திராவில் இருக்கிறது - இருக்கும்". இப்படிச் சொன்னார் ராஜாஜி.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பரவலாகப் பேசப்பட்ட கருத்து என்னவென்றால், ராஜாஜி, பெரியார், ஆர்.வி. "ஜனசக்தி" ஆகிய பெரியோர்கள் எல்லாம் கைவிட்ட பின்னர் சிவஞான கிராமணியாவது, வடவெல்லையை மீட்பதாவது? என்பதுதான். பொதுவாக வேறு யாராக இருந்திருந்தாலும், மனம் தளர்ந்து போய் நடப்பது நடக்கட்டும் என்று ஒதுங்கியிருப்பார்கள். ஆனால் வாழ்க்கையே போர்க்களமாக அனுபவித்து வந்த ஐயாவுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா. தனித்து நின்று போராடுவோம், கிடைத்தால் வெற்றி, இல்லையேல் போராடினோம் கிடைக்கவில்லை எனும் திருப்தி என நினைத்தார்.
Ananthasayanam Ayyangar

சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர், திருத்தணி, பல்லவனேரி, கங்குந்திக்குப்பம் ஆகிய ஆறு தாலுகாக்கள் தமிழகத்தில் சேர்க்க வேண்டுமென்பது ஐயாவின் கோரிக்கை. கோரிக்கை இப்படி இருந்த போதிலும் உண்மையில் சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய பகுதிகளில்தான் தமிழர்கள் அதிகம் வாழ்ந்தனர். இருந்த போதிலும் மற்ற பகுதிகளில் வாழ்ந்தவர்கள் அசல் தமிழர்களும் அல்ல, அசல் ஆந்திரர்களும் அல்ல, பெரும்பாலோர் இருமொழி பேசும் மக்களாக இருந்தனர். இவர்கள் எந்த மொழி பேசுவோர் என்று இனம் கண்டுகொள்ள முடியாதவர்கள். மேலும் வரலாற்று, இலக்கிய அடிப்படையில் பார்த்தாலும் திருப்பதிக்குத் தெற்கு தமிழகம் என்றே கூறப்படுகிறது. ஆகையால் இங்கிருந்த தமிழர்கள் ஆந்திரர்கள், விஜயநகர சாம்ராஜ்யம் பீடுற்றிருந்த சமயம் குடியேறிய அல்லது அவர்கள் ஆதிக்கத்தால் தமிழ்பேசுவோர் தெலுங்கு பேசுவோராயிருக்க வேண்டும்.

தமிழரசுக் கழகப் பொதுக்குழு கூடி வடவெல்லை போராட்டம் 1953 ஏப்ரல் 9இல் சித்தூர் மாவட்ட எல்லைகுள்ளே நடத்துவது என்றும், அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுமானால் போராட்டத்தைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவதென்றும் தீர்மானித்தது. தமிழரசுக் கழகத்தார் "சித்தூர் தினம்" என்று ஒரு நாளை அறிவித்து மக்களுக்குப் பிரச்சனையை விளக்கினர். சித்தூர் மாவட்டத்தில் கடையடைப்பும், பொது வேலை நிறுத்தமும் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்பட்டது. போராட்டம் தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது. இந்த 15 நாளும் காந்திய அறவழியில் போராட்டம் நடத்தப்பட்டதால் ராஜாஜி அரசாங்கம் எவரையும் கைது செய்யவில்லை.

அப்போது திருத்தணி ஊராட்சி மன்றத் தேர்தல் வந்தது. அப்போது அதற்கு 10 இடங்களில் போட்டியிட்டு வடவெல்லை போராட்டக்குழு 9 இடங்களில் வெற்றி பெற்று ஊராட்சி மன்றத்தைக் கைப்பற்றி, திருத்தணி தமிழருக்குத்தான் என்பதை உறுதிசெய்தது. புத்தூரில் நடந்த பொதுக்கூட்டமொன்றுள் ஆந்திரர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு சிவய்யா என்பவர் கலவரம் செய்து, ஜல்லிக் கற்களை எடுத்து மேடையை நோக்கி வீசினர். மேடைவிளக்குகள் நொறுக்கப்பட்டன. போலீசார் தடையுத்தரவு பிறப்பித்து உடனடியாக அனைவரையும் ஊரைவிட்டு ஓடிவிடும்படி கூறி விரட்டினர். அப்போது ஒரு உயர் போலீஸ் அதிகாரி தலைவர் ஐயா அவர்களை விரட்டுவது போல உறுமிக் கொண்டு அவர் காதருகில் வந்து, ஐயா நான் திருநெல்வேலிக் காரன், தமிழன். இங்கு போலீஸ் அதிகாரிகள் உட்பட அனைவரும் தெலுங்கருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நீங்கள் தப்பிப் போவதுதான் நல்லது என்று காதோடு ரகசியமாகச் சொல்லிவிட்டு அதட்டி விரட்டுவது போல பாவலா செய்தார்.

ஐயா அப்படி ஓடக்கூடியவரா? கைது செய்து கொள்ளுங்கள், நாங்கள் போகமாட்டோம் என்றதும் ஐயா உட்பட கே.விநாயகம், ஈ.எஸ்.தியாகராஜன், சித்தூர் சீனிவாசன், மங்கலங்கிழார் ஆகியோரைக் கைது செய்து திருத்தணிக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் ஜில்லா போலீஸ் சுப்பிரண்டெண்ட் காரில் வந்தார். போலீஸ் வண்டியைப் பார்த்ததும் நிறுத்தி விவரம் கேட்டறிந்தார். ஐயாவுக்கு உதவி செய்த நெல்லைத் தமிழனிடம் நீங்கள் செய்ததுதான் சரி என்று பாராட்டி அனுப்பி வைத்தார். அவர் ஒரு கன்னடிகர்.

முதல்வர் ராஜாஜி போராட்டம் வன்முறை நோக்கிப் போவதாக கவலை கொண்டார். வடவெல்லைப் போராட்டக் குழு இனி இதுபோன்ற வன்முறைக்கு இடம் கொடுக்காமல் போர்க்களத்தை சித்தூர் மாவட்டத்திலிருந்து சென்னை நகருக்கு மாற்றிக் கொள்வதென்று முடிவெடுத்தது. இம்முடிவு ராஜாஜிக்கும் நிம்மதி அளித்திருக்கும் என்பதற்கு கல்கி 31-5-1953 இதழில் ஆசிரியர் ஆதரித்ததிலிருந்து யூகிக்க முடிகிறது.

(அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்)





3 comments:

துரை செல்வராஜூ said...

தமிழனைத் தமிழகத்துடன் சேர்ப்பதற்கு சிலம்புச் செல்வர் மற்றும் அவரிடைய குழுவினர் பட்டபாட்டைப் படிக்கும் போது மனம் கலங்குகின்றது.. இவர்களுக்கு எல்லாம் நாம் என்ன கைமாறு செய்தோம்?..

kmr.krishnan said...

மூன்று கட்டுரைகளையும் கருத்தூன்றிப் படித்தேன்.

சென்னையை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத்தந்ததில் ராஜாஜி, ம பொ சி, செங்கல்வராயன் ஆகியோரது பங்கு என்றும் போற்றுதலுக்குரியது

kmr.krishnan said...

மூன்று கட்டுரைகளையும் கருத்தூன்றிப் படித்தேன்.

சென்னையை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்ததில் ராஜாஜி, ம பொ சி, செங்கல்வராயன் ஆகியோரது பங்கு என்றும் போற்றுதலுக்குரியது