பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, October 21, 2011

கடாஃபி

கடாஃபி பதுங்கியிருந்த குழாய்

லிபியாவின் சர்வாதிகாரி கடாஃபி

மேற்கத்திய ஊடகங்களால் 'Mad Dog' என்று வர்ணிக்கப்பட்ட லிபிய சர்வாதிகாரி கடாஃபியின் எழுச்சியும் வீழ்ச்சியும் மிகவும் சுவாரசியமானதும், வரலாற்றில் மிக ஆழமாக பதிவான செய்தியுமாகும். வட ஆப்பிரிக்கா நாடான இந்த லிபியா ஏமன், அல்ஜீரியா, சிரியா, எகிப்து, டூனிஷியா ஆகிய இடங்களில் நடந்த புரட்சியைத் தொடர்ந்து புரட்சிக்கு ஆளானது. இவருடைய எழுச்சியையும், வீழ்ச்சியையும் மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1969ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் லிபியாவின் மன்னரான இட்றிஸ் ராணுவத்தாரால் ரத்தப் புரட்சியின் மூலம் வெளியேற்றப்பட்டார். அந்தப் புரட்சியின் நாயகனான கடாஃபி கதாநாயகனாக ஆனார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் லிபியாவை சூடானுடனும் எகிப்துடனும் இணைக்க ஒரு திட்டத்தை இவர் அறிவித்தார். ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.

 1970இல் கடாஃபியின் உத்தரவுப்படி லிபியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ராணுவ முகாம்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி ஆணையிடப்பட்டது. எண்ணை வளம் மிக்க லிபியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டு எண்ணைக் கம்பெனிகள் கடாஃபியின் உத்தரவின்படி 1973இல் நாட்டுடமையாக்கப்பட்டது.

1976இல் கடாஃபி தனது கொள்கை பிரகடனம் ஒன்றை வெளியிட்டார், அதன்படி லிபியா மக்கள் ஆட்சி முதலாளித்துவத்தையும், கம்யூனிசத்தையும் ஒருசேர நிராகரிக்கிறது என்ற அவருடைய கையேடு ஒன்றை வெளியிட்டார். அதற்கு Gaddafi's Green Book என்று பெயர்.

1977இல் லிபியாவை Socialist People's Libyan Arab Jamahiriya அல்லது State of the Masses என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1986ஆம் ஆண்டு லிபியா ரகசியப் படையொன்று ஜெர்மனியின் தலைநகரில் ஒரு தாக்குதலை நடத்தியது. அதில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்டார். அதற்கு எதிர் நடவடிக்கையாக அமெரிக்க அரசு லிபியாவுடனான அரசியல் தொடர்புகளை விலக்கிக் கொண்டது.

1988இல் ஒரு மனிதகுலமே வெறுக்கக்கூடிய ஒரு அராஜகத்தை லிபியா நடத்திக் காட்டியது. ஸ்காட்லாந்தில் 259 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு அமெரிக்க விமானத்தை வெடிவைத்துத் தகர்த்தது லிபியாவின் பயங்கரவாதி ஒருவன்.. இந்தக் குற்றத்துக்காக ஒரு லிபிய ரகசியப் படையைச் சேர்ந்த ஒருவன் தண்டிக்கப்பட்டு ஸ்காட்லாந்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.

2006இல் நிலைமை சற்று தேறியிருந்த சமயம் அமெரிக்கா மீண்டும் லிபியாவுடன் அரசாங்கத் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொண்டது. உலக பயங்கரவாதி கடாஃபி மாறியிருக்கலாம் என்று அமெரிக்கா நம்பியது போலிருக்கிறது.

2009இல் ஸ்காட்லாந்தில் ஒரு விமானத்தை வெடிவைத்துத் தகர்த்தக் குற்றத்துக்காக சிறையிலிருந்த அந்த குற்றவாளி விடுதலையாகி லிபியாவுக்கு வந்தபோது அவனுக்கு அரசாங்க மரியாதையோடு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இது உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்தது. ஒரு பயங்கரவாதிக்கு இத்தனை மரியாதையா என்று.

இவ்வாண்டின் தொடக்கத்தில் வட ஆப்பிரிக்க நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு எதிராகவும், அராஜக ஆட்சிகளுக்கு எதிராகவும் ஒரு மக்கள் புரட்சி ஏற்படத் தொடங்கியது. பிப்ரவரி 2011இல் லிபியாவிலும் கடாஃபிக்கு எதிரான போராட்டம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மார்ச் 19ஆம் தேதி நேட்டோ லிபியாவில் கடாஃபிக்கு எதிராக விமானத் தாக்குதலைத் தொடங்கியது. ஏப்ரல் மாதம் 31ஆம் தேதி கடாபியின் ஒரு மகனும், மூன்று பேரக் குழந்தைகளும் குண்டு வீச்சில் மரணமடைந்தார்கள். தொடர்ந்து கடாபிக்கு எதிரான போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது.

அக்டோபர் 20 நேற்று கடாஃபி புரட்சிப் படையினரால் அவனது சொந்த ஊரில் ஒரு சாலைக்கடியில் இருந்த குழாயொன்றில் பதுங்கி இருந்தபோது பிடித்து சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று தெருவோடு இழுத்து வந்து போட்டார்கள். நாற்பது ஆண்டுகள் உலகில் பயங்கர வாதத்தைப் பரப்பி வந்த ஒரு சர்வாதிகாரி கோரமான முறையில் கொல்லப்பட்டார்.

இதுதான் இன்றைய தலைப்புச் செய்தி. உலகத்தின் சர்வாதிகாரிகள் அனைவருமே இப்படிப்பட்ட கோரமுடிவைத்தான் அடைகிறார்கள் என்பதை ஹிட்லரும், முசோலினியும், கடாபியும் நிரூபித்து விட்டனர். இனி எவரும் இதுபோன்ற சர்வாதிகாரிகளாக ஆக விரும்ப மாட்டார்கள்.

No comments: