பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 20, 2011

அருணாசல கவிராயர்


அருணாசல கவிராயர் (1711 - 1779)

அருணாசல கவிராயர் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள தில்லையாடி எனும் கிராமத்தில் வாழ்ந்த நல்லதம்பிப் பிள்ளை வள்ளியம்மாள் தம்பதியரின் நான்காவது மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் சமண மதத்தவராயினும் பின்னர் சைவத்துக்கு மாறியவர், அப்பர் சுவாமிகளைப் போல. குழந்தை அருணாசலத்துக்கு ஐந்தாவது வயதில் அட்சராப்பியாசம் செய்து வைத்து கல்வி பயல அனுப்பப்பட்டார். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் அருணாசலம் தனது ஐந்தாவது வயதில், ஐந்தாவது மாதத்தில் ஐந்தாம் தேதியில் கல்வியைத் தொடங்கினார். பாரம்பரிய முறையில் கற்பிக்கப்பட்ட கல்வி அவருடைய பன்னிரெண்டாம் வயது வரை தொடர்ந்தது. காரணம் அப்போது அவருடைய தந்தையார் காலமாகிவிட்டார்.

தந்தையின் மறைவையொட்டி கல்வி நின்று போனது அருணாசலருக்கு மட்டுமல்ல, மகாகவி பாரதி உள்ளிட்ட பலருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் பழைய பாடலொன்று சொல்லும்: "தந்தையோடு கல்வி போம், தாயோடு அறுசுவை உண்டி போம்" என்று. இவர் அருகிலிருந்த தருமபுர ஆதீனத்துக்குச் சென்று தனது நின்று போன கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அவர் தமிழ் கிரந்தங்களும், ஆகம சாஸ்திரமும் படித்து வந்ததோடு சம்ஸ்கிருத மொழியையும் கற்றார்.

கல்வி கேள்விகளில் நல்ல தேர்ச்சி பெற்று சிறப்பாக விளங்கிய இவருக்கு பதினெட்டு வயதானபோது, சிலர் இவரை மடத்துக்குத் தலைவராகக்கூட வாய்ப்பிருக்கிறதாகச் சொல்லி வைத்தார்கள். ஆனால் அருணாசலரோ துறவு வாழ்க்கை வாழ்ந்து மடத்துக்கு அதிபராக ஆவதினும் தான் ஒரு கிரஹஸ்தானகவே விரும்பினார். அவர் படித்த திருவள்ளுவரின் திருக்குறளும், கம்பராமாயணமும் அப்படியிருப்பதைத்தான் அவருக்குப் போதித்ததாகக் கருதினார். பதிமூன்று வயது வரை தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் பழுதற கற்றுக் கொண்டார். திருமணம் செய்து கொண்ட அருணாசலருக்கு ஒரு நகைக்கடை (காசுக்கடை) வைத்து வியாபாரம் செய்யப் பணித்தனர். அவர் கடையில் வியாபார நிமித்தம் செலவிடும் நேரம் போக அதிக நேரம் கிடைத்தமையால் இவர் அங்கு இருந்து கொண்டே நாலாயிர திவ்ய பிரபந்தம், திருமுறைகள், வேத ஆகம சாஸ்திரங்கள் போன்ற சமயம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் படித்து வரலானார்.

அவர் படித்த இலக்கியங்களிலும், திருக்குறள் போன்ற அற நூல்களிலும் காணப்படும் வாழ்க்கை நெறிமுறைகளையும் பண்புகளையும் கம்பனுடைய காவியத்தில் இராமபிரானிடம் இருப்பதை கண்டுகொண்டார். இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த நிகழ்ச்சி, இவர் புதுச்சேரிக்கு தன்னுடைய நகைக்கடைக்காக தங்கம் வாங்க வந்தபோது சந்தித்த இருபெரும் இசை மேதைகளின் மூலம் அமைந்தது. அந்த இருவரின் பெயர்கள் ஒருவர் வெங்கட்டராம ஐயர் மற்றவர் கோதண்டராம ஐயர். இவர்கள் இருவரும் சீர்காழியை அடுத்த சட்டனாதபுரத்தைச் சேர்ந்தவர்கள்.

ஊரிலிருந்து கிளம்பி புதுச்சேரி செல்லும் வழியில் சீர்காழியில் இவர் தருமபுர மடத்துக் கிளையில் தங்க நேர்ந்தது. அந்த சீர்காழி மடத்தில் தலைவராக இருந்தவர் முன்பு அருணாசலருடன் படித்த சிதம்பரம் பிள்ளை என்பவர். அவர் "கட்டளை மாலை" என்ற பாமாலையை இயற்றியிருந்தார். அவருக்குத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழி குறித்த ஒரு பாடலை இயற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கு இருந்த வேலை பளுவின் காரணமாக அது முடியாமலிருந்தது. பாட்டில் தொடக்க அடி மட்டும்தான் எழுதியிருந்தார், மேற்கொண்டு எழுத நேரமில்லை. அந்த நேரம் பார்த்து அருணாசலர் அங்கு வந்தபடியால், அவரிடம் இந்த சீர்காழி பாமாலையைப் பூர்த்தி செய்து தர வேண்டினார். அருணாசலரும் அதற்கு ஒப்புக்கொண்டு புதுச்சேரி வந்து சேர்ந்தவுடன் ஒரே இரவில் அந்த பாமாலையை எழுதி பூர்த்தி செய்து ஒரு தூதுவர் மூலம் சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளைக்கு ஒரே ஆச்சரியம். படித்துப் பார்த்துவிட்டு இத்தனை சிறப்பாக எழுதியிருக்கிறாரே, இவரது புலமைதான் என்னே என்று வியந்து போனார். உடனே அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டார். எப்படியாவது அருணாசலரைத் தன்னுடன் சீர்காழியில் தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து தில்லையாடியிலிருந்து அவரது குடும்பத்தை சீர்காழிக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்துவிட்டார். புதுச்சேரியிலிருந்து திரும்பி வரும் வழியில் சீர்காழி வந்த அருணாசலருக்கு ஒரே திகைப்பு. இது என்ன, நம் குடும்பத்தையே தில்லையாடியிலிருந்து கொண்டு வந்து சீர்காழியில் குடியமர்த்தி விட்டாரே, சரி இனிமேல் இங்கேயே இருந்துவிட வேண்டியதுதான் என்று அங்கேயே தங்கிவிட்டார். அதுமுதல்தான் அவர் சீர்காழி அருணாசல கவிராயர் என்றழைக்கப்பட்டார்.

புதுச்சேரியில் அருணாசலர் சந்தித்த இரு சங்கீத வித்வான்களான வெங்கட்டராம ஐயரும், கோதண்டராம ஐயரும் சீர்காழியில் வசித்து வந்த அருணாசலரைச் சந்தித்து கம்பராமாயணத்தில் சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வதறாக வந்தனர். அப்போது கம்பராமாயணம் அதன் நயங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கையில் அவர்கள் சொன்னார்கள், "நீங்கள் கம்பராமாயணத்தை ஒரு நாட்டிய இசை நாடகமாக ஏன் ஆக்கக்கூடாது. கவிதைகளை நீங்கள் இயற்றுங்கள், நாங்கள் அவற்றுக்கு ராகம், தாளம் இவற்றை அமைத்து இசை நாடகமாக ஆக்க உதவி செய்கிறோம்" என்றனர்.

இந்த யோசனை அருணாசலருக்கு மிகவும் பிடித்திருந்தது. கம்பனுடைய காப்பியச் சுவையில் ஏற்கனவே மனம் கவரப்பட்டிருந்த நிலையில், அதை மேலும் மேலும் படித்து அனுபவிக்க வேண்டுமென்கிற அவா இருந்ததால், அதை ஒரு இசை நாடகமாக வடிக்கலாம் என்று நண்பர்கள் சொன்ன யோசனை இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கம்பனின் கவி நயமிக்க பாடல்களும், பால பாரதியின் சந்த விருத்தங்களும் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கம் இவரை இராம நாடக கீர்த்தனைகளை இயற்ற தூண்டுகோலாக அமைந்தன. அப்படி அவர் இயற்றும் இராம நாடக கீர்த்தனைகள் பண்டிதர்களுக்கு அல்லாமல், பாமர மக்களும் பாடி மகிழ்ந்து, நாடகமாக நடிக்கப் பயன்படும் என்று எண்ணினார்.

இராம நாடக கீர்த்தனைகளை இவர் முதலிலிருந்து தொடங்குவதற்கு பதிலாக, முதன் முதலில் யுத்த காண்டத்தில் வரும் "அடடா வெளியே புறப்படடா" எனும் பாட்டை எழுதி, நண்பர்களிடம் கொடுத்து இசை அமைக்கச் செய்து அதனை சென்னையில் பாடச் செய்தார். அங்கு அந்தப் பாட்டு மிகவும் பிரபலமானது. சென்னையிலிருந்து திரும்பும் வழியில் இசைக் கலைஞர்களான நண்பர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில், இராம காவியத்தை முழுவதையும் பாட்டுகள் இயற்றி பூர்த்தி செய்யத் தொடங்கினார். அப்படி தோன்றியதுதான் அருணாசல கவிராயரின் "இராம நாடக கீர்த்தனைகள்".

மிகச் சாதாரணமான புழக்கத்திலுள்ள சொற்களைப் போட்டு, பழக்கத்திலிருக்கும் பழமொழி களைச் சேர்த்து அவர் இயற்றிய அந்த எளிமையான பாட்டுக்கள் நல்ல இசையோடு செர்ந்து, கேட்போர் நெஞ்சங்களையும், படித்த மற்றும் பாமரர்களையும் மிகவும் கவர்ந்தன.

கவிராயரின் "இராம நாடக கீர்த்தனைகள்" பூர்த்தியானபின் அருணாசலருக்கு ஒரு ஆசை. முன்பு கம்ப நாட்டாழ்வார் தனது கம்ப ராமாயணத்தை திருவரங்கத்தில் கொண்டு போய் அரங்கேற்றம் செய்தாராமே, அது போல நாமும் அங்கே கொண்டு போய் நமது நாடகத்தை அரங்கேற்றினால் என்ன என்று எண்ணமிட்டார். அதோடு, அங்கு அரங்கேற்றம் செய்தால் கம்பன் செய்தது போல நாமும் மற்ற தெய்வங்கள் மீது தோடயங்களை இயற்றிப் பாடலாம் என்று எண்ணினார். கம்பனின் காப்பியத்தைத்தானே இவர் எளிய தமிழில் நாடகப் பாடல்களாக ஆக்கியிருக்கிறார், ஆகையால் கம்பனின் பாதையில் செல்வதையே இவரும் விரும்பினார்.

அந்த எண்ணத்தில் உருவானதுதான் "ஏன் பள்ளிகொண்டீர் ஐயா, ஸ்ரீ ரங்கனாதா" எனும் மோகன ராக கீர்த்தனை. பின்னாளில் பரத நாட்டியக் கலைஞர்கள் இந்தப் பாடலை எடுத்துக் கொண்டு அபினயம் பிடித்து இந்தப் பாடலுக்கும், ஆடலுக்கும் பெருமை சேர்த்தனர் என்பது வரலாறு சொல்லும் செய்தி. இந்தப் பாடலுக்கு ஆடும் போது நாட்டியக் கலைஞர்கள் தங்கள் திறமை முழுவதையும் வெளிப்படும் வண்ணம் பாவம் காட்டி ஆடுவதை நாம் இன்றும் ரசித்துக்கொண்டு வருகிறோம்.

அவர் காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் துளஜாஜி மகாராஜா ஆவார். அப்போது தஞ்சாவூர் மராட்டிய அரசுக்கும், அரசர் குடும்பத்துக்கும் சூழ்நிலை சரியில்லாமலிருந்த காரணத்தால், இந்த நாடகத்தின் அரங்கேற்றம் துளஜாஜி ராஜா முன்னிலையில் நடத்த முடியாமல் போனது. எனவே அருணாசல கவிராயர் புதுச்சேரி சென்று அங்கு துபாஷாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளையைச் சந்தித்துப் பேசினார். அவர் சென்னையில் அப்போது இருந்த வள்ளலும், கலை ஆர்வலருமான மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார்.

மணலி முத்துகிருஷ்ண முதலியார் நல்ல கலா ரசிகர் என்பதால் அருணாசல கவிராயரின் சில பாட்டுக்களை வித்வான்கள் பாடக் கேட்டிருக்கிறார். அவருக்கு அவை மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட சூழ் நிலையில் இப்போது அந்த பாடல்களை இயற்றிய ஆசிரியரே நேரில் வந்திருக்கிறார், அதிலும் இராமாயண நாட்டிய நாடகத்துக்கான எல்லா பாடல்களோடும் வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இதற்கிடையே தஞ்சையில் மன்னன் துளஜாவுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தது. எனவே அருணாசல கவிராயர் முதலில் இராம நாடகத்தை மன்னனுக்கு முன்னதாக நடத்தினார். அதன் பின் புதுவை சென்று ஆனந்தரங்கம் பிள்ளையின் முன்னிலையிலும் நடத்தினார். அப்போது பிள்ளையுடன் வேறு பல செல்வந்தர்களும் இருந்து ரசித்துப் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் அருணாசல கவிராயருக்கு அரும் பெரும் விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களை அளித்து கெளரவித்தனர்.

இந்த "இராம நாடக கீர்த்தனைகள் " மட்டுமே அவருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்திருந்தது என்றாலும், அவர் மேலும் பல நல்ல பாடல்களை இயற்றியிருக்கிறார். அவரது படைப்புக்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை: "அஜோமுகி நாடகம்", "அனுமார் பிள்ளைத்தமிழ்", "சீர்காழி ஸ்தலபுராணம்", "சீர்காழி கோவை" என்பவை சில.











1 comment:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருணாசல கவிராயரைப் பற்றிய அரிய செய்திகளை தெரிந்து கொண்டோம் ..

//"தந்தையோடு கல்வி போம், தாயோடு அறுசுவை உண்டி போம்" //

ஐயா இது போன்ற பழமொழிகளை பலகாலம் தேடிக் கொண்டிருக்கிறேன் - இது குறித்து விளக்கம் தர முடியுமா ?

நன்றி...