பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 5, 2012

"இனியவை நாற்பது" (30)

30. முப்பதாம் இனிமை. 

ஒருவன் தான் எளியவனாக இருந்த காலத்தில் தனக்கு உதவி செய்தவர்களை, கல்வி பயிலவும், வேலை கிடைக்கவும், சில நேரங்களில் இவனுடைய தேவைகளுக்கு பண உதவி செய்தவர்களையும் நன்றியோடு எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும். நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று எனும் குறள் சொல்லும் நெறியில் வாழ்ந்து வருவது இனிமை தரும்.

ஒரு நீதிமன்றத்தில் தவறு செய்தவன் மீது வழக்கு. அவன் செய்தது தர்மத்துக்கு எதிரான செயல். அவன் இவனுக்கு வேண்டியவனோ, தெரிந்தவனோ எப்படியிருந்தாலும், அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல நேரும்போது மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் தர்மமும் நீதியும் நிலைபெற வேண்டுமென்ற நோக்கத்துடன் நியாயமாக சாட்சி சொல்ல வேண்டும். ஒரு சார்பில் நின்று பொய் சாட்சி சொல்லக்கூடாது. அப்படிப்பட்ட மாட்சிமை இனிமை தரும்.

ஒரு அவசர தேவைக்கா தெரிந்தவர் ஒருவர் தன்னிடம் ஒரு பொருளை அடமானமாகக் கொடுத்து இதை வைத்துக் கொண்டு எனக்கு அவசரத் தேவைக்காக பொருள் கொடுங்கள் என்று வாங்கிச் சென்றார். அவர் கொடுத்து வைத்ததோ, தான் பணம் கொடுத்ததோ யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் அவர் திரும்பக் கொடுக்கும்போது அப்படி எந்தப் பொருளையும் அடமானமாக என்னிடம் தரவில்லையே என்று பொய் சொல்லி அபகரிக்காமல் இருப்பது இனியது.

"நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே
மன்றக் கொடும் பாடுரையாத மாண்பு இனிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல்."

ஒருவருக்குச் செய்த உதவியின் பயன் கருதி நன்றியோடு நினைந்து வாழ்தல் இனிது; அறம் கூறும் அவையில் ஒருபக்கச் சான்று அளியாத மாட்சிமை இனியது; தன்னிடம் வைத்த பொருளை யாருக்குத் தெரியும் என்ற எண்ணத்தில் அபகரிக்க நினைக்காமல் பண்போடு திரும்பக் கொடுத்தல் இனியது.

No comments: