பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, June 25, 2011

எம்.எல்.வசந்தகுமாரி

எம்.எல்.வசந்தகுமாரி

தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த குரல் இனிமையாலும், கர்நாடக சங்கீத உலகிலும், திரையிசையிலும் தனி முத்திரை பதித்தத் தலை சிறந்த பாடகியருள் எம்.எல்.வசந்தகுமாரியும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. இவர் பாடி புகழின் உச்சிக்குச் சென்ற பாடல்கள் எண்ணற்றவை. இந்த இசை மேதை தனக்குப் பின் ஒரு திறமை மிக்க சீடர்களை உருவாக்கிவிட்டு அவர்கள் இன்று கர்னாடக இசையுலகில் தலை சிறந்து விளங்குவதற்கு இவர் காரணமாக இருந்திருக்கிறார். இந்த அரிய பாடகியைப் பற்றிய சில விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

எம்.எல்.வி. என்று அறியப்பெற்ற எம்.எல்.வசந்தகுமாரி 'மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி' என்பதன் சுருக்கம். 1928 ஜூலை 3ஆம் நாள் பிறந்தவர் இவர். தமிழ் மொழி மட்டுமல்லாமல் வேறு பல மொழித் திரைப் படங்களிலும் இவருடைய பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவருடைய காலத்தில்தான் சங்கீத உலகில் தலை சிறந்த மேதைகளான எம்.எஸ்.சுப்புலட்சுமியும் டி.கே.பட்டம்மாளும் சிறந்து விளங்கி வந்தனர். அவ்வப்போது மூவர் சில துறைகளில் சிறந்து விளங்க்கும் மரபு நம் நாட்டில் இருந்து வருகிறது. கர்னாடக இசைக்கு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, தமிழிசைக்கு முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் போன்றோரைச் சொல்லலாம். அதுபோல இவர் காலத்தில் எம்.எஸ்., டி.கே.பி., எம்.எல்.வி. ஆகியோரைச் சொல்லலாம். பிரபல சங்கீத வித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியன் அவர்களிடம் சங்கீதம் பயின்றவர் இவர். மிகவும் இளம் வயதில் "சங்கீத கலாநிதி" விருதினைப் பெற்ற கலைஞர் இவர்.

அப்போதைய திரை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த ஜி.இராமனாதன் அவர்களுக்கு எம்.எல்.வி.யின் குரல் மிகவும் பிடிக்கும். ஆகவே அவர் இசை அமைத்த திரைப்படங்களில் எம்.எல்.வியின் பாடல் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. பல பாடல்களை இவர் ஜி.ராமனாதன் இசையில் பாடியிருக்கிறார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தவிர, முத்துசாமி தீட்சிதர் பாடல்களோடு புரந்தரதாசரின் பாடல்களையும் பிரபலப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. புரந்தர தாசரின் பாடல்கள் தமிழகத்தில் அதிகமாகப் பரவ இவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். அவருடைய "பாரோ கிருஷ்ணையா" போன்ற பாடல்கள் அடங்கும். இவர் பல சிஷ்யைகளைத் தயார் செய்திருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கவர்கள் திருமதி சுதாரகுநாதனைச் சொல்லலாம். தன்னுடைய மகளான பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீவித்யாவும் இவரிடம் இசை பயின்றவர்தான். வயலின் இசை மேதையான கன்னியாகுமாரி இவருக்குப் பலகாலம் பக்க வாத்தியம் வாசித்தவர் என்கிற பெருமையைப் பெற்றவர்.

புகழ்பெற்ற இசைப் பாரம்பரியம் உள்ளவர் எம்.எல்.வி. இவருடைய தந்தையார் அய்யாசாமி ஐயர் மிகச் சிறந்த பாடகர். தாயார் லலிதாங்கியும் இசைக் கலையில் புகழ் பெற்றவர். சென்னையில் ஒரு கான்வெண்டில் கல்வி கற்று வந்த சமயத்தில் இவருடைய இனிய குரலையும், பாடும் திறமையையும் கண்டு குரு ஜி.என்.பாலசுப்பிரமணியன் இவரை ஒரு சிறந்த இசைக் கலைஞராக ஆக்க முடிவு செய்தார். குடும்பமும் இசைத் துறையில் ஈடுபட்டிருந்த காரணத்தால் எம்.எல்.வி. இசையைத் தன் வாழ்க்கைக்கு முக்கியமான துறையாக ஏற்றுக் கொண்டார்.

எம்.எல்.வி. தன் 12ஆவது வயதிலேயே தனியாக கச்சேரிகளைச் செய்யத் தொடங்கினார். முதலில் தன் தாயாருடன் பாடிவந்த இவர் பின்னர் தனியாகப் பாடத் துவங்கினார். இசைத் துறையில் நுழைந்து சில ஆண்டுகளுக்குள் இவர் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து விட்டார். இவர் இசைக் கச்சேரிகளைக் கேட்க ரசிகர் மானிலம் முழுவதும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இவருடைய தாயார் புரந்தரதாசரின் சாகித்தியங்களை நன்கு அறிந்தவராதலால் அவரிடமிருந்து இவரும் அவற்றைக் கற்றுக் கொண்டு சிறப்பாகப் பாடத் தொடங்கினார்.

முன்பே குறிப்பிட்டபடி திரையிசைத் துறை இவரை விட்டுவைக்கவில்லை. 1946 முதல் திரையிசையில் பாடிவந்தாலும் முதன்முதலாக "மணமகள்" எனும் படத்தில் 1951இல் இவர் பாடிய "எல்லாம் இன்பமயம்" எனும் பாடலும், மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே" எனும் பாடலும் இவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. பாரதியார் இந்தப் பாடலுக்கு வேறு ராகத்தில் அமைத்திருந்தாலும் இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் மற்றொரு ராகத்தில் பாடிய இந்தப் பாடல்தான் இன்றும் பாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. 1952இல் தாய் உள்ளம் எனும் படத்தில் பாடிய "கொஞ்சும் புறாவே" எனும் பாடல், ஓர் இரவில் பாடிய "ஐயா சாமி" எனும் பாடல் போன்ற எண்ணற்ற பாடல்கள் இவருக்கு பெருமை சேர்த்தன.

ராஜாஜி அவர்கள் இவருக்கும் விகடம் கிருஷ்ணமூர்த்திக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்தார். சிறப்பாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு சங்கரராமன், ஸ்ரீவித்யா எனும் இரு குழந்தைகள். ஸ்ரீ வித்யா சங்கீதத்திலும் சிறந்து விளங்கினார். ஆனாலும் திரைத்துறையில் ஈடுபட விரும்பி இவர் ஒரு சிறந்த நடிகையாக ஆகி பரிணமித்தார் என்பது அனைவரும் அறிவர்.

புரந்தரதாசரின் சாகித்தியங்களை ஆய்வு செய்து இவர் மைசூர் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்தைப் பெற்றார். மத்திய அரசின் "பத்ம பூஷன்' விருதையும், "சங்கீத கலாநிதி" விருதையும் பெற்றார். 1990இல் இவர் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார். வாழ்க எம்.எல்.வசந்தகுமாரி புகழ்!

Saturday, June 18, 2011

வெற்றியும் தோல்வியும் ஒரே இடத்தில் தங்கி விடுவதில்லை.

வெற்றியும் தோல்வியும் ஒரே இடத்தில் தங்கி விடுவதில்லை. 

எம்.ஏ.வேணு தயாரித்து ஏ.பி.நாகராஜன் வசனம் எழுதி தயாரித்த "சம்பூர்ண ராமாயணம்" அனைவருக்கும் நினைவிருக்கும். அதில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடலொன்று மறக்க முடியாது. அது, "இன்று போய் நாளை வாராய் என்று எனை ஒரு மனிதன் புகலுவதோ" எனத் தொடங்கும் பாடல். அந்தப் பாடலுக்கு மூலம் கம்ப இராமாயணத்தில் காணப்படும் ஒரு பாடல். அது இதோ.

"ஆளய்யா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளையாயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா என நல்கினன், நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்"

இதுதான் அந்தப் பாடல். முதல் நாள் யுத்தத்தில் போர்க்களத்தில் இராவணன் நிராயுதபாணியாக நிற்கும் நிலை கண்டு இராமபிரான் அவனை 
இன்று போய் ஓய்வு எடுத்துக் கொள், போர்க்கு நாளை வா, என்று பெருந்தன்மையோடு அனுப்பி வைக்கும் காட்சி இது. 

இந்த பாடலில் கண்ட "ஆள் ஐயா" எனும் சொல்லுக்குப் பல பொருள் சொல்லலாம். முதலாவது மூவுலகங்களையும் ஆளும் வல்லமை படைத்த ஐயா. இரண்டாவது வேதங்களை எல்லாம் கற்று சிவபெருமானைத் தன் சாமகானத்தால் வயப்படுத்திய ஐயா என்பது. மூன்றாவது சர்வ வல்லமை படைத்த நீ இன்று வெறுங்கையனாய் நிற்கும் பரிதாபத்திற்குரிய ஐயா என்பது. எல்லா குண நலங்களும் இருந்தும் பிறன் மனை நோக்கி பீடிழந்த ஐயா என்பது. இப்படிப் பல பொருள் சொல்லலாம். என்ன ஆளய்யா நீ! என்பது குறிப்பு. 

தன் எதிரிக்கு உயிர் பிச்சை அளித்துப் போருக்கு இன்று போய் நாளை வா என்று சொன்ன வள்ளன்மையை என்னென்பது? அதனால்தான் கம்பன் இங்கு இராமனை "கோசல நாடுடை வள்ளல்" என்றும் அந்த கோசல நாட்டை வாளை மீன்கள் தாவிக்குதிக்கும் வளமிகுந்த கோசல நாடு என்றும் கூறுகிறான். அப்போது இராவணனின் நிலை என்ன? தோல்வி என்பதையே தன் வாழ் நாளில் அறிந்திராத இராவணன் ஒரு மானுடன் தன்னை 'இன்று போய் நாளை வா' என்றானே என்று வருந்துகிறான். அவன் ஊர் திரும்பிய காட்சி பரிதாபமானது. தலை குனிந்து, மகுடங்களை இழந்து வெறும் தலையனாய், கையில் ஆயுதங்கள் எதுவுமின்றி, உடலெங்கும் காயத்துடன், மனம் முழுதும் வருத்தம் மேலிட, மண்மகள் முகம் நோக்கி மெல்ல நடக்கும் காட்சி நம் கண்முன் வந்து நிற்கிறது. அப்போது அவனைக் காண்பித்து நமக்கு அவன் பெருமைகளை பட்டியலிடுகிறார் கம்பர். என்ன சொல்லுகிறார்?

"வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்"

இந்த இடத்தில் இராவணனுக்கு உரிய பெருமைகளை எல்லாம் பட்டியலிடுகிறார் கம்பர். அவைகள் எவை? 

முதலில் "வாரணம் பொருத மார்பன்". எட்டு திசைகளையும் காக்கும் யானைகளோடு மோதி போரிட்டு, அதனால் அவற்றின் தந்தங்கள் தனது மார்பில் புக, அவற்றை அப்படியே ஒடித்து விட்டு, மார்பில் தந்தங்கள் பதியப் பெற்ற பெருமையை உடையவன். 

அடுத்து, "வரையினை எடுத்த தோள்". இராவணன் சிறந்த சிவ பக்தன். தினமும் சிவபெருமானை வழிபட கைலாயம் சென்று வணங்கிய பின்னர்தான் உணவு உண்பான். அப்படி தினமும் கைலை மலைக்குச் சென்று வர சிரமமாக இருந்ததால் கைலை மலையைப் பெயர்த்து இலங்கைக்குக் கொண்டு வர்ந்துவிடலாம் என்று நினைத்து அதைப் பெயர்க்கப் போய், நந்தி தன் காலால் அழுத்த மலை இடுக்கில் மாட்டிக் கொண்டு இராவணன் கதறி அழுது, சாம கானம் பாடி சிவபெருமானின் மனம் குளிரச் செய்து தன்னை மீட்டுக் கொண்டான். அப்படிப்பட்ட தோள்வலி உள்ளவன் இராவணன்.

பிறகு "நாரத முனிவருக்கேற்ப நயம்பட உரைத்த நாவுடையவன்". சாம கானத்தால் தன் நா வலிமையை நிலை நாட்டியவன். மாலைகளை அணிந்த மணிமுடிகளைத் தன் தலைகளில் தாங்கியவன். இவனுடைய தவத்தை மெச்சி சிவபெருமான் இவனுக்கு "சந்திரஹாசம்" எனும் எவராலும் வெல்ல முடியாத ஒரு வாளைப் பெற்றவன். நிறைவாக இயல்பாக இவனுக்கு அமைந்த வீரம். இத்தனைப் பெருமைகளையுடைய இராவணன், அவை அத்தனையையும் களத்தில் போட்டுவிட்டு வெறும் கையனாகத் திரும்பிப் போகிறான் என்று கம்பர் வர்ணிக்கிறார். 

இத்தனைப் பெருமைகளை உடையவன் அவற்றை எங்ஙனம் இழந்தான். பார்க்கலாமா? முதல் நாள் யுத்தத்தில் அனுமனோடு நேருக்கு நேர் நின்று போரிட்ட போது அனுமன் விட்ட குத்து ஒன்றினால் அவன் மார்பில் பதிந்திருந்த அஷ்ட திக் கஜங்களின் தந்தங்கள் எல்லாம் பொல பொலவென்று கீழே கொட்டிவிட்டன. அதனால் அந்தப் பெருமை ஒழிந்தது. 

கைலை மலையை பெயர்த்தெடுத்த பெருமை அவன் தோள் வலிமைக்குச் சான்று கூறின. முதல் நாள் போரில் தோல்வியுற்று, மயங்கி கீழே சாய்ந்த இலக்குவனைத் தூக்க முடியாமல் தவித்திருந்த போது அனுமன் ஒரு குரங்கு தன் குட்டியைக் கவ்வி எடுத்துச் செல்வது போல மிக சுலபமாக எடுத்துச் சென்றபோது தன் தோள் வலி போய்விட்டது என்பதை உணர்ந்தான். 

"நாரத முனிவர்க்கேற்ப நயம் பட உரைத்த நாவு" எனும் பெருமையை, இராமன் இவனைப் பார்த்து "போர்க்கு இன்று போய் நாளை வா" என்றதும் நா உலர்ந்து அந்தப் பெருமையும் போயிற்று. "தாரணி மவுலி பத்து" என்பது மாலைகள் அணிந்த அவன் பத்துத் தலைகளிலும் அழகு செய்த கிரீடம். அவை அனைத்தையும் இராமன் ஒரே கணையினால் அடித்து வீழ்த்தி அந்தப் பெருமையை அழித்துவிட்டான். 

"சங்கரன் கொடுத்த வாள்" சந்திரஹாசம் அறத்தின்பாற்பட்ட எந்த போரிலும் வெற்றி தர வல்லது. ஆனால் இராவணன் அறத்திலிருந்து மாறுபட்டு தர்மவான் ஜடாயுவை அதனால் கொன்றதனால் அதன் வீரியம் போய்விட்டது. சந்திரஹாசத்தின் பெருமை அழிந்தது. இறுதியாக அவனிடம் இருந்தது வீரம் ஒன்றுதான். அதுவும் போரில் தோற்று குனிந்த தலையுடன், பூமித்தாயின் முகம் பார்த்து மெல்ல நடந்த போது போயிற்று. 

எல்லா பெருமைகளுக்கும் சொந்தக்காரனாக இருந்த இராவணன் முதல் நாள் போர் முடிந்ததும், ஒரே நாளில் அத்தனைப் பெருமைகளையும் இழந்து மிகச்சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டான். பெருமையோடு தலை நிமிர்ந்து ஆணவத்தோடு ஆட்சி புரிந்த இராவணன் ஒரே நாளில் அத்தனை பெருமைகளையும் இழந்து தலை குனிந்து இன்று சாதாரண மனிதனாக நடந்து செல்லுகிறான். வெற்றியும் தோல்வியும் ஒரே இடத்தில் தங்கி விடுவதில்லை. அது மாறிமாறித்தான் வரும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் உலகத்தில் போட்டி, பொறாமை, பூசல் இவைகளெல்லாம் ஏது? இந்த முடிவைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் மனிதர்கள். அதனால்தான் கம்பராமாயணம் காப்பியமாகப் போற்றப் படுகிறது. 

Friday, June 17, 2011

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.

தமிழகத்தைக் குலுக்கிய சில கொலை வழக்குகளில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கும் ஒன்று. காரணம் கொல்லப்பட்டவன் அல்ல, குற்றவாளியாகக் கூண்டில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்கள் தான் அந்தப் பரபரப்புக்குக் காரணம். அவர்கள்தான் புகழின் உச்சியில் இருந்த திரைப்பட நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர். 1944ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை 1947 வரை வழக்கு நடந்து முடிவும் வந்தது.

இதன் விவரங்களைச் சிறிது இப்போது பார்ப்போம். அந்த காலகட்டத்தில் மஞ்சள் பத்திரிகைகள் மலிந்திருந்தன. அதில் ஒன்று இந்துநேசன் எனும் பத்திரிகை. இதனை நடத்தி வந்தவன் லட்சுமி காந்தன். இந்த ஆளுக்கு அப்போதைய பிரபலமான மனிதர்களின் அந்தரங்கங்களைப் பத்திரிகையில் பிரசுரம் செய்து, அல்லது செய்வதாக மிரட்டி பணம் பிடுங்குவது. இது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இருந்தமையால் இந்த லட்சுமிகாந்தன் காட்டில் நல்ல மழை.

ஒரு நாள் புரசவாக்கம் வேப்பேரி பகுதியில் கை ரிக்ஷாவொன்றில் பயணம் வந்த லட்சுமிகாந்தனை வழிமறித்து சிலர் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டனர். 1944 நவம்பர் 7ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காயத்தோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட லட்சுமிகாந்தன் மறுநாள் கலை சென்னை பொது மருத்துவமனையில் இறந்து போனான். இந்த வழக்கு குறித்து விசாரித்த தமிழ்நாடு போலீசார் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரைக் கைது செய்தனர்.

வழக்கின் விவரம் என்னவென்றால் சென்னை அப்போது மஞ்சள் பத்திரிகைகளின் சொர்க்க லோகமாக இருந்து வந்தது. லட்சுமிகாந்தனின் 'இந்துநேசன்' எனும் பத்திரிகை பிரபலமானவர்களைப் பற்றி தாறுமாறாக எழுதியும், எழுதுவதாக அச்சுறுத்தியும் பணம் பிடுங்கி வந்தது. இதற்கு முன் இந்த ஆள் 'சினிமா தூது' என்ற பத்திரிகையை நடத்தி வந்தான். இந்த ஆளின் பத்திரிகைகளில் சினிமா நடிகர்கள் பற்றிய சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதி வந்தான். மக்களும் இதுபோன்ற வம்புகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டினர். நல்ல வியாபாரம். இப்படி இவர் எழுதி வருவதால் சில பிரபலங்களின் பெயர் சமூகத்தில் கெட்டுப்போய் விட்டது. தங்களைப் பற்றி எழுதிவிடக் கூடாதே என்பதற்காக மற்ற நடிக நடிகையர் அதிகமான பணத்தைக் கொடுத்து இதுபோன்றவர்களை வாயைக் கட்டிப் போட்டிருந்தனர்.

இந்த வகையில் மஞ்சள் பத்திரிகையாளர்களின் காட்டில் நல்ல மழை. இது போன்ற பிளாக் மெயில் பத்திரிகைகளுக்கு எதிராக எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும், டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடுவும் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஆர்தர் ஆஸ்வால்டு ஜேம்ஸ் ஹோப் என்பவரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் இதுபோன்ற மஞ்சள் பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட லைசன்சை திரும்பப் பெற வலியுறுத்தியிருந்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று கவர்னர் பத்திரிகையின் லைசன்சை கேன்சல் செய்துவிட்டார்.

வேறு பல முயற்சிகள் செய்து பத்திரிகையை வெளிக்கொணர லட்சுமிகாந்தன் முயன்றும் ஒன்றும் முடியவில்லை. சினிமா தூது பத்திரிகையைத்தானே மூடும்படி ஆனது. புதிதாக 'இந்துநேசன்' என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி நடத்தத் தொடங்கினான் லட்சுமிகாந்தன். முந்தைய பாணியிலேயே இதிலும் கட்டுரைகள், தனிநபர் விமர்சனங்கள், இழிவு படுத்தும் செய்திகள் வெளிவந்தன. அதிலும் இவன் எம்.கே.டி., என்.எஸ்.கே. மற்றும் பல திரைப்பட நடிக நடிகைகள் குறித்தெல்லாம் கேவலமான செய்திகளை வெளியிட்டு வந்தான். இதில் அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. சொந்தத்தில் ஒரு அச்சகம் கூட வாங்கிவிட்டான்.

இந்த வழக்கு பற்றியும் இதுபோன்ற பல பரபரப்பான வழக்குகள் குறித்தும் பிரபல ராண்டார்கை என்பவர் எழுதியிருக்கிறார். அதன்படி இந்த லட்சுமிகாந்தன் இளம் பருவத்தில் ஒரு வக்கீலாக விரும்பினானாம். அவன் ஏழ்மை நிலைமை அவன் மனோரதம் நிறைவேறவில்லை. அதனால் இவன் ஒரு புரோக்கராம இயங்கி வந்தான். வக்கீலுக்கு ஆள் பிடிப்பது, பொய்சாட்சி சொல்வது, பொய்யான ஆவணங்களைத் தயாரிப்பது போன்ற நிழல் நடவடிக்கைகளை செய்து வந்தான். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்றபடி ஒரு நாள் மாட்டிக் கொண்டு சிறை சென்றான்.

அங்கு அவன் தப்பிக்க முயன்று மாட்டிக் கொண்டு ஏழு ஆண்டு சிறைதண்டனை பெற்றான். ராஜமுந்திரி ஜெயிலில் இவனது வாசம். மறுபடியும் தப்பிக்க முயன்றானாம். மறுபடியும் மாட்டிக்கொண்டு அந்தமான் தீவுக்கு அனுப்பப் பட்டானாம். இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஜப்பானிய படை மெல்ல மெல்லா கிழக்காசிய பகுதிகளைப் பிடித்து முன்னேறி வந்தது. பர்மாவை நெருங்கி அந்தமான் தீவையும் அது பிடித்துக் கொண்டது. அப்போது லட்சுமிகாந்தன் விடுதலையாகி தமிழ்நாடு திரும்பி பிழைப்புக்கு வழி தேடலானான். இனி அவன் கொலையுண்ட நிகழ்ச்சிக்கு வருவோம்.

1944 நவம்பர் 7 லட்சுமிகாந்தன் தன் வக்கீல் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றான். அவர் இருப்பது வெப்பேரி. அங்கிருந்து புரசவாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு ஒரு ரிக்ஷாவில் திரும்பி வரும்போது சிலர் அந்த ரிக்ஷாவை வழிமறித்து அவனைத் தாக்கிக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். புரசவாக்கம் தாணா தெரு அருகில் இந்த நிகழ்ச்சி நடந்தது. குத்துப்பட்டு காயத்துடன் விழுந்து கிடந்த லட்சுமிகாந்தன் மெல்ல எழுந்து தட்டுத்தடுமாறி வெப்பேரிக்குச் சென்று மறுபடியும் தன் வக்கீலைப் பார்த்து நடந்ததை விவரித்தான். அவர் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அந்தப் பகுதிகளில் அப்போது ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வசித்து வந்தனர். அப்படியொரு ஆங்கிலோ இந்திய இளைஞன் இவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான். வழியில் ரிக்ஷாவை நிறுத்தச் சொல்லிவிட்டு லட்சுமிகாந்தன் வெப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் கொடுக்க விரும்பினான். அப்போது கூடவந்த ஆங்கிலோ இந்திய இளைஞன் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான்.

ரத்தம் அதிகம் வெளியேறவும் ஓய்ந்து போன லட்சுமிகாந்தன் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடி நடந்தவற்றைச் சொல்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நம்பியார் என்பவர் ஒரு காகிதத்தில் அவற்றைக் குறித்துக் கொண்டார். ஜெனரல் ஆஸ்பத்திரியில் அவன் சேர்ந்தான். அங்கு அவனுடைய ரத்தப் போக்கு நிற்கவில்லை. டாக்டர்கள் பரிசோதனை செய்து வந்த போதும் மறுநாள் விடியற்காலை 4.15க்கு அவன் உயிர் பிரிந்தது.

முன்பே குறிப்பிட்டபடி பிரபலங்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. தீர்ப்பில் பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் தண்டிக்கப்பட்டனர். ஸ்ரீராமுலு நாயுடு விடுதலையானார். இருவருக்கும் தீவந்தர தண்டனை கிடைத்தது. உடனே அவ்விருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் லண்டன் பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். அதன் முடிவு தெரிய காலதாமதமானதால் இவர்கள் அதற்குள் இரண்டரை வருடங்கள் சிறையில் கழித்தனர். கடைசியில் பிரிவி கவுன்சில் இவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஒரு அரக்கன் மாண்டு போனான், இருபெரும் நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் சிறையிலிருக்கும்படி நேர்ந்துவிட்டது. இதனால் தமிழ்த் திரையுலகமே பல மாற்றங்களுக்கு உட்பட்டுவிட்டது.

"ஆளவந்தார் கொலை வழக்கு".

"ஆளவந்தார் கொலை வழக்கு".

1950களில் தமிழ் நாட்டை உலுக்கிய ஒரு கொலை வழக்கு "ஆளவந்தார் கொலை வழக்கு". ஆளவந்தார் என்பவர் யார் என்பதைப் பார்ப்போம்.

சென்னை ஆவடியில் ராணுவ இலாகாவில் பணியாற்றியவர் இவர். கோமுட்டி செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர். இவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள். இவர்கள் பொதுவாக வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். மாறாக இந்த ஆளவந்தார் என்பவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1939லிருந்து 1945 வரை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இவர் ராணுவத்தில் இருந்திருக்கிறார். யுத்தம் முடிந்து ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வந்த பிறகு ஏதாவது தொழில் செய்து பிழைக்கக் கருதி அப்போது அறிமுகமாகியிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார்.

