பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, September 23, 2011

மராத்தியர் வரலாறு - Part 15


தஞ்சாவூர் மராத்தியர் வரலாறு
பகுதி 15

ஆற்காட்டு நவாபிடமிருந்து நமது கவனத்தைச் சிறிது தெற்கே திருப்புவோம். முன்பொருமுறை தஞ்சை மகாராஜா ராமேஸ்வரம் போய்விட்டுத் திரும்பும் போது ராமநாதபுரத்தை ஆண்டு வந்த மறவர் குல மன்னர் ஒருவர் வயது முதிர்ந்த பெரியவர் தஞ்சை மன்னனைத் தன் அரண்மனைக்கு அழைத்து மரியாதை செய்ததைப் பார்த்தோம் அல்லவா. அப்போதிருந்து தஞ்சை மன்னர்களும் ராமநாதபுரத்து மன்னர்களான சேதுபதிகளும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்தார்கள்.

நாம் சென்ற பகுதியில் சொன்ன ஆற்காட்டு நவாப் முகமது அலிக்கும் சந்தா சாஹேபுக்குமிடையே சண்டை
நடந்த காலத்தில் ராமநாதபுரத்தை வயதில் இளையவரான சேதுபதி ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கும் முகமது அலிக்கும் நட்பு இருந்தது. இந்த நட்பு சாசுவதமானது என்று அவர் கருதினாரோ என்னவோ, தஞ்சை மராத்திய மன்னர்களோடு இருந்த நெருங்கிய நட்பிலிருந்து சற்று வழுவிப் போனார். தஞ்சை மன்னருக்குச் சொந்தமான பகுதிகளை ஆற்காடு நவாப் முகமது அலியின் சம்மதத்துடன் தன் வசப்படுத்திக் கொள்ளலானார். முன்பொருமுறை ராமநாதபுரம் சேதுபதி பிரதாபசிம்மரை அழைத்து மரியாதை செலுத்தினாரல்லவா, அதற்கு பதில் மரியாதையாக தஞ்சை அரசர் தனது ஆளுகைக்குட்பட்ட திருவாடனை எனும் பகுதியை சேதுபதிக்கு வழங்கியிருந்தார். அந்த மூத்த சேதுபதியின் மகன் தான் இப்போது சேதுபதியாக இருந்தவர். இவர் வயதில் இளையவர் என்பதோடு ஆற்காட்டாரின் உதவியோடு சில சில்லரை உபத்திரவங்களைத் தஞ்சை மன்னருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டி பிரதாபசிம்ம ராஜா தனது படையொன்றை மானோஜி ராவ் தலைமையில் தெற்கே அனுப்பி வைத்தார்.

மானோஜி ராவ் வழக்கப்படி தனது வீரம் செறிந்த படையோடு தெற்கே போய் ஹனுமந்த் காட், வரூர், மங்கள், குவடி ஆகிய கோட்டைகளைப் பிடித்தார். திருவாடனையையும் போரிட்டு மீட்டுத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்.

இந்த சமயம் மானோஜி ராவை அவசரமாகத் தஞ்சைக்குத் திரும்பி வரும்படி மன்னர் கட்டளையிட்டார். போர்க் களத்திலிருந்து மானோஜி ராவ் தஞ்சை திரும்பும் செய்தியை அறிந்த ஆற்காட்டு நவாப் ஆங்கில தளபதி மாஸ்டர் ஆஃப்ரி என்பவனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் தஞ்சாவூர் ராஜா ஆங்கிலேயர்களின் கொடியை அவமதிப்பு செய்தார் என்று புகார் தெரிவித்திருந்தார்.

இதன் பிறகு பிரதாபசிம்ம ராஜா தன் மகன் துளஜேந்திர ராஜாவுக்கு மாடிக் என்பவரின் மகளான ராஜகுமாரிபாயியைத் திருமணம் செய்து வைத்தார். இது இரண்டாவது கல்யாணம். அடுத்து நாலைந்து மாதத்திற்குள் மோத்தேயின் பெண் மோகனாபாயை மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்து வைத்தார்.

அப்போது புதுச்சேரியில் லாலி என்பவன் பிரெஞ்சு கவர்னராக இருந்தான். அவன் காலத்தில் அதாவது 1756இல் எந்தவித காரணமும் இல்லாமல், விரோதமும் இல்லாமல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்தான். இவன் ஏன் இப்படிச் செய்கிறான் என்று தஞ்சை மன்னர் விசாரித்த போது சரியான பதிலும் கிடைக்க வில்லை. அது குறித்த செய்தி:--

"His specific object was to recover the amount of the deed which Prathab Singh had given to Chanda Saheb for 56 lakhs but transferred to the French by Reza Saheb in lieu of the expenses incurred for the wars of the Nayaks."

சந்தா சாஹேப் தஞ்சையை முற்றுகையிட்டு வெற்றிபெற முடியாமல், தஞ்சை மன்னரிடம் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு திருச்சினாப்பள்ளிக்குப் போனான் அல்லவா, அப்போது தஞ்சை மன்னரிடமிருந்து ஒரு கடன் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு சென்றான். அந்த பத்திரத்தை சந்தா சாஹேப் பிரெஞ்சு அதிகாரிகளிடம் அந்தப் பணத்தை தஞ்சை மன்னரிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி சம்மதம் தெரிவித்து Made Over பண்ணி கொடுத்துவிட்டான். அந்தப் பணத்தை பெறுவதற்காகத்தான் லாலி இந்த யுத்தத்துக்கு வந்தான்.

பிரெஞ்சுப் படை தஞ்சாவூர் கோட்டையை சூழ்ந்து கொண்டு முற்றுகை இட்டது. முற்றுகை இரண்டு மாதத்திற்கும் மேலாக நீடித்தது. பிரதாபசிம்ம ராஜாவும் கோட்டைக்கு வெளியே வந்து போரிடாமல், உள்ளே இருந்து கொண்டு கோட்டையைக் காவந்து பண்ணிக் கொண்டிருந்தார். தற்காப்பு யுத்தம் நடைபெற்றது. பொறுத்துப் பார்த்துவிட்டு மன்னர் ஒரு முடிவுக்கு வந்தார். தங்களது படைபலம் முழுவதையும் ஒன்று திரட்டிக் கொண்டு ஒரு நாள் கோட்டைக் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்து பலமாக பிரெஞ்சு படை மீது மோதிப் போரிட்டார்.

பிரெஞ்சு வீரர்கள் ஏராளமானோர் இறந்து வீழ்ந்தனர். பலர் தங்கள் பிரதேசத்துக்குத் தப்பி ஓடிவிட்டனர். பயந்து போன லாலி தன் பீரங்கிகளை போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் காரைக்காலுக்கு ஓடிப்போனான்.

"The Tanjore troops subjected the French to severe hardship and the mutilated army commanded by the unlucky Governor reached Karaikal on 18th August 1758".

இதனை அடுத்து மகாராஜா தன் ராஜ்யத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த செய்தியானது: "நமது ராஜ்யத்தில் நாம் கடைப்பிடித்து வரும் வழக்கமானது, ஐரோப்பியர் எவராவது நமது ராஜ்யத்திற்குள் வந்தால் அவர் எந்த இடத்தில் நமது ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறார்களோ அங்காங்கு சுங்கவரி வசூலிக்க வேண்டும் என்பதுதான். அதன் விவரம் ஐரோப்பியர் நடந்து வந்தால் ஒவ்வொருவருக்கும் ஐந்து வராகன் வீதமும், குதிரைமீது ஏறி வந்தால் அதற்கு அதிகமாகவும், பல்லக்கில் உட்கார்ந்து வந்தால் விசேஷமான வரிவிதிப்பும், சேனை போன்ற பரிவாரங்களோடு வந்தால் மகாராஜாவுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பி அவர் முடிவு செய்யும் தொகையை வரியாக வசூலிக்க வேண்டுமென்பது விதி."

"தற்சமயம் கடற்கரையில் இருக்கும் ஐரோப்பியர்கள் மன்னருக்கு வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் வருவதும் போவதும் இனிமேல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். அதிலும் படையோடு வருபவர்கள் நமக்குத் தெரிவித்துவிட்டுத்தான் வருவார்கள். இனி ஐரோப்பியர்கள் எந்தத் துறைமுகத்திலிருந்து வந்தாலும் வரிவிதிப்பு கிடையாது." இதுதான் அரசர் அறிவித்த புதிய உத்தரவு.

இதன் பிறகு புதுச்சேரி கவர்னர் முஸேலாலி சென்னை கோட்டைக்குச் சென்று அதனைப் பிடிக்க முற்றுகை இட்டான். அங்கு கவர்னர் லாரன்சும், கர்னல் டிராப்பரும் கோட்டைக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்கள். இப்படி இந்த பிரெஞ்சு கவர்னர் திடுதிப்பென்று தங்கள் கோட்டையைத் தாக்குவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அவர்கள் தஞ்சை மன்னருக்கு உதவி கேட்டு தூது அனுப்பினார்கள்.

அதையடுத்து பிரதாபசிம்ம ராஜா முகமது யூசுப்கான் என்பவர் தலைமையில் திருச்சினாப்பள்ளியிலிருந்து குதிரைப் படையொன்றை அனுப்பி வைத்தார். இந்தக் குதிரைப் படை சென்னை கோட்டையை அடைந்த போது கோட்டையைச் சுற்றி லாலியின் படைகளும், கோட்டைக்குள்ளிருந்து ஆங்கிலப் படைகளும் போருக்குத் தயாராக நின்று கொண்டிருந்தன. அப்போது வெளியிலிருந்து அங்கு போன திருச்சினாப்பள்ளி குதிரைப் படை கும்மந்தான் முகமது யூசுப்கான் தலைமையில் பிரெஞ்சுக் காரர்களைச் சூழ்ந்து கொணது. இப்படியொரு ஆபத்து வரும் என்பதை எதிர்பார்க்காத லாலியின் பிரெஞ்சுப் படை புதுச்சேரியை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டது.

சென்னையில் இருந்த ஆங்கிலேயர்கள் காரைக்காலைப் பிடிப்பதற்காக லார்டு பிகாட் என்பவர் தலைமையில் வந்திருந்தனர். அவர்கள் காரைக்காலைப் பிடிக்க உதவி கேட்டனர். அதற்கும் பிரதாபசிம்ம ராஜா படைகளை அனுப்பி உதவி செய்தார். அதன் பிறகு புதுச்சேரிக்குச் சென்று பிரெஞ்சுக்காரர்களோடு போரிட ஆங்கிலேயர்கள் உதவி கேட்க அப்போதும் மன்னர் உதவி செய்தார். இப்படி ஆங்கிலேயர்களுக்கு அடுத்தடுத்து தஞ்சை மன்னர் உதவிகளைச் செய்து வந்தார்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆங்கில கவர்னர் லார்டு பிகாட் (Lord Piggot) இந்தியாவில் தன் பணியை முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்குச் செல்லும் முன்பாக ஒரு தூதரைத் தஞ்சாவூருக்கு அனுப்பி தஞ்சை மன்னருடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அது முதற்கொண்டு ஆங்கிலேயர்களுக்குத் தஞ்சை ராஜ்யத்தின் மீது அக்கறை உண்டாயிற்று. இருவரும் ஒருவருக்கொருவர் ஆபத்துக் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது என்பதை இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புக் கொண்டனர்.

(இனியும் தொடரும்)




No comments: