பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 24, 2011

தமிழுக்குக் கதி மகாகவி பாரதி.

தமிழுக்குக் கதி மகாகவி பாரதி.

தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் மேம்படுத்துவதற்காக அவ்வப்போது தோன்றி செயற்கரிய சாதனைகளைச் செய்து முடித்த சான்றோர்கள் பலரை நம் வரலாற்றில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட மேலோர்களின் நினைவு மக்கள் மனதிலிருந்து நீங்கா வகையில் பாடுபட்ட பலரில் இருபதாம் நூற்றாண்டில் நம் கண்முன்னால் வாழ்ந்து மறைந்தவர் மகாகவி பாரதி.

மிகப்பெரிய ஆங்கில சாம்ராஜ்யத்தை எதிர்த்து சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகள் பாடுபட்டு இந்திய சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த சுதந்திர தாகம் மிகப் பெரிய அளவில் தோன்றிய காலத்தில் அந்தச் சுதந்திரப் பயிரை கண்ணீரால் அல்ல, செந்நீரால் வளர்த்துக் காத்த பெருமை மகாகவிக்கு உண்டு. பாரதியே அடிக்கடிப் போற்றிப் பாடுகின்ற கம்பனை, வள்ளுவரை, இளங்கோவை அடியொற்றி இந்த மண் செய்த புண்ணியத்தால் இங்கு வந்து தோன்றியவன் பாரதி.

தமிழுக்குக் கதியெனத் திகழும் இந்த மூன்று கவிஞர்களைத் தவிர ஒளவையாரையும் தன் கட்டுரைகளில் மேன்மை படுத்தியிருக்கிறான் பாரதி. கவிநயத்துக்கு ஒரு கம்பன், வாழ்வியல் நீதிக்கு ஒரு திருவள்ளுவர், காப்பியச் சுவைக்கு ஒரு இளங்கோ என்றால், சின்னஞ்சிறு சிறார்களை நல்வழிப்படுத்தி இந்த நாட்டின் நல்ல மைந்தர்களாக ஆக்கும் பணியை ஒளவையார் போலச் செய்தவர் யாருமில்லை. அந்தப் பெண்பால் புலவர் பாடிய பல நல்வழிப் பாடல்களும், நீதிநெறிச் செய்யுள்களும் செய்த பணி தொடர பாரதியும் குழந்தைகளுக்கென்று பாடலை இயற்றியது போற்றத் தக்கது.

குழந்தைகளுக்கு அவன் முதன் முதலாகக் கூறிய அறிவுரை "அச்சம் தவிர்" என்பது. அதைத் தொடர்ந்து தனது புதிய ஆத்திசூடியில் அவன் கொடுத்திருக்கும் அறிவுரை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் ஏற்று நடைமுறைப் படுத்திக் கொள்ள வேண்டிய அருமையான வரிகள். தன் கட்டுரையொன்றில் பாரதி கூறுகின்றான், இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம், நீங்கள் உங்கள் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறீர்களா, அல்லது கவி ஷேக்ஸ்பியரை இழக்கிறீர்களா என்று கேட்டல், நாங்கள் எங்கள் நாட்டுச் செல்வங்கள் அனைத்தையும் இழப்பதாக இருந்தாலும், எங்கள் கவிஞர் ஷேக்ஸ்பியரை இழக்க மாட்டோம் என்று சொல்வார்களாம். அதுபோல என்னிடம் நீங்கள் தமிழ்நாட்டுச் செல்வங்களை இழக்கிறீர்களா அல்லது ஒளவையாரை இழக்கத் தயாரா என்றால், எதை இழந்தாலும் எங்கள் ஒளவையை இழக்க மாட்டோம் என்று எழுதுகிறார். நாமும் எதை இழந்தாலும் பாரதியையும் அவன் கவிதைகளையும் இழக்கத் தயாராக இல்லை.

எல்லோரும் மகாகவி பாரதியை ஒரு தேசியக் கவி என்கிறார்கள். அவன் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டுக் கிடந்த இந்த நாட்டில் சுதந்திரப் பயிர் துளிர்விட்டு எழத் தொடங்கிய காலம் அவன் வாழ்ந்த காலம். ஆகவே இயற்கைக் கவிஞனான பாரதிக்கு இந்திய சுதந்திரத்தின் பால் ஈடுபாடு ஏற்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் சுதந்திர தாகத்துக்கும் மேலாக அவன் உள்ளத்தை வாட்டி எடுத்த நிலைமை வேறொன்று உண்டு. அது இந்த நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைமை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அடிமை இந்தியாவில் வாழ்ந்த மக்கள் நிலைமை எப்படி இருந்தது. நாம் இப்போது கற்பனை செய்தோ அல்லது பாரதியின் கவிதைகள் மூலமாகவோதான் அறிந்து கொள்ள முடியும். அவ்வளவு பிற்போக்கான நிலைமை அப்போது. இந்த மக்களை வைத்துக் கொண்டு இந்த மண்ணின் சுதந்திரத்துக்கு எப்படிப் போராட முடியும். என்று இவர்கள் தலை நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள். என்று இவர்கள் தங்களையும் தங்கள் முன்னோர்களின் பெருமைகளையும் உணர்ந்து தலை நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள். அவன் நெஞ்சு பொறுக்கவில்லை.


சுற்றிலும் நிலவிய சூழ்நிலையால் அவன் பாதிக்கப்படவில்லை. வீறுகொண்டு எழுந்தான். இவர்களைத் தூக்கி நிறுத்தித் தங்கள் பழம் பெருமையை உணரச் செய்து மற்ற எவர்க்கும் நாங்கள் தாழ்ந்தவர் இல்லை என்ற உணர்வினை ஏற்படுத்த அயராது பாடுபட்டான். விளவு ஒன்றும் அவ்வளவு நம்பிக்கையைக் கொடுப்பதாக இல்லை, எனினும் அவன் தளர்ந்து போகவில்லை. மக்கள் நெஞ்சில் பதியும்படியான தனது கூர் அம்பு போன்ற சொற்களை வீசி அவர்களைத் தட்டி எழுப்பப் பார்த்தான். அவன் வாயால் அதனைக் கேட்போம். பாரத ஜனங்களின் தற்கால நிலை என்ற தலைப்பிட்டு அவன் பாடும் கவிதை இது.

"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்"

நம் மக்கள், நம் நாடு, நம் பாரம்பரியம், நம் பெருமை என்றெல்லாம் மார்தட்டிய பாரதிக்கு அப்படியென்ன குறை நேர்ந்தது. இந்த மக்கள் அப்படி என்னதான் செய்து விட்டார்கள். எப்படி நடந்து கொண்டார்கள்.

இவர்கள் அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே. எந்தப் புறம் திரும்பினாலும் பேய், பூதம் என்ற அச்சம். மந்திரம், மாந்திரீகம் என்கிற அச்சம். தெருவோடு போகும் ஒரு சிப்பாயைக் கண்டு அச்சம், ஊர்ச்சேவகன் வருவது கண்டு அச்சம், துப்பாக்கியோடு எவனாவது போனால் அவனைக் கண்டு அச்சம், ஆடம்பரமாக ஆடையணிந்து செல்பவனைக் கண்டு அச்சம், எப்போதும் எவரிடத்தும் கைகட்டி வாய்புதைத்து நிற்பார், பூனைகளைப் போல ஏங்கி நிற்கும் குணம். இப்படி மக்கள் அச்சமெனும் பேய்க்கு பயந்து கொண்டிருந்தால் எப்போது சுதந்திரம் எப்போது மக்களாட்சி என்ற நிலை அன்று இருந்ததை பாரதி சுட்டிக் காட்டுகிறார்.

இப்படிப்பட்ட மக்களைக் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே என்று சொல்லி, இவர்களிடம் பிரிவினைகள் கொஞ்சமோ அவை ஒரு கோடி என்றால் அது அதிகமோ? ஒருவன் அஞ்சு தலைப் பாம்பொன்று கண்டேன் என்பான் அதை மறுத்து மகன் இல்லையில்லை ஆறுதலை என்று சொல்லிவிட்டல் போதும் மனம் வெறுத்துச் சண்டையிட்டுப் பிரிந்து போவார்.

இப்படி மக்களைப் பற்றியே சிந்தித்து அவர்கள் முன்னேற்றத்துக்காக கவி வடித்த மாபெரும் கவி பாரதி. இவனைத் தேசிய கவி என்கின்றனர். 'தேசியம்' என்பது யார் ஒருவருக்கும் சொந்தமானது அல்ல. தேசியம் என்பது ஒரு தேசத்துக்குள் அடங்கிய அனைவரையும், அனைத்துக் கொள்கைகளையும் உள்ளடக்கியது. எனவேதான் நம்முள்ளே புதைந்து கிடக்கும் பெருமைகளைப் பாடிய அதே நேரத்தில் சிறுமைகளையும் சாடி அவற்றினை நீக்கிக் கொள்ள அறிவுறுத்துகிறான்.

பாரதியை ஒரு தனிமனிதனாகப் பார்க்ககூடாது. அவனை ஒரு பெரிய இயக்கமாகப் பார்க்க வேண்டும். வள்ளலார் வாக்குப்படி "வாழையடி வாழையென வந்தத் திருக்கூட்ட" மரபில் வந்த கவிஞரில் பாரதியும் ஒருவன். கண்ணன் கீதையில் கூறியபடி "தருமம் குன்றி அதர்மம் தலைதூக்கி நிற்கும் போதெல்லாம் நான் அவதரிப்பேன்" என்று கூறியபடி, இந்தியரின் வாழ்வு குன்றி தலைகுனிந்து நின்ற நிலையில் பாரதி என்கிற விடிவெள்ளி தோன்றினான்.

ஆங்கில ஏகாதிபத்திய ஆதிக்கச் சக்தியால் இங்கு மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமும், மனிதர் நோக மனிதர் பார்க்கும் கொடுமையும் தலை தூக்கி நின்ற காலத்தில் அதை அழித்து சத்தியத்தை நிலைநாட்டி "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் கொடுமை இனி உண்டோ?" என்று உலகத்துக்கு

எச்சரிக்கை விடுத்தவன் பாரதி. கீதையின் வாக்குப்படி அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்ட வந்த கவிஞன் பாரதி.

பாரத தேசத்தில் முதன் முதலாக தேசிய உணர்வு ஏற்பட்ட நேரத்தில் அதைக் கண்டு பரமானந்தம் கொண்டு பாரதி எழுதுகிறான்:-

"நாட்டில் ஓர் புதிய ஆதர்சம், கிளர்ச்சி, ஓர் தர்மம், ஓர் மார்க்கம் தோன்றுமானால், மேன்மக்களின் நெஞ்சனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர்போல் அவற்றை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்தில் பாரத நாட்டில் சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய "தேசபக்தி" என்ற நவீன மார்க்கம் தோன்றியது" என்று சுதந்திர எண்ணம் தோன்றியதைப் போற்றி எழுதுகிறான்.

தன் பிறவியின் நோக்கம் என்ன என்பதையும் ஒரு கவிதையில் அவர் சொல்கிறார். அவர் சொல்வது:-

"புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத்
தமிழ் மொழியைப் புகழிலேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும்
வசை என்னால் கழிந்த தன்றே!"

எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய மடலில் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் பாங்கு இது.

அது சரி, தமிழ் மொழிக்குப் புகழ் சேர்க்கப் பிறந்த கவி யென்றால் நீங்கள் புதுமையாக என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு அல்லவா? அதற்கும் அவன் விடை சொல்லுகின்றான்.

"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொல் புதிது, சோதி மிக்க
நவகவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை"

தன்னுடையது என்பது அவன் வாக்கு. பாரதிக்கு முன்பு தமிழிலே சுவை மிக்க கவிதைகள் இல்லையா, பொருட் செறிந்த கவிதைகள் இல்லையா என்ற கேள்விக்கு "இருந்தன" என்பதுதான் விடை. நம் இலக்கியங்களில் உள்ள பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்கணக்கு எனும் தொகை நூல்களோடு, ஐம்பெரும் காப்பியங்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் இவை தவிர பரணி, உலா, பிள்ளைத் தமிழ் இவைகளும் ஏராளமாக இருந்தன. ஆனால் இவற்றிலெல்லாம் சுவை பழையது, சொல் பழையது, பொருள் பழையது, வளமும் பழையது. புதிய சொற்கள், புதிய எழுச்சி, தூண்டுதல், தன்னைத்தானே உணரச் செய்யும் ஆற்றல் மிக்க புதுயுக எழுச்சிக் கவிதைகள் பாரதியினுடையது.

பாரதியாருக்கு முன்னோடியாக தாயுமானவரையும், வள்லலார் இராமலிங்க அடிகளாரையும் சொல்லலாம். எளிய கவிதைகள், எளிய நடை, புதிய சந்தம் இப்படி பாரதிக்கு இவர்கள் வழிகாட்டியாக இருந்தனர். நம்மிடையே மதங்கள் பல. ஆயினும் எல்லா மதங்களும் போதிப்பது சன்மார்க்கம் மட்டுமே. பேதங்களை மனிதன் தானே உண்டாக்கிக் கொண்டான். பிறவியில் பேதங்கள் ஏது?

"பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே"


என்கிற புதிய மதத்தைத் தோற்றுவித்தான். ஷண்மத ஸ்தாபனம் நடந்த இந்த நாட்டில் எந்தவொரு கடவுளரையும் குறிப்பிடாமல் இந்த நாட்டைப் பிறந்த பொன்னாட்டை இறைவனாக மதிக்கக் கற்றுக் கொடுத்தவன் பாரதி. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் பண்டைய தமிழினத்தின் மனிதாபிமானக் கொள்கையின் தொடர்ச்சி இது. மனிதாபிமானத்தின் தொடர்ச்சியே "தேசாபிமானம்" என்கிற தேசபக்தி.

என் நாடு, என் மக்கள், எங்கள் வளம் இவற்றைப் பற்றிய பெருமிதம் எல்லோருக்கும் வேண்டும். அதனைத்தான்

"பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு"

என்று பாரதியை மார்தட்ட வைத்தது. அப்படி தேசபக்தி இல்லாமல் தாயகத்தின் பெருமைகளை அன்னியரின் காலடியில் போட்டுவிட்டு பரதேசிகளின் முன்பு சுதேசி உணர்வின்றி கிடக்கும், வெள்ளைக்காரர்களிடம் அடிமைத் தொழில் புரிந்து, அவனிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலை பற்றி "மறவன் பாட்டு" எனும் பாடலில் "மண் வெட்டிக் கூலி தின்னலாச்சே, எங்கள் வாள் வலியும் தோள் வலியும் போச்சே" என்று சொல்லிவிட்டு அன்னியருக்குச் சேவகம் செய்து வயிறு வளர்க்கும் அடிமைகளைப் பார்த்துச் சொல்லுகின்றான் "சீ! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு" என்று.

இந்த நிலைமை மாறாதா? விடிவெள்ளி தோன்றாதா? என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஒரு புதிய கோணங்கியின் குரல் கேட்கிறது. அவன் என்ன சொல்லுக்கிறான். நள்ளிரவு முடிந்து பகல் தோன்றும் அறிகுறிகள் தெரியும் வேளையில் அவன் குரல் கூறும் சொற்கள் மனதுக்கு ஆறுதல் தருகிறது. இதோ அவன் சொல்லுகிறான்:-

"நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது
தரித்திரம் போகுது; செல்வம் பெருகுது
படிப்பு வளருது; பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான், ஐயோவென்று போவான்."

இப்படி நல்ல குறி சொல்லிக் கொண்டு வந்த அந்த கோணங்கி நமக்கு உற்சாகம் பெருகும்படியான சொற்களைத் தொடர்ந்து சொல்லுகிறான்.

" ................................ வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது
எந்திரம் பெருகுது; தந்திரம் வளருது"

இந்தப் பெருமையெல்லாம் நமக்குக் கிட்ட வெண்டுமென்றால் சும்மா இருந்தால் கிடைத்து விடுமா? சோம்பித் திரிந்தால் வந்து விடுமா? நிச்சயம் கிடைக்காது. அந்த நிலையை நாம் அடைந்திட உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும். அப்படிப் பாடுபட்டால்

"சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது
எட்டு லட்சுமியும் ஏறி வளருது
பயம் தொலையுது, பாவம் தொலையுது
சாத்திரம் வளருது; சாதி குறையுது

நேத்திரம் திறக்குது; நியாயம் தெரியுது"

அப்படியானால் பழைய பழக்க வழக்கங்கள் தொலைந்து போகும். புதிய வாழ்க்கை கிடைத்திடப் போகுது. அந்த மாற்றம் ஏற்பட எத்தனை நாட்கள், எத்தனை காலம் ஆகும்? இந்த கவலை நியாயம்தானே?

மாற்றங்கள் சிறுகச் சிறுகக் கிடைத்தால் வெகு காலம் ஆகுமே. நாம் நம்மை உணர்ந்து கொண்டோம். பழமை எனும் இருட்டறையிலிருந்து புதிய வெளிச்சத்துக்கு வரும்போது இருள் பிரிந்து வெளிச்சம் வருவது போல மெல்ல மெல்ல வரக்கூடாது. பின் எப்படி வர வேண்டும். இருள் நிறைந்த அறையின் மின்சார விளக்கின் சுவிட்சைப் போட்டவுடன் பளிச்சென்று வரும் வெளிச்சத்தைப் போல வரவேண்டும். அதன் பெயர்தான் புரட்சி.

ரஷ்யாவில் ட்சார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து லெனின் செய்த புரட்சி பாரதிக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். அந்தப் புரட்சியை பாரதி வானளாவப் புகழ்ந்தான். "ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்றான். அப்படி ஆகாவென்று நம் வாழ்க்கையில் ஓர் புரட்சி ஏற்படுமா? ஆம், ஏற்படப் போகிறது என்கிறான். எப்படி?

"பழைய பைத்தியம் படீலென்று தெளியுது
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது
சொல்லடீ சக்தி, மலையாள பகவதி
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது"

என்று நமது பழமை படீலென்று வெடித்துச் சிதறி புதிய மாற்றங்கள் உடனடியாக ஏற்படப் போகின்றன என்று நமக்கு நம்பிக்கை ஊட்டியவன் பாரதி. இந்தக் கவிதைகளெல்லாம் நம் வாழ்க்கையோடு ஒட்டியிருப்பதால் இதை கவிநயத்துக்காக அல்ல, வாழ்க்கையின் வழிகாட்டும் நம்பிக்கை ஒளியாகப் பார்க்க வேண்டும்.

அடிமைத் தளையிலிருந்து விடுபட்ட மக்கள் சும்மா இருந்தால் சுகம் கிட்டுமா? கிட்டாது. பின் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அவனே பதிலையும் சொல்கிறான். நாட்டின் தொழில் வளத்தைப் பெருக்குங்கள். எதற்கும் அயல்நாட்டை எதிர்பார்க்கும் நிலைமையை மாற்றுங்கள்.

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
எந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூகி நன் முத்தெடுப்பீரே
அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே
பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்
பிரம தேவன் கலை இங்கு நீரே!"

என்று நம்மை ஊக்குவிக்கிறான். புதிய பாரதம் படைக்கப் புரப்படுங்கள் என்று நம்மை அவசரப்படுத்துகிறான்.

எதற்கும் அயலாரை அண்டி நின்ற நமது நிலைமை மாறி தன்னிறைவு அடைந்த பின் நம்மைப் போல பிந்தங்கியவர்களுக்கு நாம் உதவ வேண்டும். பிறருக்கு வழிகாட்ட வேண்டும்.

இதைச் சும்மா வார்த்தைக்காகச் சொல்லவில்லை அவன் திரும்பத் திரும்ப பலமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறான். எப்படி?

"எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம், ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்"

அவ்வளவு நம்பிக்கை, இந்த மண் மீது, இந்த மண்ணின் மைந்தர்கள் மீது.

வெற்றி பெற்றால் துள்ளிக் குதிப்பதும், வீழ்ந்து விட்டால் துவண்டு போவதும் மனித இயல்பு. ஆனால் இந்த இயல்பு மானுடரின் வாழ்வு உயரப் பயன்படுமா என்றால் பயன்படாது. வெற்றியும் தோல்வியும் வீரருக்கழகு. வெற்றியினால் உன்மத்தனாகாமல், தோல்வியினால் துவண்டு போகாமல் வாழும் நிலையை அமர நிலை என்கிறான். முதல் உலக யுத்தம் வந்தது. ஜெர்மனி சின்னஞ்சிறு நாடான பெல்ஜியத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் அபகரித்துக் கொள்கிறது. இங்கு பெல்ஜியம் வெகு சுலபத்தில் வீழ்ந்து விடவில்லை. தங்கள் நாட்டுக்காக அந்த மக்கள் தங்கள் இன்னுயிர் ஈந்து மண்ணோடு மண்ணாக மடிய நேரிடினும் மானத்தைக் காப்போம் என்று போராடி உயிர் நீத்தனர். இந்த நிகழ்ச்சி பாரதியின் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தியது.

வீரம் செறிந்த அந்த பெல்ஜிய மக்களைப் பாராட்டுகிறான்.

"அறத்தினால் வீழ்ந்து விட்டாய்
அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த
வன்மையைப் பொறுத்தல் செய்யாய்
முறத்தினால் புலியைத் தாக்கி
மொய்வரைக் குறப்பெண் போல
திறத்டினால் எளியயாகிச்
செய்கையால் உயர்ந்து நின்றாய்"

இந்தச் செய்தியைச் சொல்லும் போது பெல்ஜியம் அடைந்த வீழ்ச்சியை "அறத்தினால் வீழ்ந்தாய்" என்கிறார். "திறத்தினால் எளியையாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்" எனும்போது உன் வீழ்ச்சி, உன் தோல்வி, வீழ்ச்சியுமல்ல, தோல்வியுமல்ல ஏனென்றால் போர்க்களத்தில் நீ "உருளுக தலைகள், ஓங்குக மானம் என்று எதிர்த்து நின்றாய்" என்கிறார். தோல்வியடைந்தது பெரிதல்ல. எதிரி வலிமையானவன் என்றாலும் அவனை எதிர்த்து நின்று நான் அழிந்தாலும், மானம் நிலைத்து நிற்கும் என்று போரிட்டாயே அதற்காகத் தலை வணங்குகிறேன் என்கிறார்.
இது பெல்ஜியத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் பாரதி வழங்கும் பாராட்டுரை அதுவேயாகும்.

தமிழர்கள் உலக நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறி விட்டனர். அப்படி அவர்கள் குடியேறிய இடங்களிலெல்லாம் அவர்கள் பாலையும் தேனையும் பருகிடவில்லை. கருடுமுரடான வாழ்க்கை; அடிமைச் சங்கிலியால் பிணிக்கப்பட்ட வாழ்க்கை. நித்திய கண்டமாக இருந்த அவர்கள் வாழ்வைக் கண்டு பாரதி கண்கலங்கினார். கடல் கடந்து வாழும் தமிழ்ப் பெண்களின் துயரம் அவரை மீளாத் துயரில் ஆழ்த்தியது.



"பிஜித் தீவில் தமிழ்ப் பெண்கள் படும் தொல்லைகள்" குறித்த அவரது பாடலைப் படித்துக் கண்ணீர் சிந்தாதார் யார் இருக்க முடியும்? பாரதியாரோடு வ.வெ.சு.ஐயர், மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது பாரதி சொன்னார்: "நம் தமிழ்நாட்டுப் பெண்கள் பிஜித் தீவில் படும் கஷ்டங்களைப் பற்றி யாரோ ஒருவர் பேசிய ஆங்கிலப் பேச்சை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அதனைக் கவிதையாகத் தந்திருக்கிறேன்" என்றார். பாட்டுக்கு என்ன பெயர் வைத்தீர்கள் என்றார் வ.வெ.சு.ஐயர். பிஜித் தீவில் உள்ள ஏராளமான கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யத்தான் இந்தியர்கள் அங்கே சென்றார்கள். ஆகையால் அந்தப் பாடலுக்குக் "கரும்புத் தோட்டம்" என்று பெயர் வைத்தேன் என்றார் பாரதி.

எங்கே அந்தப் பாடலைப் பாடுங்கள் என்றனர் ஐயர். பாரதியார் பாடினார், கேட்டவர்கள் கண்கள் கண்ணீர் சிந்தின. அது என்ன விவரம் என்று பாரதியாரிடம் கேட்டபோது சொன்னார். சென்னையில் தொழிலாளர் வசிக்கும் பகுதியொன்றில் கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு மனைவி தன் குழந்தையுடன் வீட்டுக் கதவைத் தாளிட்டுவிட்டு உள்ளே வந்தாள். அப்போது ஒரு ஆள் அவசரமாக ஓடிவந்து அவளது கணவன் விபத்தில் அடிபட்டுவிட்டான் சீக்கிரம் வா என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்

அப்படிச் சென்றவன் நேராகத் துறைமுகத்துக்குச் சென்று அங்கு நின்று கொண்டிருந்த கப்பலில் அவளை ஏறச் சொன்னான். என்னை ஏன் இங்கு அழைத்து வந்தாய். என் கணவர் எங்கே என்றாள் அவள். இங்கு ஒரு வேலையாக வந்தபோதுதான் விபத்து என்று சொல்லி அவளை அங்கு அழைத்துச் சென்றான். அவள் கப்பலுக்குள் ஏறியதும் கப்பல் நகரத் தொடங்கியது. அவள் அலறி அழத் தொடங்கினாள். சுற்றிலும் அவளைப் போல் அபலைப் பெண்கள் பலர் இருந்தார்கள். அவர்களும் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களை நீங்களெல்லாம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்கள், 'பெண்ணே, நாமெல்லாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். நம்மையெல்லாம் அடிமைகளாக்கி விட்டார்கள். பிஜித்தீவில் இருக்கும் ஆண்களுடைய சுகத்திற்காக நாம் நாசம் செய்யப்பட்டு விட்டோம் என்றார்கள். இப்படி பாரதி சொல்லிக் கொண்டிருக்கையில் வ.வெ.சு.ஐயர் கேட்டார், அந்த கணவன் விஷயம் என்ன ஆயிற்று என்று.

பாரதி சொன்னார், அந்தக் கணவன் வீடு திரும்பிய போது அங்கு ஒரு துண்டுச் சீட்டில் அவன் மனைவி எழுதியதைப் போல 'உன் ஏழ்மைத் தனத்தில் என்னால் இருக்க முடியவில்லை. நான் பெரிய பதவியை அடையப் போகிறேன், என்னை மறந்து விடு' என்றிருந்ததாம். அதையும் இந்தக் கொடுமையைச் செய்த பாவிகள் செய்திருந்தார்கள். இந்த செய்தியைக் கேட்ட மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரி அழத் தொடங்கினாள். வ.வெ.சு.ஐயர் சொன்னார், பெரியவர்களாகிய நம்மாலேயே இந்தத் துயரச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையே, இவள் என்ன செய்வாள் பாவம் சின்னப் பெண் என்றார்.

யதுகிரியைத் தேற்றும் பொருட்டு பாரதி சொன்னார், 'அம்மா யதுகிரி நீ பயப்படாதே. நான் பாடியிருக்கிற இந்தப் பாட்டால், காளி அந்தப் பெண்களின் அடிமைத்தனம் விலகிப் போகும்படி செய்வாள், நான் அவளிடம் முறையிட்டிருக்கிறேன்' என்றார்.

அந்தப் பாடலில் வரும் வரிகளைப் பாருங்கள்:-

"கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

கரும்புத் தோட்டத்தில் அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி

வருந்து கின்றனரே - ஹிந்து மாதர் தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய்
சுருங்கு கின்றனரே - அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்திதற் கில்லையோ - செக்கு மாடுகள் போலுழைத் தேங்குகின்றனரே

பெண்னென்று சொல்லிடிலோ - ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே
எண்ண மிரங்காதோ - அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ - தெற்கு மாகடலுக்கு நடுவினிலே அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் அந்த

நாட்டை நினைப்பாரோ - எந்த நாள் இனிப்போய் அதைப் பார்ப்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டும் உரையாயோ - அவர் விம்மி அழவும் திறங்கெட்டு போயினரே

நெஞ்சம் குமுறுகின்றார் - கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமும் இல்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினிலே
மிஞ்ச விடலாமோ? ஹே! வீர கராளி! சாமுண்டி காளி!!

பாடலை முடிக்கும் போது அந்த வீரமாகாளியிடம் முறையிட்டு முடித்து விடுகிறார். நம்மால் இனி ஆவது ஒன்றுமில்லை. எந்த ஆதரவும் இல்லாமல் அந்த பேதைப் பெண்கள் கண்ணற்ற அந்தத் தீவினில் படும் கொடுமையை எண்ணி எண்ணி அவர் மனம் அரற்றியிருக்கிறார். அந்தப் பெண்கள் விம்மி அழும் விதத்தை அவர் எத்தனை 'விம்மி விம்மி' என்று குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

தூங்கிக் கிடந்த சமுதாயத்தை தட்டி எழுப்ப நினைத்தவன் பாரதி. எனவேதான் அவன் தாலாட்டு என்று எதையும் பாடி வைக்கவில்லை. தமிழ்நாட்டில் மற்ற கவிஞர்களெல்லாம் தாலாட்டுப் பாடி குழந்தைகளைத் தூங்க வைத்தனர். ஆனால் இங்கு குழந்தைகள் கூட தூங்கக்கூடாது, விழித்தெழ வேண்டும் என நினைத்தவன் பாரதி. பாரதி காலத்துப் புலவர்கள் பலரும் தாலாட்டுப் பாடினர்.

கவிமணி பாடுகிறார்: "கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு, ஆராரோ ஆராரோ, ஆரிவரோ, ஆராரோ" என்றும்
பாவேந்தர் பாடுகிறார்: "சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு, நாணி உறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு" என்றும்
பாவேந்தரின் மற்றொரு தாலாட்டு: "மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே, என் செந்தமிழே கண்ணுறங்கு"
நாமக்கல்லார் பாடியது: "சீராரும் காவேரி தேவி திருவருளால் வாராமல் வந்துத்த மாமணியே கண்ணுறங்கு" என்று இப்படி பலரும் பாடியிருக்கையில் பாரதி மட்டும் "பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி" என்று பாரத அன்னையைத் துயில் எழுப்பிப் பாடுவதை மட்டும்தான் நாம் காண முடிகிறது. ஆக, தமிழரை விழித்திருக்கச் சொன்னான் பாரதி.

மொழிப்பற்று:

சமூகத்தின் பால் அவனுக்கிருந்த அக்கறையைப் போலவே மொழியின் பாலும் அவன் அதிக அக்கறை காட்டினான். தமிழ்மொழி உலக மொழி என்பது பாரதியின் கருத்து. தமிழ் மொழி "உயர் ஆரியத்திற்கு நிகர்" என்றும் "தமிழ்ச்சாதி ஆரியக் குடும்பத்திலே தலைக்


குழந்தை" என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதிலிருந்து, இந்திய மொழிகளில் தமிழ் மொழிதான் தலைமொழி என்பது பாரதியின் உறுதியான முடிவு.

அதோடு மட்டுமல்ல, ஒருநாள் தமிழ் மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தலைமை ஏற்கும் என்பது அவன் துணிபு. அவன் கட்டுரையில் காணப்படும் சில வரிகள் இதோ:

"எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. அது பற்றியே தமிழைப் போல வலிமையும், திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமே இல்லை என்கிறேன். இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளி உலகத்திலே பரவாமலிருப்பதை நான் அறிவேன். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலகம் முழுவதும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள்" எவ்வளவு தீர்க்கமான, உறுதியான பிரகடனம் இது.

தமிழ் மொழி வாழ்த்து என்ற பாடலில் அவன் சொல்லும் கருத்து வியப்பைத் தருகிறது. தமிழ் மொழி வானம் எவைகளையெல்லாம் பார்க்க, அறிந்து கொள்ள முடியுமோ அவ்வளவையும் அறிந்த மொழியாம்.

"வானம் அளந்த தனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே!"

இங்கு வானம் என்ற சொல் உலகைக் குறிக்கும் சொல் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தனது பாரதி நினைவுச் சொற்பொழிவுகளில் கூறியிருக்கிறார். பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாத மாற்றங்கள். பழைய பாரதத்தைப் பார்த்துப் போ போ என்று சொன்ன பாரதி புதிய பாரதத்தை வா வா என்று வரவேற்பதைக் காண்கிறோம். பழைய தீமைகள் அடியோடு பொசுங்கிப் போக, புதிய பாரதம் இளைய பாரதத்தவரால் உருவாகும் என்பது அவரது கணிப்பு.

தமிழ் மொழியின் பாரம்பரியப் பெருமையும், இலக்கியத் திறனும் ஆதிக்கச் சக்திகளால் ஒளியிழந்து கிடந்த நிலையில் தமிழின் பெருமையைத் தூசி தட்டி வெளி உலகு கண்டு வியக்கும் வண்ணம் ஒளிரச் செய்கிறார் பாரதி. அவரது இந்தச் செயலுக்கு கம்பனின் காப்பியத்தில் ஒரு ஒப்புமையைக் காட்டலாம். இரண்ய வதைப் படலத்தில் இரண்யனை வதைக்க நரசிங்கம் அவதாரம் செய்து சீற்றங்கொண்டு சிரிக்கிறதாம். அதை கம்பன் வாக்கால் சொல்லுவதானால்

"திசை திறந்தது, அண்டம் கீறச் சிரித்தது அச்செங்கண் சீயம்" திசைகள் பிளந்து கொண்டனவாம். அண்டம் அதிர அதிலிருந்து கண்கள் சிவக்கப் புறப்பட்டது சீற்றம் கொண்ட அந்தச் சிங்கம்" என்கிறது கம்பனின் காவியம்.

அதனைப் போல தமிழ் மொழிக்கு ஓர் தாழ்வு ஏற்படுமானால் அதனை முறியடித்து தமிழின் பெருமையை நிலைநாட்ட பாரதி எனும் சிங்கம் சீயமென உருவெடுத்தது எனலாம்.

பாரதியாரின் "ஸ்வதேச கீதங்கள்" எனும் தலைப்பில் வெளியான பாடல்களில் முதல் பாடல் "வந்தே மாதரம் என்போம்" என்பது. இந்தப் பாடலில் வரும் வரிகளில்

"ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத்தேசத்திலே எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே."

என்று பிரகடனப் படுத்தியதோடு "இங்கு எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்று தனது பிரகடனத்தை நிறைவு செய்கிறார்.

பாரதி தன்னைப் பிறரிடமிருந்து பிரித்துத் தான் இயற்றும் கவிதைகள் புதியவை என்று கூறப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று அவர் தமிழில் பல புதிய சொற்களை உருவாக்கி எழுதிக் காட்டியிருக்கிறார். தமிழின் வளர்ச்சி இதுபோன்ற செயல்களில்தான் இருக்கிறது. ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்குப் புதிய சொற்களை படைத்துக் காட்டினார். சான்றாக 'விடுதலை' என்ற சொல் ஆன்மீகத்தில் 'முக்தி' அல்லது 'வீடுபேறு' எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பாரதியும் ஒரு கட்டுரையில் 'வீடு' எனும் சொல்லுக்கு 'விடுதலை' என்பது பொருள் என்று எழுதுகிறார். அவரே இந்திய சுதந்திரத்தைச் சுட்டும் சொல்லாக விடுதலையைப் பயன்படுத்தினார். சமுதாயத்தில் அழுத்தப் பட்டோரின் உயர்வினையும் 'விடுதலை' எனும் பொருளில் 'பெண் விடுதலை' என்றெல்லாம் எழுதுகிறார். அப்போது ரஷ்யாவில் உதயமான கம்யூனிச, சோஷலிச இயக்கத்தை சமதர்மம், சமத்துவம், பொதுவுடமை எனும் சொற்களால் குறிப்பிட்டு எழுதுகிறார். குயில் பாட்டில் குயிலின் இசையைக் கேட்கும் கவிஞர் அதன் சுவை பற்றி எழுதும் போது 'தீயின் சுவை' என்கிறார்.

'மெம்பர்' எனும் சொல்லுக்கு என்ன தமிழ்ச்சொல் என பாரதிக்கு ஓர் ஐயப்பாடு. அப்போது அதற்கெல்லாம் தமிழ்ச்சொல்லை யாரும் பயன்படுத்தவில்லை ஆகையால் அதற்கு நேரான தமிழ்ச்சொல் கண்டுபிடிக்க முயல்கிறார். அவரே கூறுவது இது:-

"'மெம்பர்' என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 'அவயவி' என்பது சரியான வார்த்தை இல்லை. 'அங்கத்தான்' கட்டி வராது. 'சபிகள்' சரியான பதந்தான் ஆனால் பொது ஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டு பிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். "உறுப்பாளி" ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக 'மெம்பர்' என்றே எழுதிவிட்டேன். இன்னும் ஆர, அமர, யோசித்துச் சரியான பதங்கள் கண்டு பிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்."

பாரதி தமிழின் உயர்வுக்காகச் சில கனவுகள் கண்டான். அவற்றை ஓரளவு வரிசைப்படுத்தியிருக்கிறேன். அந்த கனவுகள் கைப்படுமா? மக்கள்தான் சொல்ல வேண்டும்.

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்"

"பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்."

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"
"எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந்திட செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!"

"நோவு வேண்டேன்; நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன், உன் துணை வேண்டினேன்
வேண்டாதது அனைத்தும் நீக்கி
வேண்டியது அனைத்தும் அருள்வது உன் கடனே!"

"எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அம்மா"

"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்"

"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

தெய்வம் துணை செய்ய வேண்டும்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்

பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்"

பாரதி கண்ட கனவுகள் மெய்ப்படுமா என்பது மக்கள் எங்ஙனம் அவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

நிறைவாக பாரதியின் "எங்கள் மதம்" எனும் தலைப்பில் 'உயிர் பெற்ற தமிழர் பாட்டு" எனும் பாட்டிலிருந்து சில வரிகளைத் தருகிறேன்.

"மனிதரில் ஆயிரம் சாதி - என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை" என்று சொல்லிவிட்டு

"ஒன்றுண்டு மானிடச் சாதி - பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்
இன்று படுத்தது நாளை - உயர்ந்து
ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும்".

"நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை, குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தின ரேனும் - உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்."

இப்படிச் சொல்லிவிட்டு யார் மேற் குலத்தார் எனும் வினாவுக்கு விடைதரும் பாங்கில் அவன் சொல்லும் செய்தி என்ன தெரியுமா?

"வையகம் காப்பவரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய் அகலத் தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்" என்கிறான்.

எது யோகம்? "ஊருக்குழைத்திடல் யோகம். நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம், போருக்கு நின்றிடும் போதும், உளம் பொங்கல் இல்லாத அமைதிதான் மெய்ஞானம்". பகவத் கீதை சொல்லும் கருத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டான் பாரதி.

தான் மற்றவர்களைப் போல சாதாரண மனிதன் இல்லை. பசி வந்தால் வயிற்றுக்கு இட்டு, பிணி வந்தால் நொந்து போய் படுக்கையில் படுத்து, காலன் வந்து அழைக்கையில் இறந்து போகும் சாதாரண மனிதனா நான்? இல்லை இல்லை. பின்பு நான் யார் தெரியுமா?" கேட்கிறான் பாரதி. அதற்கான பதிலை அவன் வாக்கால் கேட்போம்.

"தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"



இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு பின் என்னதான் செய்வாய்? சொல்லுகிறான்.

"நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்
அதற்கடுத்து ராமானுஜனும் போனான்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்
பார் மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்!"

இது எப்படி சாத்தியமாகும்? நீ மட்டும் சாகாமல் இருப்பது எப்படி?

"கேளீர்!
நாணத்தை கவலையினைச் சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்
மிச்சத்தைப் பின் சொல்வேன்; சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை"

என்று நமக்கெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்.

பாரதியின் பல்வேறு பரிணாமங்களையும் முழுமையாக நாம் கண்டு கொள்ளாவிட்டாலும் அவனை ஆங்காங்கே தொட்டுச் சென்றிருக்கிறோம். இந்த சமூகத்தின் மீதும், மொழியின் மீதும், தேசத்தின் மீதும் அவன் கொண்டிருந்த காதலை ஓரளவுக்குப் பார்த்தோம். பாரதியை இனியும் தொடர்ந்து தேடுவோம். வாழ்க பாரதி புகழ்.




















No comments: