பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 27, 2011

வேதநாயக சாஸ்திரியார்


சுவிசேஷ கவிராயர் வேதநாயக சாஸ்திரியார் (1774 - 1864)

கிறிஸ்தவ மத தோத்திரப் பாடல்கள் பலவற்றை இயற்றியவர் இந்த வேத நாயகசாஸ்திரியார். இப்போதும்கூட வேதநாயக சாஸ்திரியார் பாடல் என்ற அறிவிப்போடு பல பாடல்களைக் கேட்டு வருகிறோம் அல்லவா? அந்த வேதநாயக சாஸ்திரியார் திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாளர் மரபில் தோன்றியவர். இவருக்குப் பன்னிரெண்டு வயது ஆகும்போது, தஞ்சை ராஜா சரபோஜிக்கு போஷகராக இருந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தார்.

தஞ்சை மாவட்டம் கடற்கரைப் பிரதேசமான தரங்கம்பாடியில் இருந்த ஒரு கல்வி நிலையத்தில் இவரைக் கல்வி கற்க வைத்தார் ஸ்வார்ட்ஸ். அங்கு இவர் இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்றார். அதன் பின் இவர் தஞ்சாவூருக்கு வந்து அங்கு இயங்கி வந்த தத்துவக் கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

அந்த நாளில் தஞ்சையை அரசு புரிந்தவர் மகாராஜா சரபோஜி IV ஆவார். அவர் கலை இலக்கியங்களில் ஆர்வம் உடையவர். வேதநாயகர் ஒரு சிறந்த கவிஞர். இவர் 52 நூல்களை இயற்றியிருப்பதாகத் தெரிகிறது. இந்தச் செய்தி சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் 1956இல் வெளியிட்ட தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் எனும் டாக்டர் தா.வி.வேதநேசன் எழுதிய நூலில் இருக்கிறது.

தஞ்சை மராத்திய வம்சத்தில் வந்தவரும், துளஜா ராஜாவின் சகோதரர் முறை உள்ளவரும், தஞ்சையை சரபோஜிக்கு முன்பு சில காலம் ஆண்டவரும், பின்னாளில் திருவிடைமருதூரில் வாழ்ந்தவருமான அமரசிம்மன் என்பவரின் மகன் பிரதாபசிம்மன் என்பவருக்கு வேதநாயகர் 1-2-1828இல் எழுதியுள்ள கடிதமொன்றில் "சிறிதும் பெரிதுமான அறுபது பொஸ்தகங்களை உண்டு பண்ணினேன்" என்று எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

இவருடைய நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவது "பெத்தலேஹம் குறவஞ்சி". மற்றொரு சிறந்த நூல் "பேரின்பக் காதல்". இது 1813இல் இயற்றப் பெற்றதாகத் தெரிகிறது. இந்த நூல் 1815இல் திருச்சியில் அரங்கேற்றப்பட்ட போது இவருக்கு "வேத சாஸ்திரி" எனும் பட்டம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஸ்வார்ட்ஸ் பாதிரியாருக்குப் பிறகு தஞ்சையில் இருந்தவர் Rev. Kohlhoff என்பவர். இவருடைய பரிந்துரையின் பேரில் மன்னர் சரபோஜி இவருக்கு ஒரு சால்வை அணிவித்து மரியாதை செய்ததோடு, மன்னரை மாதம் இருமுறை பார்க்கவும் அனுமதி வழங்கப் பட்டது. இவருடைய பணியைப் பாராட்டி சரபோஜி மன்னர் இவருக்கு மாதச் சம்பளமும் கொடுக்க ஆணையிட்டார்.

வேதநாயக சாஸ்திரியார் மராத்திய போன்ஸ்லே வம்சத்து வரலாற்றை செய்யுளாக இசைத்துக் கொடுத்திருக்கிறார். 1-2-1828இல் இவர் திருவிடைமருதூரில் வாழ்ந்த பிரதாபசிம்மனுக்கு எழுதிய கடிதத்தில், "Rev.Kohlhoff எனக்காகச் சிபாரிசு செய்ததன் பேரில் மகாராஜா எழுதி வைத்த போன்ஸ்லே வம்ச ராஜ சரித்திரத்தில் சிறிது விருத்தமாகப் பாடிய சில பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் செய்து கொடுத்தார்கள்" என இருக்கிறது.

ஆக, இவர் போன்ஸ்லே வம்ச சரித்திரத்தை பாடலாக வடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. இன்னொரு நிகழ்ச்சியும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் மன்னர் சரபோஜி இவரை பிரஹதீஸ்வர ஸ்வாமியின் பேரில் ஒரு குறவஞ்சி பாடும்படி கேட்டதாகவும், அதற்கு வேதநாயகர் மறுத்து விட்டதாகவும், அதன் விளைவாக இவ்விருவருக்கும் மன வேற்றுமை ஏற்பட்டது என்றும் தெரிகிறது.

இந்த வேதநாயக சாஸ்திரியார், சில காலம் கர்னல் மெக்கன்சியிடம் சுவடி தயாரிப்பில் ஈடுபட்டு வேலை செய்ததாகத் தெரிகிறது. இவர்24-1-1864இல் காலமானார்.

2 comments:

Unknown said...

நல்லத் தகவல்கள்...

/////இன்னொரு நிகழ்ச்சியும் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் மன்னர் சரபோஜி இவரை பிரஹதீஸ்வர ஸ்வாமியின் பேரில் ஒரு குறவஞ்சி பாடும்படி கேட்டதாகவும், அதற்கு வேதநாயகர் மறுத்து விட்டதாகவும், அதன் விளைவாக இவ்விருவருக்கும் மன வேற்றுமை ஏற்பட்டது என்றும் தெரிகிறது.////

இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரின் தீவிர மதப் பற்று விளங்குகிறது அதே நேரம் போல் மகாகவியைப் போல் ஒளிபெற்றவராகத் தெரியவில்லை... பேரொளியில் கலந்திருந்தால் எந்த பேதமும் அறிந்திருக்க மாட்டார்கள்... அப்படி தேவ தூதனாக வந்த ஏசு கிருஸ்துவே இமயமலையில் முனிவரகளுடனும், ரிஷிகளுடனும் இருந்திருக்கிறார் என்பதுவும் சான்றே.. தெய்வத்தை உணர்ந்தவர்களுக்கு எந்த பேதமும் இல்லை.. இங்கே நமது மகாகவி ஒளி பெறுகிறான்..

நன்றிகள் ஐயா!
வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.

Govindarajan said...

இந்த வேதநாயகம் சாஸ்திரியார் Fr. Blake காலத்திலும் இருந்ததாகத் தெரிகிறது. இவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவரே டாக்டர் ஜே. சி. குமரப்பா. இவர்தான் ஆபிரகாம் பண்டிதரை திண்டுக்கல்லில் இருந்து தஞ்சைக்கு வரவழைத்தார் என்று படித்திருக்கிறேன். ஆனால் கால ஒவ்வாமை குறுக்கே வருகிறது.