இப்போது வேண்டுமானால் தொட்டதெற்கெல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் என்றாகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் முதன் முதலாக அறிமுகமான காலத்தில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரும்புப் பொருட்கள் போல கனமும் இல்லை, காகிதம் போல மெல்லியதாகவும், தூக்கிச் செல்ல இலகுவாகவும் இருந்தது. விைலையும் அதிகமில்லை. இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையைத் தொடங்கினார் ஆளவந்தார். அப்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை (சைனா பஜார்) பகுதியில் ஜெம் அண்டு கோ எனும் பேனா கம்பெனி இருந்தது. அந்த கடையின் வாயிலில் சிறிய இடமொன்றை இவர் வாடகைக்குப் பிடித்துக் கொண்டார்.

வியாபாரி என்றால் ஒரே பொருளில் மட்டுமா கவனம் செலுத்துவார்கள். எளிதில் லாபம் கிடைக்கும் மற்ற பல தொழில்களையும் நாடுவார்கள். இவரும் மாதத் தவணை முறையில் புடவைகளை விற்கத் தொடங்கினார். இப்போதெல்லாம் தவணை முறை வியாபாரம் பழகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் அது புதிது. அறிமுகமான புதிதில் ஒரு சிறு தொகை கொடுத்து ஒரு பொருளை வாங்கிக் கொண்டு மாதத் தவணையில் மீதியைக் கொடுப்பது வாங்குவோருக்கும் சுலபமாக இருந்ததால் இந்த முறைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதால் கிடைத்த ஓய்வூதியம் தவிர, வியாபாரத்தில் கிடைத்த வருமானம் இதில் அமைதியாக வாழ்ந்திருக்கலாம். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். இவ்வளவு நல்ல சூழ்நிலையில் இவரிடம் இருந்த ஒரு மிக மோசமான, பெரும்பாலான ஆண்களை அழிக்கும் ஒரு பழக்கம் பெண்கள் சகவாசம், அது இவரிடம் அதிகமாகவே இருந்தது. தனது ஆண்மையில் இவருக்கு அதீதமான பெருமை. தன் திறமைக்காகவே தன்னிடம் பல பெண்கள் வந்து விழுவதாக நினைத்துக் கொண்டார். இந்த ஒரு தீயபழக்கம் போதாதென்று போதைப் பொருள் பழக்கமும் இருந்தது.

இந்த நிலையில் ஒரு நாள் இரவு.......

ஆளவந்தாரின் மனைவி தன் கணவன் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று கவலையுடன் அவர் கடை இருக்கும் சைனா பஜார் ஜெம் அண்டு கோவுக்குச் சென்று விசாரித்தார். அங்கு அவர் இல்லை. அங்கிருந்தவர்கள் சொன்ன விஷயம், அவர் ராயபுரத்தில் தனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்க போனவர் அப்புறம் திரும்ப வரவேயில்லை என்ற பதில்தான். ராயபுரத்தில் இவர் யாரைப் பார்க்கப் போனார்? மனைவிக்குக் கவலை. மேலும் விசாரித்ததில் தேவகி என்ற பெண்ணைப் பார்க்கப் போனார் என்று சொன்னார்கள்.

யார் அந்த தேவகி? கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் இந்த தேவகி. அழகும் இளமையும் கொஞ்சி விளையாடும் பருவம் அவளுக்கு. கல்லூரியில் படித்தவள், நன்றாக உடை உடுத்தி கெளரவமாகத் தோற்றமளிப்பாள். தான் சமூக சேவகர் என்று மற்றவர்களிடம் சொல்லி வந்தார். இவர் ஒரு முறை ஜெம் அண்டு கோவுக்கு பேனா வாங்க வந்தபோது அங்கு ஆளவந்தாரைச் சந்தித்து நண்பர்கள் ஆனார்கள். அப்படித் தொடங்கிய நட்பு நாட்பட நாட்பட இன்ப உறவாக மாறியது. பெண்களோடு தொடர்புடைய ஆளவந்தாருக்கு இந்தப் பெண் நூறோடு நூற்றியொன்றுதான். இதை ஆளவந்தார் ஒரு பெருமையாகவே நினைத்துக் கொள்வதோடு தெரிந்தவர்களிடம் தன்னுடைய சாதனைகளைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்வதும் உண்டு.

இவருடைய இந்தப் பெண்ணாசை காரணமாகவே இவர் புடவை விற்பனையில் ஈடுபட்டார். அப்போதுதானே பெண்களின் தொடர்பு கிடைத்துக் கொண்டேயிருக்கும். ஹாஸ்டலில் தங்கிப் படிப்போர், வேலைக்குப் போவோர், நர்சுகள் போன்றவர்கள்தான் இவரிடம் புடவை வாங்கும் வாடிக்கையாளர்கள். இவர்கள் தவிர பொழுது போகாமல் கடைகளைச் சுற்றி வரும் குடும்பப் பெண்களும் இதில் அடங்குவர். தவணைப் பணம் பலராலும் ஒவ்வொரு மாதமும் ஒழுங்காகக் கொடுக்க முடியாது. அதனால் இவர் ஒரு சலுகையை அறிவித்தார். மாதத் தவணை கொடுக்க இயலாமல் போனால் பரவாயில்லை, தன்னோடு அந்தரங்கமாக இருக்க அழைப்பார். வருபவர்களை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் இருந்த ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்குவார்கள். பெரும்பாலும் அங்கு பொய்யான பெயர்களையே கொடுத்துவிட்டுத் தங்குவார்.

கதை இப்படிப் போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் ஆளவந்தார் காணாமல் போனார், அவர் மனைவி ஜெம் அண்டு கோவுக்கு வந்து அவரைத் தேடத் தொடங்கினார். இந்த நிலையில் அந்த அம்மையாரை விட்டுவிட்டு நாம் இப்போது வேறு இடத்துக்குப் போவோம். ஒரு நாள் காலையில் சென்னை ராயபுரம் கடற்கரையில் ஒரு தலை கரை ஒதுங்கியது. ஆளவந்தாரைத் தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் இதனைக் கேள்விப்பட்டு ஓடிப் போய்ப் பார்த்தார். அடையாளம் தெரியவில்லை. ஒரு சில நாட்கள் கழிந்து சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் போட் மெயில் எனும் விரைவு ரயிலில் மானாமதுரை ரயில் நிலையத்தில் ஒரு டிரங்க் பெட்டி வந்து சேர்ந்தது. அதில் தலை இல்லாத ஒரு முண்டம் அடைக்கப்பட்டிருந்தது. போலீசுக்கு மானாமதுரை உடலும், ராயபுரம் கடற்கரை தலையும் ஒருங்கிணைக்க வெகு நேரம் ஆகவில்லை. ஒருவழியாக ஆள் அடையாளம் தெரிந்தது. அந்த உடல் ஆளவந்தாருடையதுதான் என்பது நிச்சயமானது.

இறந்து போனது ஆளவந்தார் என்பது தெரிந்ததும் அவரைப் பற்றியும் அவருடைய தொடர்புகள் பற்றியும் போலீஸ் தீவிரமாக விசாரித்த போது அவருடைய பெண்கள் தொடர்பும் தெரிய வந்தது. உடனே அவருக்குத் தொடர்பு இருந்த பெண்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினரும் விசாரணைக்குள் வந்தனர். அப்படி விசாரிக்கும் போதுதான் இந்த ஆள் எப்படிப்பட்ட பெண் பித்தன் என்பதும் இவனுக்கு எத்தனை பெண்களுடன் தொடர்பு என்பதெல்லாம் தெரிய வந்தது. இப்படி ஆளவந்தாரின் பெண் தொடர்புகளை யெல்லாம் விசாரித்து வரும்போது தேவகி என்ற மலையாளத்துப் பெண்ணுடனான தொடர்பும் தெரிய வந்தது. உடனே அந்தப் பெண்ணையும், அவள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் விசாரிக்கத் தொடங்கினர்.

அப்போது தேவகி மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடாகியிருப்பதும், அந்தச் செய்தி ஆளவந்தாருக்கும் தெரிந்தது என்பதும் தெளிவானது. ஆனால் இந்தக் கல்யாணம் நடக்கக்கூடாது, தேவகியுடனான தன்னுடைய தொடர்பு நின்றுவிடக்கூடாது, அதற்கு இடையூறாக வரவிருக்கும் இந்தத் திருமணம் எப்படியாவது நிற்க வேண்டுமென ஆளவந்தாருக்கு வெறி. தேவகியிடம் தங்கள் இருவருக்குமிடையே உள்ள உறவை வெளியிட்டுவிடுவேன். திருமணத்தைத் தடுத்து நிறுத்தி விடுவேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டி வந்திருக்கிறார்.

இவனுடைய தொல்லை பொறுக்க முடியாமல் எங்கே இந்த ஆள் திருமணத்துக்குப் பின் தொல்லை கொடுத்துவிடுவானோ என்று முன்கூட்டியே மேனனிடம் தன்னுடைய விஷயத்தையெல்லாம் தேவகி சொல்லிவிட்டாள். உண்மைகளைக் கக்கிவிட்டாள். உடனே அந்த வருங்கால கணவன் மேனன் ஒரு முடிவுக்கு வந்தார். இந்த ஆள் உயிருடன் இருந்தால்தானே உனக்கு இதுபோன்ற தொல்லைகளைக் கொடுத்து வருவான், இவனை ஒரு வழிபண்ணி தீர்த்துக்கட்டிவிட்டால்? இந்த யோசனை இருவருக்கும் பிடித்திருந்தது. தேவகிக்கும் இதில் சம்மதமே. உடனே திட்டம் தயாரிக்கப்பட்டது.

தேவகி ஆளவந்தாரிடம் நைச்சியமாகப் பேசி ஆசை வார்த்தைகள் சொல்லி மெதுவாக அவளுடைய இருப்பிடத்துக்கு அழைத்து வரவேண்டியது. அப்படி அவன் வந்து இவர்கள் வலையில் தானாக சிக்கிக் கொள்ளும்போது மீதி விஷயங்களை முடித்துவிட வேண்டியது. இதுதான் அவர்களது திட்டம். என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், திறமைசாலியாக இருந்தாலும் பெண்பித்து என்று இருந்துவிட்டால், ஒரு பெண்ணின் புன்னகையில், அவளது இனிக்கும் பேச்சில் மயங்கி அவள் இழுத்த இழுப்புக்கு போகாத ஆண்களே இருக்க முடியாது. அதிலும் ஆளவந்தார் போன்ற மிகக் கேவலமான பெண்பித்தனைப் பற்றி கேட்க வேண்டுமா? தேவகி ஆசையோடு கூப்பிட்டதும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அவள் பின் போனான்.

அங்கு போனதும் அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும். அங்கு மேனன் மற்ற விஷயங்களைக் கச்சிதமாக முடித்து விட்டான். கொன்றபின் ஆளவந்தாரின் தலையை மட்டும் தனியாக வெட்டியெடுத்து வங்கக் கடலில் வீசிவிட்டார்கள். கடலுக்குள் போடப்பட்ட தலையை மீன்கள் விட்டுவைக்கவா போகின்றன என்கிற தைரியம் அவர்களுக்கு. ஆனால் என்ன துரதிர்ஷ்டம், அந்தத் தலை முழுமையாக கரை ஒதுங்கி இவர்களைக் காட்டிக் கொடுக்க வாய்ப்பளித்து விட்டது. தலையில்லாத முண்டத்தை எப்படி அடையாளம் காண்பார்கள், அதிலும் அந்தத் தலை நானூறு ஐனூறு மைல்களுக்கு அப்பால் போய்ச்சேர்ந்து விட்டால், உடனே தலையற்ற அவனுடைய முண்டம் ஒரு டிரங்க் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஏற்றப்பட்டது. இருவரும் மன நிம்மதியோடு வீடு திரும்பி விட்டார்கள், தலை கடலிலும், முண்டம் ரயிலிலும் போய்விட்டது என்ற மனத் திருப்தியுடன்.

இவ்வளவும் ஆன பிறகு இங்கு இருப்பதும் ஆபத்து என்று எண்ணி அவ்விருவரும் பம்பாய்க்கு ரயிலேறிவிட்டார்கள். ஆனால் பாவம், இவர்கள் ஒன்று நினைக்க இறைவன் வேறொன்று நினைத்து விட்டான். தலையும் கிடைத்தது, முண்டமும் கிடைத்தது, இரண்டும் ஒரே ஆளுடையது என்பதும் தெரிந்தது. அந்த நாளில் தமிழக போலீஸ் மகா திறமைசாலிகளைக் கொண்டது. ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரானது. விடுவார்களா, கண்டுபிடித்து விட்டார்கள். தோண்டித் துருவி, ஆளவந்தாரின் தொடர்புகளை மோப்பம் பிடித்துக் கொண்டு போய் தேவகியிடம் போய் நின்றது. ராயபுரத்தில் தேவகியைத் தேடினால், அவர்கள்தான் ஓடிவிட்டார்களே. மறுபடியும் தேடுதல் வேட்டை, மேனனும் தேவகியும் போலீசின் பிடியில் சிக்கினார்கள். சென்னையில் வழக்கு நடந்தது.

அப்போதெல்லாம் நம் நாட்டில் இதுபோன்ற வழக்குகளில் ஜூரிகள் இருப்பார்கள். அவர்கள் வழக்கின் போக்கை உன்னிப்பாகக் கவனித்து வருவார்கள். அவ்வப்போது அவர்களுக்கு நீதிபதிகளும் சில விளக்கங்களை அளிப்பார்கள். வழக்கின் முடிவில் ஜூரிகள் இவர்களைக் குற்றவாளிகள் என்று தங்கள் அபிப்பிராயத்தை நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழ்பெற்ற ஏ.எஸ்.பி.அய்யர். இந்த வழக்கை முழுமையாக கவனித்து, குற்றவாளிகள் இருவரின் வரலாற்றையும், கொலையுண்ட ஆளவந்தாரின் நடவடிக்கை, ஒழுக்கம் இவற்றையும் மிகத் துல்லியமாகக் கணித்து ஆளவந்தாரினால் மேனனும் தேவகியும் பட்ட தொல்லைகள், மனவருத்தம், திருமணத்தை நடத்த விடாமல் அவன் செய்த மிரட்டல்கள் இவற்றையெல்லாம் அவர் கவனமாகப் பரிசீலித்தார்.

இறுதியில் அவருடைய அனுதாபம் தேவகியின் மீதும், மேனன் மீதும் ஏற்பட்டது. ஆளவந்தார் என்பவன் ஒரு சமூக விரோதி அவன் கொலையுண்டதை கொலை என்பதை விட அவனுடைய அடாவடித்தனத்துக்காகக் கொடுக்கப்பட்ட தண்டனை என்றும் முடிவு செய்தார். ஆகவே அவ்விருவருக்கும் ஒரு சில ஆண்டுகள் தண்டனை மட்டும் கொடுத்துத் தீர்ப்பு கூறினார். அவர்களும் சில ஆண்டுகள் சிறையில் இருந்த பின் வெளியே வந்து திருமணம் செய்துகொண்டு கேரளாவுக்குச் சென்று விட்டனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீதிபதியின் கருணையை நினைத்து அவரை வாழ்த்தியிருப்பார்கள். கேரளாவில் ஏதோ தொழிலில் ஈடுபட்டு நல்ல வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொண்டார்கள். இந்த வழக்கு குறித்து பிரபல எழுத்தாளர் ராண்டார்கை என்பவர் மிக விரிவாக எழுதியிருக்கிறார். 

மானம் காத்த மாவீரன் வாஞ்சிநாதன்

மானம் காத்த மாவீரன் வாஞ்சிநாதன்

1911ஆம் வருடம் ஜூன் மாதம் 17ஆம் நாள்.

தமிழகத்தின் தென்கோடியில் மணியாச்சி ரயில் நிலையத்தில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்ட தினம். அந்த நிகழ்ச்சிக்காக நினைவில் வைத்திருக்க வேண்டிய நாள் அல்ல இது. அந்த ஆஷைச் சுட்டுக் கொன்ற வீர வாஞ்சி தன்னையும் மாய்த்துக் கொண்டு இந்த பூமியை சிவப்பாக்கித் தன் தியாகத்தை மண்ணில் இரத்தத்தால் எழுதிய நாள் இது. அதனால் இந்த நாளை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

என் நண்பர் பேராசிரியர் தேவராஜ் கோயம்பத்தூரிலிருந்து நேற்று மாலை (16-6-2011) தொலைபேசியில் பேசினார். வீரவாஞ்சியின் தியாக நாளான ஜூன் 17இல் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கிறது. அதற்குத் தானும் முன்னாள் மாவட்ட கலெக்டரும் தியாகி எல்.கிருஷ்ணசாமி பாரதி அவர்களின் புதல்வனும், தானே சுதந்திரப் போரில் ஈடுபட்டுச் சிறைசென்ற தியாகியுமான கி.லட்சுமிகாந்தன் பாரதி, I.A.S. அவர்களுடன் அங்கு செல்வதாகக் குறிப்பிட்டார். அந்த வீர புருஷனுடைய தியாகம் இந்த மண்ணில் நடைபெற்று நூறு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. ஆனால், அந்தத் தியாகத்தின் விலை நம் மக்களுக்குத் தெரிந்திருக்கிறதா? இந்த நாடு அந்த வீரமகனுக்கு உரிய மரியாதையைச் செய்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மையான பதில். என்ன செய்வது? பொய்யும், போலியும், வெளிச்சம் போட்டு நாட்டைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்க எப்போதோ, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது மரியாதைக்குரிய தலைவரான தூத்துக்குடி வழக்கறிஞர் ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிறைவாசத்துக்குக் காரணமாக இருந்தவனும், அவர் சிறையில் கல்லுடைக்கவும், செக்கிழுக்கவும் வைக்கக் காரணமாக இருந்த ஆஷ் துரையை பழிவாங்கி இந்தியரின் குறிப்பாகத் தமிழனின் மானத்தைக் காக்க, அந்த ஆஷின் உயிரை மட்டுமல்ல, தன் உயிரையும் ஆஹூதியாகக் கொடுத்த நாள் என்பதை இந்த நாடே ஒன்று சேர்ந்து நினைவுகூர்ந்திருக்க வேண்டாமா?

இன்றாவது நமது இளைய தலைமுறை அந்த வீர இளைஞனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? தமிழகத்தில் எத்தனையோ நாளிதழ்கள் வெளியாகின்றன. எனக்குத் தெரிந்து "தினமணி" நாளிதழ்தான், தான் ஒரு தேசிய நாளிதழ் என்பதை நிலைநிறுத்தி இன்றைய இதழில் "வீர வாஞ்சிநாதன்" எனும் கட்டுரையைப் பிரசுரித்து அவனுக்கு மரியாதை செய்திருக்கிறது. "தினமணி"க்கும் அதன் ஆசிரியருக்கும் தலை வணங்குவோம். மா.வீரபாண்டியன் என்பவர் எழுதிய அந்தக் கட்டுரையின் கடைசி பாராவில் குறிப்பிட்டுள்ள செய்திதான் மிக முக்கியமானது. அதில்:--

"சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவ சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் பாடத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய மண்ணில் சிந்திய ரத்தத்தின் வலிமையை மாணவ சமுதாயம் அறிய முடியும்"

இந்த வரிகள்தான் நம்முடைய இந்தக் கட்டுரையின் நோக்கமும் ஆகும். வீர வாஞ்சியின் நினைவாக, நம்முடைய மற்றொரு வலைப்பூவான www.tamilnaduthyagigal.blogspot.com என்கிற வலைப்பூவில் நாம் ஏற்கனவே வெளியிட்டிருக்கிற வீர வாஞ்சியின் வாழ்க்கைக் குறிப்பை மீண்டும் இந்த கட்டுரையிலும் கொடுக்க ஆசைப் படுகிறேன். இதோ அந்த கட்டுரை:


வீர வாஞ்சி
தொகுப்புதஞ்சை வெ.கோபாலன்
உலக நாடுகளில் பல வன்முறைப் புரட்சிகளின் மூலம்தான் விடுதலையடைந்திருக்கின்றனபிரெஞ்சு புரட்சியில் மாண்ட உயிர்கள் எத்தனைரஷ்யப் புரட்சியில் மாண்டவர்கள் எத்தனை பேர்அமெரிக்க உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்இப்படி உலகம் முழுவதும் போர் மூலமாகத்தான் சுதந்திரம் பெற்றிருக்கின்றனர்இந்தியாவில் மட்டும்தான் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம்சத்தியாக்கிரகம் மூலம் நெடுநாள் போராட்டத்துக்குப் பிறகு சுதந்திரத்தைக் காணமுடிந்ததுகாந்தியடிகளின் இந்தப் போரை "கத்தியின்றிரத்தமின்றிநடந்த போராக எடுத்துக் கொள்ளலாம்அதாவது ஆங்கிலேயர்களின் ரத்தத்தை சிந்த வைக்காமல்அடிபட்டுஉதைபட்டுதுப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு நம் இந்திய ரத்தத்தைச் சிந்தி இந்த சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை மறுக்கமுடியாதுஅதுதான் அகிம்சை வழி. 
மகாத்மா காந்தியடிகள் இந்திய அரசியலில் ஆழங்கால் படுவதற்கு முன்பு பால கங்காதர திலகர் காலத்தில் இந்த அகிம்சை வழியெல்லாம் நடைமுறையில் இல்லைஅதுமட்டுமல்லாமல் எந்த வழியிலாவது ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவிலிருந்து விரட்டிவிட வேண்டுமென்கிற துடிப்புதான் நம் மக்கள் உள்ளங்களில் இருந்த கருத்துஅப்படிப்பட்ட சூழ்நிலையில் வாஞ்சிநாதன் எனும் தேசபக்த இளைஞன்கொடுமைக்காரனும்இந்தியர்களை புழுவிலும் கேவலமாகக் கருதக்கூடியவனும்தேசபக்த சிங்கம் ..சிதம்பரம் பிள்ளைக்குக் கிடைத்த கொடிய தண்டனைக்குக் காரணமாக இருந்தவனுமான ஆஷ் என்பவனை சுட்டுக் கொன்றான் என்பது எந்த வகையில் நாம் எடுத்துக் கொள்வதுஇது தேசபக்தியின் வெளிப்பாடா இல்லையாஇது தவறு என்று சொல்வதற்குஇதற்கு மாற்று வழி ஏதேனும் அந்த காலகட்டத்தில் இருந்ததாஇதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் கண்ட பிறகுதான் இந்த வீர இளைஞனின் தியாகத்தை மதிப்பிட வேண்டும்.
சரித்திர காலத்தில் ஒரு நாட்டுப் படையும்எதிரி நாட்டுப் படையும் நேருக்கு நேர் போரிட்டுக் கொண்டார்கள்அதில் இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழக்க நேரிடுகிறதுஇதையெல்லாம் கொலையாகக் கருதுவதில்லைஅதுமட்டுமல்லாமல் கொடியவர்களும்சர்வாதிகாரிகளும் கொலை செய்யப்பட்ட வரலாறு நமக்கு நிறையவே கிடைக்கின்றனஇத்தாலியில் ஃபாசிஸ்ட் தலைவன் முசோலினியும் அவனோடு பல ஃபாசிஸ்ட்டுகளும் மிலான் நகரில் கொல்லப்பட்டு ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தனர்அப்படிச் செய்தவர்கள் இத்தாலி தேசபக்தர்களாகக் கருதப்பட்டார்களேயன்றி கொலைகாரர்களாக அல்லஅவர்களுக்கு முன்பாக அதே இத்தாலியில் மாஜினியும் வன்முறை அரசியல் நடத்தியவர்தான்கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகிறபோது 'வன்முறை'யும் ஒரு ஆயுதமாகப் பயன்பட்டிருக்கிறது என்ற கோணத்தில் இந்த வீர வாஞ்சியின் வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்க்கலாம்தாங்கமுடியாத தருணத்தில் வன்முறையில் ஈடுபடும் தேசபக்தர்கள் எத்தகைய தியாகங்களைப் புரிகிறார்கள்அவையெல்லாம் அவர்களது சொந்த நலனுக்காகவாநாட்டின் நலன் கருதியாதன்னை அழித்துக் கொண்டு இந்த நாடு நல்ல நிலை அடையவேண்டுமென்று அவர்கள் செய்த தியாகங்களுக்கு அளவுகோல் உண்டாசைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு வெள்ளைக்கார சார்ஜெண்ட் சாண்டர்ஸ் என்பான் அடித்த அடியின் காரணமாகப் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய் இறந்து போனார்அன்று லாகூர் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த ஷாகீத் பகத் சிங்சுக்தேவ்ராஜகுரு ஆகியோர் அந்த வெறிபிடித்த வெள்ளையனைச் சுட்டுக் கொன்றனர்அது கொலையாதேசபக்தனின் பழிவாங்கும் செயலா? 24 வயதில் அந்த இளைஞர்கள் நாட்டுக்காகத் தமது இன்னுயிரை நீத்த செயலை என்னவென்று சொல்லலாம்குதிராம் போஸ்மதன்லால் திங்க்ரா போன்ற மாவீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது யார் பொருட்டுஇதையெல்லாம் நம் மனதில் கொண்ட பிறகே வீரன் வாஞ்சிநாதனின் செயலை எடைபோட வேண்டும்.
வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியார்பொருட்களை விற்கவும் வாங்கவும் என்று வந்த வேலையை விட்டு இங்கு நாடுபிடிக்கும் வேலையில் இறங்கினர்அவர்களது சூழ்ச்சிக்கு இரையான ராஜ்யங்கள் எத்தனை எத்தனைவாரிசு இல்லாமல் ஒரு அரசன் இறந்தால் அந்த ராஜ்ஜியத்தைத் தங்களதாக எடுத்துக் கொண்டது பிரிட்டிஷ் சூழ்ச்சிராஜ்யத்தை நல்லபடி நடத்துவதாகவும்தகுந்த பாதுகாப்புக் கொடுப்பதாகவும் உத்தரவாதமளித்துப் பிடுங்கிக் கொண்ட ராஜ்யங்கள் எத்தனைஇந்தியர்கள் ஏமாளிகள் இவர்கள் தொடைகளில் திரித்த வரையில் லாபம் என்று கருதியது வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனிஅதில் ஆளவந்தவர்கள் ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் ஈவு இரக்கமற்ற முரடர்கள்இந்தியர்களை மனிதர்களாகவே நினைக்கத் தெரியாதவர்கள்இந்தப் பின்னணியில் வாஞ்சியின் வரலாற்றைப் பார்ப்போம்.
அமைதியாகவும்வெள்ளையனின் அடக்குமுறைக்குக் கட்டுப்பட்டும் தென்னகம் முழுவதும் வாய்பேசாத மெளனிகளாக இருந்த சமயம் உரக்கக் குரல் கொடுத்த தேசிய வாதிகள் ..சிதம்பரம் பிள்ளைசுப்பிரமணிய சிவா மற்றும் அவர்களோடு தோளோடு தோள் நின்ற மாடசாமி போன்ற வீரர் பெருமக்கள்இவர்களைக் கைது செய்து பொய்யான வழக்கில் சிக்க வைத்து இந்த வீரப்பெருமக்களைச் சிறைச்சாலைக்குள் கொண்டு வந்து அடைத்த பின் பிரச்சினை ஒன்றும் இருக்காது என்று இருமாந்திருந்த வெள்ளை ஆதிக்கமும்அதன் பிரதிநிதியாகத் திருநெல்வேலி ஆக்டிங் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பானும் எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம் ஒன்று மணியாச்சி ரயில் சந்திப்பில் நடந்ததுஆம்! 1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி காலை 10-40 மணிக்கு மணியாச்சி சந்திப்பில் அந்த சம்பவம் நடந்தது. 

17-6-1911 
கலெக்டர் ஆஷ் அவனது மனைவி ஆகியோர் கொடைக்கானலில் படிக்கும் தங்களது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக நெல்லை பாலம் ரயில் நிலையத்தில் காலை 9-30 மணிக்குக் கிளம்பினார்கள்அவர்கள் பயணம் செய்த ரயில் மனியாச்சியில் நின்றதுஅங்கு தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலுக்காக இருவரும் முதல் வகுப்புப் பெட்டியில் காத்திருந்தார்கள்அந்த நேரத்தில் அந்த ரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டு வந்த வண்டியை விட்டு இறங்கி ஆஷ் இருந்த முதல் வகுப்புப் பெட்டிக்குள் ஏறினார்வாஞ்சியைப் பார்த்த ஆஷ் பதறினான்யார் நீ என்று கத்தினான்உடனே தன் கைத்துப்பாக்கியால் ஆஷை நோக்கிச் சுட்டார்குண்டு அவன் மார்பில் பாய்ந்ததுஅந்த நிலையிலும் ஆஷ் தன்னைச் சுட்டவனைப் பிடிக்க முயன்றான்அவன் மனைவி அதைத் தடுத்து விட்டாள்.
ஆஷைச் சுட்டுவிட்டு பெட்டியை விட்டுக் கீழே இறங்கிய வாஞ்சிநாதனைப் பிடிக்க சிலர் முயன்றனர்அவர்களை உதறித் தள்ளிவிட்டு அருகிலிருந்த கழிப்பறைக்குள் சென்றுவிட்டார் வாஞ்சிஉள்ளே நுழைய பயந்துகொண்டு ஒரு மணி நேரம் நின்றவர்கள் கழிப்பறையிலிருந்து குண்டு வெடித்த சப்தம் கேட்டு உள்ளே போய் பார்த்தார்கள்அங்கே வாஞ்சி தனது கைத் துப்பாக்கியைத் தன் வாயினுள் சுட்டுக்கொண்டு இறந்து வீழ்ந்து கிடந்தார்குண்டடிபட்டுக் காயமடைந்த ஆஷ் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லும் வழியில் கங்கைகொண்டான் எனுமிடத்தில் இறந்து போனார்.
கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து கிடந்த வாஞ்சிநாதன் உடலைப் போலீசார் சோதனையிட்டனர்அவர் காட்டிலாகாவில் வேலை பார்த்தவராதலால் உறுதியான துணியால் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்தார்ஒரு பையில் தமிழில் எழுதப்பட்டுதமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்திடப்பட்ட தேதியில்லாத ஒரு கடிதம் இருந்ததுஅவர் அணிந்திருந்த கோட்டில் ஒரு மணிபர்சும்ராணி விக்டோரியாவின் படமும்இரண்டாம் வகுப்பு ரயில்வே டிக்கட் ஒன்றுஐந்து அணா நாணயங்கள் இவை இருந்தன.
யார் இந்த வாஞ்சிஅன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட செங்கோட்டையில் கோயில் மணியமாக இருந்த ரகுபதி ஐயர் என்பவரின் மகன்இவருக்கு நான்கு சகோதரிகள்இரண்டு ஆண் பிள்ளைகளில் இவர் இளையவர்இவர் செங்கோட்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார்திருவனந்தபுரம் மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி..படித்தார்தனது 23ஆம் வயதில் முன்னீர்ப்பள்ளம் சீதாராமையரின் மகள் பொன்னம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்அங்கிருந்து பரோடா சமஸ்தானத்துக்குச் சென்று மரவேலை செய்யும் தொழில்துறைப் படிப்பைப் படித்துத் தேறினார்பிறகு புனலூரில் காட்டிலாகாவில் பாரஸ்ட் கார்டாக வேலைக்குச் சேர்ந்தார்.
அந்த காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் பாரதமாதா சங்கம் என்றொரு இயக்கம் வேகமாக வளர்ந்து வந்ததுஇதனை நிறுவியவர் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி என்பார்இவர் சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமத்தில் பிறந்தவர்தேசபக்தியின் காரணமாக வெள்ளை அரசுக்கும்வெள்ளைக்காரர்களுக்கும் எதிராக ஒரு மாபெரும் புரட்சி செய்ய எண்ணி வங்கத்திலிருந்து வந்திருந்த சில புரட்சிக்காரர்களின் தீர்மானப்படி பாரதமாதா சங்கம் தோற்றுவிக்கப்பட்டதுநீலகண்டனுக்கு ஏற்கனவே புதுச்சேரியில் வந்து தங்கியிருந்த .வெ.சு.ஐயரின் தொடர்பு இருந்ததுஇந்த பாரதமாதா சங்கம் என்பது ஒரு ரகசிய இயக்கம்இதில் உறுப்பினர்களாக இருப்போர் ரகசியமாக ஒன்று கூடிகாளியின் படத்திற்கு முன்னால் குங்குமம் கலந்த தண்ணீரை வெள்ளையரின் குருதி என்று எண்ணிக் குடிப்பர்கத்தியால் தங்கல் கை விரல்களில் கீறிக்கொண்டு அந்த ரத்தத்தால் ஒரு வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வர்என்ன ஆபத்து நேர்ந்தாலும்சங்கத்தைப் பற்றிய ரகசியங்களை வெளியாருக்குச் சொல்வதில்லைஎதிர்பாராத ஆபத்து எதுவும் ஏற்பட்டால் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும்எப்படியும் ரகசியம் வெளிவரக்கூடாது என்றெல்லாம் இந்தச் சங்கத்தின் நிபந்தனைகள் ஆகும்.
வாஞ்சிநாதன் நீலகண்ட பிரம்மச்சாரியோடு நேர்ந்த ஏதோ மனவருத்தத்தால் அவரை ஒதுக்கிவிட்டு புதுச்சேரியிலிருந்த .வெ.சு.ஐயரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டார்செங்கோட்டையிலிருந்து புதுச்சேரி சென்று அங்கு ஐயரைச் சந்தித்தார்அப்போது ஐயர் சிலருக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை அளித்து வந்தார்அதில் வாஞ்சிநாதனும் சேர்ந்து கொண்டு துப்பாக்கிச் சுடும் பயிற்சியைப் பெற்றார்வாஞ்சிநாதன் ஆஷ் என்பானைக் கொல்ல ஏன் முடிவெடுத்தார்?
தூத்துக்குடியில் 1906இல் ..சிதம்பரம் பிள்ளை அவர்கள் தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனியை அழித்து ஒழிப்பதற்கு இடைவிடாமல் பாடுபட்டவன் அப்போது தூத்துக்குடியில் சப் கலெக்டராக இருந்த இந்த ஆஷ் என்பான்அங்கு இவன் இருந்த காலத்தில் இவன் செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லைநாடு போற்றும் சிதம்பரம் பிள்ளையை அவமதித்தான்அவர் மீது பொய் வழக்குகளைப் போட்டான்இவரை ஒழிப்பதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என்பது போல நடந்து கொண்டான்.
குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளைக்காரர்கள் குள்ளிப்பதற்காக அங்கு இந்தியர்கள் யாரும் நீராடக்கூடாது என்று உத்தரவு போட்டான் ஆஷ்..சிதம்பரம் பிள்ளை இரண்டு தீவாந்தர தண்டனை பெறக் காரணமாக இருந்தவனும்உத்தமத் தலைவராக இருந்த சுப்பிரமனிய சிவாவை அவரது தகுதியறியாமல் அவமானப் படுத்திய இந்த அன்னியனை இனியும் உலாவ விடக்கூடாது என்று முடிவெடுத்தார் வாஞ்சிரகசியக் கூட்டத்தில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பாரதமாதா சங்கத்தினர் வாஞ்சியின் பெயர் வரவே இந்தப் பணியை முடிக்க வாஞ்சியை ரத்தத்தால் வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தனர்வாஞ்சியும் திட்டமிட்டபடி ஆஷையும் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டார்.
வாஞ்சியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கிலக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன? "ஆங்கிலச் சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசத்தின் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தித் தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான்எங்கள் ராமன்சிவாஜிகிருஷ்ணன்குருவோவிந்தன்அர்ஜுனன் ஆகியோர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் எருது மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறதுஅவன் எங்கள் தேசத்தில் கால் வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம்அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று செய்கை செய்தேன்இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை."
இந்தக் கொலை நாடு முழுவதும் பரபரப்பை ஊட்டியதுஎங்கு பார்த்தாலும் போலீசின் அத்து மீறல்கெடுபிடிபுனலூரில் ஒரு வக்கீல் தான் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு நெருங்கியவர்கள் வீடுகள் போலீசாரால் சூறையாடப்பட்டனகைதுக்குத் தப்பி தலைமறைவானார் மாடசாமி என்பார்தர்மராஜ ஐயர் வீடு சூறையாடப்பட்டவுடன் சித்திரவதைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

23 
வயதே ஆன வாஞ்சிநாதனின் இளம் மனைவி பொன்னம்மாள்பருவமடைந்த நாள் முதலே விதவையானாள்தேசபக்தனை மணந்து கொண்டால் என்ன கிடைக்கும் என்பதை அவள் உலகுக்கு அறிவிப்பது போல எல்லாம் நடந்தனஇந்த வழக்கில் மாடசாமி தப்பிப் போய்விட்டாலும்அழகப்ப பிள்ளைதென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்சாவடி அருணாசலம் பிள்ளை எனும் மாணவர் கல்லூரி விடுதியிலேயே கைது செய்யப்பட்டார்இவர்கள் தவிர இந்த வழக்குக்காக தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளைவக்கீல் குமாஸ்தா சோமசுந்தரம் பிள்ளைசுந்தரபாண்டியபுரம் சோமசுந்தரம் ஐயர் ஆகியோரும் கைதானார்கள்இவர்களில் சிலர் அப்ரூவர்களாக ஆனார்கள்புதுச்சேரியில் இருந்த போது மாடசாமி மூலம் வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொல்லப் போகிறான் என்ற செய்தி கேட்டதும்இதுபோன்ற தனிப்பட்ட கொலைகளில் நம்பிக்கை இல்லாதஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு புரட்சி செய்ய ஒரு இயக்கத்தை நடத்தி வந்த நீலகண்ட பிரம்மச்சாரிபழி தன் மீது விழுந்துவிடும் என்பதால் தப்பிக் காசி நகருக்குச் சென்று விட்டார்ஆனால் விதி அவரை அங்கு சென்னை மாகாண ரகசியப் போலீசார் உருவில் துரத்திக் கொண்டு சென்றதுஅவர் அங்கிருந்து கல்கத்தா சென்று விட்டார்ஆனால் காசியில் இவருக்கு அடைக்கலம் கொடுத்த செட்டியாரை போலீஸ் துன்புறுத்தியது.
தன்னைக் கைது செய்ய போலீசார் அலைகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் நீலகண்ட பிரம்மச்சாரி கல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சரணடைந்தார்அங்கிருந்து அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார்இவரை நீதிபதியின் முன்பு கொண்டு வந்து நிறுத்தியபோது விலங்கிடப்பட்டுக் கொண்டு வரப்பட்டார்இவரது தேஜசைப் பார்த்த நீதிபதிஇவரது விலங்குகளை நீக்கச் சொல்லி உத்தரவிட்டார்பின்னாளில் ஓம்கார் சுவாமிகளாக நீலகண்ட பிரம்மச்சாரி கர்நாடக மாநிலம் நந்தி மலையடிவாரத்தில் வசித்த காலம் வரை அந்த நீதிபதி இவருடைய சீடனாக விளங்கி வந்தார்.
ஆஷ் கொலை வழக்கு நீண்ட நாட்கள் நடைபெற்றதுஇறுதியில் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும்கிருஷ்ணாபுரம் சங்கரகிருஷ்ணன் 4 ஆண்டுகள்ஆலப்புழை ஹரிஹர ஐயர் 3 ஆண்டுகள்தூத்துக்குடி முத்துக்குமாரசாமி பிள்ளைசுப்பையா பிள்ளைசெங்கோட்டை ஜெகநாத ஐயங்கார்புனலூர் பாபு பிள்ளைசெங்கோட்டை பிச்சுமணி ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததுமேலும் சிலர்சாவடி அருணாசலம் பிள்ளைகஸ்பா அழகப்ப பிள்ளைஎட்டயபுரம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் விடுதலையானார்கள். 
ஒருக்கால் வாஞ்சி உயிரை விடாமல் இருந்திருந்தால் அவருக்கு பிரிட்டிஷ் அரசு தூக்குத் தண்டனை விதித்திருக்கும்இவர்கள் கையால் மாண்டு போவதைவிட தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதையே அந்த மாவீரன் விரும்பி ஏற்றுக் கொண்டான்இத்தோடு இந்த வழக்கின் போக்கு நின்று போய்விடவில்லைஇந்த தண்டனையெல்லாம் கொடுத்து முடித்த பிறகும்வீர சாவர்க்கருக்கு இதில் பங்கு உண்டா என்று போலீசுக்கு மூக்கில் வியர்த்ததுஅவரையும் விசாரணை செய்தனர்இன்றும் கூட ஆஷ் கொலை எங்கு எவரால் திட்டமிடப்பட்டது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லைவாஞ்சி புதுச்சேரி சென்று .வெ.சு.ஐயரைச் சந்தித்தது அறிந்து போலீஸ் ஐயரை மாட்டிவைக்க தன்னால் ஆனமட்டும் முயன்று பார்த்ததுஅதற்குச் சாதகமாக எந்த சாட்சியும் கிடைக்கவில்லைஐயரின் மீது வழக்குப் போட முடியவில்லை.
தேசபக்த சிங்கங்கள் இதற்கு முன்பு பல தடவை முயன்றனர்சில வெற்றி பெற்றனசில தோல்வியில் முடிந்தனகுதிராம் போஸ் முயன்றதில் இரு பெண்கள்தான் மாண்டனர்மதன்லால் திங்க்ரா யாரைக் கொல்ல திட்டமிட்டாரோஅவர் தப்பிவிடமற்றொரு குற்றவாளியான கர்சானைத் தாக்கியதுஆனால் மணியாச்சியில் வாஞ்சிநாதன் வைத்த குறி தப்பவில்லைஇதனை வெறும் கொலையாகப் பார்ப்பதை விட ஒரு தேசபக்தன் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கொள்வதுதான் சரியாக இருக்கும்காரணம்அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியின் பானர்மன் எனும் ஆங்கில தளபதி வீரபாண்டிய கட்டபொம்மனைக் கயத்தாற்றில் தூக்கிலிட்டான்நூறு ஆண்டுகள் கழித்து அதே நெல்லை மண்ணில் வீரவாஞ்சி அதற்குப் பழிவாங்கிவிட்டான் என்றுதான் கொள்ள வேண்டும். 
வாஞ்சிநாதன் இந்தச் செயலைச் செய்த மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அவன் பெயரை வைக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்திலும்வெளியிலும் காங்கிரஸ் உறுப்பினர் குமரி அனந்தன் அவர்கள் பாடுபட்டுஇறுதியில் மணியாச்சி என்ற பெயரோடு வாஞ்சியின் பெயரையும் சேர்த்திடச் செய்தமைக்கு அவருக்கு தேசபக்தர்கள் நன்றிக்கடன் பட்டவர்களாகிறார்கள்வாழ்க வீர வாஞ்சியின் புகழ்!

இனி வரும் ஆண்டுகளிலாவது இந்த வீர இளைஞனின் நினைவு நாளில், நம் நாட்டு தேசிய சிந்தனையுள்ள தேசபக்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் கூடி இந்த நாட்டின் சுதந்திரத்துக்குத் தங்கள் இன்னுயிரைக் கொடுத்த வீரர்களை நினைவுகூர்வதோடு, இனி வரும் காலத்தில் தேசவிரோத, ஊழல் கூட்டத்தை அடியோடு ஒழிக்க சபதம் ஏற்போம். மகாகவியின் வார்த்தைப்படி இந்த சுதந்திரத்தை "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?" என்ற கேள்வி எழுப்பி, இந்த நாட்டைக் காக்க உறுதி ஏற்போம். வந்தேமாதரம்! ஜெய்ஹிந்த்!!