பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, February 20, 2012

"இனியவை நாற்பது" (16)

16. பதினாறாம் இனிமை.

இவன் ஒரு அலுவலகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து ஓய்வு பெற்றிருந்தான். இவனுக்குப் படிக்கும் காலத்திலேயே இலக்கியங்களின் மீது காதல். நேரம் கிடைத்த போதெல்லாம் பல இலக்கிய நூல்களை வாங்கிப் படிப்பான். பல அறிவுசால் பெரியோர்கள் பேசும் இலக்கியக் கூட்டங்களுக் கெல்லாம் சென்று கவனமாகக் கேட்பான். அப்படி அவர்கள் சொல்லும் பல புதிய செய்திகளை மனத்தில் வாங்கிக் கொண்டி இவன் அந்த இலக்கியத்தைப் படிக்கும் போது அவற்றை நினைவு கூர்ந்து மகிழ்வான். பணி ஓய்வு கிடைத்ததும் இனி என்ன செய்வது என்ற கவலை அவனுக்கு. அந்த நேரத்தில் இவனுடைய நண்பனொருவன் இவனை ஒரு இலக்கிய வட்டத்தில் சேர்த்து விட்டான். அங்கு இவனுக்குப் பல புதிய இலக்கியங்களைப் படிக்கவும், பல பெரியோர்களின் துணையும் கிடைக்கும்படி நேர்ந்தது. இவன் மிகக் குறுகிய காலத்தில் அந்த இலக்கிய வட்ட பெரியோர்களுக்குச் சமமாக உட்கார்ந்து விவாதிக்கவும், படித்தும் கேட்டும் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியதனால் இவனும் நல்ல பணிதனாக ஆனான். அப்படிப் பட்ட சூழ்நிலையில் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு இலக்கியவாதி இவனைத் தனக்குச் சமமாக எண்ணி, இவனோடு பல இலக்கிய விஷயங்களைப் பேசப் பேச இவனுக்கும் சமூகத்தில் ஒரு அந்தஸ்து ஏற்படுகிறது. பல நேரங்களில் நன்கு கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கின்ற அவையில் அவர்களுக்குச் சமமாக இவனையும் பங்கேற்க வைத்தனர். அப்போதெல்லாம் இவனை சில தலைப்புக்களில் கருத்துக்களைச் சொல்லும்படி கேட்பார்கள். இவனும் தான் படித்தறிந்த பல இலக்கியங்களிலிருந்து சான்றுகளுடன் எடுத்துச் சொல்வதை அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டனர். இவனும் அவர்களுக்குச் சமமாக இருக்கும் நிலை ஏற்பட்டது குறித்து இவனுக்கும் மகிழ்ச்சி. எத்தனை இனிமையான செய்தி இது!

இப்படி இலக்கியத் தொடர்பால் பல அரிய அறிஞர்களோடு ஏற்பட்ட நெருக்கமும் எத்தனை இனிமை?

இவன் பணி ஓய்வு பெற்றிருந்தாலும் ஓய்வூதியம் கிடைத்து வந்தது. அவனுக்குப் போதுமானதாக இருந்ததோடு அந்த தொகைக்குள் பல நல்ல காரியங்களுக்கும் இவனால் உதவி செய்ய முடிந்தது. பணியில் இருந்த காலத்தில் பல நேரங்களில் இவன் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை இருந்தது. ஆனால் இப்போது அவன் தனக்குப் போக மீதத்தை பலருக்கு உதவ பயன்படுத்தினான். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த மாணவ மாணவியர் சிலருக்குப் படிக்கவும், புத்தகங்கள் வாங்கவும் இவன் உதவி செய்தான். அந்த நிலை எத்தனை இனியது.

"கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன் இனிதே
எட்டுணை யானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது"

இதன் பொருள்: நன்கு கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் அவையில் தான் கற்ற கல்வியைப் பிழையின்றி எடுத்துரைத்தல் இனிது; தன்னைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தல் மிக இனிது; எள் அளவுகூட பிறரிடம் கையேந்தாமல் தான் முடிந்த மட்டும் தர்மம் செய்யும் குணம் அமைதல் அனைத்தினும் இனிது.

No comments: