பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, December 3, 2011

முகத்திலே விழிக்க மாட்டேன்!


முகத்திலே விழிக்க மாட்டேன்!
தஞ்சை வெ.கோபாலன்

இரவு பத்து மணி இருக்கும். அடுத்த வீட்டில் ஒரே ரகளை. அங்கு குடியிருக்கும் கிருஷ்ணன் நம்பியார் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அர்ச்சனைகளை வாங்கிக் கொண்டிருந்தவர்கள் அவருடைய மனைவி அஸ்வத்தாமாவும் மகள் லட்சுமியும் தான். 

ஒரு கட்டத்தில் கூச்சல் அதிகமாகியது. அஸ்வத்தாமாவும், லட்சுமியும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டனர். கதவு ஓங்கி அடித்துத் தாளிடப்பட்டது. உரத்த குரலில் அழக்கூட பயந்து, அக்கம் பக்கத்தார் பார்க்கிறார்களே என்கிற அச்சத்தில் அந்த உத்தமியும், படித்த அவள் மகளும் கூனிக் குறுகி வாயில் புறத்தில் தலை குனிந்து அழுது கொண்டிருந்தனர்.

அடுத்த வீட்டில் இருந்து கொண்டு இவற்றைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க எனக்கு மனம் வரவில்லை. ஓடிப்போய், "ஓய்! நம்பியார், வெளியில் வாய்யா!" என்று கூச்சலிட்டேன். சற்று நேரம் பதில் இல்லை. 

எனக்கு ஆத்திரம் வந்தது. வாயில் புறம் கூட்டம் சேர ஆரம்பித்தது. எதிர் வீட்டிலிருக்கும் குருசாமியும், அவர் மனைவியும் எனக்கு உதவிக்கு வந்தனர். நாங்கள் மூவரும், வேறு சிலரும் நம்பியாரின் வீட்டுக் கதவைத் தட்டினோம். சற்றுப் பொறுத்து அவர் கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி மலையாளம் கலந்த தமிழில், "என்ன வேணும் உங்களுக்கு?" என்றார்.

"என்னயா இது அநியாயம்! ராத்திரி எல்லாரும் தூங்கற நேரத்தில் இப்படி ரகளை பண்றீங்க. பெண் புள்ளைங்களை இந்த ராத்திரி நேரத்திலே வெளியே
தள்ளினா எங்கய்யா போவாங்க?" என்றேன்.

"போயி, உங்க ஜோலியப் பாருங்கய்யா, எனக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டுக் கதவை தாளிட்டுக் கொண்டார் நம்பியார்.

எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தலை குனிந்து அவமானத்தால் அழுது கொண்டிருக்கும் அவர்களை எப்படித் தேற்றுவது என்று புரியவில்லை.


காவல் துறைக்கு தெரிவிக்கலாமா என்று பேசிக் கொண்டோம். ஆனால் சிலர் அப்படிச் செய்தால் இவ்விரு பெண்களும் அனாவசியமாக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அலைக்கழிக்கப் படுவார்கள். அவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள் என்றனர்.

நான் அஸ்வத்தாமாவிடம் சென்று, "அம்மா, ராத்திரி நேரம், எத்தனை நேரம் இப்படி வாசலில் அழுது கொண்டிருப்பீர்கள். எங்கள் வீட்டிற்கோ அல்லது குருசாமி வீட்டுக்கோ வந்து விடுங்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்றேன்.

அந்த அம்மாளிடம் இது நாள் வரை நாங்கள் யாரும் பேசியதோ, பழகியதோ இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கிறார்கள் என்றுதான் பெயர். அவர் வெளியில் வருவதுமில்லை, யாருடனும் பழகியதும் இல்லை. அப்படியொரு கெடுபிடியை நம்பியார் செய்திருந்தார்.

அந்தப் பெண் லட்சுமிக்கு இருபது வயதிருக்கும். நல்ல கேரளத்து கோதுமை நிறம். அமைதியான முகம். பி.காம் படித்திருந்தாள். மேல வீதியில் இருந்த ஒரு ஆடிட்டரிடம் வேலை செய்து கொண்டிருந்தாள். இருவரும் அழுது கொண்டிருந்தார்களேயன்றி, எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை.

குருசாமியின் மனைவி வந்து அவர்களை அணைத்துக் கொண்டு, கிட்டத்தட்டத் தள்ளிக் கொண்டு போய் அவர்கள் வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்தார். அவருடைய மகள் ஓடி வந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்தாள். அவர்கள் அதை வாங்கிக் கொள்ளவில்லை. யாருடனும் பழகாததாலும், அச்சம், அவமானம் இவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் மெளனமாகவே இருந்தார்கள்.

இப்போது என்ன செய்வது? இவர்கள் நம் வீட்டுக்கும் வரமாட்டேன் என்கிறார்கள். நம்பியாரும் கதவைத் திறந்து உள்ளே விட மறுத்து கதவை அடைத்து விட்டார். இரவு மணி பதினொன்றைத் தாண்டிவிட்டது. எங்களுக்கு ஒரே குழப்பம். அப்போது எங்களுக்குப் பால் கொண்டு வந்து போடும் மலையாளத்துப் பையனின் நினைவு வந்தது.

அவன் தொலைபேசி எண் இருந்தது. அதில் அவனை அழைத்தோம். அவன் இன்னும் தூங்கவில்லை விழித்துக் கொண்டுதான் இருந்தான். அவனிடம் விஷயத்தைச் சொல்லி, நம்பியாரின் அழிச்சாட்டியத்தையும், இந்தப் பெண்களின் அவலத்தையும் சொல்லி நீயும் மலையாளமாக இருப்பதால் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டோம்.

அவன் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தான். அஸ்வத்தாமாவிடமும், லட்சுமியிடமும் அவன் மலையாளத்தில் பேசினான். அவர்கள் அவனிடம் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. அவன் நம்பியார் வீட்டின் கதவைத் தட்டிக் கூப்பிட்டான். நம்பியார் முதலில் பதில் சொல்லவில்லை. பிறகு ஓரிரு முறை அவன் கதவைத் தட்டி மலையாளத்தில் தான் வந்திருப்பதைச் சொன்னதும், அவரும் மலையாளத்தில், "நீ போய்க்கோடா, உன் வேலையைப் பார், கதவைத் திறக்க முடியாது, அவர்கள் எங்கே வேணுமானாலும் போய்க்கட்டும்" என்று சொல்லிவிட்டார்.

அந்தப் பையன், மெதுவாக இவர்களிடம் வந்து நடந்ததைச் சொன்னதும், அந்த அம்மாள் அப்போதுதான் தலை நிமிர்ந்தாள். தன் மகளை அணைத்துக் கொண்டாள். அந்தப் பால்காரப் பையனிடம், "எடா, மாதவா! நாங்க இன்னைக்கு உங்க வீட்டுக்கு வரோம், நாளைக்கு எங்களுக்கு ஒரு வீடு பார்த்துக் கொடு. இனிமே என் உயிர் இருக்கற வரை இந்த மனுசன் முகத்திலே கூட முழிக்க மாட்டேன். நான் செத்தப்பறமும் இந்த மனுசன் என் மூஞ்சியைக் கூட பார்க்கக் கூடாது." என்று வெறிபிடித்தவள் போல கத்தினாள்.

மெல்ல அந்தப் பையன் மாதவன் இவ்விருவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டான். நள்ளிரவைத் தாண்டிய பின் நாங்களும் மனம் துக்கத்தால் அழுத்த தூக்கம் வராமல் படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தோம். 

மறு நாள் காலை. மாதவன் பால் போட வந்தான். அவனிடம் விசாரித்தோம். "என்னப்பா ஆச்சு. நம்பியாரின் குடும்பத்தார் எங்கே இருக்காங்க?" என்று விசாரித்தேன். அவன் சொன்னான், "இப்போ எங்க வீட்டில தான் இருக்காங்க. என் அம்மாவுக்கு அவுங்களை நல்லா தெரியும். இந்த நம்பியார் தான் என்னையும் கேரளாவுலேர்ந்து அழைச்சுக் கொண்டு வந்து இங்க சேர்த்து விட்டார். ரொம்பக் கோபக்காரர். ஆனால், இப்படி சம்சாரத்தையும், புள்ளையையும் அடித்து விரட்டுவார் என்று தெரியவில்லை. பார்க்கலாம், அவுங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து ஒரு வீடு பார்த்துக் கொடுக்கலாம். அந்தப் பொண்ணும் சம்பாதிக்குது ஆடிட்டர் ஆபீசிலே" என்றான்.

மனம் ஓரளவுக்கு சமாதானமாகியது. என்றாலும் ஒரு பெண்பிள்ளையை அவள் மகளோடு நள்ளிரவில் வெளியே பிடித்துத் தள்ளுவது என்பது கொடுமையிலும் கொடுமை. பாவம் அவர்கள் அவமானத்தால் தவித்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நம்மால் ஆன உதவி எதுவானாலும் செய்துவிடுவது என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.

இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் சூப்பர் பஜாரில் நான் சாமாங்கள் வாங்கப்

போயிருந்த சமயம் நம்பியாரின் மகள் லட்சுமியைப் பார்த்தேன். அவளும் ஏதோ வீட்டுச் சாமாங்கள் வாங்க வந்திருந்தாள். 

அவளிடம் "இப்போ எப்படிம்மா இருக்கே. அம்மா செளக்கியமா இருக்காங்களா? எங்கே குடி இருக்கீங்க? அந்த மாதவன் வீட்டிலேயா அல்லது வேறு இடம் பார்த்து குடி போயிட்டீங்களா?" என்று கேட்டேன். 

"மாதவன் வீட்டை விட்டு அப்போவே போயி வேற வீடு பார்த்து குடி
போயிட்டோம். நானும் அம்மாவும் மட்டும்" என்றாள் லட்சுமி.

"அப்புறம் அப்பாவைப் பார்த்தீங்களா? வீட்டுக்கு வரவில்லையா?" என்றேன்.

"இல்லை, என் அம்மா ரொம்ப உறுதியா இருக்காங்க. இனிமே அவர் முகத்திலே விழிக்கக் கூடாது என்று. அதுமட்டுமில்லை, அவர் தன்னை வந்து பார்க்கக்கூட சந்தர்ப்பம் கொடுக்கப் போவதில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால், அவர் முகத்தைப் பார்க்குமுன்பாக தன் உயிர் போய்விடும் என்கிறாள். அவள் அப்படிச் சொல்லும் போது அவள் முகத்தில் ஒரு ஆவேசம் வந்தது போல தெரிகிறது, அதனால் நானும் ஒன்றும் சொல்வதில்லை" என்றாள்.

"நீயாவது அவரை எங்காவது பார்ப்பது உண்டா?" என்றேன்.

"ஆமாம். எப்போதாவது, வழியில் பார்ப்பது உண்டு. ஆனால் நானும் பேசுவதில்லை, அவரும் என்னைப் பார்த்தாலும் பார்க்காதது போல போய்விடுவார்" என்றாள்.

அவர்கள் உறுதியும், தன்மானமும் எனக்கு பிடித்திருந்தாலும், ஒரு தந்தை தன் மனைவி, மகளிடம் இப்படி நடந்து கொள்ள முடியுமா என்ற வியப்பும் பரவியிருந்தது.

சில ஆண்டுகள் கழிந்து விட்டன. என் பக்கத்து வீட்டில் நம்பியார் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். அருகிலிருந்த 'மெஸ்' ஒன்றிலிருந்து அவருக்கு வேளா வேளைக்கு சாப்பாடு வந்து கொண்டிருந்தது. அவர் காலம் ஓடிக்கொண்டிருந்தது, ஆனால் அவர் மனைவியையோ, மகளையோ பற்றி நினைவு படுத்திக் கொண்டவராகத் தெரியவில்லை.

ஒரு நாள் இரவு பத்து மணிக்கு பால் பாக்கட் போடும் மாதவன் மூச்சிறைக்க சைக்கிளை

மிதித்துக் கொண்டு வந்து சேர்ந்தான். வாசல் படியில் உட்கார்ந்திருந்த என்னிடம் வந்து, "ஐயா! விஷயம் தெரியுமா? பக்கத்து வீட்டு நம்பியாரின் வீட்டுக்காரம்மா காலமாயிட்டாங்களாம்" என்றான்.

"என்னப்பா இது! எப்போ, எப்படி?" என்றேன் அதிர்ச்சியடைந்து.

"ஒரு மணி நேரத்துக்கு முந்திதான் நடந்ததாம். வீட்டினுள் சாமிக்கு விளக்கேற்றி விட்டு வாயிலுக்கு வந்தவர், அப்படியே உட்கார்ந்து விட்டாராம். லட்சுமி ஓடிப்போய் அவரைத் தூக்குவதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டதாம். கடைசி மூச்சு இருந்த வரைக்கும் அந்த அம்மா மகளுக்கு எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருந்திருக்காங்க. லட்சுமிதான் உங்ககிட்டே சொல்லச் சொல்லிச்சு" என்றான் அவன்.

அடுத்த வீட்டில் எந்த சலனமும் இல்லை. நம்பியாருக்குத் தகவல் இல்லை போலிருக்கிறது. அவர்களுக்குள் எப்படி இருந்தாலும் இந்தத் தகவலை அவருக்குச் சொல்ல வேண்டியது என் கடமை என்று நினைத்தேன். அவர் வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. அதைப் போய் தட்டினேன். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. நம்பியார் எட்டிப் பார்த்து 'என்ன வேணும்?" என்றார்.

நான் தயங்கித் தயங்கித் தகவலைச் சொன்னேன். அவர் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மிகச் சாதாரணமாகத்தான் இந்த செய்தியை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. 

"நீங்கள் போக வேண்டாமா?" என்றேன்.

அவர் ஒன்றும் பதில் சொல்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றார். பிறகு "சரி நான் போய் பார்க்கிறேன். நீங்க போங்க" என்று என்னை அனுப்பி விட்டார்.

அவருக்கு அவசரம் இல்லாவிட்டாலும் எனக்கு மனம் கேட்கவில்லை. உடனே நான் கிளம்பி புற நகர் ஒன்றில் லட்சுமி வசிக்கும் அந்த குடியிருப்புக்குச் சென்றேன். அதற்குள் அக்கம் பக்கத்தாரும், நண்பர்களும் அங்கு கூடிவிட்டிருந்தார்கள்.

நான் லட்சுமியிடம் போய் "என்னம்மா நடந்தது? எப்படி அம்மாவுக்குத் திடீரென்று இப்படி நேர்ந்தது?" என்று கேட்டேன்.

லட்சுமி நடந்த விவரங்களைச் சொன்னாள். அவளுக்கு ஏதேனும் உதவி தேவையா என்று விசாரித்தேன். "இல்லை சார், இங்கு எல்லோரும் எனக்கு உதவியா இருக்காங்க" என்றாள். தாங்க முடியாத துக்கத்துக்கிடையே அவள் மனதில் இருந்த உறுதி எனக்குத் தெரிந்தது. சொல்லலாமா கூடாதா என்று சற்று ஆலோசித்துவிட்டு, "அம்மா லட்சுமி! எனக்கு இந்த விஷயம் தெரிந்ததும், உன் அப்பா காதிலும் இந்தச் செய்தியைப் போட்டு வைத்தேன். அவர் நான் வருகிறேன், போங்கள் என்று சொல்லிவிட்டார், எப்போ வருவாரோ தெரியவில்லை" என்றேன்.

"வேண்டாம் சார். எதுக்கு அவர் கிட்டே சொன்னீங்க. அவர் வரதை என் அம்மாவின் ஆத்மா விரும்பாது. அவர் தன்னையோ, இறந்த பின் தன் முகத்தையோ அவர் பார்க்கக்கூடாது என்பதில் உறுதியா இருந்தாங்க. அவங்க விருப்பத்துக்கு மாறாக, அந்த மனிதர் வந்து என் அம்மாவைப் பார்ப்பதை நானும் விரும்பவில்லை. அப்படி அவர் வந்தாலும், என் அம்மா கடவுள் மீது வைத்திருக்கிற பக்தி உண்மையாக இருந்தால், அவரால் என் அம்மா முகத்தைப் பார்க்க முடியாது. வேணுமானால் நீங்களே பாருங்கள். என் அம்மாவின் உறுதி எனக்குத் தெரியும். தான் சுமங்கலியாக அவருக்கு முன்பு, அவர் முகத்தைக்கூட பார்க்காமல் போய்விடுவேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள், அப்படியே போய்விட்டாள். இறந்த பிறகு அவர் வந்து பார்த்தால் என்ன, பார்க்கா விட்டால் என்ன? கடவுள் செயலால் எனக்கு ஒன்றும் குறை இல்லை. அம்மாவை நல்ல முறையில் நான் கரை சேர்த்து விடுவேன்" என்றாள். அவள் முகத்தில் உறுதி தெரிந்தது.

விடியற்காலையில் நம்பியார் மகள் வீட்டுக்கு ஒரு ஆட்டோவில் வந்து சேர்ந்தார். வாயிற்புறம் போட்டிருந்த ஷாமியானாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் உட்கார்ந்தார். யாரோ ஒருவர் உள்ளே வந்து பார்க்கவில்லையா என்று கேட்க, அவர் தலையை மட்டும் ஆட்டிவிட்டு பேசாமல் உட்கார்ந்திருந்தார்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நண்பர்கள், தெருக்காரர்கள் என்று மக்கள் வரிசையில் வந்து அந்த அம்மாள் உடம்பில் மாலை வைத்து வணங்கிவிட்டுச் சென்றனர். இறுதிச் சடங்குக்கு ஆக வேண்டிய காரியங்கள் நடந்தன. உடல் தயார் செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்படும் சமயம், நம்பியார் எழுந்து போய், அந்த வேனின் முன் பக்கத்தில் ஓட்டுனருக்கு அருகில் உட்கார்ந்து விட்டார்.

அம்மையாரின் உடல் அழு குரல்கள், லட்சுமியின் கதறல் இவற்றுக்கிடையே வேனில் ஏற்றப்பட்டது. வேன் புறப்பட்டு இடுகாடு நோக்கிப் புறப்பட்டது. வழியில் நம்பியார்

வசிக்கும் தெருவைத் தாண்டித்தான் சவ ஊர்வலம் போக வேண்டும். அங்கு வந்ததும், வண்டியை நிறுத்தச் சொல்லி நம்பியார் தன் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்று விட்டார்.

அவரது தர்ம பத்தினி தான் செய்த சபதத்திலிருந்து சற்றும் வழுவாமல், அவர் முகத்தில் விழிப்பதில்லை, இறந்த பின்னும் அவர் தன் முகத்தைப் பார்க்கக் கூடாது என்று எடுத்துக் கொண்ட பிரதிக்ஜை முழுவதுமாக நிறைவேறிவிட்டது. சவ ஊர்வலம் தொடர்ந்து சென்றது. மகா உத்தமிகள் மனம் நோகச் செய்தால் அவர்கள் எத்தனை உறுதியுள்ளவர்களாக மாறிவிடுகிறார்கள், அந்த உறுதிக்கு இறைவனும் கைகொடுத்து உதவுகிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்.






2 comments:

Unknown said...

////மகா உத்தமிகள் மனம் நோகச் செய்தால் அவர்கள் எத்தனை உறுதியுள்ளவர்களாக மாறிவிடுகிறார்கள், அந்த உறுதிக்கு இறைவனும் கைகொடுத்து உதவுகிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்.////

மிகுந்த இறுக்கத்திலும் வெப்பத்திலும் அழுத்தத்திலும் தான் வைரங்கள் உருக்கொள்கின்றன... அதைப் போன்றே இந்த உறுதியும் இருந்துள்ளது.
கேட்கும் போதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது...
படித்து வேலைக்கு போகும் அளவு மகள் வளரும் வரை அந்த மகராசி இந்த மனிதனிடம் எத்தனைப் பாடு பட்டார்களோ?

பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

அன்புடன்,
ஆலாசியம் கோ.

R.Srishobana said...

ஐயா, இது உண்மையான கதையா அல்லது சிறுகதையா என்று எனக்கு தெரியவில்லை,ஆனால் கதையை நேரில் பார்ப்பது போலவே உணர்ந்தேன்...
இது போன்ற சம்பவங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக பார்த்திருக்க நேரிடும்...ஆனால் இந்த நம்பியார் போன்ற கல் நெஞ்சக்காரர்களை எல்லாம் கடவுள் ஏன் தண்டிப்பதில்லை?