பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 18, 2012

தெருக்கூத்தாடி

     தெருக்கூத்தாடி


டண்டணக்கா டண்டணக்கா சத்தம்  
தெருக்கோடியில்!
ஓடிப்போய் பார்த்தேன்
உருமி மேளம்
கூத்தாடி கையில்!

குரங்கை பார்த்து சொன்னான்
"ஆட்றா ராமா ஆட்றா ராமா"
குரங்கும் கரணம் போட்டது
நானும் கை தட்டினேன்!

இன்னொருபக்கம்
"உங்களுக்கு உழைக்க
உங்களின் பொன்னான வாக்கை.....
சத்தம் கேட்டு
திரும்பிப்பார்த்தேன்
ஒலிபெருக்கியில் கரை வேட்டி.

"ஊழலை ஒழிப்பேன் லஞ்சத்தை அழிப்பேன்"
ஓயாமல் சொன்னான்
நானும் வாய் பிளந்தேன்
கையும் தட்டினேன்!

மனிதன் குரங்கின் பரிணாமம்
ராமர் பக்தர்களின் திருநாமம்
ஆனால்
தெருக்கோடியின் கூத்தாடி
ஏன்
வெறும் நாமத்தை பார்த்து
திரு நாமம்
என்கிறான்
நானும் கை தட்டுகிறேன்

லஞ்சம் ஒரு அதிகார மையம்!
ஊழலும் ஒரு அதிகார மையம்!
ஆனால் கரை வேட்டி
தான் ஆசைப்படும்
இரண்டையும் ஒழிப்பேன் என்கிறான்
நானும் கை தட்டுகிறேன்.

எப்படி
வெறும் நாமம்
திரு நாமமாகும்?
எப்படி
ஒழிப்பேன் என்பவன்
தன்னைத்தானே
ஒழித்துக்கொள்வான்?

ஏன் எனும்
கேள்வி எழுந்து
இதை
எப்போது உணர்வேன்!
எப்போது
கைதட்டுவதை நிறுத்துவேன்?

-தனுசு-

2 comments:

Unknown said...

நண்பர் தனுசுவின் கவிதை அருமை!!!

//ஏன் எனும் கேள்வி எழுந்து
இதை எப்போது உணர்வேன்!
எப்போது கைதட்டுவதை நிறுத்துவேன்?///

''ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா ''

கற்காத கள்வனை; கல்வி
கற்றும் அறிவிலா பதரினை;
அரசியல் என்னும் போர்வையில்
அட்டூழியம் செய்யும் அரக்கர்தனையே;
அடியோடு பெயர்த்து எடுத்து
அழித்திடவே ஆவேசமுடனே வா வா வா...

இளையபாரதத்தினாய் இன்னும் ஏன்? தாமதம்
உனது உதயத்தை நோக்கிய பாரதம்
ஊமையாய்க் கிடக்கிறது....

மேடையில் ஆடிடும் பேய்களை விரட்டி
மேன்மைகள் மேவிட உன் தோழமைத் திரட்டி
வீறுகொண்டெழுந்து மூவர்ணக் கொடியினை
புதுப் படைச் சூழ கோட்டையில் ஏற்றிடு!!!

thanusu said...

நன்றி ஆலாசியம். உங்களின் பின்னூட்டத்தை படிக்கையில் மனம் முருக்கேறி சந்தோஷத்தை தருகிறது.