பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 17, 2011

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.

தமிழகத்தைக் குலுக்கிய சில கொலை வழக்குகளில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கும் ஒன்று. காரணம் கொல்லப்பட்டவன் அல்ல, குற்றவாளியாகக் கூண்டில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்கள் தான் அந்தப் பரபரப்புக்குக் காரணம். அவர்கள்தான் புகழின் உச்சியில் இருந்த திரைப்பட நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர். 1944ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை 1947 வரை வழக்கு நடந்து முடிவும் வந்தது.

இதன் விவரங்களைச் சிறிது இப்போது பார்ப்போம். அந்த காலகட்டத்தில் மஞ்சள் பத்திரிகைகள் மலிந்திருந்தன. அதில் ஒன்று இந்துநேசன் எனும் பத்திரிகை. இதனை நடத்தி வந்தவன் லட்சுமி காந்தன். இந்த ஆளுக்கு அப்போதைய பிரபலமான மனிதர்களின் அந்தரங்கங்களைப் பத்திரிகையில் பிரசுரம் செய்து, அல்லது செய்வதாக மிரட்டி பணம் பிடுங்குவது. இது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருந்தமையால் இந்த லட்சுமிகாந்தன் காட்டில் நல்ல மழை.

ஒரு நாள் புரசவாக்கம் வேப்பேரி பகுதியில் கை ரிக்ஷாவொன்றில் பயணம் வந்த லட்சுமிகாந்தனை வழிமறித்து சிலர் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டனர். 1944 நவம்பர் 7ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காயத்தோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட லட்சுமிகாந்தன் மறுநாள் கலை சென்னை பொது மருத்துவமனையில் இறந்து போனான். இந்த வழக்கு குறித்து விசாரித்த தமிழ்நாடு போலீசார் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரைக் கைது செய்தனர்.

வழக்கின் விவரம் என்னவென்றால் சென்னை அப்போது மஞ்சள் பத்திரிகைகளின் சொர்க்க லோகமாக இருந்து வந்தது. லட்சுமிகாந்தனின் 'இந்துநேசன்' எனும் பத்திரிகை பிரபலமானவர்களைப் பற்றி தாறுமாறாக எழுதியும், எழுதுவதாக அச்சுறுத்தியும் பணம் பிடுங்கி வந்தது. இதற்கு முன் இந்த ஆள் 'சினிமா தூது' என்ற பத்திரிகையை நடத்தி வந்தான். இந்த ஆளின் பத்திரிகைகளில் சினிமா நடிகர்கள் பற்றிய சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதி வந்தான். மக்களும் இதுபோன்ற வம்புகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டினர். நல்ல வியாபாரம். இப்படி இவர் எழுதி வருவதால் சில பிரபலங்களின் பெயர் சமூகத்தில் கெட்டுப்போய் விட்டது. தங்களைப் பற்றி எழுதிவிடக் கூடாதே என்பதற்காக மற்ற நடிக நடிகையர் அதிகமான பணத்தைக் கொடுத்து இதுபோன்றவர்களை வாயைக் கட்டிப் போட்டிருந்தனர்.

இந்த வகையில் மஞ்சள் பத்திரிகையாளர்களின் காட்டில் நல்ல மழை. இது போன்ற பிளாக் மெயில் பத்திரிகைகளுக்கு எதிராக எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும், டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடுவும் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஆர்தர் ஆஸ்வால்டு ஜேம்ஸ் ஹோப் என்பவரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் இதுபோன்ற மஞ்சள் பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட லைசன்சை திரும்பப் பெற வலியுறுத்தியிருந்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று கவர்னர் பத்திரிகையின் லைசன்சை கேன்சல் செய்துவிட்டார்.

வேறு பல முயற்சிகள் செய்து பத்திரிகையை வெளிக்கொணர லட்சுமிகாந்தன் முயன்றும் ஒன்றும் முடியவில்லை. சினிமா தூது பத்திரிகையைத்தானே மூடும்படி ஆனது. புதிதாக 'இந்துநேசன்' என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி நடத்தத் தொடங்கினான் லட்சுமிகாந்தன். முந்தைய பாணியிலேயே இதிலும் கட்டுரைகள், தனிநபர் விமர்சனங்கள், இழிவு படுத்தும் செய்திகள் வெளிவந்தன. அதிலும் இவன் எம்.கே.டி., என்.எஸ்.கே. மற்றும் பல திரைப்பட நடிக நடிகைகள் குறித்தெல்லாம் கேவலமான செய்திகளை வெளியிட்டு வந்தான். இதில் அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. சொந்தத்தில் ஒரு அச்சகம் கூட வாங்கிவிட்டான்.

இந்த வழக்கு பற்றியும் இதுபோன்ற பல பரபரப்பான வழக்குகள் குறித்தும் பிரபல ராண்டார்கை என்பவர் எழுதியிருக்கிறார். அதன்படி இந்த லட்சுமிகாந்தன் இளம் பருவத்தில் ஒரு வக்கீலாக விரும்பினானாம். அவன் ஏழ்மை நிலைமை அவன் மனோரதம் நிறைவேறவில்லை. அதனால் இவன் ஒரு புரோக்கராம இயங்கி வந்தான். வக்கீலுக்கு ஆள் பிடிப்பது, பொய்சாட்சி சொல்வது, பொய்யான ஆவணங்களைத் தயாரிப்பது போன்ற நிழல் நடவடிக்கைகளை செய்து வந்தான். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்றபடி ஒரு நாள் மாட்டிக் கொண்டு சிறை சென்றான்.

அங்கு அவன் தப்பிக்க முயன்று மாட்டிக் கொண்டு ஏழு ஆண்டு சிறைதண்டனை பெற்றான். ராஜமுந்திரி ஜெயிலில் இவனது வாசம். மறுபடியும் தப்பிக்க முயன்றானாம். மறுபடியும் மாட்டிக்கொண்டு அந்தமான் தீவுக்கு அனுப்பப் பட்டானாம். இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஜப்பானிய படை மெல்ல மெல்லா கிழக்காசிய பகுதிகளைப் பிடித்து முன்னேறி வந்தது. பர்மாவை நெருங்கி அந்தமான் தீவையும் அது பிடித்துக் கொண்டது. அப்போது லட்சுமிகாந்தன் விடுதலையாகி தமிழ்நாடு திரும்பி பிழைப்புக்கு வழி தேடலானான். இனி அவன் கொலையுண்ட நிகழ்ச்சிக்கு வருவோம்.

1944 நவம்பர் 7 லட்சுமிகாந்தன் தன் வக்கீல் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றான். அவர் இருப்பது வெப்பேரி. அங்கிருந்து புரசவாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு ஒரு ரிக்ஷாவில் திரும்பி வரும்போது சிலர் அந்த ரிக்ஷாவை வழிமறித்து அவனைத் தாக்கிக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். புரசவாக்கம் தாணா தெரு அருகில் இந்த நிகழ்ச்சி நடந்தது. குத்துப்பட்டு காயத்துடன் விழுந்து கிடந்த லட்சுமிகாந்தன் மெல்ல எழுந்து தட்டுத்தடுமாறி வெப்பேரிக்குச் சென்று மறுபடியும் தன் வக்கீலைப் பார்த்து நடந்ததை விவரித்தான். அவர் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அந்தப் பகுதிகளில் அப்போது ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வசித்து வந்தனர். அப்படியொரு ஆங்கிலோ இந்திய இளைஞன் இவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான். வழியில் ரிக்ஷாவை நிறுத்தச் சொல்லிவிட்டு லட்சுமிகாந்தன் வெப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் கொடுக்க விரும்பினான். அப்போது கூடவந்த ஆங்கிலோ இந்திய இளைஞன் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான்.

ரத்தம் அதிகம் வெளியேறவும் ஓய்ந்து போன லட்சுமிகாந்தன் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடி நடந்தவற்றைச் சொல்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நம்பியார் என்பவர் ஒரு காகிதத்தில் அவற்றைக் குறித்துக் கொண்டார். ஜெனரல் ஆஸ்பத்திரியில் அவன் சேர்ந்தான். அங்கு அவனுடைய ரத்தப் போக்கு நிற்கவில்லை. டாக்டர்கள் பரிசோதனை செய்து வந்த போதும் மறுநாள் விடியற்காலை 4.15க்கு அவன் உயிர் பிரிந்தது.

முன்பே குறிப்பிட்டபடி பிரபலங்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. தீர்ப்பில் பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் தண்டிக்கப்பட்டனர். ஸ்ரீராமுலு நாயுடு விடுதலையானார். இருவருக்கும் தீவந்தர தண்டனை கிடைத்தது. உடனே அவ்விருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். அதன் முடிவு தெரிய காலதாமதமானதால் இவர்கள் அதற்குள் இரண்டரை வருடங்கள் சிறையில் கழித்தனர். கடைசியில் பிரிவி கவுன்சில் இவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஒரு அரக்கன் மாண்டு போனான், இருபெரும் நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் சிறையிலிருக்கும்படி நேர்ந்துவிட்டது. இதனால் தமிழ்த் திரையுலகமே பல மாற்றங்களுக்கு உட்பட்டுவிட்டது.

No comments: