பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 5, 2011

பி.யு.சின்னப்பா

பி.யு.சின்னப்பா

பி.யு.சின்னப்பா எனும் நடிகரைப் பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் இவரும் பல படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர். இந்தக் கால கதாநாயகனைப் போல இளமை, அழகு போன்றவை அந்தக் கால நடிகர்களுக்குக் குறிப்பாக நாடகத் துறையிலிருந்து வந்து பாடி, நடித்துப் புகழ்பெற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் பி.யு.சின்னப்பா ஒரு திறமையான நடிகராகத் திகழ்ந்தவர். இவருடைய ஊர் புதுக்கோட்டை. தந்தை உலகநாத பிள்ளை தாய் மீனாட்சி. இவர் 1916 மே மாதம் 5ம் தேதி பிறந்தார்.

அப்போதெல்லாம் சினிமா ஏது? நாடகங்கள்தான். இவரது தந்தையும் ஒரு நாடக நடிகர் அதனால் சின்னப்பா இயல்பாக நடிகனாக ஆகிவிட்டார். ஐந்து வயதில் நடிக்கத் தொடங்கிய சின்னப்பா, நன்றாகப் பாடுவார். கர்நாடக சங்கீதம் இவர் அருமையாப் பாடக் கேட்க வேண்டும். "நாத தனு மனுசம்" என்கிற பாடலை இவர் அதே ராகத்தில் "காதல் கனி ரசமே" என்று பாடிய பிறகு ஒரிஜினல் பாட்டுக்கு மவுசு வந்து சேர்ந்தது.

புதுக்கோட்டையில் கோபாலகிருஷ்ண பாகவதர் என்பவர் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடி வந்தார். அங்கு பஜனைகள் அடிக்கடி நடக்கும். சின்னப்பாவும் புதுக்கோட்டையில் பஜனைப் பாடல்களைப் பாடி வந்திருக்கிறார். இளம் வயதில் நாடகத்துக்கு வந்துவிட்டதால் இவர் பள்ளியில் அதிகம் படிக்கவில்லை. இவர் நாடகக் கம்பெனியில் சேர்ந்தாரே தவிர இவருக்கு அங்கு ஒன்றும் பிரமாதமான முக்கியத்துவம் கிடைத்துவிடவில்லை. மீனலோசனி வித்வ பால சபாவில் இவர் சேர்ந்து நடித்தார். அந்த கம்பெனியில் டி.கே.எஸ். சகோதாரர்களும் அப்போது நடித்து வந்தனர். அந்தக் கம்பெனியில் முக்கியத்துவம் கிடைக்காததால் சின்னப்பா புதுக்கோட்டைக்கு அப்போது வந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடகக் கம்பெனியில் நடிக்கச் சேர்ந்தார். அப்போது அவருக்குக் கிடைத்து வந்த சம்பளம் மாதம் 15 ரூபாய்.

இவருக்கு நன்றாகப் பாட வரும். ஒரு முறை இவர் தனிமையில் அமர்ந்து கொண்டு பாடிய பாட்டைக் கேட்ட அவருடைய கம்பெனி முதலாளி பாடியது யார் என்று விசாரித்து இவருக்கு முக்கிய வேஷங்கள் கொடுத்து சம்பளத்தையும் ஐந்து மடங்கு உயர்த்திக் கொடுத்தார். அவர் வேலை செய்த கம்பெனியில் பின்னாளில் புகழ் பெற்ற எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சக்ரபாணி, நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் போன்றவர்களும் நடித்து வந்தனர். சின்னப்பா நடிப்பதுடன் பாடவும் செய்ததாலும், இவருடைய பாட்டுக்கள் மிக நன்றாக இருந்ததாலும் இவருக்கு நல புகழ் கிடைத்தது. இவருடைய கம்பெனி சென்னையில் முகாமிட்டு பல மாதங்கள் நாடகங்களை நடத்தியது. அப்போது இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, இவரது பாட்டுக்களுக்கும் மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர்.

நாடகக் கம்பெனியில் நடிகர்களுக்கு வேலைக்கோ அல்லது வருமானத்துக்கோ எந்த உத்தரவாதமும் கிடையாது. நினைத்தால் வெளியேற வேண்டியிருக்கும். அந்தவொரு நிலை வருமுன்பாக சின்னப்பா கம்பெனியை விட்டு நீங்கி சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அதன் பிறகு ஸ்பெஷல் நாடகம் என்று அவ்வப்போது யாராவது வந்து அவர்கள் நாடகங்களில் நடிக்கக் கேட்டுக் கொண்டால், அதில் போய் நடித்துவிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் இவர் கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்றுக் கொண்டார். இதற்காக ஏற்ற ஆசிரியர்களை நியமித்துக் கொண்டார். கர்நாடக சங்கீதம் கற்பது மிகவும் சிரமமான காரியம். இவர் மிகுந்த அக்கறையோடு முறையாகக் கற்றுக் கொண்டார். இவரை நடிகர் என்று சொல்வதைவிட சங்கீத வித்வான் என்று சொல்லுமளவுக்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார். கலை வந்து சேர்ந்த அளவுக்கு இவருக்கு நிதி வந்து சேரவில்லை. வருமானம் இல்லாமல் கஷ்டப்படத் தொடங்கினார். நடிப்பு ஒரு பக்கம், சங்கீதம் ஒரு பக்கம் இவற்றோடு உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் சேர்ந்து இவர் சிலம்பம், கத்திச் சண்டை போன்றவற்றையும் கற்று திறமை பெற்றார். அதில் இவர் சிறப்புப் பயிற்சியாக சுருள் கத்தி என்பதை எடுத்துச் சுற்றும் கலையில் தேர்ந்து விளங்கினார்.

இப்படி எதிலும் நிரந்தரமில்லாத நிலையில் கந்தசாமி முதலியார் (நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார்) இருந்த ஒரு கம்பெனியில் சேர்ந்து கொண்டார். இந்தக் குழு ரங்கூன் சென்றது. பர்மாவில் இருந்த ரங்கூனில் தமிழர்கள் நிறைய இருந்தனர். இவர்களுடைய நாடகங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் அங்கு நடித்த காலத்தில் இவரோடு எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர். சந்தானலட்சுமி, பி.எஸ்.சிவபாக்கியம், எம்.ஆர்.சாமிநாதன், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரும் நடித்துக் கொண்டிருந்தனர். அங்கு சுமார் ஆறுமாத காலம் இவர்களுடைய நாடகங்கள் நடந்தன. தொடர்ந்து இவர் இலங்கை சென்று அங்கும் பல ஊர்களில் நாடகம் நடத்திவுட்டுத் திரும்பினார்.

இவர் நடித்த நாடகம் ஒன்றைப் பார்த்த ஜுபிடர் பிக்சர்சார் இவரைத் தங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம் சந்திரகாந்தா. அதில் இவர் ஓர் இளவரசனாக நடித்து நல்ல பெயர் வாங்கினார். இது வெளியான வருடம் 1936. அந்தப் படத்தில் இவருடைய பெயரை சின்னச்சாமி என்றுதான் போட்டிருந்தார்கள். அதன் பிறகுதான் அவருடைய பெயர் சின்னப்பா என்று மாறியது. சந்திரகாந்தா படத்தைத் தொடர்ந்து இவருக்குப் பட வாய்ப்புக்கள் வந்தன. பஞ்சாப் கேசரி, ராஜமோகன், அனாதைப் பெண், யயாதி, மாத்ருபூமி ஆகிய படங்களில் நடித்தார். இவையெல்லாம் மிகச் சுமாராகத்தான் ஓடின. அதன் பின் பட வாய்ப்புக்கள் இல்லாமல் வருந்தியிருந்த நேரத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் இவரைப் பார்த்தார். அவர் தயாரிக்கவிருந்த உத்தமபுத்திரன் எனும் படத்துக்கு சின்னப்பாவை ஏற்பாடு செய்தார். அந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைக் கொடுத்தது. சின்னப்பாவின் புகழும் உச்சத்துக்குப் போனது. அதே படத்தை பிறகு சிவாஜி கணேசனைக் கொண்டு நடிக்க வைத்து வெளியாகி வெற்றி பெற்றதும் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம்.

சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் 1940இல் வெளிவந்தது. அதில் சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்துத் தூள் கிளப்பினார். இந்த வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இவர் தயாளன், தர்மவீரன், பிருதிவிராஜன், மனோன்மணி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் மனோன்மணி சுந்தரம் பிள்ளை எழுதிய கதை. இதில் சின்னப்பாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. மக்களின் பாராட்டுதல்களையும் அதிகம் பெற்றார். நம் காலத்தில் ரஜினி, கமல் என்று இருப்பதைப் போலவும், சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று இருந்ததைப் போலவும், இவர் காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா என்று இரு பெரிய நடிகர்கள் கோலோச்சி வந்தார்கள். முந்தைய நடிகர்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில்லை, ஆனால் இவரும் எம்.கே.டியும் அப்படி இல்லாமல் எதிரிகளைப் போல இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

பிருதிவி ராஜன் படத்தில் சின்னப்பாவுக்கு ஹீரோயின் ஏ.சகுந்தலா. இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் இவர்கள் இருவரும் கணவன் மனைவி ஆயினர். இவர்கள் திருமணம் 5-7-1944 அன்று நடைபெற்றது. சினிமாக்காரர்கள் வழக்கப்படி திருட்டுத் தனமாக இல்லாமல் ஊரறிய பிரபலமாக நடந்தது இந்தத் திருமணம்.

தொடர்ந்து இவர் ஆரியமாலா, கண்ணகி போன்ற படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். இந்தப் படங்கள் மூலம் இவர் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார். கண்ணகியைத் தொடர்ந்து குபேரகுசேலா, ஹரிச்சந்திரா, ஜகதலப்பிரதாபன், மஹாமாயா போன்ற படங்களில் நடித்தார். இவை நன்றாக ஒடி வசூலைக் கொடுத்தன.

இவருடைய பாடல்கள் இசைத்தட்டுக்களாகவும் வந்தன. வானொலியிலும் ஒரு முறை பாடினார், ஆனால் அதனால் வருமானம் இல்லாததால் விட்டுவிட்டார். தொடர்ந்து இவர் பங்கஜவல்லி, துளசிஜலந்தா, விகடயோகி, கிருஷ்ணபக்தி ஆகிய படங்களில் நடித்தார். மங்கையர்க்கரசி என்று ஒரு படம். அதில் இவருக்கு மூன்று வேடங்கள். அந்தப் படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதில் வந்த பாடல்களுக் ஹிட் ஆகி மக்கள் மத்தியில் பாடப்பெற்றன. வனசுந்தரி என்றொரு படம், அதற்கடுத்து ரத்னகுமார், சுதர்சன் ஆகிய படங்களும் வெளியாகின. இதில் சுதர்சன் சின்னப்பா இறந்த பிறகு வெளியாகியது.

மக்களின் அபிமானத்தைப் பெற்று மக்கள் கலைஞராகத் திகழ்ந்த பி.யு.சின்னப்பா 23-9-1951 அன்று தனது முப்பத்தைந்தாவது வயதில் காலமானார். இவருக்கு ஒரு மகன் உண்டு. அவர் பெயர் பி.யு.சி.ராஜாபகதூர். அவரும் ஒரே ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தொடர்ந்து ஒரு சில படங்கள் இவருக்குக் கிடைத்தாலும் தந்தையைப் போல இவர் பிரகாசிக்க முடியவில்லை. தமிழகம் தந்த பல கலைஞர்களில் பி.யு.சின்னப்பாவும் ஒருவர். வாழ்க அவரது புகழ்!

No comments: