பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, January 3, 2012

மகாகவி பாரதி வாக்கு


மகாகவி பாரதி வாக்கு

"தெய்வத்தை நம்பிவிட்டு எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் செயலில் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும்"

ஒரு சின்னஞ்சிறிய கிராமம். சில நூறு குடிசைகள் மட்டுமே அங்கு உண்டு. அங்கிருந்தவர்கள் அனைவருமே தொழிலாளிகள், விவசாயிகள். அன்றாடம் உழைத்துச் சாப்பிடுபவர்கள். ஒரு பெரிய ஆற்றின் கரையில் அமைந்திருந்தது அந்த கிராமம். அவ்வூரில் விவசாயி ஒருவன் எப்போதும் கடவுள் பக்தியோடு, இறைவன் பார்த்துப்பான், இறைவன் இருக்கிறான் அவன் கவனித்துக் கொள்வான் என்பான்.

ஒரு நாள் அந்த ஆற்றில் பெரு வெள்ளம். கிராமத்து மக்களை குடிசைகளைக் காலிபண்ணிவிட்டு பாதுகாப்பான பகுதிக்குச் சென்றுவிடுங்கள், ஆற்றின் கரை உடையும் ஆபத்து இருக்கிறது. எந்த நேரமும் ஆற்று வெள்ளம் ஊருக்குள் பாய்ந்து எல்லாவற்றையும் அடித்துச் சென்றுவிடும் என்று அரசாங்கம் தண்டோரா போட்டு அறிவித்திருந்தது. ஊரிலிருந்த பலர் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு பாதுகாப்பான இடம் தேடி ஊரைவிட்டுப் போய்விட்டனர். ஒருசிலர் மட்டும் தத்தமது உடைமைகளைப் பாதுகாப்பு செய்துவிட்டுப் போகலாம் என்று முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

நமது பக்தர் இதற்கெல்லாம் கவலைப் படவில்லை. 'அவன்' இருக்கிறான்; இறைவன் பார்த்துப்பான் என்று இருந்து விட்டான். திடீரென்று வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் பாய்ந்து வந்தது. குடிசைகள் எல்லாம் வெள்ளத்தோடு அடித்துச் செல்லத் தலைப்பட்டது. நமது பக்தன் வீட்டுக்குள்ளும் வெள்ளம் வந்துவிட்டது. அப்போதும் அவன் பகவான் இருக்கான், அவன் பார்த்துப்பான் என்று உட்கார்ந்திருந்தான்.

அப்போது தீயணைப்புத் துறையினர் ஒரு படகைக் கொண்டுவந்து வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட கிராம ஜனங்களை மீட்டு அழைத்து சென்றனர். இந்த பக்தன் குடிசை வாயிலில் இருப்பதைக் கண்ட அவர்கள், ஐயா, சீக்கிரம் வந்து படகில் ஏறிக்கொள்ளுங்கள், இல்லையேல் தண்ணீரில் மூழ்கிப் போவீர்கள் என்றனர். அதற்கு நம் பக்தர், அதெல்லாம் வேண்டாம், அவன் பார்த்துப்பான் என்று மறுத்து விட்டார்.

சற்று நேரத்துக் கெல்லாம் வெள்ளம் மளமளவென்று அதிகரித்து குடிசையின் ஒரு ஆள் உயரத்துக்குத் தண்ணீர் உட்புகுந்து ஓடத் தொடங்கியது. இவரும் கழுத்தளவு ஆழத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு ஒரு மனிதன் மிதந்து வெள்ளத்தோடு வந்தவன், குடிசை வாயிலில் இந்த மனிதன் நிற்பதைப் பார்த்து, ஐயா, நீந்திவந்து இந்த மரத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள் தப்பிவிடலாம் என்றான். இவர் மறுத்துவிட்டார். எல்லாம் அவர் பார்த்துப்பான் என்று சொல்லிவிட்டுத் தன் குடிசையின் கூரைமீது ஏறி அமர்ந்து கொண்டார்.

சில விநாடிகளில் ஒரு குடிசையின் கூரை வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வந்தது. அதன் மீது ஒட்டிக்கொண்டிருந்த மனிதன் ஒருவன் கூரை உச்சியில் தொங்கிக் கொண்டிருக்கும் பக்தனைப் பார்த்து ஐயா சீக்கிரம் இந்த கூரையைத் தாவிப் பிடித்துக் கொள்ளுங்கள்; உயிர் பிழைக்கலாம் என்றான். இவன் அப்போதும் மறுத்து விட்டு அவன் பார்த்துப்பான் என்றான்.

வெள்ளம் கூரையையும் மூழ்கடித்தது, நமது பக்தனையும் வெள்ளத்தில் மூழ்கடித்துச் சாகடித்துவிட்டது. இறந்த பின் இந்த பக்தன் இறைவன் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு இறைவன் உட்கார்ந்துகொண்டு காட்சியளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் நமது பக்தனுக்குக் கோபம். சுவாமி! என்ன அநியாயம் இது. நான் உம்மையே நம்பி, நீ இருக்கிறாய், என்னை வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாய் என்று சொல்லி கடைசி வரை காத்திருந்தேன். நீயோ வராமல் என்னை ஏமாற்றிவிட்டாய். இது நியாயமா? உன்னை நம்பினவர்களை இப்படித்தான் கைவிடுவதா? என்றான்.

அதற்கு சுவாமி சொன்னார். "பக்தா! நீ என்னையே முழுமையாக நம்பியிருந்தாய் சரிதான். ஆனால் நான் உன்னைக் காப்பாற்றுவதற்காக முதலில் படகில் வந்தேன், பிறகு மரத்தின் மீது வந்தேன், கடைசியாக ஒரு குடிசையின் கூரையின்மீது வந்தேன். ஒவ்வொரு தடவையும் நான் கூப்பிட்டபோது வரமறுத்துவிட்டு இப்போது வந்து நான் கைவிட்டு விட்டதாகச் சொல்லுகிறாயே!" என்றார்.

அப்படியா, அதிலெல்லாம் வந்தது நீங்களா? தெரியாமல் போச்சே. நான் நினைத்தேன் கடவுல் சினிமாவில் வருவது போல பட்டு பீதாம்பரமெல்லாம் அணிந்து கொண்டு உடலெங்கும் நகைகளோடு, தலையில் கிரீடம், கரங்களில் சங்கு சக்கரம், நெற்றியில் நாமம் இவற்றோடு வந்து பக்தா வா என்னோடு, ஏறிக்கொள் என் கருட வாகனத்தில் என்று சொல்லுவீர்கள் என்று நினைத்திருந்தேன் என்றான். 

இவன் அறியாமையை நினைத்து இறைவன் சிரித்தார்.

2 comments:

Unknown said...

மகாகவி பாரதியின் வாக்கும் அதனை கருவாகக் கொண்டுப் பிறந்தக் கதையும் அருமை..
பதிவுக்கு நன்றிகள் ஐயா!

thanusu said...

நல்லகரு உள்ள கதை . நல்ல பதிவு.