பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 4, 2012

ஆலத்தூர் சகோதரர்கள்.

ஆலத்தூர் சகோதரர்கள்.

தமிழ் நாட்டில் இசையுலகில் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் வெற்றி நடை போட்ட இசை ஜாம்பவான்களில் ஆலத்தூர் சகோதரர்களும் அடங்குவர். இவர்கள் ஸ்ரீநிவாச ஐயர், மற்றொருவர் சிவசுப்பிரமணிய ஐயர் ஆவர். வாய்ப்பாட்டு வித்தகர்களான இவர்களில் ஸ்ரீநிவாச ஐயர் 1912இல் பிறந்தவர், காலமானது 1980இல். சிவசுப்பிரமணிய ஐயர் பிறந்தது 1916, காலமானது 1964. இவர்கள் திருச்சியில் வாழ்ந்தவர்கள், என்றாலும் தமிழகம் முழுவதும் இவர்களுடைய இசைப் பயணம் வெற்றிகரமாக இருந்து வந்தது. ஆலத்தூர் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டார்களே தவிர இவ்விருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் அல்ல. இவர்களில் சிவசுப்பிரமணிய ஐயரின் தந்தையார் வெங்கடேச ஐயர் என்பவரிடம்தான் இவர்கள் இசை பயின்றனர், அந்த நட்பில் சகோதர பாவத்துடன் இவர்கள் இரட்டையர்களாக இசைப் பணியைத் தொடர்ந்தனர்.

முதன் முதலாக இவர்களுடைய இசை நிகழ்ச்சி மேடையேறியது 1928இல், திருவையாற்றில் நடக்கும் சற்குரு ஸ்ரீ தியாகராஜரின் ஆராதனை விழாவில்தான். அதுமுதல் இவர்களது மிக உயர்ந்த, இசையுலக மேதைகளாலும் பாராட்டப்படும் அளவுக்கு மிகவும் சுத்தமான கர்நாடக இசையை இவர்கள் தமிழகத்துக்கு வழங்கி வந்தார்கள். கர்நாடக இசையுலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி அமைந்து விடும். சிலருக்கு அவர்களுடைய குருவின் தாக்கம் அதிகம் இருக்கும். ஆனால் சிலர் மட்டும் தங்களுக்கென்று ஒரு தனி பாணியில் பாடுவது என்பது இசையின் சிறப்பு. ஆலத்தூர் சகோதரர்களின் பாணி அப்படியொரு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இசையுலக ஜாம்பவான் எனப் போற்றப்பட்ட செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் அவர்களே ஆலத்தூர் சகோதரர்களின் பாணியை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருப்பதிலிருந்தே இவர்களுடைய மேன்மையை உணர முடிகிறது.

ஆலத்தூரார்களின் மேடைக் கச்சேரிகளுக்கு இசையுலக ஜாம்பவான்கள் பக்கவாத்தியக்காரர்களாக அமைந்தனர். திருவாலங்காடு சுந்தரேச அய்யர், மாயவரம் கோவிந்தராஜ பிள்ளை, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, மைசூர் செளடையா, டி.என்.கிருஷ்ணன், லால்குடி, கண்டதேவி அழகிரிசாமி போன்ற மாமேதைகள் எல்லாம் இவர்களுக்கு வாசித்திருக்கிறார்கள். 

இவர்கள் திருச்சியில் வசித்து வந்த காரணத்தாலும், அந்த நாட்களில் இப்போது போல நினைத்தவுடன் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வது முடியாத காரியம் என்பதாலும், பெரும்பாலும் இவர்கள் திருச்சி நகரை மையமாகக் கொண்டு சுற்றுப்புற ஊர்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி வந்தார்கள். மேலே சொன்ன வயலின் இசைக் கலைஞர்கள் தவிர, மிருதங்கம் பக்க வாத்தியம் வாசித்தவர்களில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை, பழனி சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் முக்கியமானவர்கள். பின்னாளில் இவர்கள் தஞ்சையிலும், சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடத்துகின்ற சமயங்களில் பாலக்காடு மணி ஐயரும் இவருக்கு வாசித்திருக்கிறார். 

இவர்களுடைய திறமையை அறிந்த திருவாங்கூர் மகாராஜா இவரை தன்னுடைய ஆஸ்தான வித்வான்களாக நியமித்திருந்தார். 1944 முதல் 68 வரையிலான காலகட்டத்தில் இவர்கள் அந்தப் பெருமைக்குரிய பதவியில் இருந்தார்கள். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய சிஷ்ய பரம்பரையொன்றை இவர்கள் உருவாக்கி விட்டுச் சென்றிருக்கின்றனர். திரையுலகில் புகழ் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் தன்னுடைய கர்நாடக இசையை வலுப்படுத்திக் கொள்ள இவர்களிடம் இசைப் பயிற்சி செய்திருக்கிறார். 

No comments: