பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, January 8, 2013

இந்து மதம் -- முதல் பகுதி. (9-1-2013)


இந்து மதம் -- முதல் பகுதி. (9-1-2013)

1893 செப்டம்பர் 19ஆம் நாள் சுவாமிஜி ஆற்றிய உரை மிகப் பெரியது. அந்த உரை முழுவதையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன். இன்று அதன் முதல் பகுதி.

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், ஷொராஷ்டிரிய மதம், யூத மதம் ஆகியவையாகும். இவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு ஆளாகியும் காலத்தை வென்று இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள்வலிமையை நிரூபிக்கின்றன.

யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டு விட்டது; இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒருசில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கி விடும் போலத் தோன்றியது. ஆனால் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப் பெரியதான தாய் மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.

அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகள் எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துக்கள், பெளத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது.

அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்றுசேரும் பொது மையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாடது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத்தான் நான் விடை கூற முயலப் போகிறேன்.

தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால், வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.

இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில்தான் இருக்கிறது என்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில் இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத்தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருட்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீர வேண்டும். எனவே, கடவூல் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒருபோதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன்...........

(அது என்ன உவமை? நாளை பார்க்கலாம்.)

(தொடரும்)

1 comment:

Unknown said...

அருமை அடுத்தப் பதிவை ஆவலுடன் நோக்கி....