பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, March 26, 2013

கவி காளமேகம்


கவி காளமேகம்
கவி காளமேகம் பற்றி முன்பே இந்த வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். இப்போது சில பாடல்களைப் படியுங்கள். மேலும் சுவையான பாடல்கள் தொடர்ந்து வெளியாகும்.
1.    காஞ்சி வரதராஜப் பெருமாள் நகர்வலம் வரும்போது காளமேகம் அந்த ஊர்வலத்தைப் பார்க்கிறான். அப்போது ஒரு வைணவர் கவியிடம் எப்படி வரதன் ஊர்வலம் என்கிறார். அதற்கு கவி இப்படிச் சொல்லுகிறான்.
பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்!--பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையால், ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதே பார்!       
                        1.
இதன் பொருள்:  காஞ்சி வரதராஜப் பெருமாள் நல்லவர்தான்; அவருடைய திருவிழாவும் நல்ல திருவிழாதான்; ஆனால் இந்தப் பெருமாள் இருந்தவிடத்தில் சும்மா இல்லாமல் வெளிக்கிளம்பியதால் கருடன் பறந்து வந்து அவரை  எடுத்துச் செல்கிறான் பார் என்கிறான்.
*****************
2.   காளமேகம் நாகைப்பட்டினம் போகிறான். அங்கு இருந்த காத்தான் என்பவன் நிர்வகிக்கும் வருணகுலாதித்தன் சத்திரத்தில் இரவு தங்குகிறான். அப்போதெல்லாம் சத்திரத்தில் தங்குவோர்க்கு சாப்பாடு உண்டு. அதன்படி காத்தானிடம் தனக்கு சாப்பாடு அளிக்கும்படி கேட்கிறான். வழக்கம்போல் சத்திரச் சாப்பாடு ஓட்டல் சாப்பாடு போல உடனடியாக வருமா? காலதாமதம் ஆகிறது. அதிலும் எத்தனை தாமதம்? படித்துப் பாருங்கள் காளமேகத்தின் கேலியை.
கத்துகடல் சூழ் நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும்; குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.
                        2.
இதன் பொருள்: கடற்கரையிலுள்ள நாகைப்பட்டினத்தில் காத்தானுடைய சத்திரத்தில் மாலைப்பொழுது முடிந்து இரவு தொடங்கும்போதுதான் அரிசி வாங்கிவருவான்; அந்த அரிசியைக் களைந்து உலையிலிட ஊரடங்கி எங்கும் அமைதியாக இருக்கும்; விருந்தாளிக்கு இலையில் ஓர் அகப்பை சாதத்தை இடும்போது விடிந்துவிட்டதற்கு அறிகுறியாக வெள்ளி எழுந்துவிடும், அதாவது பொழுது விடிந்துவிடும்.
இதனைக் கேட்ட அந்த காத்தான், இவரை யார் என்பதை உணர்ந்து தனது தவறுக்காக வருந்துகிறான். அப்போது கவி தன் பாட்டின் பொருளை மாற்றி உரைக்கிறான். எப்படி? அந்தி சாய என்றால் நாட்டில் வளம் குறைந்து வறுமை எய்திய காலத்தில், அரிசி வரும் என்றால் இங்கு வருவோர்க்கு உணவு கிடைக்கும். இவன் அளிக்கும் உணவை உண்டு ஊர் மக்கள் பசி அடங்குவர். இவன் சமைத்த உணவு இலையில் விழும்போது வெள்ளிகூட தோற்கும்படியாக சாதம் வெள்ளை வெளேர் என்று  இருக்குமாம்.
******************************
3.    விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது. அப்போது கேலி செய்வதுபோல காளமேகம் பாடிய பாடல் இது:
மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ?--மாப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!
எலி இழுத்துப் போகின்றதே ஏன்?     
                        3.
இதன் பொருள்:  நல்ல பலம் பொருந்திய மதங்கொண்ட யானையை ஐயோ! ஒரு எலி தூக்கிக் கொண்டு போகிறதே! சிவபெருமானின் மழு எனும் ஆயுதமும், பெருமாளின் சக்கரமும், பிரம்மனின் தடியும் காணவில்லை போலிருக்கிறது. இருந்திருந்தால் இந்த எலியை அடித்து யானையைக் காப்பாற்றி இருப்பார்களே!
************************************
4.    ஆறுமுகப் பெருமானின் பெருமைகள் எவை?

அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பறிய மாமன் உறிதிருடி;--சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை.                
                        4.
அப்பன் சிவன் பிச்சையெடுத்து உண்பவன்; ஆத்தாள் பார்வதி மலை அரசனின் மகள் என்பதால் நீல நிறமுடையவள்; மாமன் மகாவிஷ்ணுவோ இடைக்குலப் பெண்டிர் உறியிலிருந்து வெண்ணையைத் திருடி உண்டவன்; அண்ணனுக்குக் கால்கள் சப்பை, வயிறு பெறுத்தவன்; இவைகளே இந்த ஆறுமுகனுக்குப் பெருமை.
**************************************************

No comments: