பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, February 27, 2012

"இனியவை நாற்பது" (21)

21. இனியது இருபத்தியொன்று. 

பொதுவாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பல இடங்கள், இங்கெல்லாம் வேலையற்ற சிலர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். பார்வைக்கு அவர்கள் வித்தியாசமாகத் தெரிய மாட்டார்கள். சிலர் மிகவும் நைச்சியமாகப் பேசி நம்மிடம் பழகக்கூடத் தொடங்குவார்கள். முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வது ஆபத்து. நாம் யார் எங்கிருந்து வருகிறோம், என்ன வேலையாக வருகிறோம் என்பதையெல்லாம் அவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மை நம்பவைத்த பின் சற்று என் பெட்டி, பைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள், கழிப்பறை வரை சென்று வருகிறேன் என்று புதியவரை நம்பி விட்டுவிட்டுச் சென்றால், திரும்ப வரும்போது அங்கு உங்கள் பொருட்கள் எதுவும் இருக்காது. ஆனால் பிறர் பொருட்களை பறித்துக் கொள்வதற்கென்றே சிலர் திரிந்து கொண்டிருக்கிறார்கள். நாம் விழிப்போடு இருந்தால்தான் இத்தகைய நபர்களிடமிருந்து தப்பிப் பிழைக்கலாம். இதுபோன்ற ஈனப் பிறவிகளை நினைக்கும்போது, இவர்கள் மற்றவர்கள் கைப்பொருளைத் திருடி வயிறு வளர்ப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. அப்படி பிறர் பொருளைப் பறிக்காமல் வாழும் வாழ்க்கையே இனிது என்கிறது இனியவை நாற்பது இருபத்தியொன்றாம் பாடல்.

மனிதன் பிறர் பொருளைக் கவராமல் இருப்பது மட்டுமல்லாமல், மனதில் இரக்கம் உள்ளவனாகவும், பிறருக்கு உதவி செய்பவனாகவும், தான தர்ம காரியங்களைத் தனக்கு முடிந்த வரையில் செய்து வருபவனாகவும் இருத்தல் மேலும் இனிமை பயக்கும்.

நாம் தினந்தினம் எத்தனையோ மனிதர்களிடம் பழகுகிறோம், பார்க்கிறோம். ஆனால் அத்தனை பேரும் நாம் நட்பு கொள்ளக்கூடிய தகுதி படைத்தவர்களாகக் கருத முடியாது. சிலர் வஞ்சக எண்ணம் கொண்டவர்கள்; சிலர் பொறாமை கொண்டவர்கள், சிலர் நம்மிடம் ஏதாவது கிடைக்காதா என்று காத்திருப்பவர்கள், சிலர் கல் நெஞ்சுக்காரர்கள் ஆபத்தில்கூட உதவமாட்டார்கள். இப்படிப்பட்ட உபயோகமற்ற நபர்களை ஆராய்ந்து பார்த்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் இனிதாகும்.

"பிறன் கைப்பொருள் வெளவான் வாழ்தல் இனிதே
அறம் புரிந்து அல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறம் தெரிந்து வாழ்தல் இனிது."

வெளவுதல் என்றால் பறித்துக் கொள்ளுதல். மயரிகள் என்றால் அறிவற்ற மக்கள்.

மற்றவருடைய பொருட்களை கவர்ந்து கொள்ளாதிருத்தல் இனிது; தர்ம காரியங்களைச் செய்து, நாம் செய்திருக்கக்கூடிய பாவங்களிலிருந்து மீளல் இனிது; மறந்துகூட அறிவற்ற வீணர்களுடன் சேராமல் இருத்தல் இனிது.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

சிலர் கல் நெஞ்சுக்காரர்கள் ஆபத்தில்கூட உதவமாட்டார்கள். இப்படிப்பட்ட உபயோகமற்ற நபர்களை ஆராய்ந்து பார்த்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் இனிதாகும்.

இனிய பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..