பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 24, 2010

இப்படியும் ஒரு பரோபகாரி!

இப்படியும் ஒரு பரோபகாரி!

'நானோ' கார். நடுத்தர வர்க்கத்தினரின் கனவுக் கார். ஒரு லக்ஷ ரூபாயில் ஒரு சிறிய கார். மேற்கத்திய நாடுகளில் இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய மிகச் சிறிய காரெல்லாம் உண்டு. இங்கு அப்படிப்பட்ட கனவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் மாருதி கார் நிறுவனம். ஆனால் அதுவும் இப்போது அகில உலக பெரும் கார் உற்பத்தியாளர்களோடு போட்டி போட்டுக்கொண்டு கார்களை உற்பத்தி செய்கிறது என்றாலும், சாதாரண மக்களின் கனவுக் காரை உற்பத்தி செய்யவில்லை.

இந்த நிலையில்தான் இந்தியாவின் பழம்பெரும் தொழிலதிபர் குடும்பத்து ரத்தன் டாட்டா ஒரு அறிவிப்பினைச் செய்தார். ஒரு லக்ஷ ரூபாயில் சிறிய கார் உற்பத்தி. வரண்ட தத்துவப் பிடியில் சிக்கி தொழில் துறையில் பின் தங்கியிருந்த மேற்கு வங்காள அரசாங்கம் இப்படிப்பட்டதொரு கார் தொழிற்சாலைக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. ஆனால் என்ன பரிதாபம், கீழ்மட்ட மக்களின், விவசாயிகளின் விளை நிலங்களை அபகரிக்கக் கூடாது என்று குரல் கொடுத்தார் மம்தா பானர்ஜி. மக்கள் புரட்சி தொடங்கியது வங்கத்தில். இறுதி வெற்றி மம்தாவுக்கு, நானோ கனவு பகற்கனவாகி விடுமோ என்ற அச்சம் பலருக்கு. ரத்தன் டாட்டா என்ன நேர்ந்தாலும் நானோ வெளிவந்தே தீரும் என்றார். நந்திகிராமில் கார் உற்பத்தி நடக்கும் என்றார். கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டது; கட்டுமானப் பணிகளும் நடந்து வந்தன. நானோ திட்டத்துக்கு கர்ப்பச் சிதைவு ஏற்பட்டுவிட்டது.

ரத்தன் டாட்டா வேறு இடம் தேடத் தொடங்கினார். பல மாநிலங்கள் மேள தாள தோரண அலங்காரங்களுடன் வரவேற்கத் தயாராயின. கர்நாடகம் நாங்கள் தயார் என்றது. இந்த சூழ்நிலையில் ஓர் அறிவிப்பு. இந்திய அரசியல் வாதிகளாலும், போலி மதச்சார்பின்மை எனும் மாய உலகில் வாழும் பலராலும் கரித்துக் கொட்டப்பட்ட நரேந்திர மோடி ஓர் அறிவிப்பு செய்தார். நானோ கார் குஜராத் மாநிலத்தில் உற்பத்தியாகும் என்று. சனந்த் எனும் குஜராத்தின் உட்பகுதி வெளி உலகத்துக்கு வெளிச்சம் காட்டியது. ஒரு முணுமுணுப்பும் அங்கே இல்லை. மாநிலத்து மக்கள் இப்படிப்பட்டதொரு தொழிற்சாலை தங்கள் மாநிலத்துக்குக் கிடைத்ததற்காக மகிழ்ச்சி யடைந்தனர். அப்பா, எத்தனை குஜராத்தியர்களுக்கு வேலை வாய்ப்பு. தொழிற்துறை வளர்ச்சியால் மாநிலத்துக்கு வந்து சேரும் மேலும் பல உப தொழில்கள். உலகத் தொழில்துறை பெரியவர்கள் எல்லாம் மோடியைச் சந்தித்து உரையாடினர். இந்திய பெரும் தொழில் முதலாளிகள் மோடியை வானளாவப் புகழ்ந்தனர். இந்தியாவை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் பெற்றவர் இவர் என்று புகழாரம் வந்து குவிந்தது. பத்திரிகைகள், மற்ற தொலைத் தொடர்பு ஊடகங்கள் இவை நித்தம் நித்தம் வசைபாடி வெறுப்பேற்ற, நரேந்திர மோடி இவற்றையெல்லாம் உடைத்தெறிந்து தனது தீர்க்கதரிசனத்தால், மாநிலத்தில் தொழில்களை, கல்வி, வளர்ச்சிப் பணிகள், கட்டுமானங்கள் என்று அந்த மாநிலத்தை எங்கேயோ கொண்டு செல்கிறார். ஊழலற்ற ஒரு சமுதாயம் இந்தியாவுக்கு ஒரு புதுமை! அது குஜராத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மற்றைய இடங்களுக்கும் பரவுமானால், நம் கதி என்ன என்று ஊழல் அரசியல் வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. இந்த நிலையில் குஜராத்திலிருந்து அதிலும் சனந்த் எனும் நானோ உற்பத்தி நடக்கும் ஊரிலிருந்து ஒரு செய்தி. அதிசயமான செய்தி, நம்மையெல்லாம் வியக்க வைக்கும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

சனந்தில் ராவுபா பிக்குபா வகேலா என்று ஒருவர். நானோ உற்பத்திச் சாலை இருக்குமிடத்துக்குச் செல்ல வழித்தடம் ஏற்படுத்திக் கொடுக்க தனக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை முதலில் அடையாளமாக சதுர மீட்டர் ஒரு ரூபாய் வீதம் கொடுக்க முனைந்து பிறகு அரசாங்கமும் தொழிலதிபரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க மார்கெட் விலையில் பாதிக்குக் கொடுத்திருக்கிறார். இவரது இந்தச் செயலால் மிச்சமுள்ள சாலைக்கு பொதுமக்களும் விரும்பி நிலம் அளிக்க முன்வந்திருக்கின்றனர். தொழிலதிபர், அரசாங்கம், குடிமக்கள் இவர்கள் ஒருமனதாக இணைந்து பாடுபட்டால் சாதிக்கமுடியாதது எதுவுமே யில்லை என்பதை நிலைநாட்டியிருக்கிறார்கள் இவர்கள். குடிமக்கள் போற்றும் அரசாங்கம், தொழிலை வளர்க்க பாடுபடும் அரசு, மக்கள் நலனில் அக்கறையுள்ள தொழிலதிபர். இவர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள்.

"நானோ தொழிற்சாலைக்கு நிலம் தேவை என்பதை அறிந்துகொண்ட நான், அரசாங்க அதிகாரிகளிடம் அடையாளத் தொகையாக ஒரு சதுர மீட்டருக்கு ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டு தருகிறேன் என்றேன். அதற்கு அரசாங்கம் கொண்டு வந்த ஒப்பந்தப் படிவத்தில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1100 என்று குறிப்பிட்டிருந்த போதுதான் அவர்கள் இவ்வளவு தருவதாக அறிந்து கொண்டேன். இது அன்றைய நிலத்தின் மதிப்பில் பாதிக்கும் குறைவானது, என்றாலும் கூட நான் சொன்ன ஒரு ரூபாய்க்கு வாங்குவது என்னை ஏமாற்றுவதாகுமோ என்று நியாயம் தேடி எனக்கு இந்த ரூ.1100 தர முன்வந்தது குஜராத் அரசு" என்கிறார் வகேலா.

இவர் அடிப்படையில் ஒரு விவசாயி; ஒரு ஆசிரியர், பின்னர் ரியல் எஸ்டேட் வியாபாரி; பின்னர் ஒரு சிறு தொழிலதிபர் இவ்வளவு நிலையிலும் இருந்திருக்கிறார். இவருக்கு வயது 61. ரவிராஜ் ஃபாயில்ஸ் எனும் கம்பெனியை நடத்தி வரும் வகேலா தன்னுடைய கம்பெனியை விரிவுப் படுத்துவதற்காக இந்த நிலைத்தை வைத்திருந்தார். இவரது கம்பெனி ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை வியாபாரம் செய்து வந்த லாபகரமான கம்பெனி என்பதும், இவரது இந்த நிலம் மிக அதிகமான விலைக்குப் போகும் என்பது தெரிந்தும், நானோ கம்பெனி நமது மாநிலத்துக்கு வராமல் போய்விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தத் தியாகத்தைச் செய்ய முன்வந்திருக்கிறார்.

சனந்த்தில் சுமார் 250 கம்பெனிகள் இயங்குகின்றன. இவை அனைத்தும் வகேலாவின் நிலத்தில்தான் தொடங்கப்பட்டது. இங்கு ஒரு தொழில் வளாகம் தொடங்க இவர் திட்டமிட்டு 25 சதவீத உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பகுதியில் நானோ கார் உற்பத்தித் தொழிற்சாலை வருகிறது என்றதும் அது சார்புடைய சிறு தொழில்களும் தொடங்கப்பட்ட நிலையில் இங்குள்ள நிலத்தின் விலை அதிகமாகியது.

தினமும் 12 மணி நேரம் வேலை செய்யும் வகேலா ஒரு ராஜபுத்திர ராஜ வம்சத்தின் ஒரு கிளையைச் சேர்ந்தவர். இந்திய சுதந்திர தினமே இவரது பிறந்த தினம். ராஜ வம்சமாதலால் இந்தப் பகுதியில் கணிசமான நிலப்பகுதி இவர்களுக்குச் சொந்தமாக இருந்தது. சனந்தில் ஆரம்பக் கல்வி பயின்று பின்னர் அஹமதாபாத் ஹெச்.கே கலைக் கல்லூரியில் பட்டப் படிப்புப் படித்தார். அங்கு கல்லூரி மாணவர் சங்கச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். இந்துபா எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, ஜைய்தீப் சிங் எனும் மகனைப் பெற்றார். இவர் ஒரு சிவில் என்ஜினீயர் தங்களது ரவிராஜ் ஃபாயில்ஸ் கம்பெனியைப் பார்த்துக் கொள்கிறார். இவரது இரண்டாவது மகன் ராஜேந்திர சிங் டிராக்டர் விற்பனை ஏஜென்சியைப் பார்த்துக் கொள்கிறார்.

முதலில் 100 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு மாணவர் விடுதியில் காப்பாளராக வேலை பார்த்த வகேலா அதே விடுதியின் உரிமையாளர் இப்போது. பி.எட். முடித்த வகேலா நண்பர் ஒருவரின் பள்ளியில் முதலில் வேலை பார்த்தார். 1971ல் தேனா வங்கியில் பணிக்குச் சேர்ந்த இவர் அங்கு 1996 வரை வேலை பார்த்தார். சனந்தை விட்டு வெளியே போக விரும்பாததால் இவர் பதவி உயர்வை பெற மறுத்து விட்டார். இவரது குறிக்கோள், "பிறருக்கு உபகாரம் செய்ய முடியாமல் போனாலும் உபத்திரவம் செய்யாமல் இரு" என்பதாகும். இவர் தேனா வங்கியில் வேலை பார்த்து சாதாரணமானவராக இருந்த காலத்திலேயே, இவரது மனைவி தெய்வ பக்தியும், ஏழைகளின் பால் அக்கறையும் கொண்டு தனது நிலத்தில் விளையும் தானியங்களில் 4000 கிலோவை ஏழைகளுக்கு அளித்து வந்தார். இவரும் இவரது மகன்களும் கடவுள் பக்தியும், தேசபக்தியும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்டவர்களாகத் திகழ்ந்து இந்த நாட்டு மக்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார்கள்.

உள்ளத்தினால் காங்கிரஸ்காரராக இருந்தபோதும், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் பரம ரசிகர், ஆதரவாளர். குஜராத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் சுவர்க்க பூமியாக மாற்றும் கனவும் ஆற்றலும் உள்ளவர் மோடி என்கிறார் இவர். வகேலா தனது நிலத்தை இவ்வளவு குறைந்த விலைக்குத் தர விரும்புவதறிந்து மோடி இவரை அழைத்துப் பேசி இவரை உளமாரப் பாராட்டினார். இவரது தேசபக்தியையும், மாநிலத்தின் வளர்ச்சியில் இவர் காட்டும் அக்கறையையும் போற்றினார். வகேலா போன்ற தேசபக்தர்களாலும், நரேந்திர மோடி போன்ற மக்கள் மீது அக்கறையும், தீர்க்கதரிசனமுமுள்ள அரசியல் வாதிகளாலும்தான் இந்த நாடு முன்னேற முடியும்.

No comments: