பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 4, 2012

கடுவெளிச் சித்தர்

கடுவெளிச் சித்தர் 


கடுவெளிச் சித்தர் என்ற பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறோம். இந்த கடுவெளி திருவையாற்றை அடுத்த தில்லைஸ்தானம் அருகில் இருக்கிறது. இங்கு கடுவெளி சித்தருக்கு ஒரு கோயிலும் உண்டு. அவர் இயற்றியுள்ள இந்த 'சித்தர்' பாடல் மிக எளிமையானது படித்துப் பொருள் அறிந்து கொள்ள ஏதுவானது. படிப்போமே!

 ஆனந்தக் களிப்பு

பாபஞ் செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ் செய் யாதிரு மனமே.

சாபம் கொடுத்திட லாமோ ? - விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்ததி விசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம். 

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ்
சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சை வைத் தாலெம லோகம் பொல்லாதே. 

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. 

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 
மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 

மெய்குரு சொற் கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிக வடக்காதே
பொய்க்கலை யால் நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 

கூடவருவ தொன்றில்லை - புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 

காசிக்கோ டில் வினை போமோ - அந்தக்
கங்கையா டில் கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 

பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 

இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 

வைதோரைக் கூட வை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 

பாம்பினைப் பற்றி யாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக் காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 

போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 

பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 

எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 

கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 

எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 

(முடிந்தது)

No comments: