பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 5, 2013

பாமர மக்களை முன்னேற்றுதல் (6-1-2013)


                            பாமர மக்களை முன்னேற்றுதல் (6-1-2013)

'பாமர மக்களின் மத உணர்வுக்கு ஊறு செய்யாமல் அவர்களை உயர்த்துதல்' -- இந்தக் குறிக்கோளை உங்கள்முன் வைத்துக் கொள்ளுங்கள். நாடு குடிசைகளில் வாழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள். ஒரு நாட்டின் விதியை நிர்ணயிப்பது, பாமர மக்களின் நிலைமையைப் பொறுத்தது. உங்களால் அவர்களை உயர்த்த முடியுமா? தங்களிடம் இயல்பாக உள்ள ஆன்மீகப் பண்பை இழக்காமல், தாங்கள் இழந்த தனித்துவத்தை அவர்களுக்கு நீங்கள் மீண்டும் பெற்றுத் தர முடியுமா?

சாதாரண மக்களைப் புறக்கணித்ததே நமது தேசியப் பெரும்பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். பாமர மக்களுக்குச் சிறந்த கல்வி அளிக்கப்பட வேண்டும், உணவு அளிக்கப்பட்டுப் பரிபாலிக்கப்பட வேண்டும்; அதுவரை எந்த அரசியலும் பயன் தராது. அவர்கள் நமது கல்விக்காக வரி தருகிறார்கள், நமது கோயில்களைக் கட்டுகிறார்கள், இவற்றிற்குப் பிரதியாக அவர்களுக்குக் கிடைப்பது உதைகள்தான். சொல்லப் போனால் அவர்கள் நமது அடிமைகளாகவே உள்ளனர். இந்தியாவிற்குப் புத்துயிரளிக்க வேண்டுமானால் அவர்களுக்காக நாம் பாடுபட வேண்டும்.

நமது புனிதப் பணியை ஆதரவற்றவர்களும், ஏழைகளும் படிக்காதவர்களுமாகிய குடியானவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் செய்ய வேண்டும். முதலில் இவர்களுக்கு வேண்டியதைச் செய்துவிட்டு பிறகு நேரமிருந்தால் உயர்மக்களுக்காக, பணி செய்வோம். அந்தக் குடியானவர்களும் தொழிலாளர்களுமான மக்கள் நமது அன்பினால் நம் வசப்படுவார்கள். ............ 'உத்தரேதாத்மனாத்மானம் -- தன் முயற்சியாலேயே தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்' என்பது எல்லா விஷயங்களிலும் உண்மை. .......... அவர்கள் தங்கள் உண்மை நிலையை அறிந்து, உதவியையும் முன்னேற்றத்தையும் நாடுகின்றபோது, உங்கள் பணி தனது விளைவை ஏற்படுத்தி விட்டதையும், அது சரியான வழியில் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்... குடியானவர்களும் தொழிலாளிகளும் உயிரற்றவர்கள் போல் இருக்கிறார்கள். பணம் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவி செய்து, சொந்த வலிமையை இவர்கள் திரும்பப் பெறுமாறு மட்டும் செய்துவிட்டு, தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும்படி அவர்களை விட்டுவிட வேண்டும்.

நன்றி: "எனது பாரதம் அமர பாரதம்" வெளியீடு. ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை.

(தொடரும்)

1 comment:

Unknown said...

///'பாமர மக்களின் மத உணர்வுக்கு ஊறு செய்யாமல் அவர்களை உயர்த்துதல்' ////

இந்தக் கருத்து சுவாமிஜி யின் இன்னொருக் கருத்தும் எனக்கு ஞாபகம் வருகிறது.. அதன் சாரம். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூட நம்பிக்கைக்கு பின்னும் கூட ஏதாவது ஒரு உயர்ந்த தத்துவத்தின் ஒரு துளி மூலம் இருக்கும் என்பார்!

பாமர மக்கள் மட்டும் அல்லாது சமய சடங்குகள், பழக்கங்களில் மூல்கியவர்களிடம் கூட....
மகரிஷி பகவான் ஸ்ரீ ரமணரின் கருத்தும் இதுவாகவே இருந்து இருக்கிறது என்பதை அவரின் பல செயல்களில் இருந்து என்னால் உணரமுடிகிறது. எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம் தாம் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள் அப்படியே போகட்டும் இருந்தும் அதன் தாற்பரியம் நோக்கம் அது அந்த பேரொளியில் கலைப்பதற்கான (இதனுள்ளே அனைத்தும் அடக்கம்; எது செய்யக் கூடியது மற்றும் கூடாதது என்று) சரியானதொரு வழியாக இருப்பதை உறுதி செய்யட்டும் என்பதை அவர் உணர்த்துகிறார் என்பதாகவே நான் உணர்கிறேன்.


உலகில் உயர்ந்ததற் கெல்லாம் உயர்ந்தது ஒழுக்கம், அந்த ஒழுக்கத்தின் உயிரானது நன்றி யுணர்வு. நன்றியுணர்வு கொண்டவர்களுக்கு அடிமட்டத்தில் கடுமையாக உழைக்கும் சாதாரண மனிதனிடம் தாளாத அன்பும், பரிவும், இரக்கமும், ஏன் ? அவனைப் பற்றிய பெருமிதமும் கூடப் பிறக்கும். அப்படி பிறக்கும் போது அவன் கருணை உள்ளவன் ஆகிறான், கருணை உள்ளவன் மனதிலே கடவுள் உறைகிறார்!

சுவாமியின் நோக்கம் மனிதனை உயர்த்த (ஆன்ம நிலையில்) கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடாகவே இதையும் உணர்கிறேன்.

அருமையானக் கருத்துக்கள், மனிதனாக்கும் மகத்தானது!!

நன்றிகள் ஐயா!